மனித உரிமையின் குரல்வளை மீண்டும் ஒரு முறை நெறிக்கப்பட்டுள்ளது. டாக்டர் பினாயக் சென் மீது தேசத்துரோகக் குற்றம் சுமத்தி, ஆயுள் தண்டனை விதித்திருக்கிறது ராய்ப்பூர் நீதிமன்றம். புதுதில்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகப் பேராசிரியர் பணியை உதறிவிட்டு, மக்கள் சேவையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர் பினாயக் சென். தன்னுடைய மருத்துவ அறிவை பணம் ஈட்டுவதற்கான மூலதனமாக்காமல், சுரங்கத் தொழிலாளர்களுக்கும், ஏழை எளிய குழந்தைகளுக்கும் மருத்துவத் தொண்டாற்றப் பயன்படுத்தினார். சட்டீஸ்கர் அரசும் சுரங்க அதிபர்களும் உருவாக்கிய ஆயுதம் தாங்கிய படையான சல்வா ஜுடும், அப்பாவி மக்கள் மீது நடத்திய தாக்குதல்களை அம்பலப்படுத்தினார்.

இந்நிலையில் 2007 மே 14 இல் பினாயக் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்த நக்சல் தலைவர் நாராயண் சான்யால், தொழிலதிபர் பியுஷ் குஹாவிற்கு இடையில்  கடிதப் பரிமாற்றத்திற்கு உதவினார் என்று குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் காவல்துறையின் அனுமதியுடன், அவர்கள் முன்னிலையில் நாராயண் சான்யாலுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கத்தான் அவர் சென்றார் என்பதே உண்மையாக இருக்கிறது.

அன்றிலிருந்து அவரின் விடுதலைக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆதரவுக் குரல்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. . சர்வதேச பொது மன்னிப்பு அவை பினாயக்கின் கைதுக்குக் கண்டனம் தெரிவித்தது.

எதற்கும் கடுகளவும் செவிசாய்க்கவில்லை அதிகார வர்க்கம்.  பினாயக்கின் பிணை மறுக்கப்பட்டது. 5 ஆண்டுகள் அலைக்கழிக்கப் பட்டபின், அவரின் உடல் நலம் குன்றிய காரணத்தால் 2009 மே 25 இல் உச்ச நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. ஆனால் சட்டீஸ்கர் அரசு விசாரணையைத் துரிதப் படுத்தி, மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாகச் சொல்லி 2010 டிசம்பர் 24 இல் தேசத்துரோகக் குற்றம் சாட்டி மீண்டும் சிறையில் அடைத்தது. இன்றுவரை அவருக்குப் பிணை மறுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் தேசபக்தி என்பதும், தேசத் துரோகம் என்பதும்  ‘ மனுநீதி ’ என்னும் அளவுகோல் கொண்டே அளக்கப்படுகிறது. அதனால்தான் சமூக நீதிக்குக் குரல் கொடுப்பவர்கள் ஒடுக்கப்படுகின்ற நிலை இன்னும் நீடிக்கிறது. “ தேசபக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் ” என்று சொன்னார் பெரியார். பினாயக்கின் கைதிலும் அதுதான் நடந்திருக்கிறது.

‘ தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உறுப்பினராக இருப்பது குற்றமல்ல ’ என்று உச்சநீதி மன்றம் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், பினாயக் சென்னிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் என்பது மட்டுமன்று, அவர் முழுமையாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே நம்முடைய கோரிக்கை.

 

ஏப்ரலில் வெளிவருகிறது! திராவிட இயக்க ஆய்வாளர் க.திருநாவுக்கரசு எழுதும் இன்றைய காந்தி யார்?

(ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி நூலுக்கு மறுப்பு)

வெளிவர இருக்கும் அந்நூலின் சில பகுதிகள்

அடுத்த இதழிலிருந்து இடம்பெறும். 
Pin It