செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குமாரசாமி கொடுத்த தீர்ப்பில் கூட்டல் கழித்தல் கோளாறு வந்து அறத்தின் முன் அத்தீர்ப்பு அந்தரத்தில் நிற்கிறது. அ.இ.அ.தி.மு.க.வின் வெற்றிக் கும்மாளங்களும் விக்கித்து நிற்கின்றன.

எந்தக் கூட்டலால் தீர்ப்பில் தண்டனைக் கழித்தல் ஏற்பட்டதோ என்ற ஐயம் பரவலாக உலா வருகிறது. இந்தியாவின் தேர்தல் அரசியல் பெரும்பாலும் கையூட்டில் பால் குடித்து வளர்ந்து, பெரும் கொள்ளையில் கொழுப்பேறித் திரிவதுதான். இங்கொருவர் அங்கொருவராக சிலர் மாட்டிக் கொள்கிறார்கள். அந்தச் சிலர்கூட தண்டிக்கப் படவில்லையென்றால், நாட்டில் நீதி - ஞாயம் என்பவற்றின் அடிச்சுவடுகூட இல்லாமல் போய்விடும்.

அரசியல் தலைவர்களின் ஊழல்களை அன்றாடம் பார்த்து அலுத்துப் போன மக்களுக்கு, லல்லு பிரசாத் மட்டும்தான் ஊழல் செய்தாரா, செயலலிதா மட்டும்தான் ஊழல் செய்தாரா என்ற சமாதானங்கள் இருக்கலாம். ஆனால், சமூகத்தில் எதிர்காலத்திலாவது நேர்மையும் ஞாயமும் நிலைக்க வேண்டுமென்று அக்கறைப்படும் விழிப்புணர்வுள்ள மக்களுக்கு, அகப்பட்டுக் கொண்டவராவது தண்டிக்கப்பட வேண்டுமல்லவா என்ற கவலை ஏற்படும்.

செயலலிதா வழக்கில் அவரும், அவருடைய குடும்பமல்லாத குடும்பத்தாரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்டதைப் பற்றி, நமக்கு ஆசாபங்கம் ஏதுமில்லை; வருத்தமேதுமில்லை. சட்ட நெறிகளின்படி நீதி வழங்கப்பட்டிருக்கிறதா என்ற செய்தியில்தான் நமது அக்கறையுள்ளது.

பெங்களூர் உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு, சட்ட நெறிகளின்படி நடத்தப்படவில்லை என்பது உச்ச நீதிமன்றம் காலம் கடந்து வழங்கிய தீர்ப்பின் வழி உறுதியாகிறது. வழக்கறிஞர் தொழிலுக்கு இழிவைச் சேர்க்கும் வகையில் நடந்து கொண்ட பவானி சிங், செயலலிதா வழக்கில் அவருக்கு எதிர்த்தரப்பு, அதாவது அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயலலிதா ஆட்சியால் அமர்த்தப்பட்டார். பவானிசிங்கும் செயலலிதா வகையறாக்களுக்கு தான்பட்ட நன்றிக் கடனை தீர்த்தார்.

தொடக்கத்திலேயே பவானிசிங்கை அரசுத் தரப்பு வழக்கறிஞராக தமிழக அரசு அமர்த்தியது செல்லாது என்று வழக்குத் தொடுத்தவர்களில் ஒருவரான தி.மு.க. பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டார். அவ்வழக்கை உடனடியாக விசாரிக்காமல், உச்ச நீதிமன்றம் மிக அலட்சியமாக தள்ளித் தள்ளி போட்டது. கடைசியில், ஞாயம் வழங்கியதுபோல் காட்டிக் கொள்வதற்காக நீதிபதிகள் மதன் பி. லோகூர், பானுமதி ஆகியோர் அமர்வுக்கு அவ்வழக்கை தள்ளிவிட்டார் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து.

இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை என்றும் கீழ் நீதிமன்றத்தில் அவர் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டதால் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டிலும் புதிய அமர்த்த ஆணையில்லாமல் அவர் தானாகவே அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆகிவிடும் உரிமையில்லை என்றும், நீதிபதி லோகூர் தீர்ப்பெழுதினார். நீதிபதி பானுமதியோ கீழ் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக இருந்தவர், இயல்பாகவே மேல் முறையீட்டிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக நீடிக்க உரிமையிருக்கிறது என்று தீர்ப்பு எழுதினார்.

இரு நீதிபதிகளும் வெவ்வேறு தீர்ப்பு எழுதியதால், அத்தீர்ப்புகள் செயலுக்கு வர வாய்ப்பில்லை. எனவே, நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு இவ்வழக்கை தத்து அனுப்பினார்.

மூன்று நீதிபதிகளும் ஒருமித்தத் தீர்ப்பு வழங்கினர். மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக செயல்பட்டதினால் புதிய நியமன ஆணை இல்லாமல் தானாகவே பவானிசிங் உயர் நீதிமன்ற மேல் முறையீட்டு வழக்கிலும் அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாட உரிமையில்லை என்று மூன்று நீதிபதிகளும் தீர்ப்பளித்தனர். இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞரை அமர்த்தும் அதிகாரம் கர்நாடக அரசுக்குத்தான் இருக்கிறதே தவிர, தமிழக அரசுக்கு இல்லை என்றும் தீர்ப்பெழுதினர்.

அத்துடன், 24 மணி நேர அவகாசத்திற்குள் பேராசிரியர் அன்பழகனும் கர்நாடக அரசும் தங்கள் தங்கள் வாதத்தை எழுத்து வடிவில் குமாரசாமி நீதிமன்றத்தில் அளிக்க வேண்டுமென்று கட்டளையிட்டனர். பவானி சிங் வாதத்தைக் கணக்கிலெடுத்துக் கொள்ளாமல், புதிதாக அளிக்கப்படும் இவ்விரு வாதங்களை கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டுமென்றும், கீழ் நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை கணக்கிலெடுத்தக் கொள்ள வேண்டுமென்றும், ஊழல் என்பது சமூகத்தில் மிகப்பெரிய தீமை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டுமென்றும் நீதிபதி குமராசாமிக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மூவரும் அறிவுரையும் வழங்கியிருந்தனர்.

கர்நாடக அரசு புகழ் பெற்ற வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா அவர்களை இவ்வழக்கில் அரசுத் தரப்பு வழக்கறிஞராக அமர்த்தியது. ஆச்சார்யாவும், பேராசிரியர் அன்பழகன் வழக்கறிஞரும் மறுநாளே தங்கள் தங்கள் வாதங்களை எழுத்து வடிவில் நீதிபதி குமாரசாமியிடம் அளித்தனர்.

11.05.2015 அன்று காலை 11 மணிக்கு பெங்களுரு உயர் நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குமாரசாமி, செயலலிதா உள்ளிட்ட நால்வரையும் முற்றிலுமாக விடுதலை செய்தார். இத்தீர்ப்புக்கு, குமாரசாமி கூறிய காரணங்களில் மிக மிக முகாமையானது, தீர்மானகரமானது செயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லப்பட்ட குற்றச்சாட்டு பொருந்தாது என்பதுதான்!

வங்கிகளில் வாங்கிய கடனை வருமானக் கணக்கில்தான் சேர்க்க வேண்டும் என்றும், செயலலிதா தமது 10 நிறுவனங்களின் பெயரில் வாங்கிய கடன் 24,17,31,274 ரூபாய் என்றும் இதில் 5,99,85,274 ரூபாய் கடன் திருப்பி செலுத்தப்பட்டுவிட்டது என்றும், மிச்சமுள்ள கடன் 18,17,46,000 ரூபாய் என்றும் குமாரசாமி கணக்கிட்டுள்ளார். நிலுவையிலுள்ள இந்தக் கடன் 18,17,46,000 ரூபாயை செயலலிதாவுக்கு நிலம் மற்றும் இதர வழிகளில் வந்த வருமானமான 16,59,19,654 ரூபாயுடன் சேர்த்து மொத்த வருமானம் 34,76,65,654 ரூபாய் என்று கணக்கிட்டார். செயலலிதாவுக்குள்ள சொத்தின் மதிப்பு 37,59,02,466 ரூபாய். வருவாய்க்கு அதிகமாக கணக்கில் வராமல் உள்ள தொகை ரூபாய் 2,82,36,812. அதாவது, வருமானத்தைவிட 8.12 விழுக்காட்டுத் தொகை அதிகம்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பொன்று, வருமானத்தைவிட 10 விழுக்காடு வரை கணக்கில் வராதத் தொகை இருக்கலாம் என்று கூறியுள்ளது. 10 விழுக்காட்டிற்கும் குறைவாகவே, செயலலிதாவின் கணக்கில் வராத வருமானம் இருப்பதால் அது குற்றமல்ல என்றுகூறி, விடுதலை செய்துள்ளார் குமாரசாமி.

தொண்டையில் சிக்கிக் கொண்ட கருவாட்டு முள்ளாக மாட்டிக் கொண்ட சிக்கல் குமாரசாமி போட்ட கூட்டல் கணக்கில் ஏற்பட்ட பெருந்தவறாகும். தமது 10 நிறுவனங்களின் மூலம் செயலலிதா பெற்ற கடன்களை தலைப்பு வாரியாகப் போட்ட குமாரசாமி அதன்கூட்டுத் தொகை ரூ. 24,17,31,274 என்று போட்டுள்ளார். ஆனால், நாம் வாய்மொழியாகக் கூட்டிப் பார்த்தாலும் கணிப்பான் வழியாகக் கூட்டிப் பார்த்தாலும் மொத்த கடன் வருமானம் ரூ. 10,67,31,274 மட்டுமே.

உள்ள விவரப்படியான இந்த கடன் வருமானத்தை மற்ற வருமானத்தோடு சேர்த்துக் கூட்டினால், கணக்கில் வராத அதிகத் தொகை 16,32,36,812 ரூபாய். அதாவது இது, 76.75 விழுக்காடு அதிகமாகும்.

10 விழுக்காடு விதிவிலக்கிற்கும் 76.75 விழுக்காட்டிற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்த இரண்டு தொகைக்கும் இடையே குமாரசாமி தொங்கிக் கொண்டுள்ளார். தவறு செய்வோர், தங்களை அறியாமல் சில தடயங்களை விட்டு செல்வர் என்பார்கள். அந்தப் பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

1.  வருமானத் தொகை குறித்த கூட்டல் கணக்கு தவறு.

2. பவானி சிங்கை நீக்கிய பிறகு, கர்நாடக அரசு அமர்த்தும் வழக்கறிஞரை வாய்மொழி வாதம் செய்ய அனுமதிக்காதது இரண்டாவது தவறு.

3. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தத்து அவர்களின் செயல்பாடுகள் குறித்து நம்பிக்கைக் குறைவு பரவலாக ஏற்பட்டுள்ளது. பவானி சிங்கை நீக்கிய மூன்று நீதிபதிகள் ஊழலுக்கு எதிராக போட்ட கூச்சல் வெறும் நாடகம் தானா என்ற ஐயம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

4. ஊழல் வழக்கில் செயலலிதா விடுதலை செய்யப்பட்டார் என்ற செய்தி வந்தவுடன் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி, தமது மகிழ்ச்சியை செயலலிதாவுக்கு தொலைப்பேசி வழி தெரிவித்தது சில ஐயப்பாடுகளை எழுப்புகிறது. இந்த ஐயத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், முதலில் வழக்குத் தொடுத்த சுப்பிரமணிய சாமி இவ்வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.

எனவே, கர்நாடக அரசு உடனடியாக செயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்துக்கு எந்த இழுக்கும் வராத வகையில், சட்டநெறிகளைக் கடைபிடித்து இவ்வழக்கை விசாரிக்க, நேர்மை முத்திரை பதித்துள்ள நீதிபதிகளை அமர்த்த வேண்டும்.

Pin It