தொடர்புடைய படைப்புகள்

திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியாரையும் எப்படியாவது இழித்தும், பழித்தும் பேசிவிட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலும், அதனையயாட்டி எழுந்துள்ள தேவிகுளம், பீர்மேடு யாருக்குச் சொந்தம் என்னும் கேள்வியும், திராவிட இயக்கத்தின் மீது பழிபோடும் விதத்திலேயே கையாளப்படுகின்றது.

நம் தமிழ்த் தேசிய நண்பர்கள் இரண்டு விதத்தில் இதற்கு "வியாக்கியானம்' செய்கின்றனர். திராவிடம் என்று நாம் பேசிக்கொண்டிருப்பதால்தான், மலையாளிகளோடு சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர். அடுத்ததாக, அன்றைக்கே தேவிகுளம், பீர்மேடு சிக்கலில் பெரியார் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும், அனைத்துக் கட்சியினர் நடத்திய கூட்டத்தில் கூட, அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.

திராவிட இயக்கம் என்பதற்கும், ஆந்திர, கேரள, கர்நாடக உறவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பலமுறை, பல சான்றுகளின் அடிப்படையில் விளக்கியாயிற்று. பார்ப்பன எதிர்ப்புத் தமிழ் உணர்வே திராவிடம் ஆகின்றது என்பதைப் புரிய வைப்பதற்கு முயற்சிகள் பல எடுத்தாயிற்று. எனினும் சொன்னதையே அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். தூங்குகின்றவர்களைத்தான் எழுப்ப முடியும் என்பதை இப்போது நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இன்னொரு குற்றச்சாட்டிற்கு விளக்கமாக விடை சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அண்மையில் விடுதலை நாளேட்டில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் இது குறித்த தந்தை பெரியாரின் அறிக்கைகள் மூன்றினை எடுத்து வெளியிட்டிருக்கிறார். 1956 சனவரி 21, 25,26 ஆகிய நாள்களில் அந்த அறிக்கைகளைப் பெரியார் தந்திருக்கிறார். அவற்றுள் உள்ள செய்திகளைக் கவனமாகப் படித்தால் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.

தேவிகுளம், பீர்மேடு தொடர்பாகப் பெரியாரும், ம.பொ.சி.யும் சந்தித்துப் பேசியுள்ளனர். இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதை நாம் அறிவோம். தமிழகம் முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை 50களின் தொடக்கத்தில் நடத்தியவர் ம.பொ.சி. என்பதும் உலகறிந்த செய்தி. ஆனாலும் தமிழக நன்மை கருதி அவர் அழைத்த போது, அந்த அழைப்பை ஏற்றுப் பெரியார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் முழு விவரத்தை சனவரி 21ஆம் நாள் அறிக்கையில் பெரியார் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேவிகுளம், பீர்மேட்டை மீட்பதற்கு முழு ஆதரவையும் திராவிடர் கழகம் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார். "எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு (தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்"என்பதை இருவரும் ஏற்றுள்ளனர். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் மேலும் சில செய்திகளையும் வலியுறுத்த வேண்டும் என்றும், அதற்காகவே அனைத்துக் கட்சிகளினுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பெரியார் கூற, சிலம்புச் செல்வர் அதனை ஏற்றிருக்கின்றார்.

பெரியார் முன்வைத்த வேறு சில சிக்கல்கள் எவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தி மொழி ஆட்சி மொழியாக நீடிப்பதைத் தடுப்பது, இராணுவம் போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற ஆட்சியதிகார உரிமைகள் அனைத்தையும் தமிழ்நாடு பெற வேண்டும் எனக் கோருவது, மதராஸ் அல்லது சென்னை ராஜ்ஜியம் என்பதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் என வலியுறுத்துவது ஆகியவை பெரியார் முன்மொழிந்த கோரிக்கைகளாகும். இவற்றோடு சேர்த்து தட்சிணப் பிரதேசத் திட்டத்தையும் நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்கிறார் பெரியார்.

பெரியார் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகளையும் கவனமாகப் படித்தால், தமிழக வரலாற்றில் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடியும்.

பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தை முன்வைத்தவர். ஆனால், அனைத்துக் கட்சிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் அதனை முன்னிறுத்தினால், பலருக்குச் சிக்கல் ஏற்படும், ஆதலால், "திராவிடர் கழகம், தமிழ்நாடு, யூனியனிலிருந்து பூர்ண சுயேச்சை உரிமையுடன் தனித்து இயங்க வேண்டும் என்பதாக முடிவு செய்து கொண்டிருந்த போதிலும், அந்த கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும், மேற்கண்ட வி­யங்களைப் பற்றிய கிளர்சியை முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர்களுடைய ஒத்துழைப்பையும், நட்பையும் முன்னிட்டு", இராணுவம், போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற ஆட்சி அதிகார உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்னும் வாசகத்திற்கு இணங்கிப் போவதாக அந்த அறிக்கையிலேயே அவர் ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.

கூட்டு நடவடிக்கை என்று வரும்போது, எல்லோரும் ஏற்கத்தக்க மிகக்குறைந்த பொதுவான செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதற்கேற்ப இங்கே பெரியார் பிறருடன் இணங்கிப் போகும் தன்மையைக் காணமுடிகிறது. அதே வேளையில், குறிப்பிட்ட சில அதிகாரங்களை மட்டும் மத்திய அரசுக்கு அளித்துவிட்டு, எஞ்சியவைகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் தன்னுரிமைச் சிந்தனையையும் அன்றே பெரியார் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தன்னுரிமைக் கோட்பாட்டைத் தாங்கள்தான் அறிமுகப்படுத்தியது போல இங்கு சிலர் கூறிக்கொண்டுள்ளனர். பழைய ஏடுகளைப் புரட்டும் போதுதான் உண்மை என்னவென்று உலகம் அறியும்.

இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. திராவிட நாடு கேட்டதால்தான், தமிழ்த்தேசிய உணர்வே இங்கு மழுங்கிப் போய்விட்டது என்பதாக ஒரு திரிபுவாதம் இப்போது பரப்பப் படுகின்றது. ஆனால் ஏறத்தாழ திராவிட நாட்டிற்கு இணையான தட்சிணப் பிரதேசத் திட்டத்தைப் பெரியார் கடுமையாக எதிர்த்துள்ளார்.

1950களின் மத்தியில், தட்சிணப் பிரதேசத் திட்டம் என்னும் ஒன்றை இந்திய அரசு கொண்டுவந்தது. இந்தியாவை எட்டுப்பகுதிகளாகப் பிரிப்பதே அத்திட்டம். அதன்படி -

1.வங்காளம், பீகார், அசாம் 2.ஆந்திரா, ஒரிசா 3.குஜராத், ராஜஸ்தான் 4.தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் 5.மகாராட்டிரம் 6.மத்தியப் பிரதேசம் 7.உத்தரப்பிரதேசம் 8.பஞ்சாப் ஆகிய எட்டுப் பகுதிகள் உருவாக்கப்படும். இத்திட்டத்தை உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வல்லப பந்த் முன்மொழிந்தார்.

திராவிட நாடு கேட்ட பெரியார்தான், இதனைக் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனீயத்தையும், சமற்கிருதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட கன்னட, கேரளர்களோடு நாம் இணைய முடியாது என்றார். மலையாளிகளைப் பற்றி அவர் கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.

"ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும், மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப்பானுக்குள்ள புத்தியயல்லாம் மலையாளிக்கும் உண்டு" என்று எழுதுகிறார் பெரியார்.

அது மட்டுமல்லாமல், "தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். தட்சிணப் பிதேசம் ஏற்படுமானால், முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும்"என்கிறார் பெரியார். இவரைத்தான் தமிழ்த் தேசிய எதிரி என்று தமிழின எதிரிகள் கூறுகின்றனர். ஆயிரம் முறை கூறியுள்ள அதே சொற்களை இங்கு மீண்டும் ஒரு முறை கூற வேண்டியுள்ளது. பார்ப்பன எதிர்ப்புத் தமிழுணர்வுதான் "திராவிடம்'என்று இங்கு அறியப்பட்டதேயல்லாமல், கன்னட, கேரள, ஆந்திர நிலத்தோடு தமிழகத்தை இணைப்பது திராவிட இயக்கத்தின் நோக்கமன்று.

எல்லாம் சரி, தேவிகுளம், பீர்மேடு பற்றிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஏன் பெரியார் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி இப்போதும் கேட்கப்படுகின்றது.

அது குறித்து உண்மைகளையும், அதற்கு ம.பொ.சி.தான் காரணம் என்பதையும் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.

பெரியாரும், ம.பொ.சி.யும் பேசி எடுத்த முடிவுகளின்படி, பெரியார் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் கூட்டத்தில் முன்வைப்பது என்றும், அனைத்துக் கட்சிகளுக்கான அழைப்பு மடலில், ம.பொ.சி., பெரியார், அந்தோணிப்பிள்ளை, சுயம்பிரகாசம் (திராவிட பார்லிமென்டரி கட்சித் தலைவர்), பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அல்லது பி.டி.ராஜன் ஆகிய ஐவர் கையயாப்பங்களிட்டு அனுப்புவது என்றும் முடிவானது. அதனைத் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் ம.பொ.சி.யிடம் பெரியார் மறுஉறுதி செய்தார்.

எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ம.பொ.சி., இறுதியில் வேறுவிதமாகச் செயல்பட்டார். அனைத்துக் கோரிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, பீர்மேடு ஒன்றை மட்டுமே அழைப்பில் குறிப்பிட்டதோடு, தான் ஒருவர் மட்டுமே கையயாப்பமிட்டு அனைவருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்தார். அதனால்தான் தந்தை பெரியார்,

"இது சிறிதும் நேர்மை அற்ற காரியம் என்பது எனது கருத்து. இப்படிப்பட்டவர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தில் கலந்து மக்களை ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தன் நிலையைத் தெளிவுபடுத்தினார்.

பெரியாரின் நிலைப்பாடு எவ்வளவு நேர்மையானது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.

தேவிகுளம் - பீர்மேடு சிக்கலைப் பொறுத்தவரையில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக எந்த நிலையிலும் போராட அவர் தயாராக இருந்தார்.

"இன்று யூனியன் மத்திய அரசாங்கத்தின் நடத்தை நாளுக்கு நாள் தமிழர்களை - தமிழ்நாட்டை - அழுத்தி வடநாட்டுச் சுரண்டலுக்கும், ஆதிக்கத்திற்கும் அடிமையாக்கும் காரியத்தில் முனைந்திருக்கிறது.

அடிமை வாழ்வை விட, எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது"

-இதுதான் பெரியாரின் கூற்று. இதுதான் திராவிட இயக்கத்தின் தமிழினப் பற்று.

Comments

12 comments

12
பரத்
போன் ஒயர் பிஞ்சு அஞ்சு நாள் ஆச்சு...!
பிச்சுமணி
யார் சொல்லுவது சரி என்று தெரியவில்லை . அந்த காலகட்டத்தில் வந்த செய்தி தாள்களை தொகுத்து படித்தால் தான் தெரியும். அவரவர்கள் தாங்கள் இருக்கும் அமைப்புக்கு ஏற்ப வாதங்களை முன்வைக்கிறீர்கள் . எது எப்படியோ . தமிழகத்துக்கு பெரும் இழப்பு ஏற்பட்டு உள்ளது. அதனை தடுக்க அப்போதை கட்சிகள் தவறி விட்டன என்பது உண்மை
யுவபாரதி
இம்மாத தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம் இதழில் தேவிகுளம் - பீரிமேடு மீட்பு முயற்சியில் பெரியார் மற்றும் இதர திராவிட இயக்கங்களின் நிலைப்பாடுகள் எவ்வெவ்விதமாக ஏமாற்றமளித்தன என்பதைப் பற்றி பெ.மணியரசன் எழுதியுள்ள கட்டுரையைப் படியுங்கள் நண்பர்களே! சுபவீ முதலானோர்க்கு பெரியாரே சர்வரோக நிவாரணி. எல்லாத் தமிழர்க்கும் அல்ல.
யுவபாரதி
தமிழ்ச் சமூகத்திற்குப் பெரியார் ஆற்றிய தொண்டிற்கான மதிப்பும் மரியாதையும் என்றும் அவருக்கு உண்டு. ஆனால், அதற்காக அவரை விமரிசனத்திற்கு அப்பாற்பட்டவராகவும், எல்லா காலகட்டத்திலும் எல்லா விடயங்களிலும் அவர் நிலைப்பாடுகள், செயல்பாடுகள் அனைத்தும் சரி என்பதும், அவருடன் முரண்பட்டவர்கள் செய்தவை எல்லாம் தவறு என்பதும் ஏற்கத் தக்கவையல்ல. அப்படிச் செய்தால், 1930களில் இந்தியை எதிர்த்த அதே பெரியார் 1965ன் மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக் கண்டித்ததும், அதை ஒடுக்கும்படி காங்கிரஸ் அரசிடம் சொன்னதும் சரி என்று ஆகிவிடும்.

"தேவிகுளம்-பீரிமேடு மலையாளிகளுக்குத்தான் சொந்தம், தமிழர்கள் அங்கு பிழைக்க வந்தவர்கள்தான்" என்று சர்தார் மாதவப் பணிக்கர் சொன்னதைத் தான் ஏற்றுக் கொண்டதாகப் பெரியார் சொன்னதும் பலரும் அறிந்ததுதான்.
அதி அசுரன்
//"தேவிகுளம்-பீரிமேடு மலையாளிகளுக்குத்தான் சொந்தம், தமிழர்கள் அங்கு பிழைக்க வந்தவர்கள்தான்" என்று சர்தார் மாதவப் பணிக்கர் சொன்னதைத் தான் ஏற்றுக் கொண்டதாகப் பெரியார் சொன்னதும் பலரும் அறிந்ததுதான்.//

ஆதாரங்களோடு பேசுவது தான் நல்லது தோழர். மேற்கண்ட வாக்கியங்கள் அடங்கிய முழு உரையும் தேவை. பெரியாரின் அந்த உரையோ கட்டுரையோ முழுமையாக வெளியான இதழ், அந்த இதழின் நாள் இவற்றைச் சொல்லி விமர்சிப்பது தான் நல்லது.
அய்யன்பேட்டை தனசேகரன்
இடைச் செருகலும் வரலாற்றின் சில பக்கங்களை உருவுதலும் பழமையான இலக்கிய காலப் புலவர்களுக்கு மட்டும் சொந்தமல்ல என வீரபாண்டியன் அவர்கள் தெளிவு படுத்துகிறார் போலும்...!
திராவிட எதிர்ப்பாளன்
அடிமை வாழ்வை விட, எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது"./////

சாவுங்கய்யா. உங்களை உயிரோடு இரு ன்னு எவனும் கெஞ்சல.
sirajudeen
யுவபாரதி தான் சொன்னதையே திரும்ப சொல்கின்றார். அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று. எவர் சொன்னார் ? என்று சொன்னார் ? சொல்லுங்கள்.
இரா.தமிழ்மாறன்
தந்தை பெரியாரின் மீது எப்போதும் மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவன்.ஆனால் அவர் செய்தது எல்லாம் சரி என்று ஏற்றுக்கொள்ள முடியாது. பெரியார் செய்த வரலாற்றுத்தவறுகளை சுட்டிக்காட்டினால் அவர் பெயரில் பிழைப்பு நடத்துபவர்கள் நிச்சயமாக பெரியாருக்கு மாற்று இல்லையென்றே வலியுறுத்துவர்.திராவிடம் என்ற சொல்லே தமிழர்களுக்கு மிகவும் பாதகமானது.கன்னடர்கள் கன்னடர்களாகவும் தெலுங்கர்கள் தெலுங்கர்களாகவும் மலையாளிகள் மலையாளிகளாகவும் தங்களை அடையாளப்படுத்திக்கொண்டு வாழும்போது தமிழர்களாகிய நாங்கள் மட்டும் ஏன் திராவிடர்கள் என்று எங்களை அடையாளப்படுத்த வேண்டும்.திராவிடம் பேசிக்கொண்டு வந்தாரையெல்லாம் வாழவைக்கவா?தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய எல்லாவற்றையும் வந்தேறிகளிடம் கொடுத்தது போதாது என்று இன்னும் கட்டியிருக்கின்ற கச்சையையும் பறிகொடுப்பதற்கா?பார்ப்பன எதிர்ப்பே தமிழுணர்வு என்றால் பார்ப்பான் மட்டும்தான் எங்களுக்கு எதிரியா?தமிழிலிருந்து பிரிந்த மொழிக்குடும்பத்தில் வந்த கன்னடர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் ஏன் தமிழனை அடித்து உதைத்து துரத்துகின்றனர். தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரைக்கூட தராமல் ஏன் இன்னும் வஞ்சிக்கின்றனர்.அவர்களுக்கெல்லாம் வராத திராவிட பாசம் தமிழர்களுக்கு மட்டும் ஏன் வரவேண்டும். இருக்கின்ற கொஞ்சத்தையாவது காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்றால் தமிழ்த்தேசியம் தான் மிகச்சிறந்த மாற்று என்பதில் எந்த மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை.திராவிடம் என்ற சொல்லாடல் இல்லாமல் தமிழ் தமிழன் என்று பெரியார் போராடியிருந்தால் இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கும் இழப்புகளுக்கும் ஆளாகியிருக்க மாட்டோம்.பார்பபன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் என்று முன்னிலைப் படுத்தியதால் தமிழர்களுக்கு அளவிடமுடியாத இழப்பில் போய் முடிந்தது.தமிழன் கட்டிய கோயில்களெல்லாம் நாம் யாரை எதிர்த்தோமோ அவர்கள் கைகளில் அழகாய் போய்ச்சேர்ந்தன.பெரியாரின் வழிநடத்தலில் தமிழன் தான் கட்டிய கோயிலை விட்டு வெளியே வந்தான்.அந்த இடத்தில் பார்ப்பான் போய் அமர்ந்தான்.பார்ப்பன எதிர்ப்பும் கடவுள் மறுப்பும் என்றால் பார்ப்பானை ஏன் கோயிலைவிட்டு வெளியேற்றவில்லை.அவனை வெளியேற்றிவிட்டு அந்த கோவில்களையெல்லாம் தமிழர்களுடைய கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களை பாதுகாக்கும் கலைக்கூடமாக மாற்றியிருக்கலாம் அல்லவா? பொரியாரின் இந்த வரலாற்றுத்தவறால் தமிழன் கட்டிய கோவில்களெல்லாம் பார்ப்பானின் அதிகாரபீடமாகவும் தமிழர்களை சுரண்டிக்கொழுக்கும் நிறுவனமாகவும் மாறிவிட்டது. அங்கே உட்கார்ந்துக்கொண்டு தமிழர்களுடைய பிறப்பு முதல் இறப்பு வரை அவன் வாழ்வில் குறுக்கிட்டு கிரகம் தோசம் என பயமுறுத்திக்கொண்டு பரிகாரம் அர்ச்சனை என புரியாத ஒரு பாசையில் என்னவெல்லாமோ உச்சரித்து சுரண்டிக்கொழுப்பது மட்டுமல்லாமல் தமிழர்களை எவ்வளவு கேவலமாகவும் நடத்துகிறான்.கேட்டால் கடவுளே கசிந்துருகும் தேவாரத்திருமுறைகள் தமிழில் இருக்க தம் சொந்த மொழியில் இறைவனை வணங்க முடியாத இழிநிலைக்கெல்லாம் தமிழ்த்தேசியம் பேசாமல் திராவிட மாயைக்குள் சிக்கியிருப்பதால் வந்த வினை தானே.
அருண் ரங்கராசன்
பெரியாரை திறனாய்வு செய்வது காலத்தின் கட்டாயம் . இன்னும் பத்து அல்லது நூறு வருடங்களுக்கு நான் சொல்வதையே சொல்லுவதற்கு ஒரு tape recorder போதும் நான் சொல்வதை மறுத்து பேசும் கருத்துகளும் ஆய்வுகளும் வர வேண்டும் என்று தான் பெரியார் விரும்பினர் .அனால் இங்கு திராவிடர் கழக தலைவர் சொந்த புத்தி வேணாம் தந்த புத்தி போடும் என்று சொல்கிறார் . இந்த சுப வீ யும் அந்த கோஷ்டிதான்
யுவபாரதி
தோழர், அதிஅசுரன் அவர்களுக்கு, பசல் அலி கமிஷன் அறிக்கை வெளிவந்தது 10.10.55.
"தேவிகுளம்-பீரிமேடு மலையாளிகளுக்குத்தான் சொந்தம், தமிழர்கள் அங்கு பிழைக்க வந்தவர்கள்தான்" என்று சர்தார் மாதவப் பணிக்கர் சொன்னதைத் தான் ஏற்றுக் கொண்டதாகப் பெரியார் சொன்னது - தினத்தந்தி 11.10.1955 (பேட்டி நடந்த இடம் திருச்சி பெரியார் மாளிகை)
அதே போல, 1965 மொழிப் போரைப் பெரியார் எதிர்த்தது, அரசாங்கம் அதன் செலவில் இந்தியைக் கற்றுக்கொள்ளச் சொல்லும்போது கற்றுக்கொள்ள வேண்டியதுதானே என்றது - இவை குறித்து தோழர் ஆனைமுத்து தொகுத்த தொகுப்புகளிலேயே உள்ளது. வாசியுங்கள். நன்றி.
ஆறுமுகம்
அடிமை வாழ்வினும் அழிவதே மேல் !

கட்டுரையின் மையக்கருதை விட்டுவிட்டு தலைப்பை பார்த்தால் ”ஒரு அடிமை இன்னோர் அடிமைக்கு உதவ முடியாது” என்று ஒரு முது பெரும் தலைவர் உரைத்ததாக நினைவு. அதனால் தானோ என்னவோ அடிமை இனமே அருகில் அழிக்கப்பட்டபோது அழியட்டும் என்று விட்டு விட்டாரோ என்னவோ, ஆட்சி அதிகாரத்தில் இருந்த அடிமை. இப்போது இங்குள்ள அடிமைகளுக்கு அழிவு தொடங்கி விட்டதோ என்னவோ டெல்லி முதல் சிறைக்கு செல்கிறார்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.