எரியும் பிரச்சனைகளை புறம் ஒதுக்கிப் போகும் கலைகளால் பயன் எதுவுமில்லை. திரும்புகிற பக்கமெல்லாம் அடிபடும் தமிழும் உரிமைக்காக குரல் கொடுக்கப்போகிற உண்மையான தலைமையை எதிர்நோக்கிக் காத்திருப்பதை உணர்த்தும் கவிதையை ஓர் எழுதுகோல் எழுதட்டும்...

முப்போகம் விளைந்து அறுவடைத் திருநாளைக் கொண்டாடிய காலம் மலையேறி, விளைநிலங்கள் விலையாகிப் போனபின், பொங்கலுக்கு வரப்போகிற இலவச வேட்டி, சேலைக்குக் காத்திருக்கும் கைகளுக்கு, உணர்ச்சியை உருவாக்கும் ஒரு கவிதையை ஓர் எழுதுகோல் எழுதட்டும்...

வேற்றுமையில் ஒற்றுமை என்பதெல்லாம் தேர்வுக்குப் படித்து, விடையெழுதி மறந்துபோகிற விஷயங்களே அன்றி, நடைமுறைக்கல்ல என்று உணர்த்தும் சுயநலத்திற்கு சூடு வைக்கும் ஒரு கவிதையை ஓர் எழுதுகோல் எழுதட்டும்...

உதிரும் பூக்களில் மட்டுல்ல, கூர் தீட்டப்படும் கருவிகளிலும் கவிதையின் பொறி உறங்கிக்கிடக்கிறது என்பதை உணர்த்தும் ஒரு சொல் கவிஞனின் குரலாகட்டும்...

*   *   *
1999இல் துவங்கிய புன்னகை, பதினான்காம் ஆண்டில் தன் பயணத்தைக் கவிதைக்கானது என்கிற மாறாத பாதையில் தொடர்கிறது. தான் அடைய வேண்டிய இலக்கையும், பாதையையும் பின்தொடர்கிறது. இன்னும் பல படைப்புகளை வாசகர்களுக்கு அடையாளப்படுத்த புன்னகை காத்திருக்கிறது!

Pin It