நிலமதிரும் ஆட்டம்
ஆடுகிறார்கள் பிள்ளைகள்
புலர்காலை அந்திப்பூக்கள் இயற்றும்
வாசப்பாடல்கள் வீதியெங்கும்
இடையுருவிய குறுவாள்
நடனமிடும் காற்றில்
கட்டுடைத்த இசைப்பெருக்கு
சிதறும் கரங்களும் சிரங்களும்
உன் வாள்நுனி வசமிருந்தன அன்று
வேட்கையற்ற நிலமுறிஞ்சும்
ரத்தம் இம்முறையுனது
பறக்கவியலா மைனாக்களின்
பிசுபிசுத் தொட்டிய சிறகினை
கழுவும் மேகம் சூழடைந்து
பூக்கத் தொடங்கும் வனம்
போர்வையாகும் நீல அழகில்
துளி அழுக்கில்லை
எல்லைத்தாண்டிய கரும்புகை
நேற்று வரைந்ததே தன் கடைசியோவியம்
குப்பிவிஷம் கண்ணி வெடி
களைந்த நாளன்றில்
போர்தீர்க்கும் பந்தயம்
வெல்லும் பிள்ளை பெறுவான்
பரிசாய் குறுவாள் பளபளவென்று
சமயம் வருகையில்
வாள் சோதிக்க
எதிரிகளென எவருமில்லையினி.
Pin It