1
பறவைகளின் எச்சம்
மண் தொட இயலா
அடர்வனத்தில்
உலவுகிறார்கள் சிறுமிகள்.
அவர்களது பாதச்சுவடுகளில்
தேங்கி நிற்கும் நீரை
பருகி மகிழ்கின்றன விலங்குகள்.
இருள் நிறைந்த அவ்வனத்தில்
பொழிந்துகொண்டே இருக்கிறது
மழை.
எதற்கிந்த கனவென்றே
புரியாமல் கரைகிறது
இவ்விரவு.

2
மூன்று முறை என்னை நான்
வரைந்து பார்த்தேன்.
முதல் முறை இருள் கவிந்திருக்கும்
அறையன்றினுள்ளிருந்தும்
இரண்டாம் முறை நிலவொளியிலும்
மூன்றாம் முறை
முலைகளின் வெம்மையில்
சுகித்திருந்தபோதும்
வரைந்து பார்த்தேன்.
ஒவ்வொரு முறையும்
வெவ்வேறு உருவம் எனதாகியிருந்தது.
மகிழ்வுக்கும் துயருக்கும்
இடையே மிதந்துகொண்டிருக்கும்
என் பிம்பத்தினை காலம்
தன் இடக்கையால்
வரைந்துகொண்டிருக்கிறது.

3
உதிர்ந்த முத்தங்களை பொறுக்கும்
நட்சத்திரா தன் கன்னத்தின் சுருக்கங்களை
வருடிக்கொடுக்கிறாள்.
சிதறிக்கிடக்கும் முத்தங்களின் நடுவே
காலம் கண்சிமிட்டிக்கொண்டிருப்பதை
வலியுடன் நோக்குகிறது அவளது கண்கள்.
தீராப்பசியுடன் வானம் பார்த்து
கதறுகின்றன வீழ்ந்த இலைகள்.
மெல்ல வலுக்கிறது
நிறமற்ற மழை.

4

இளம்பனிக்காலமொன்றில்  சந்தித்துக்கொண்டன
நிறமற்ற இரு பட்சிகள்.
இருத்தல் மீதான மோதல்
உக்கிரமான தருணத்தில் அவை
சூரியனை தழுவின.
வெளிச்சம் புணர்ந்த களைப்பில்
வீழ்ந்து மரித்தன.
கொடுங்கனவின் உள்ளிருந்து
துளிர்விடுகிறது
ஓர் இளமஞ்சள் இறகு.


5

காயத்தின் ஆழத்தில்
ஒரு முகம் மிதந்து கொண்டிருக்கிறது.
புரிதலின் பிழையால் பிரிந்த
இருநிழல்களின் சாயலுடன்
சலனமின்றி மிதக்கிறது அம்முகம்.
அன்பின் கதவுகள் நிரந்தரமாய்
மூடப்படுகின்றன.
எதிர்பார்ப்புகளற்ற இறைக்குள்
நுழைந்து மௌனிக்கிறது மனம்.
வழிந்தோடிய
கண்ணீர்த்தடத்தில் புதைக்கப்படுகின்றன
கவிதைகளின் ஊமைக்காயங்கள்.


6

ஒரு
வனத்தினூடாக
துவங்கியது நம் பயணம்.
விழி இழந்தவனின்
கைகள் பற்றி அழைத்துச் சென்றாய்.
வார்த்தைகளில் ஒளியை
உணர்த்தி மகிழ்ந்தாய்.
ஓர் உன்னதமான அரவணைப்பை
பரிசளித்தாய்.
வனம் முடிந்து வெளியேறுகையில்
ஒளி கொண்ட மழையாகியிருந்தேன்.
பட்டாம்பூச்சிகளால் போர்த்தப்பட்டு
பறந்து சென்றாய்
நீ.


7

கடல் குடிக்கும் பறவைகள்
புதர் மண்டிய ஆரஞ்சு தோட்டத்தை
கடக்கின்றன.
பறந்துகொண்டே புணர்கின்றன
உதிர நிறத்தாலான வண்ணத்துப்பூச்சிகள்.
கற்பாறைகளில் நடுவே
நெளிந்துகொண்டிருக்கும் சாலையில்
நிழல் உதிர்த்து பறக்கிறாள்
ஒரு தேவதை.
முள் தைத்த வலியுடன்
நொண்டிச்செல்கிறான் சிறுவனொருவன்,
கனத்த மௌனத்தில் கரைந்தழுதபடி
இரவுக்குள்
நுழைகிறது இவ்வோவியம்


8

உணர்ச்சிகள் உறைந்த பூச்செடியன்று
உயிர்ப்பில்லாத வெண்ணிற
பூக்களுடன் நின்றாடுகிறது.
சாத்தான்களிடமும் வரம் பெற்றவன்
தேவதையின் முதல் சாபத்தை
பெறுகிறேன்.
விளக்கணைத்து அழுகின்ற
துயரத்தின் வலி நிலவு வரை
நீள்கிறது.
சன்னமான குரலில் என்னுடன்
உரையாட துவங்குகிறாள்
கவிதைப்பெண்.


9

புறக்கணிப்பின் முட்பாதை
என்னை வந்தடைகிறது.
வழியெங்கும் மரித்து கிடக்கின்றன
சிறகிழந்த பட்டாம்பூச்சிகள்.
ஈர்ப்பின் அர்த்தம் அறியாத
பாதங்களில் மிதிபடுகின்றன
விருப்பங்கள் சில.
சுயத்தின் மரண ஊர்வலத்தில்
பூக்கள் தூவிச் செல்கிறாள்
சிறுமியருத்தி.
சுயம் கவிதையென்று
பொருள் கொள்க.


10

வாழ்வின் மிகப்பெரும்
தவறை ஒரு சொல்லாக்கினேன்.
எனது பிம்பத்தை தின்று
தீர்த்த அச்சொல் ஒரு வாக்கியமானது.
உடலெங்கும் படர்ந்த
அவ்வாக்கியம்
ஒரு பொய்யாக உருப்பெற்றது.
இப்போது,
பொய்யின் வடிவத்தாலான
கனவுச்சில்லுகளில்
எனக்கான கடைசி விருப்பங்களை
எழுதிக்கொண்டிருக்கிறேன்.


11
மழை ருசித்துக்கொண்டிருக்கும்
விசித்திரமான இரவு இது.
ஒவ்வொரு துளியாய்
மழையின் குருதியை பருகி
திளைக்கிறது இரவு.
இரவின் கண்கள் ஓர்
ஒநாயின் குரூரத்தை கொண்டிருக்கின்றன.
புலன்கள் ஒடுங்கிய அறைக்குள்
கனவுகளின் மரணச்சத்தம்
மௌனமாக ஒலிக்கும் தருணம்
மழையின் ஈரத்தில்
சில்லிடுகிறது உடல்.
ஒரு நீண்ட மௌனத்தின்
நடுவே இரவாக நீயும்
மழையாக நானும் அமர்ந்திருக்கிறோம்.


12

தீராத பெரும்துயர் கரைந்துருகி
நதியென ஓடுகிறது.
கண்ணீரால் சூழ்ந்திருக்கிறது
என் இரவுத்தீவு.
வார்த்தைகள் ஒவ்வொன்றாய்
உதிர்ந்து ஊமையாகும் தருணத்தில்
ஒர் உன்னதமான பாடலை
இவ்விரவு இசைக்க ஆரம்பிக்கிறது.
பவித்திரம் வழியும் இந்த இரவுக்குள்
வந்தமர்கின்றன சில ஊனப் பறவைகள்.

 

13

மொழி மரணித்த இரவொன்றின்
தாழ்வாரத்தில் சிதறிக்கிடக்கின்றன
சில ஞாபகங்கள்.
இருத்தல் தொலைந்த அவமானத்தில்
உடைகிறது தேநீர்க்கோப்பை.
சிறகறுந்த பறவைகளின் குருதி
மிகுந்த வெப்பத்துடன் அறை நிரப்புகிறது.
காரணங்கள் ஏதுமின்றி வீறிடுகிறது
இந்த உயிர்மிருகம்.

14

தோட்டத்தில் சிறு நாற்காலியில்
அமர்ந்திருக்கும் அவளழகை
வியப்புடன் ரசித்தபடி நடனமாடுகிறது
மழை.
அற்புதங்களால் உருப்பெற்ற
அவளது விரல்களில் ஒவ்வோர்
துளிகளாய் விழுந்து கவிதையாகின்றன.
சிறகுகள் முளைக்கப்பெற்ற
மழை
இப்பொழுது பட்டாம்பூச்சியாகியிருந்தது.
சின்னஞ்சிறு உலகில் ஓயாத
மழையுடன் நீண்டதொரு உரையாடலை
துவங்குகிறாள்
நட்சத்திரா.


15

மழைத்துளியன்றை ஏந்தி வந்தாள்
கருமை நிற தேவதை.
அத்துளி பேருருவம் பெற்று
ஒரு மாளிகையான தருணம்
சிறுவனாகியிருந்தேன்.
கண்கள் மின்ன என்னை
மாளிகையின் உள்ளிழுத்துக்கொண்டாள்.
புற உலகிற்கான கதவு மூடப்பட்டது.
நீண்டதொரு மயக்கத்திலிருந்து
விடுபட்ட கணம்
என்னுலகம் களவாடப்பட்டிருந்தது.
ஈக்கள் மொய்க்கும் புன்னகையுடன்
நடனமிடுகிறாள் கருமை நிற
வதை.

16

நீந்துதலின் சுகம் பற்றியும்
சுதந்திரம் பற்றியும் பேசிக்கொண்டன
இரு மீன்கள்.

குளம் வற்றிய ஓர் இரவில்
பறத்தலின் சுகம் பற்றி அவை
பேச ஆரம்பித்தன.

உரையாடல் முடியும் முன்பே
நின்றுபோனது அனைத்தும்.

மௌனசுகத்துடன் சிரித்துக்கொண்டது
நிலா.


17

நீங்கள் இறந்து போவீர்கள்
என்று சொல்லித்திரிபவனை
சந்தித்தேன்.
தான் காணும் மனிதர்களிடம்
அவன் உதிர்க்கும் மூன்று வார்த்தைகள்
அவை மட்டுமே.
குரூரத்தின் உச்சம் இவனென்றார்கள்.
ஒரு பன்றியை பார்ப்பதுபோல்
அவனை பார்த்து நகர்ந்தார்கள்
எதைப்பற்றிய பிரக்ஞையுமின்றி
நீங்கள் இறந்து போவீர்கள்
என்று முகம் நோக்கி சொல்பவனை
நீங்களும் காணக்கூடும்
வழியிலோ
அல்லது
கண்ணாடியிலோ.

(தூத்துக்குடி மாவட்டம் நடுவைக்குறிச்சியில் 1980ம் வருடம் பிறந்தார். இயற்பெயர் ராஜேஷ். தகவல் தொழில் நுட்பத் துறையில் தற்சமயம் சென்னையில் பணியாற்றி வருகிறார். நம்பிக்கைக்குரிய இளம் கவிஞர்களில் ஒருவராக அடையாளம் காணப்படும் இவரது கவிதைகள் இணையத்தில் துவங்கி பல்வேறு சிற்றிதழ்களிலும் இலக்கிய இதழ்களிலும் தொடர்ந்து வெளி வந்து கொண்டி ருக்கின்றன. சென்ற வருடம் இவருடைய முதல் சிறுகதை நூல் "யாரோ ஒருத்தியின் டைரிக் குறிப்புகள்'' வெளியாகி பரவலான கவனம் பெற்றது. இது வரை மூன்று கவிதை நூல்கள் வெளியாகி யிருக்கின்றன. www.nilaraseeganonline.com என்னும் இணைய தளத்திலும் எழுதி வருகிறார்.)

Pin It