கலைகள் மறுக்கப்படுகிறபோதும், புறக்கணிக்கப்படுகிற போதும் முதலில் அடையாளமற்றுப் போவது மனிதநேயம்தான்!

பொருளைத் தேடும் வாழ்வின் அழுத்தம் மேலோங்கி, கலைகளும் கவிதையும் புறக்கணிக்கப்படுகிறபோது, மனத்துயரங்கள் பெருகி, மருத்துவ ஆலோசனைகள் முந்திக் கொள்கின்றன.

பூமனங்கள் வன்முறையின் முகவரியாவதும், தனக்கான உரிமையை கேட்டுப் பெற சுரணையற்றுப் போவதும் கலைகளைப் புறக்கணிப்பதன் துயரமாகும்.

இந்த வாழ்வுக்கு எதிராக துன்பங்களும் துரோகங்களும் வீறு கொண்டு எழுகிறபோது, பொருத்தமான ஆறுதலைத் தரும் வலுவான சொற்களை கவிதை தனக்குள் ,எப்போதும் வைத்திருக்கவே செய்கிறது.

தனக்கெதிராக தொடுக்கப்படும் போர்க்குண காரியங்களுக்கு எதிராயுதமாக களமிறங்கும் வீர்ய சொற்களை கவிதை தனக்குள் வைத்திருப்பதை அறிந்தவர்கள் அதையே தங்கள் கேடயமாக பயன்படுத்துவர்.

தன்னை நேசிக்கிறவர்களை என்ன செய்ய வேண்டும் என்று கவிதைக்குத் தெரியும்!

இருளுக்கு அது வெளிச்சமாவதற்குப் பதில் வெளிச்சமேற்றும் ஒற்றைச் சுடராக பிறப்பெடுக்கும்.

துயரங்களுக்கு ஆறுதலாவதற்குப் பதில், துயரங்களைக் களையும் பேராயுதமாக புறப்படும்.

கவிதை ஒரு வழித்தடம்...
கவிதை ஒரு நீள் பயணம்...
கவிதை ஒரு கண்டடைய இயலாத புள்ளி...

Pin It