நம்பிக்கையின் பெருநகரங்களில்
யூதாஸ்களின் சஞ்சாரம் நிகழ்கிறது

இருப்பின் புழுக்கத்தில்
உண்மை விற்றுப் பிழைக்கும்
அரிச்சந்திரன்களின் கனவுகளில்
தூக்கிட்டுக் கொள்ளும்
உண்மைகளை
பரிகசித்தபடி கடக்கும் பொய்கள்

பிம்பங்களின் வெளிச்சத்தில்
சுயம் தொலைத்தபடி
நாற்காலியேறுபவர்களின்
பிணங்களின் பல்லியையொத்த
சிரிப்பொலிகளில்
உயிர்த்தெழுகிறார்கள்
அவர்களுக்கான அடிமைகள்

தனக்கு முன்னே
நிகழ்ந்த படுகொலைகளை
பார்த்தபடியே
சிலையாகிப்போன
புத்தர்களின் கண்களில் வழிகிறது
ஒரு கொடுங்கனவின் குருதி.

அமைதியின் பொருட்டு
வீசப்படும் பிணங்களின் கண்களில்
உறைந்து கிடக்கும் பெருங்கனவுகள்

எல்லாம் பார்த்து
எதிர்ச் சொல்லற்று பழகிய பின்
உடலெங்கும் முளைக்கும்
விலங்கு ரோமங்கள்
கண்டு அதிர்ந்து
ஏதும் ஆகப் போவதில்லை.

Pin It