உணர்ச்சியற்ற தமிழனே!
உறவு படும் துயரமும்,
உயிர்கள் விடும் காலமும்
ஓடிவந்து உதவ நேரமின்றி - நேற்று
ஓடியொழிந்த கதை எங்கு சொல்வேன்!
நான் எங்கு சொல்வேன்!

காவியம் பல எழுதிவைத்தான்
காலம் எல்லாம் சொல்லிவந்தான்
வீரனென்றால் - தமிழன் என்றான்!
தமிழன்என்றால் - வீரனென்றான்!
வீழ்ந்தாலும், வென்றாலும்
வேங்கையென பாய்ந்திடுவான்!

குலம் காத்திட குருதியெல்லாம்
கொட்டிய தமிழன் எங்கே?
தன்மானம் காத்த தமிழன் எங்கே?
எந்தன் தலைவன் எங்கே?

புறநானூற்று வீரமகளாய்
குலம் அழிந்தாலும், மானம் காத்திட
மறவர் போற்றிட, மழலை மனம்
மங்கா தன் கடைசி மகனையும்
வெற்றி திலகமிட்டு, வீர முழக்கமிட்டு
“திருநாடு அடைவதே தீர்வென்று”
போர்முனை நோக்கி வீரவாள்
கொடுத்தனுப்பிய எங்கள் வீரத்தாய் எங்கே?
எங்கள் வீரத்தாய் எங்கே?
தாயைப் பழிக்கும் மகன் உண்டோ!

வெறி கொண்ட சிங்களனின்
இனங்கொல்லும் செயலையெல்லாம் - தாய்த்தமிழா
நீ கண்மூடி பார்த்தாயோ? - இல்லை
கைத்தட்டி ரசித்தாயோ?

ஆரியன் முதல் ஆங்கிலன் வரை
அடித்துவிட்டான்! ஓரத்தில் ஒதுக்கிவிட்டான்!
இதைக் கண்ட சிங்களனும் நம்மீது சீறிவிட்டான்!
சினம்கொண்ட எம்தோள்கள் இனம்வெல்ல
வேல்கொண்டு களம் புகுந்துவிட்டோம்!

காணாத காட்சி எல்லாம்
இக்களத்தினிலே கண்டுவிட்டோம்!
களங்காத பல நெஞ்சும்
காயம் பட்டு விழுந்துவிட்டோம்!
விழுவதுவும் சூரியனோ! விழுவதுவும் சூரியனோ!
அதுவும் மறைவதினால்
எந்நாட்டு பூமி எங்கும்
செவ்வான கோலம் பூண்டதுவோ!

அலையலையாய் ஓயாது மோதிட்டோம்!
அணையாத தீபமாய் போரிட்டோம்!
கோழையான சிங்களனோ! கோபம் கொண்டு
எம்மக்கள் மீதே கொடுமையெல்லாம் கொளுத்திவிட்டான்
கொடும் பாவம் எல்லாம் செய்துவிட்டான்!

தாயென்றும்,சேயென்றும் பாராது
இரவினிலே நச்சையெல்லாம் ஏவிவிட்டான்
நடுந்துயில் வேளையிலே நகராது நுகரையிலே
நோயுற்ற எம்மக்கள், குடிநீரும் விஷமென்று
அறியாது குடித்து மடிந்துவிட்டார்!

இன்று நாங்கள் நிராயுத பாணியாக நிற்பதினால்
உன்னிடமே மடிபிச்சை ஏந்துகிறோம் - தாய்த்தமிழா
நீ மனமிரங்கி வாராயோ? - இல்லை
இனங்கொல்லும் விலங்கென மாறாயோ?

கொலைக்களங்கள் கண்ட பின்னும்
குரல் கொடுக்க மாட்டாயோ?
இருந்தும் என் தாகம் தீராது
இறந்தாலும் என் தாகம் ஓயாது
இது அரைநூற்றாண்டு கால தாகம்
வீழ்ந்தாலும் குறையாது எங்கள் வேகம்! வேகம்! வேகம்!...

கைத்தட்டல்கள் கேட்டு கேட்டு நொந்துவிட்டேன்
இனியாவது எழுந்துவிடு! - என்
இதயத்தின் வாயிலை தட்டிவிடு
எனக்காக அன்றி நமக்காக
ஓர் உலகம் படைப்போம்!
ஈழம் வெல்லும்
காலம் அதை
நாளை சொல்லும்! சொல்லும்! சொல்லும்!...

- இரா.கி.பிரபாகரன்,
இறுதியாண்டு இயந்திரவியல்,
அரசினர் பொறியியற் கல்லூரி,சேலம்.

Pin It