இளமைச் சிறகை
உதிர்த்து விட்டு
ஊர்வந்து சேர்ந்தான்
இசக்கி முத்து...
பட்டாளத்து மிடுக்கு
நடையில் தெரிந்தது.

பச்சை வயல்வெளியெங்கும்
நச்சுப் புழுதி கக்கியிருந்தது
சிமெண்ட் தொழிற்சாலை!

வாகனப் புகையில்
புலம்பெயர்ந்து போயிருந்தன
சாலையோரத்து மின்மினிகள்!

பட்டுக் கம்பளம்போல்
கைகளில் ஊர்ந்த
இந்திர கோபமும்
கார்த்திகை வந்தும்
கரிசல் மண்ணில்
காணாமல் போயிருந்தன!

தும்பைப் பூ மேல்
நர்த்தனமாடிய
வண்ணத்துப்பூச்சிகளும்
வனவாசம் சென்றுவிட்டன!

துடுமென பாய்ந்து
மணலெடுத்து மகிழ்ந்த
நெடுநீர்க் குட்டமும்
கிரிக்கெட் ஆடுகளமாய்
குறுகிப் போயிருந்தது!

ஆடு புலியாட்டம்
ஆடி மகிழ்ந்த
அரச மரத்தடியும்
பிள்ளயை£ர் தங்கும்
கொலுமண்டபமானது!

ரப்பர் பந்து போல்
முற்றத்தில் குதித்துத் திரிந்த
சிட்டுக்குருவிகளும்
அடைக்கலம் தேடி
அயலூர் பறந்துவிட்டன!

அவ்வப்போது
பாறை பிளக்கும்
வெடியோசையால்
அவனின் ஓட்டு வீடும்
ஆட்டம் போட்டது.

தொலைந்துபோன
இளமை போலே
கலைந்து போனது அவனின்
கிராமத்துப் பசுமை!

பொசுங்கிய மனதோடு
ரயிலேறிப் புறப்பட்டான்...
நகரத்திலிருக்கும்
மகன் வீட்டுக்கு!

- வ.இளங்கோ, திண்டுக்கல்

Pin It