வீட்டைப் பிரிந்து வெகுநாளாகிவிட்டது
வெளியேறிய நாளும்
நினைவில் தப்பிவிட்டது
பகல் பொழுதில் உறங்கும் நினைவுகள்
அலையலையாய் வருகின்றன
ஒர் இரவு மிருகமென
பின்னரவில்

யாருமற்ற வெளியில்
சுற்றித்திரியும்
என் பறவைகள்
என்னை மறந்துவிட்டன

ஞாபகங்கள் மறந்து குழம்பும்
என் நினைவலைகளில்
எங்கள் வீதி மட்டும்
ஞாபகமிருக்கிறது.

0

தவறிய சொல்

சாலையின் சிறு திருப்பமொன்றில்
தவற விட்டுவிட்டேன் ஒரு சொல்லை
என் வருத்தமெல்லாம்
தவறவிட்டதற்காக அல்ல

எடுத்துப் பயன்படுத்துபவன்
அதன் தன்மையை
மாற்றிவிடக் கூடாதேயென்றுதான்

0

அதை எடுத்தது
பிறகு
ஒதுக்கிற்று

இதைப் பார்த்தது
அப்புறம்
அதையும் தவிர்த்தது

இன்னொன்றையும் எடுத்தது
அதுவும் பிடிக்கவில்லை

மற்றொன்றை...
அதையும் எட்டி உதைத்தது

எத்தனை முறை உதறினாலும்
அதனுடன் விளையாட
அதுகளுக்கும்
அதுகளுடன் விளையாட
அதுக்கும் சலிப்பதில்லை

குழந்தையும்
பொம்மைகளும்
அப்படித்தான்

0

மணல் வீடு

அப்பா கட்டினால்...
சரிவாகிறது

குழந்தை கட்டினால்
சரியாகிறது

வித்தகக் கலைஞன்
விரல்பட்டால்...
விறகுக்கட்டையும்
வீணையாகிறதே.

Pin It