சைக்கிளின் முன் இருக்கையிலிருந்து
கடந்து செல்லும் மரங்களிடம் பேசியபடி
வருகிறாள் சிறுமி.
மரங்களின் மொழியை அவளுடன்
பயணிக்கும் தட்டான்களுக்கு கற்றுத்தருகிறாள்.
அவளிடம் கற்ற மொழியுடன்
மரத்தின் இலையில் அமர்கின்ற
தட்டான்களின் சிறகில் ஒளிர்ந்து
நகரும் வெயில் மரமொழியை
கற்றுக்கொண்டு மறைந்து போகிறது.
கொதிக்கும் பாலையின் வெயிலுக்குள்ளிருந்து
முளைக்கும் மரக்கன்று
சிறுமியின் மொழியில் தலையசைத்து
தலையசைத்து பேசத் துவங்குகிறது
பாலையின் முதல் துளியிடம்.

கரைதல்

கண்கள் புதைந்திருக்கும் நிலத்தில்
நடமாடுகின்றன காகங்கள்.
நான்
உன்னை முத்தமிடுகிறேன்.
காகங்களின் நடுவே ஓர் உன்னதமான
உரையை நிகழ்த்துகிறாள்
கால்களின் கீழ் கண்களை தொலைத்த சிறுமி.
நீ
என் முத்தங்களை பேரன்புடன் பெற்றுக்கொள்கிறாய்.
அவளது ஒவ்வொரு சொற்களின்
முடிவிலும் பரவும் நறுமணம் அந்நிலத்தை
அதீத வாசமுள்ளதாக்குகிறது.
நாம்
மூச்சுக்காற்றை பரிமாறிக்கொள்கையில்
புதுவித வாசத்தை உணர்கிறோம்.
நம் உடல்கள் புதைந்திருக்கும் நிலத்தின்
மீது உலாவுகின்றன குருட்டுக் காகங்கள்.

Pin It