1990களில் பன்னாட்டுத் தொண்டு மற்றும் நிதி நிறுவனங்களான உலக சுகாதார மையம் மற்றும் UNAIDS போன்றவை சில சமூகத்தினரை எச்.ஐ.வி மற்றும் இதர பால்வினை நோய் தொற்றுக்கு அதிகம் ஆளாகக் கூடியவர்கள் என்று அறிவித்தன. இவர்களுள் ஹிஜ்ரா, அரவானி/ திருநங்கை சமூகத்தினரும் அடங்குவர். பிறப்பால், உடல்-உயிரியல் அளவில் ஆண்களாகப் பிறந்து பின் பெண் பாலின அடையாளம் ஏற்கும் அரவானிகள் சமூகத்தில் பல்வேறு ஒதுக்குதல்களையும் புறக்கணிப்புகளையும் வன்முறைகளையும் சந்திக்க நேரிடுவது இன்று நாம் பொதுவாக அறிந்திருக்கும் ஒன்று. எனினும், பலருக்கு அரவானிகள்/ திருநங்கைகளுடைய பால்/ பாலின அடையாளங்கள் குறித்த தெளிவின்மை தொடர்கிறது. ஆண், பெண் பாலுறுப்புகளில் குழப்பம் காரணமாக சிலர் அரவானிகளாகப் பிறக்கிறார்கள் என்ற தவறான புரிதல் பலருக்கு இன்னமும் உண்டு. பிறப்பால் பாலுறுப்பு தொடர்பான தெளிவின்மை கொண்ட நிலை ஆங்கிலத்தில் Intersex என்றும் தமிழில் "நடுவின்பால்" என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில் உள்ள நபர்கள் தங்களை Intersex persons என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்.

அரவானிகள் என்போர் பிறப்பால், உடல்-உயிரியல் ரீதியாகத் தெளிவாக ஆணாகப் பிறப்பவர்கள். உளவியல் ரீதியாகத் தங்களை ஆணுடலில் சிக்கியிருக்கும் பெண்களாகக் கருதுபவர்கள். இந்த உட்போர் அல்லது முரண்பாடு காரணமாக, குறிப்பாகப் பாலுறுப்புகள் மற்றும் அவை சார்ந்த உணர்வுகள் அதிகம் செயல்படத் தொடங்கும் வயதில், பெண்களின் புற அடையாளங்களை, நடை, உடை போன்ற செயல்பாடுகளை ஏற்கத் தொடங்கு கின்றனர். இதனுடன் பெண்களுடைய தொழில்/ செயல்/ கடமைகளாகக் கருதப்படுவனவற்றைச் செய்யும் ஆர்வமும் இவ்வயதில் அதிகம் தென்படுகிறது. இந்த வயதுகளில் தான், இவர்களது பாலின அடையாளங்களும் பாலியல் வெளிப்பாடுகளும் வீடுகளிலும் சமூகத்திலும் பிரச்சனைக்குள்ளாகின்றன. ஆண் பெண் என்ற இரு பாலினத்தவரும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த சமூக எதிர்ப்பார்ப்புகளுக்கு எதிரானவையாக (ஆண், பெண், ஆண்மை, பெண்மை குறித்த பெரியார் அவர்களின் கருத்துக்கள், வ. கீதா அவர்களுடனான உரையாடல் கட்டுரையில் விவரிக்கப்பட் டுள்ளன) இருப்பதால் இவை தினசரி பிரச்சனைகளுக்கும் கிண்டல் கேலி எனத் தொடங்கி பாலியல் வன்முறை வரையிலான துன்பங்களை அனுபவிக்க நேரிடுகிறது.

உளவியல் ரீதியான ஆய்வுகள் மற்றும் உளவியல் நிபுணர்களின் கருத்துக்களின்படி மாற்றுப் பாலியல் அல்லது பாலின அடையாளம், உணர்வுகள், விழைவுகள் ஆகியவை தன்னியல்பில் மன உலைச்சல்களையும் மனநலப் பிறழ்வுகளையும் ஏற்படுத்துவ தில்லை. இந்தப் பாலியல் மற்றும் பாலின வெளிப்பாடுகள் வெகுசன சமூகத்தின் பாலியல் சார்ந்த வரையறைகளையும் எதிர்பார்ப்புகளையும் தகர்க்கும் விதத்தில் அமைவதாலும் அதன் காரணமாக மாற்றுப் பாலின, பாலியலாளர்கள் மீது, பொதுவெளி சமூகம் நிகழ்த்தும் பல விதமான எதிர்ப்புகளின் காரணமாகவே மன நலம் குறித்த பிரச்சனைகள் எழுகின்றன; எனினும் பல காரணங் களுக்காக பாலின அடையாளம் குறித்த இந்த நிலையை ஒரு குறைபாடாகவே, Gender Identity Disorder என்ற நிலையிலேயே, அரசும் மருத்துவ சமூகங்களும் பார்க்கின்றன. பாலின அடையாளம் குறித்த இந்த நிலை மருத்துவ சிகிச்சை மற்றும் பராமரிப்புடன் சம்பந்தப்பட்டிருப்பது இதற்கு முதன்மைக் காரணம்.

இந்த சிகிச்சைகள் வெறும் உடல் அளவிலான cosmetic முறைகள் அல்ல என்பதையும் இந்த சிகிச்சைகள் சாத்தியப்படுத்தும் மாற்றங்கள் ஒருவருடைய சுய அடையாளத்தை நிரந்தரமாக மாற்றியமைக்கும் வகையிலானவை என்பதையும் அந்த நபருடைய உடல் மற்றும் மன நலமும் சமூகத்தில் அவரது செயல்பாடும் இந்த சிகிச்சையினால் கணிசமான முறையில் மாற்றப்படுகின்றன என்பதை Harry Benjamin Standards of Care for Gender Identity Disorders (பாலின அடையாள குறைபாடுகள் குறித்த சிகிச்சைக்கான ஹாரி பெஞ்சமின் அளவுகோல்கள்) போன்ற சர்வதேச அளவுகோல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இவை அனைத்தும் தனது பாலின அடையாளம் குறித்த குழப்ப நிலையில் உள்ள, தன் உடல் நிர்ணயிக்கும் பாலின வரையறைகளுக்கும் உளவியல் ரீதியாக உள்ள பாலின சுய வெளிப்பாட்டிற்கும் பிளவு இருப்பதாக உணரக்கூடிய நிலையைப் பற்றிய விவாதங்கள் மற்றும் பாலின அடையாள மாற்றம் குறித்த முறையான முயற்சிகளும் சிகிச்சைகளும் பெருமளவிற்கு இந்த நிலைமையை மாற்றுகின்றன. ஒருவர் முழுமையான பால் மாற்றத்திற்குத் தயாராக இருக்கிறாரா என்பதை நிர்ணயிக்கவும் அந்த மாற்றத்திற்கானச் சிகிச்சையில் எந்தெந்த உடல் நல மற்றும் மன நல மருத்துவ முறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதற்கான சர்வதேச அளவுகோல்கள் உள்ளன.

அரவானிகள் சமூக நலவாழ்வு குறித்த தமிழக அரசின் ஆணைகளிலும் "குறைபாடு" என்கிற சொல்லாடல் இருப்பதைப் பார்க்க முடிகிறது. சில சிறுவர்கள் தங்களை மனதளவில் பெண்கள் என்று கருதுவது "behavioural disorder," ஒரு செயல்பாட்டுக் குறைபாட்டினை ஏற்படுத்துவதாக 2006இல் வெளிவந்த தமிழக அரசு ஆணை ஒன்று கூறுகிறது. அரசுதவி தேவைப்படுகிற சமூகம் என்கிற வரையறைக்குள் இத்தகைய சொல்லாடல்கள் அரவானி சமூகத்தை நிலைநிறுத்துகிறது. அமெரிக்கா போன்ற நாடுகளிலும் Transgender/Transsexual சமூகங்கள் தங்களது அரசுகளின் இத்தகைய சொல்லாடலுடனேயே இயங்குகின்றன. தங்களது பால் மாற்று சிகிச்சைக்கான மருத்துவக் காப்பீடுகள், அரசு வழங்கும் மருத்துவ உதவிகள் மற்றும் சலுகைகள் போன்றவையும் இத்தகைய சொல்லாடலைத் தேவையாக்குகின்றன.

தமிழக அரசும் அரவானி சமூகமும்

அரசுடனான தங்கள் சமூகத்தின் வெற்றிகரமான முதல் போராட்டம் என்று அரவானி சமூகத்தினர் கருதுவது 2004 ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட ரிட் மனு. இது அரவானிகளுக்குக் குடும்ப அட்டை வழங்கப்பட வேண்டும் கோரி தொடரப்பட்டது. வங்கிக் கணக்குத் திறப்பது, வங்கிக் கடன் பெறுவது, தொலைபேசி இணைப்புக்கு விண்ணப்பிப்பது போன்றவற்றிக்குத் தகுதியானவராகக் கருதப்பட ஒருவருக்கு அடையாள அட்டை வேண்டியிருக்கிறது. மேலும் மாற்றுப் பாலின அடையாளம் ஏற்பதால் அரவானிகளுக்குத் தங்களது பழைய அடையாளத்தைக் குறிக்கும் அட்டைகள் பயன்படுவதில்லை. இக்காரணங்களினால் இந்த மனு தொடரப்பட்டது. மதுரை தலித் தோழமை மையத்தைச் சேர்ந்த ரஜனி அவர்களும் இந்த வழக்கை தொடர முன்வந்த ‘தேனி ஆரோக்கிய அகம்’ அமைப்பில் பணிபுரிந்து வந்த பிரியா பாபு அவர்களும் அரவானி சமூகத்தி னருக்குத் துணை நின்றார்கள். ஜூலை 2004இல் சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட அறிவிப்பில் அரவானிகள் அரசு அடையாள அட்டைகளுக்கும் ஆவணங்களுக்கும் விண்ணப்பிக்கும் பொழுது ஆண் அல்லது பெண் இரண்டில் தங்களுக்கு விருப்பமானதைத் தேர்வு செய்துகொள்ளலாம் என்று கூறியது. இது அரவானி சமூகத்தினருக்குத் திருப்தியளிப்பதாக இல்லை எனினும் அப்பொழு திற்கென இதனை ஏற்றுக்கொண்டனர். ஆனால் இச்சமூகத்தினரின் போராட்டங்கள் காரணமாக சில நல்ல மாற்றங்கள் நிகழத் தொடங்கின. உதாரணமாக, காஞ்சிபுரம் மற்றும் வேலூர் மாவட்ட ஆட்சியாளர்கள் இந்திரா ஆவாஸ் திட்டத்தின் கீழ் அரவானிகளுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.

இதன் பிறகு சமூக மாற்றத்திற்கான அரவானிகளின் பணிகள் தொடர்ந்தன. எச்.ஐ.வி விழிப்புணர்வு மற்றும் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அரசு சார் நிறுவனங்கள், மற்ற தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றின் மூலமாக சமூகத்தில் தங்களது இருப்பையும் வழங்கப்பட வேண்டிய உரிமைகளையும் குறித்து அரவானிகள் தொடர்ந்து பேசி வந்துள்ளனர். Center for social initiative and management போன்ற கல்வி நிறுவனங்கள் அரவானி களுக்குச் சமூகப் பணி, கணினி போன்ற துறைகளில் பயிற்சியளிக்க முன்வந்தது. "கண்ணாடிக் கலைக் குழு" என்ற நாடகக் கலைக் குழு மூலம், அரவானிகளின் பாலியல்பு, பாலினம், அடையாள அரசியல் போன்றவை குறித்த நாடகங்களைத் தயாரித்து நிகழ்த்தினர்.

எனினும் அரசுடனான உரையாடல்களில், அரசுத் திட்டங்களில் முக்கிய மாற்றங்கள் நிகழத் தொடங்கியிருப்பது 2006ஆம் ஆண்டிலிருந்து தான். பெரிய மாற்றங்களை நிகழ்த்த அரசின் பார்வை அரவானி சமூகத்தின் மீது பட மிகப் பெரிய ஊர்வலம் ஒன்றை நடத்த முடிவு செய்தனர். தமிழ்நாடு அரவானிகள் குழுமத்தைச் சேர்ந்த ஆஷா பாரதி அவர்கள் தலைமையில் நடந்த இந்த ஊர்வலத்திற்குப் பிறகு சமூக நலத்துறை அமைச்சர் பூங்கோதை அவர்களிம் மனு வழங்கப்பட்டது. இந்த மனுவில் வாக்காளர் அடையாள அட்டைகள், வீட்டு வசதி ஆகியவை உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

திசம்பர் 2006இல், அரவானிகள் வாழும் சூழ்நிலைகளில் முன்னேற்றம் கொண்டு வரவேண்டும் என்று அரவானிகள் நலவாழ்வுக்கான துணைக்குழு பரிந்துரைத்தது. இது குறித்துப் பின்னர் அரசு தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டது1

துணைக்குழுவின் பரிந்துரைகளில் பல விஷயங்கள் குறிப்பிடப் பட்டிருந்தன: பள்ளிப் பருவத்தில் நடத்தை மாற்றம் காணப்படும் சிறுவர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் மன நல ஆலோசனை, ‘ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களை’ பால் மாற்றம் செய்வதிலிருந்து தடுப்பது போன்றவை குறிப்பிடப் பட்டிருந்தது. இதனையட்டி வெளிவந்த அரசு ஆணை பல முக்கிய விஷயங்களைப் பட்டியலிட்டிருந்தது: அரவானிகளுக்கு அனுமதி வழங்காத பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீது நடவடிக்கைகள், அரவானிகள் சுய உதவிக் குழுக்களுக்கு சிறு நிதியுதவிகள் மற்றும் பயிற்சித் திட்டங்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை வேண்டி அரவானிகள் அணுகும் மருத்துவமனைகளுக்குத் தேவையான அறிவுப் பூர்வமான தகவல்கள், மன நல ஆலோசனை வழங்குவதற்கானப் பயிற்சி, காலாண்டிற்கு ஒரு முறை மாவட்ட ஆட்சியாளரைச் சந்தித்து அடையாள அட்டைகள் குறித்த புகார்களைத் தெரிவிப்பது போன்றவை செயல்படுத்தப்பட வேண்டும் என்று இந்த அரசு ஆணை தெரிவித்தது. இவைத் தவிர அரவானிகளின் வாழ்வியல் குறித்த விரிவான ஆய்வும் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும் என்று இந்த ஆணை வலியுறுத்தியது.

மே 2008இல் சமூக நலவாழ்வுத் துறையின் கீழ் அரவானி நல வாரியம் அமைக்கப்பட்டது. அதே மாதம் நிறைவேற்றப்பட்ட ஒரு ஆணை தமிழகக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அரவானிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது2.

மார்ச் 2009இல் அரவானிகள் நல வாரியத்தின் பரிந்துரைக்குப் பின்னர் சென்னை அரசு பொது மருத்துவ நிலையத்தில் அரவானி களுக்கு இலவச பால் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இது அரவானி சமூகத்தினருக்கு வரவேற்கத் தக்க மாற்றமாக இருந்தது. தங்கள் பால் மாற்று சிகிச்சைக்கு முறையான மருத்துவ வசதி இல்லாததால் பல காலங்களாக அரவானிகள் அபாயகரமான சிகிச்சை முறைகளை நாடிச் செல்ல வேண்டியிருந்துள்ளது. மேலும், முறையான மன நல ஆலோசனை மூலம் இந்த தீவிரமான சிகிச்சைக்கு ஒருவர் தயாராக இருக்கிறார் என்பதை உறுதிசெய்த பின்னரே ஹார்மோன் சிகிச்சையும் அறுவை சிகிச்சையும் செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் இதன் பின் எழுந்தன.

அரசின் கவனம் விளிம்புநிலைச் சமூகம் ஒன்றின் மீது விழுந்திருப்பதும் அச்சமூகம் குறித்த பல நலவாழ்வுத் திட்டங்களை அந்த அரசு மேற்கொள்வதும் வரவேற்கத் தகுந்தவை. எனினும் அரசு நிறுவனங்கள் இவை குறித்த தங்களது பணிகளைச் செம்மையாக நிறைவேற்றுவதை உறுதிசெய்ய அரவானி சமூகத்தினரும் தங்களை ஒன்றுபட்ட குழுவாக அமைத்துக் கொண்டுள்ளனர். Federation of Indian Transgenders என்ற பெயரின் கீழ் "சிதா ஃபௌண்டேஷன்," "சகோதரி ஃபௌண்டேஷன்," "அரவானிகள் உரிமை சங்கம்," "தென்னிந்திய பாசிடிவ் அரவானிகள் ஃபௌண்டேஷன்," "அன்பு அறக்கட்டளை," "சுடர் ஃபௌண்டேஷன்," "ஈரோடு அரவானிகள் சங்கம்," "திருச்சி அரவானிகள் சங்கம்" ஆகிய அமைப்புகள் 2008ஆம் ஆண்டில் ஒன்றிணைந்துள்ளன.

பால், பாலியல்பு, பாலியல், பாலினம் ஆகியவை குறித்து சொல்லப்பட்ட மற்றும் சொல்லப்படாத விதிமுறைகள் நம் குடும்ப, சமூக, நிறுவன, அரசு அமைப்புகளில் வேரூன்றி இருக்கின்றன. பால்கள் இரண்டு என்பதும் அதனைத் தொடர்ந்து பாலினங்கள் இரண்டு என்பதும் இவ்விருவரின் பாலியல்புகள் இங்ஙனம் இருக்க வேண்டும் என்பதும் இந்த பாலினத்தவர் இந்த செயல்பாடுகளில் ஈடுபடலாம் என்பதும் இந்த பாலினத்தவர் இந்த பாலினத்தவருடன் உறவு கொள்ளலாம் என்பதும் நியதிகள் என்றும் அவையே இயற்கையானவை என்றும் நம் பொதுப்புத்திகள் நம்புகின்றன. இவற்றை அசைக்கும் எந்த ஒன்றும் சமூக அமைப்பின் அடித்தளத்தை அசைப்பதாகவும் உணர்கிறோம். இந்த நிலையில் அரவானி சமூகம் தனது இடையறாத போராட்டத்தின் மூலம் அரசின் கவனத்தை ஈர்த்துத் தனது உரிமைகளைக் கேட்டுப் பெறும் இன்றைய நிலை வரவேற்கத்தக்கது; எனினும் இந்தப் பால்-பாலின-பாலியல்பு ஆகியவற்றில் ஆண்-பெண், ஆண்மை-பெண்மை, ஆண்-பெண் உறவு ஆகிய ஈரிணைகளை, binary opposites, கேள்விக்குள்ளாக்கும் எதனையும் - அது பாலின அடையாளமாக இருந்தாலும் சரி, மாற்றுப் பாலியலாக இருந்தாலும் சரி - "குறைபாடு" என்ற நிலையில் அமர்த்தும் அரசு மற்றும் இதர அதிகார நிறுவனங்களின் வழக்கத்தை நாம் கவனமாகப் பார்க்க வேண்டும்.

பல நேரங்களில் நாம் எந்தெந்த அதிகாரக் கட்டமைப்புகளை, ஒடுக்குமுறையை செயல்படுத்தும் அமைப்புகளை உள்ளிருந்து தகர்க்க முயல்கிறோமோ, அந்த அமைப்புகள் - அரசு உட்பட பல நல்லெண்ணம் கொண்ட செயல்பாடுகள் மூலம் நமது முயற்சிகளின் கூர்மையை மழுங்கடித்துவிடுவது வரலாற்றின் பல தருணங்களில் சிறுபான்மை சமூகங்களுக்கு நிகழ்ந்துள்ளது. ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூக மக்கள் தங்களது உடனடித் தேவைகள், உரிமை மீறல்கள், தங்கள் மீதான வன்முறை, தினசரித் துன்பங்கள் ஆகிய வற்றைக் கருத்தில் கொண்டு அரசுடனான இந்த உரையாடலில் ஈடுபட வேண்டியிருக்கிறது.

குறிப்புகள்:

1 Government of Tamil Nadu, Social Welfare and Nutritious Meal Program Department. (2006). Social welfare--rehabilitation of aravanis (eunuchs) (G.O. (MS) No. 199). Chennai: Government of Tamil Nadu Printing Office.

2 Government of Tamil Nadu, Higher Education Department. (2008). Collegiate Education-revised guidelines for admission of students in government/aided/unaided arts and sciences colleges from 2008-2009 (G.O. (1D) No. 75). Chennai: Government of Tamil Nadu Printing Office.

Pin It