தமிழீழத்தில் நடைபெற்ற விடுதலைப் போரும் காஷ்மீரத்தில் தற்போது நடைபெற்று வரும் விடுதலைப் போரும் சாரத்தில் தேசியஇன விடுதலைப் போரட்டங்களே எனினும் இத் தேசிய இனங்களின் புவியியல் இருப்பு, வரலாற்றுப் பின்னணி, போராட்ட முறைகள் வடிவங்கள் என்பவை பெருமளவும் மாறுபட்டவை.

இந்நிலையில் இவ்விரண்டையும் ஒப்பு நோக்கி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கிற கருத்து நீண்ட நாளாகவே இருந்துவந்தது. கடந்த 2009ஆம் ஆண்டு மே 17 முள்ளிவாய்க்கால் பின்னடைவுக்குப் பிறகு இது கூடுதல் தீவிரம் பெற்றது. என்றாலும் இதழில் அவ்வப்போது எழும் உடனடிச் சிக்கல்களுக்கு முக்கியத்துவம் தந்து அது பற்றி எழுதி வந்த நிலையில் இது தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. தற்போது காஷ்மீர் கொந்தளித்துக் கொண்டிருக்கிற தருணத்தில் இது பற்றிய சில கருத்துகளைச் சொல்வது பொருத்தமாக இருக்கும் என்று தோன்றியது.

இது போன்ற முயற்சிகள் பரவலான தரவுகளை முன்வைத்து விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்று என்றாலும், அதற்கான நேரம் அவகாசமற்ற சூழலில், மற்றவர்கள் இந்த நோக்கில் ஆராயவும் அதற்கான சில தொடக்கப் புள்ளிகளை அணுகு முறைகளை பரிந் துரைக்கவும் ஆன நோக்கில் இங்கே சில கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன.

இக்கருத்துகள் எதுவும் யாரையும், குறைகூறும், விமர்சிக்கும் அல்லது புண்படுத்தும் நோக்கம் கொண்டவை யல்ல. பல்வேறு நாடுகளில் நடை பெற்று வரும் விடுதலைப் போராட்டங் களை நாம் அவதானிப்பது நமது தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு படிப்பினைகளை, அனுபவங்களை நல்குவதாக அமையும் இது நமது போராட்டத்தின் திசை வழி நோக்கிய பயணத்திற்கு உந்துசக்தியாக உரமூட் டுவதாக அமையும் என்கிற நோக்கி லேயே இது இங்கே முன் வைக்கப் படுகிறது.

ஈழச்சிக்கல்: தொல் காலம் முதலே தமிழர்களின் தாயகமாயிருந்த இலங் கையில் வந்தேறிகளான சிங்களர் குடி யேறி ஆக்கிரமித்து இலங்கைத் தீவெங் கும் பரவ இலங்கை, தமிழ் சிங்கள ஆகிய இரு தேசிய இன மக்கள் வாழும் பகுதியாக, வடக்கு கிழக்கு பகுதிகள் தமிழ் மக்களின் தாயகமாக ‘தமிழீழம்’ எனவும் தெற்கு மேற்கு பகுதிகள் சிங் கள மக்கள் வாழும் பகுதியாகவும் மாறியது.

17ஆம நூற்றாண்டில் ஐரோப்பிய ஆக்கிரமிப்புப் படை இலங்கைத் தீவைக் கைப்பற்றித் தங்கள் ஆட்சியை நிறுவி, சுமார் மூன்று நூற்றாண்டு காலம் ஆட்சி நடந்த, தமிழீழ சிங்கள மக்கள் ஒன்று பட்டுப் போராடி ஆங்கி லேயரை விரட்டி ஆட்சியை மீட்டனர்.

ஆனால் சிங்கள தமிழீழ மக்களை ஒருங்கிணைத்து அடக்கி ஆண்ட ஆங்கிலேயர்கள் ஆட்சியை இரு தரப்பாருக்கும் பகிர்ந்தளிக்காமல் பெரும்பான்மைச் சிங்கள மக்களிடம் தந்து வெளியேறினார்கள் ஆட்சியதி காரம் கைக்கு வந்த சிங்களர்கள் படிப் படியாக தமிழீழ மக்களின் உரிமைகளைப் பறித்து அவர்கள் மீது அடக்கு முறைகளை ஏவ இந்த அடக்கு முறைகளை எதிர்த்த போராட்டமே தமிழீழ விடுதலைப் போராட்டமாகப் பரிணமித்தது. நிராயுதபாணியாய்ப் போராடி வந்த தமிழீழ மக்களை சிங்கள அரசு ஆயுதம் கொண்டு தாக்கியதுடன் 1974 யாழ்ப்பாணம் உலகத் தமிழ் மாநாட்டின் போது 9 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட போராட்டக் காரர்களும் ஆயுத மேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். அதன் பின் ஆயுதமேந்திய பல போராடக் குழுக்கள் உருவாக 1976 முதல் தமிழீழ விடுத லைப் போராட் டம் ஆயுதப் போராட்டமாக நடை பெறத் தொடங்கியது.

காஷ்மீர் சிக்கல்: காஷ்மீர் சிக்கலை ஈழச்சிக்கல் போல ஒரு நேர்க் கோட்டு வரையரையில் சொல்ல முடியாது. காரணம் காஷ்மீருக்கு என்று திட்டவட்டமான நிலைத்த தொல் குடி மக்களோ, நீடித்த அரசுகளோ பண் டைய வரலாற்றில் காணக்கிடைக்க வில்லை. காஷ்மீரில் பல் இன மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பல் இன அரசு கள் ஆண்டிருக்கின்றன. இதன் பின் 12 ஆம் நூற்றாண்டின் இருந்துதான் ஒரளவு தெளிவான வரலாறு தெரிய வருகிறது.

 காஷ்மீர் பகுதியை தொடக்க காலங்களில் குஷாணர்களும் அடுத்து ராஜபுத்திரர்களும் பின் இசுலாமிய மன்னர்களும் ஆண்டிருக்கிறார்கள். பின் நிகழ்ந்த ஆங்கிலேயப் படை யெடுப்பு இந்திய துணைக் கண்டத்தில் அதிகாரத்தில் இருந்த இசுலாமியர்களை வெற்றி கொண்டு தங்கள் ஆட்சி யதிகாரத்தை நிறுவியதைப் போல, காஷ்மீரிலும் இசுலாமிய ஆட்சியை வென்று அதிகாரத்தை டோக்ரா - ராஜ புத்ர மன்னர்களிடம் ஒப்படைத்து தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டனர்.

இந்தியத் துணைக்கண்டத்தில் ஐரோப்பியர் ஆட்சி ஆங்கிலேயே இந்தியா, பிரஞ்சு இந்தியா, டச்சு இந்தியா, எனத் தனித்தனியாக ஆதிக் கம் செலுத்திய அதேவேளை ஆங்கி லேயே ஆட்சிக்கு உட்பட்டு சமஸ்தா னங்கள், குறுநில ஆட்சிப் பகுதிகள் எனவும் பல நிலவின. இதேபோலவே பல்வேறு வரலாற்றுக் காரணங்களா லும், தனித்தன்மையாலும் காஷ்மீரைத் தங்கள் நேரடி ஆட்சிப் பகுதிக்குள் கொண்டு வராது தனி மன்னராட்சிப் பகுதியாகவே வைத்து ஆட்சி செலுத் தினர்.

இப்படி நிலவிய காஷ்மீர் 1947 ஆகஸ்டு 15க்குப் பின்னும் ஹரிசிங் என்னும் மன்னராட்சியின் கீழேயே நீடித்தது. எனில் இதற்கு ஒருநாள் முன்னதாக ஆகஸ்டு 14இல் விடுதலை பெற்ற பாகிஸ்தான் காஷ்மீரை கபளீகரம் செய்ய காஷ்மீர் மீது படையெ டுத்தது. அப்படையெடுப்பைச் சமாளிக்க முடியாத மன்னர் ஹரி சிங் இந்தியாவின் உதவியை நாடினார். இதுதான் சமயமென்று கருதிய இந்தியா காஷ்மீரை அதன் பாதுகாப்பு கருதி என்று சொல்லி இந்தியாவுடன் இணைய ஒரு ஒப்பந்தம் போட்டு 1948 மார்ச் 5ஆம் நாள் காஷ்மீர் மாமன்னர் பேரறிக்கையின்படி சில சிறப்பு சலுகை களுடன் அதை இந்தியாவின் ஒரு மாநி லமாக ஆக்கிக் கொண்டது.

 இப்படி காஷ்மீரை இந்தியாவுடன் இணைக்கும் போது அப்போதைய இந் தியப் பிரதமர் நேரு காஷ்மீர் மக்களுக் குத் தந்த வாக்குறுதி, இப்போதைய நெருக்கடியிலிருந்து மீள காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக இருக்கட் டும், பிறகு காஷ்மீர் தனித்திருப்பதா, இந்தியாவுடன் இருப்பதா என்பதை காஷ்மீர் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தி முடிவு செய்து கொள் வோம் என்பதுதான். ஆனால் இந்திய அரசு இன்றுவரை அதற்கான கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்பதுதான் காஷ்மீர் மக்களின் கோபம். இதன் அடிப்படையில் எழுந்ததுதான் காஷ்மீர் மக்களின் போராட்டம்.

இன்றைய காஷ்மீர் என்பது

பாகிஸ்தான் ஏற்கெனவே தனதாக்கிக் கொண்ட பகுதிகளுடன் புதிதாக ஆக்கிரமித்த ஒரு பகுதி, இந்தியா இணைத்துக் கொண்ட இந்திய அரசுக்குட்பட்ட மாநிலம் என்கிற ஒரு பகுதி, வடக்கே ஏற்கெனவே சீனா ஆக்கிரமித்துக் கொண்ட ஒரு பகுதி என இந்த நான்கு பகுதிகளையும் உள்ளடக்கியதாக இருந்து வருகிறது இதுதான் உண்மையான காஷ்மீர் தேசம்.

தற்போது காஷ்மீர் மக்களின் கோரிக்கையெல்லாம் - சீன ஆக்கிரமிப்புப் பகுதி பெரும் பனிமலைப் பிரதேசம் என்பதால் தற்போது அது உடனடிப் பிரச்சனை இல்லை அவர்களது கோரிக்கையெல்லாம் - இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும், காஷ்மீர் - காஷ்மீர் மக்களுக்கே சொந்தமாக, தன்னுரிமை பெற்ற ஒரு தனித் தேசமாக விளங்க வேண்டும் என்பதுதான்

மக்களும் மதமும்: இலங்கையில், தொல்குடிகளாக விளங்கிய தமிழர்கள் பின் சிங்களர்கள் என இரு தேசிய இனம், இவற்றில் தமிழர்கள் பெரும் பாலும் இந்துக்கள், சிங்களர்கள் பௌத்தர்கள், இவர்கள் அன்னியில் இந்த இருதரப்பிலிருந்தும் மதம் மாறிய கிறித்துவர்கள், மிகச் சிறுபான்மைமயாக முஸ்ஸிம்கள் என மக்கள் நான்கு மதம் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இதனால் இங்கு தேசிய இனச்சிக்கலின் ஊடே மதச்சிக்கலும் ஊடாடிக் கிடப் பது தவிர்க்க இயலாத தாக இருக்கிறது. இவற்றுள் முக்கியமாக பௌத்தம் தமிழர்களுக்கு, பெரும்பான்மை இந்துக் களுக்கு எதிராக இருக்கிறது.

அதே போல காஷ்மீரிலும், கனிஷ் கர் காலத்திலிருந்தும் பௌத்தர்கள், ராஜ புத்திரர்கள் காலத்திலிருந்து இந்துக்கள், இசுலாமிய படையெடுப் புக்குப்பின் முஸ்லிம்கள், வெள்ளை ஆதிக்கத்திற்குப் பின் சிறுபான்மை அள வில் கிறித்துவர்கள் என நான்கு மதத் தவர்கள் உள்ளனர். இங்கும் தேசிய இனச் சிக்கலுடன் மதமும் ஊடாடிக் கிடந்தாலும் இலங்கையில் ஒடுக்கும் தேசிய இனமும் ஒடுக்கப்படும் தேசிய இனமும் பௌத்தம் எதிர் இந்து என நேர்ப்பிரிந்து இருப்பதுபோல் காஷ் மீரில் இல்லை. காஷ்மீரில் காஷ்மீரி பண்டிட்டுகளான இந்துக்களுக்கும், இசுலாமியர்களுக்கும் அவ்வப்போது சில சிக்கல்கள் மோதல்கள் நேர்ந்தா லும், இவை ஒன்றுக்கொன்று நேர் எதி ராகவோ ஒடுக்கும் ஒடுக்கப்படும் தேசிய இனமாகவோ, மதமாகவோ இல்லை.

போராளிக் குழுக்கள்: 1976இல் தொடங்கி தமிழீழத்தில் பல்வேறு போராளிக் குழுக்கள் இயங்கி வந் தாலும், இக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், தன் முனைப்புப் போக்குகள் காரணமாக, சக போராளிக் குழுக்களுக்குள் மோதல் ஏற்பட்டு இவை ஒன்றையன்று அழிக்கும் முயற்சியில் ஈடுபட பிற போராளிக் குழுக்கள் அனைத்தையும் பின்னுக்குத் தள்ளி எல்லாவற்றிலும் வலுமிக்க அமைப்பாக புலிகள் அமைப்பு மட்டுமே களத்தில் தனித்து நின்றது.

இதனால் போட்டிப் போராளிக் குழுக்கள் புலிகள் எதிர்ப்பு நோக்கில் அரசுக்குத் துணை போகவும் போராளி களைக் காட்டிக் கொடுக்கவுமான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இவற்றின் உச்சமாக, புலிகள் அமைப்புக்குள்ளேயே முரண்பாடு ஏற்பட்டு தனிப்பிரிந்து வந்து இயங்கிய சக்திகள் முற்றாக அரசு ஆதரவு நிலை எடுத்து அரசின் கைப்பாவையாக ஆனதுடன், போராளிக் குழுக்களின் திட்டங்கள், பதுங்குமிடங்கள் முகாம் கள், தொடர்புக் கண்ணிகள் இவற்றை யெல்லாம், காட்டிக் கொடுக்கவும் செய்தனர். காஷ்மீரிலும் போராளிக் குழுக்களுக்குள் பல கருத்து வேறுபாடு கள் இருந்தாலும், அவற்றின் நிலைப் பாடுகளில் போராடும் வழி முறை களில் பல மாற்றங்கள், வெவ்வேறான அணுகுமுறைகள் இருந்தாலும் இவை தமிழீழம் போல் ஒன்றையன்று தாக்கி அழித்துக் கொண்டதாக செய்திகள் இல்லை. இப்போராளிக் குழுக்களுக்குள் சில பாகிஸ்தான் ஆதரவு நிலையில் இருந்தாலும் பொது எதிரி இந்திய அரசு என்கிற நிலையில் அனைத்தும் ஒரு இலக்கை நோக்கிய தாகவே மக்களிடையே தங்கள் போராட்டத்தை நடத்தி வருகின்றன.

போராட்ட முறைகள்: தமிழீழப் போராட்டத்திற்கும், காஷ்மீர் போராட் டத்திற்குகான மிக முக்கியமான வேறுபாடு, தமிழீழ விடுதலைப் போராட்டம் முழுக்க முழுக்க ஆயுதப் போராட்டமாக மட்டுமே கூர்மை பெற்று மக்கள் போராட்டம் என்பது இரண்டாம் பட்சமாக அல்லது பட் சமே இல்லாமல் ஆகியது. எனில் காஷ்மீரில் ஆயுதப் போராட்டம் நடை பெற்றாலும், அது மக்கள் போராட் டத்தோடு பின்னிப் பிணைந்ததாக, முழுக்க முழுக்க மக்கள் போராட் டமாகவே தொடர்ந்து வருகிறது

காஷ்மீரின் தொடக்க காலத்தி லிருந்து அதன் போராட்ட வரலாற்றை அவதானித்தால் ஆதிக்கத்தை எதிர்த்த எந்த ஒரு நடவடிக்கையிலும் மக்கள் உடனடியாக வீதிக்கு வந்து போராடி வருவது தெரியவரும். தற்போது எழுந்துள்ள சிக்கலிலும், காஷ்மீர் மக்கள் திரள் திரளாகத்தான் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். ஆண், பெண், சிறுவர் சிறுமியர், முதியோர் என அனைத்துத் தரப்பு மக்களும் வீதியில் திரள்கிறார்கள், ராணுவத்தை நோக்கி கற்களை எறிந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றனர். இப் படிக் கல்லெறிவதற்கென்றே பல் வேறு சங்கங்களையும் அமைத்திருக் கிறார்கள்.

ஊரடங்கு உத்தரவுகளோ, யந்திரத் துப்பாக்கிகளோ மக்களைக் கட்டுப் படுத்த முடியவில்லை. நவின ரக ஆயுதங்களின் முன்னால் வெறும் கற்கள் மிக மிக அற்பமான ஒரு ஆயுதம் என்றபோதிலும் அது மக்கள் போராட் டமாக, மக்கள் மத்தியிலிருந்து மக் களின் ஆதரவோடு சீறி வருவதால் ராணுவத்தால் அதைக்கட்டுப் படுத்த இயலவில்லை. ஆட்சியாளர்களாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை.

புவியியல் இருப்பு: தமிழீழத்தின் இருப்பு, ஈழத்திற்குத் தெற்கே சிங்க ளர்கள், சிங்கள இனவெறி அரசின் ஆட்சி, வடக்கேயும், கிழக்கேயும் வங் கக்கடல், மேற்கே இந்துமாகக் கடல் அதைத் தாண்டி, இந்தியப் பேரரசுக்கு கட்டுப்பட்ட தமிழகம், என இப்படித் தனித் தீவுக்கு உட்பட்ட ஒரு பகுதியாக, அயல்நாடுகளுடன் எந்த வகையிலும் தரை வழித் தொடர்புக்கு வாய்ப்பற்ற எந்த தொடர்பும் கடல் வழியாக, வான் வழியாக மட்டுமே கொள்ள முடியும் என்பதான இருப்பு தமிழீழத்துக்கு.

காஷ்மீர், இந்தியத் துணைக் கண் டத்தின் மணிமுடியாய் வடக்கே ஆப்கானிஸ்தான், மேற்கே பாகிஸ்தான், கிழக்கே மக்கள் சீனம் தெற்கே இந்தியப் பேரரசுக்குட்பட்ட பஞ்சாப், இமாச் சலப் பிரதேசம் என அண்டை நாடுகளுடன் தரை வழித் தொடர்புக்கு வாய்ப்பான புவியியல் இருப்பு காஷ்மீருக்கு.

 அது மட்டுமல்ல தமிழீழப் புவியியல் அமைப்பு நாலா பக்கமும் எதிரிகளைக் கொண்டதாக அமைய காஷ்மீருக்கு அப்படிப்பட்ட ஆபத்து இல்லை. தெற்கே மட்டும் ஒடுக்கும் இந்தியா, மற்ற மூன்று பக்கமும் இந்தி யப் பேரரசுக்கு எதிரான நாடுகள் அந்த வகையில் போராளிகளின் நண்பர்கள்.

 அதாவது இந்திய அரசு தமிழீழத்தில் ஈழத்தைச் சுற்றியுள்ள நான்கு திசைகளில் எந்தத் திசை வழியாகவும், எந்த சாதனத்தின் துணை கொண்டும் நுழையலாம். ஆனால் காஷ்மீரில் அப்படி நுழைய முடியாது. இருக்கும் ஒரே திசை காஷ்மீரின் தெற்குப் பகுதி மட்டும்தான். உள் நுழையவோ, வெளிவரவோ இருக்கும் ஒரே வழி இதுதான்.

பின்னடைவுகள்: தமிழீழ விடு தலைப் போராட்டம் தமிழீழ மக்களின் பேராதரவோடு முகிழ்த்து நடைபெற்ற ஒரு போராட்டம் என்கிற போதிலும், இது களத்தில் மக்களின் பங்களிப்பை, மக்களின் செயல்பாட்டைக் கோரு வதாக அமையவில்லை.

76 இல் போராளி அமைப்புகள் உரு வான காலம் தொட்டு மக்கள் போராட்டம் என்பது படிப்படியா மட்டுப்பட்டது. 1987 திலீபனின் பட்டினிப் போராட்டத்திற்குப் பிறகு, போராளி அமைப்புகள் இலங்கை அரசின் துணையோடு இந்தியப் படைகளை விரட்டியடித்து திரும்பப் பெற வைத்த பிறகு, ஈழ விடுதலைப் போராட்டம் என்பது முழுக்க ஆயுதப் போராட்டமாக மட்டுமே நிலவியது.

இலங்கைப் பரப்பின் மூன்றில் ஒரு பகுதியை தமிழீழப் பரப்பின் பெரும் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து பள்ளிகள் கல்லூரிகள் மருத் துவ மனைகள் காவல் நிலையங்கள், நீதிமன்றங்கள் என அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து நிர்வகித்து வந்த போராளிகள் ஒரு சுயேச்சையான அரசு அமைந்து விட் டது போல் மக்களைக் காப்பதும், அவர்களது தேவைகளை நிறைவு செய்வதுமே தங்கள் கடமை என்பது போல்தான் செயல்பட்டதாகத் தெரி கிறதே தவிர, இன்னும் எதிரியின் பிடி யிலிருந்து முற்றாக மீளவில்லை. தாக்குதல் எப்போது வேண்டுமானா லும், எந்த வடிவில் வேண்டுமானாலும் வரலாம் என்று கணித்து, எல்லாவற் றுக்கும் மக்கள் தங்களையே சாந்தி ராமல், தங்களைத் தாங்களே காத்துக் கொள் ளவும், தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் தயார்ப் படுத்தியதாகத் தெரியவில்லை. இத னால் மக்களும் தங்கள் மீதான ஆதிக் கத்தை எதிர்ப்பதில் தங்களுக்குப் பங் கேதும் இல்லை அனைத்தையும் போராளிகள் பார்த்துக் கொள்வார்கள், என்று செயலற்றவர்கள் ஆனதுபோல் தெரிகிறது. இதனால் செயல் களத்தில் போராளிகள் தனி, மக்கள் தனி என ஆக்கப்பட்டார்கள்.

இந்திய அரசின் துணையோடு சிங்கள அரசின் தாக்குதல் தீவிரம் பெற போராளிகள் படிப்படியாகப் பின் வாங்க நேரிட்டது.போராளிகளின் கனவு நகரம் கிளி நொச்சி விழ்ந்தது, அதிலிருந்து மே 17 இறுதி யுத்தம் வரை படிப்படியாக தொடர்ந்து விழ்ச்சிகள்

 இங்கு நமக்கு எழும் கேள்விகள் கிளிநொச்சி வீழ்ந்த கையோடு போரா ளிகள் தங்கள் முகாம்களைக் காலி செய்து பின் வாங்கினார்கள் என்றால், மக்கள் ஏன் நகரை, தங்கள் குடியிருப் புகளைக் காலி செய்ய வேண்டும். மக்கள் அங்கேயே இருந்து போராடி யிருக்கலாமல்லவா.

அங்கேயே இருந்தால் சிங்கள வெறிப்படையின் தாக்குதலுக்கு மக்கள் ஆளாக நேரும் என்று சொல்லலாம். நியாயம். ஆனால் பேராளிகளோடு உடன் வந்துவிட்டதால் மட்டும் அத் தாக்குதலில் இருந்து தப்பிக்க முடிந் ததா, அப்படியே தப்பிப்பதானாலும் எத்தனை நாளைக்கு. மக்கள் தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள, காத்துக் கொள்ளும் மன வலிமை பெற, பயிற்சி பெறவேண்டாமா. அதற்குப் பயிற்சி அளித்திருக்க வேண்டாமா.

கிளிநொச்சி வீழ்த்த கையோடு போர் உத்தி என்கிற முறையில் போராளிகள் பின் வாங்கினாலும். சிவில் நடவடிக்கை என்கிற வகையில் மக்கள் அங்கேயே இருந்து வாழ்ந்து காட்டியிருக்க வேண்டும்.அப்படி வாழ முடியுமா, சிங்கள இன வெறி அரசு வாழவிடுமா என்கிற கேள்விகள் எழலாம். நியாயம், வாழ விடாதுதான் அடக்கு முறைகளை ஏவி தமிழீழ மக்களையே அழித்தொழிக்கும் முயற் சியில் ஈடுபடும்தான். ஆனால் அப் போது சிங்கள அரசின் கொடுங் கோல் ஆட்சியும், தமிழீழ மக்கள் மீதான அதன் இன வெறித்தாக்குதலும் அம்பல மாகி யிருக்கும். இதை ஏதோ, போராளி கள் மீதான தாக்குதல் பயங்கரவாதத் துக்கு எதிரான போர் என்பதாக இலங்கை அரசு அதை நியாயப் படுத்தி யிருக்க முடியாது. இது அப்பட்டமான சிவிலியன்களுக்கு குடிமக்களுக்கு எதிரான போர் என்பது அப்போதே வெட்ட வெளிச்சமாகியிருக்கும், உலக நாடுகளின் கண்டனத்துக்கு உள்ளாகி யிருக்கும். இலங்கை அரசு அடக்கி வாசிக்க அல்லது தன் தாக்குதல் நட வடிக்கைகளை நிறுத்தி வைக்க போர் நிறுத்தம் செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டிருக்கும்.

ஆனால் இப்போது என்ன ஆயிற்று இலங்கை அரசுக்கு எல்லா வாயில் களும் திறந்து விட்டது போல் ஆயிற்று போராளிகளையும், மக்களையும் ஒன் றாக்கி பாகுபாடு இல்லாமல் கொன் றொழிக்க வாய்ப்பாயிற்று. எதைப் பாது காப்பு என்று கருதி மக்கள் வந்தார் களோ அதுவே பாதகமாயிற்று. உடன் சென்றாலும் சாகப் போகிறோம், இருக்கிற இடத்தில் இருந்தாலும் சாகத்தான் போகிறோம் என்று மக்கள் கிளிநொச்சியிலேயே இருந்திருப் பார்களேயானால் காட்சிகள் வேறு விதமாக மாறியிருக்கும் நிலைமைகள் வேறு விதமாக அமைந்திருக்கும்.

எல்லாம் இங்கிருந்து கொண்டு வாய்க்குச் சுளுவாக சொல்லி விடலாம். களத்தில் என்ன நிலைமை என்பது அங்கிருப்பவர்களுக்குத்தானே தெரியும், அங்கிருந்து பார்த்தால் அல்லவா புரியும் எனலாம்.

நியாயம். காஷ்மீர் கண்ணுக்கு முன்னான உதாரணமாக இருக்கிறது. காஷ்மீரில் நடந்துகொண்டிருப்பது பெயரளவில் குடிமை ஆட்சிதான் என்றாலும் நடப்பில் அது ராணுவ ஆட்சியாகவே இருந்து வருகிறது. பெயருக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் என இருந்தாலும் நடப்பதென்னவோ இந்திய அரசின் சர்வதிகாரம் மத்திய ரிஸர்வ காவல் படை மற்றும் துணை ராணுவப் படையின் ஆட்சிதான்.

என்றாலும் காஷ்மீர் மக்கள் எங்கும் ஓடி ஒளிய வில்லை. போராளிக் குழுக் களின் பின்னே மறைந்து புகலிடம் தேட வில்லை. மாறாக எந்தச் சட்டமும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவர்கள் கிளர்ந்தெழுந்து வீதிக்கு வந்து தங்கள் வெறுப்பை உமிழ்கிறார்கள் வெளிப்படுத்துகிறார்கள். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வேறுபாடு இல்லாமல் ராணுவத்தினர் மீது கல் லெறிகிறார்கள். இக்காட்சிகள் ஊடகங் கள் வாயிலாக உலகெங்கும் ஒளி பரப்பப்படுகின்றன. இதை பயங்கர வாதிகளுக்கு எதிரான யுத்தம் என்பதாக இந்திய அரசால் நியாயப்படுத்த முடியவில்லை.

தமிழீழத்தில் ஆயுதம் தாங்கிய அமைப்புகள் தோற்றமெடுத்து அவை வலுப்பெற்றதிலிருந்து ஈழ மக்கள் ஒன்று பட்டுக் கிளர்ந்தெழுந்து இப்படிப் போராடுவதாக ஒரு காட்சி உண்டா. தமிழீழப் போராட்டத்தில் ஈழ மக்களைப் பற்றி எதுவும் செய்தி உண்டு என்றால் அவர்கள் குழந்தை குட்டி களுடனும் மூட்டை முடிச்சுகளுடனும் அகதிகளாகத் திரிகிற காட்சிகள்தான். உயிருக்குப் பயந்தும், பிழைக்க வழி தேடியும் சொந்த தாய் மண்ணிலேயே அகதிகளாகத் திரிகிற காட்சிகள்தான். அல்லது கள்ளத் தோணியேறி நடுக் கடலில் சிக்குண்டோ அல்லது அந்நிய நாடுகளில் சிறைப்பட்டோ அல்லலு றும் அவலக் காட்சிகள்தான். இப்படிப் பரந்து பட்ட நேரடியான மக்கள் பங்களிப்பு இல்லாமையும், இயற்கை யாகவே அமைந்த ஈழத்தின் புவியியல் இருப்பும் ஆகிய இவ்விரண்டு முக்கிய காரணங்களே ஈழ விடுத¬லைப் போராட்டம் எதிரிகளின் தாக்குதல், சூழ்ச்சிகளை எதிர்கொள்ள சந்திக்க இயலாமல் கடும் பின்னடைவு களுக்கு உள்ளாகக் காரணமாக அமைந்தது.

இறுதி நாள்களில் போராளி அமைப்பினர் முற்றாக சுற்றிவளைக் கப்பட்டனர். தரைப் பகுதி சிங்கள ராணுவத்தால் வளைக்கப்பட்டது. கடற்பகுதி இந்திய இலங்கை கப்பற் படையால் சூழப்பட்டது. போராளி களுக்கு வந்த ஆயுதக் கப்பல்கள் தகர்க்கப்பட்டு கடலில் முழ்கடிக் கப்பட்டன. வெளியிலிருந்து ஆயுத உதவிகள் கிடைக்காது போராளிகள் சிறைப்படுத்தப்பட்டது போக உணவு மருந்துப் பொருட்கள் கிடைக்கப் பெறாமலும் பட்டினிக்கும் வதைவுக ளுக்கும் ஆளாக்கப்பட்டனர். இவ் வனைத்து நெருக்கடிகளுக்கும் இப் படிப்பட்ட புவியியல் அமைப்பே காரணமாக போராளிகளுக்கு எதிரா னதாக அமைந்தது.

ஆதரவுசக்திகள்: இப் புவிக் கோளின் பல்வேறு நாடுகளில் நடை பெற்ற விடுதலைப் போராட்டங் களுக்கு ஆதர வாகவும், இனப்படு கொலைகளுக்கு எதிராகவும் உலக நாடுகள் குரல் கொடுத்தது போல உலக நாடுகளோ, ஐ நா மன்றமோ ஈழப் பிரச்சனையில் தொடக்கத்திலிருந்தே குரல் கொடுக்க வில்லை. இதற்கு முக்கிய காரணம் இந்தியா.

இந்தியா, இலங்கை ஆதரவு நிலை எடுத்து சிங்கள இனவெறி அரசுக்கு உதவி வருவதை உணர்ந்த உலக நாடு கள் சீனா, ருஷ்யா, உள்ளிட்டு பலவும் 100 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியச் சந்தையைப் பகைத்துக் கொள்ள விரும்பாமல் ஈழ ஆதரவுப் போக்கைக் கைவிட்டு சிங்கள ஆதரவுப் போக்கைக் கடைப்பிடித்தன. தமிழீ ழத்திற்காக உலகம் முழுவதும் விரவி வாழ்ந்த புலம் பெயர்ந்த தமிழர்களும் தமிழக மக்களும்தான் குரல் எழுப்பி னார்களே தவிர பிற உலக நாடுகளின் குரல் ஓங்கி ஒலிக்கவில்லை.

உலக அளவில்தான் இப்படி என்றால் இந்திய அளவிலும் இதே பாகு பாடுதான். உலக நாடுகளின் விடு தலைப் போராட்டங்களுக்கெல்லாம் குரல் கொடுத்த இந்தியக் கட்சிகள் ஈழத் துக்காக குரல் கொடுக்கவில்லை. வடக்கேயுள்ளள பல மாநிலங்களுக்கு இந்தப் பிரச்சனையே என்ன என்று தெரியாது. தெற்கேயும் தமிழகம் தவிர அண்டை மாநிலங்கள் கூட இதற்காகக் குரல் எழுப்பவில்லை.

தமிழத்தில் தமிழீழ ஆதரவு நிலை எடுத்த அகில இந்தியக் கட்சிகள் கூட தமிழகத்தில் மட்டுமே தமிழீழ ஆத ரவுப் போராட்டம் நடத்தியதே அன்றி தமது கட்சிகளின் பிற மாநிலப் பகுதி களை இதற்காகப் போராட வைக்க வில்லை. இப்படித் தமிழகம் தவிர தமிழீழத்துக்கு இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் போராட்டம் இல்லை என்பதால் இந் திய அரசுக்கு எந்தவித நிர்ப்பந்தமும் இல்லாமல் போனது. தமிழகத்தில் எழுந்த போர்க் குரலையும் தணிக் கவோ, திசை திருப்பவோ, ஆன துரோகத்தைச் செய்யவும் காங்கிரசுக்கு ஆதரவான கட்சிகள் இருந்தன. இதனால் இந்திய அரசு தங்கு தடை யின்றி இலங்கைக்கு உதவியது. இதற் குத் தமிழ் நாட்டையே பிரதான தள மாகவும் பயன்படுத்தியது.

 நமது பங்களிப்பு: சரி, இப்படிப் பட்ட புறச் சூழல்களில் தமிழ் நாட்டு மக்களாகிய நாம் என்ன செய் தோம் என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும்.

1983 ஜூலை படுகொலை தொடங்கி அவ்வப்போது ஈழத்தில் எழுந்த முக்கியமான சம்பவங்கள் சார்ந்தோ சாராமலோ தமிழ் நாட்டில் தமிழீழ விடுதலைக்கு ஆதரவாக நாம் பல போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், பொதுக் கூட்டங் கள் நடத்தினோம். எனினும் நிலைமை முற்றிய நிலையிலும் இதைத் தாண்டி வேறு எதுவும் செய்ய இயலாதவர்க ளாய் இருந்தோம்.

 ஈழத்தில் போராளிகளுக்கு ஏற் பட்டுள்ளநெருக்கடிகளைச் சொல்லித் தமிழக மக்களைத் தட்டி எழுப்ப முயலாமல் போராளிகளை யாரும் வெல்லவே முடியாது அவர் களுக்கு ஒரு நாளும் தோல்வி என்பதே கிடை யாது என வெட்டி வீரம் பேசினோம். அதேபோல போராளித் தலைவர் களையும் தமிழ்த் திரைப்படக் கதா நாயகன் பாணிக்கு வெல்லவே முடி யாத அசாத்திய மனிதர்களாகச் சித்தரித் தோம்.

களத்தில் எது நடந்தாலும் அங்குள்ள உண்மை நிலையை அறிய முயலாமல் அங்குள்ள நெருக்கடிகளை உணர்ந்து தமிழக மக்களுக்குச் சொல்லி அவர்களை எழுச்சி கொள்ளச் செய்ய முனையாமல் எல்லாவற்றையும் எந்த வித விமர்சனப் பார்வையுமின்றி அதைப் போராளிகளின் வெற்றியாகவோ அல்லது உத்தியாகவோ வருணித் தோம்.

கிளிநொச்சி விழ்ந்தது என்றால், போராளிகள் போர்த்தந்திர ரீதியில் அதை விட்டுக் கொடுத்துள்ளார்கள், அல்லது முன் நகர்த்தி வைத்துள் ளார்கள். எதிரியை முன்னேறவிட்டு சுற்றி வளைத்துத் தாக்கி விரைவிலேயே அதை மீட்டு விடுவார்கள் என்றோம்.

கிளிநொச்சியை மக்கள் காலி செய்து போராளிகள் பின்னாலேயே சென்றார்கள் என்றால் ராமன் இருக்கும் இடமே அயோத்தி என்பது போல பிரபாகரன் இருக்குமிடமே ஈழம் என மக்கள் அனைவரும் அவர் பின்னால் சென்று கொண்டிருப்பதாகச் சொல்லி மக்களுக்குக் கிளுகிளுப்பூட்டிக் கைத் தட்டல் வாங்கினோம்.

உண்மைகளை உணர்ந்து, உணர்த்தி தமிழக மக்களைத் தட்டி எழுப்பி, தமிழீழ மக்களுக்கு ஆதரவாக அவர்க ளைத் திரட்ட முயல்வதை விட்டு போராளிகள் பற்றியும், தலைமை பற்றியும் எதைச் சொன்னால் கூட்டம் கிறு கிறுப்புக் கொண்டு கையலி எழுப்பி ஆரவாரம் செய்யும் என யோசித்து அது போன்ற நிகழ்வு களிலேயே கவனமாக இருந்தோம்.

இப்படிப் போர்ச் சம்பவங்களோ, போராளித் தலைவர்கள் பற்றிய செய்தி களோ, ஊடகங்களுக்கு வணிகப் பொருள்ஆனதுபோல் உணர்வாளர் களுக்கும் அவற்றை வசீகர நுகர்வுப் பண்டமாக ஆக்கினோம்

இதனால் போர் நிலைமைகள் பற்றியோ, போராளிகள் பற்றியோ, விமர்சன ரீதியில் மதிப்பிடு செய்வதோ கருத்து தெரிவிப்பதோ, பாதகச் செயல் போல நோக்கப்பட்டது. அப்படிப் பார்ப்பவர்கள், கருத்து தெரிவிப்பவர் கள் தமிழீழத் துரோகிகளாக, அவ நம்பிக்கையாளர்களாக, அல்லது எதிரி வர்க்கக் கைக்கூலிகளாகவும் கூட சித்தரிக்கப்பட்டனர்.

இது தமிழீழத்துக்கு ஆதரவாக எதுவும் செய்ய உரிமையற்றவர்களா யிருந்த தமிழர்களை அதுபற்றிச் சிந்திக்க விடாமல் அது பற்றி தில்லி அரசின்மேல் கோபம் கொள்ள ஆத் திரப்பட வைக்காமல் இருக்க அவர் களது உணர்வுகளுக்கு ஒத்தடம் கொடுத்து மடைமாற்றம் செய்வது போல் அமைந்தது. இதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு ஒரே பின்புலனாயிருந்த தமிழகம் அதற்காக எதுவும் செய்ய இயலாத கையறு நிலைக்கு ஆளாகியிருந்து.

இதற்கு முக்கியமான சில காரணங் களையும் இத்தருணத்தில் கவனம் கொள்வது நல்லது.

தமிழ்ச் சூழலில் ஒவ்வொரு கட்சி யும் ஒவ்வொரு இலக்கு செயல்திட்டம் கொண்டு தனித்து இயங்குவது போலவே, அமைப்புகளும் இப்படித் தனித்தனியாகவே இயங்கி வருகின்றன. இவை அது அதற் கென்றும் தனித்தனி வட்டம் ஆதரவாளர்களைக் கொண்டு இயங்கி வருகின்றன. இப்படி வட்டம் சாராத பொது ஆதரவாளர்களும் பலர் உண்டு இவர்கள் எதை யார் நடத்து கிறார்கள் என்பது பற்றிக் கவலைப் படாமல் நல்லனவற்றை யார் நடத்தி னாலும் எல்லாவற்றிலும் கலந்து கொள் பவர்கள். என்ற போதிலும் ஒவ்வொரு அமைப்புக்குமான இலக்கு, அதுசார்ந்த நடவடிக்கைகள் தனி.

காட்டாக தமிழீழ அதரவுக்கு குரல் கொடுப்பவர்கள் காஷ்மீர் சிக்கலுக்கு, மாவோயிஸ்டுகளுக்கு குரல் கொடுக்க மாட்டார்கள். கொடுக்கத் தோணாது. அதேபோல் காஷ்மீர், மாவோயிஸ்டு சிக்கல் பற்றி பேசுவர்களுக்கு தமிழீழச் சிக்கல் கண்ணில் படாது. இப்படி ஒரு சூழல் இங்கு நிலவுவதால்தான் தமிழீ ழத்திற்கு தமிழ் நாட்டில் மட்டுமே போராட்டம் நடந்தது.வேறு மாநி லங்களில் ஏதாவது நடந்தது என்றால் அதை அங்குள்ள தமிழர்கள் நடத்தி யிருப்பார்கள் அல்லது தமிழர்கள் தில்லியில் போய் போராடியிருப் பார்கள்.

ஆனால் காஷ்மீர், மாவோயிஸ்டு கள் பிரச்சனை அப்படியல்ல. அவை பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகள். இதற்கான பேரறிவாளர்கள் குரலும் கருத்துகளும் அன்றாடம் நாளேடு களில் வரும். பரவலாக இது பற்றிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இந்திய ஆட்சிப் பரப்பில் உள்ள எல்லா பகுதி மக்களும் இவற்றுக்காகப் போராடுவார்கள் குரல் கொடுப் பார்கள்.

 ஆனால் ஈழச்சிக்கலுக்கு மட்டும் தமிழ்நாட்டில் மட்டுமே குரல். தமிழ் நாட்டு பத்திரிகைகள் மட்டுமே இது பற்றி எழுதும். தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே இதற்காகப் போராட வேண்டும்.

இப்படி ஆதரவாகப் போராடும் தமிழக மக்களுக்காவது உண்மை நிலை தெரியுமா, உண்மை நிலை உணர்த்தப் பட்டதா, என்றால் அதுவுமில்லை தமிழகத்தில் எல்லா பிரச்சனைகளுமே அறிவு பூர்வ புரிதலுக்கு உள்ளாக்கப்படாமல் அனைத்தும் உணர்வுபூர்வ உசுப்பலுக்கே உள்ளாக்கப்பட்டிருப்பது போல் ஈழச்சிக்கலும் உணர்ச்சி மயமான உசுப்பலுக்கான ஒரு பிரச்சனை யாகவே ஆக்கப்பட்டிருந்தது.

இதனால் தமிழக மக்கள் களத்திலிருந்து வரும் வெற்றிச் செய்திகளை மட்டுமே கேட்டு கைதட்டி மகிழ் பவர்களாக ஆக்கப்பட்டிருந்தார்களா தவிர, ஈழ மக்களுக்கு எந்த வகையிலும் உதவ முடியாது எல்லா உரிமைகளும் பறிக்கப்பட்ட கொத்தடிமைகள் போல வைக்கப்பட்டிருக்கும் தங்கள் நிலை பற்றி உணரவில்லை. யாரும் அவர்களுக்கு உணர்த்தவும் இல்லை. தமிழக நிலைமை பற்றியோ, தில்லியின் ஆதிக்கம் பற்றியோ சிந்திக்க வைக்கவோ விழிப்பூட்டவோ இல்லை.

இப்படிப்பட்ட பல்வேறு சூழல்களிலேயே பின்னணிகளிலேயே ஈழப் போராட்டம் பின்னடைவுகளுக்கு ஆளாகியது. ஆனால் காஷ்மீர் விடாப்பிடியாகப் போராடிக் கொண்டிருக்கிறது இந்த வேறுபாடுகளை, புற நிலைமைகளை நாம் கணக்கில் கொள்ள வேண்டும். தமிழ்த் தேச எழுச்சிக்கான போராட்டத்திற்கு இவ்வனுபவங்களை உரமாக்க வேண்டும்.

Pin It