சூடான், ஆப்பிரிக்காவின் வடகிழக்குப் பகுதியில் எகிப்திற்குத் தெற்கேயும், எத்தியோப்பியாவிற்கு மேற்கேயும் அமைந்துள்ள ஒரு நாடு. சுமார் நான்கு கோடியே இரண்டு லட்சம் மக்கள் தொகையைக் கொண் டது. இந்நாடு வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிந்து வருகிற ஜூன் மாதம் தெற்கு சூடான் ஆப்பிரிக்கக் கண்டத்தின் 55வது நாடாகவும் உல கின் 193ஆவது நாடாகவும் அமையப் போகிறது.

மொழிவழித் தேசிய இனங்கள் பலவும் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வரும் சூழலில், ஆதிக்கங் களால் பிளவுபடுத்தப்பட்ட தேசிய இனங்கள் பலவும், தாங்கள் ஒன்றுபட்டு ஒரே நாடாக பரிணமித்துக் கொண்டி ருக்கும் இந்நாளில், இதுவரை ஒரு நாடாக விளங்கிவந்த சூடான் இப்படி வடக்கு, தெற்கு எனப் பிரியவேண்டிய அவசியமென்ன?

காரணம், சூடான் ஒரு மொழி பேசும் மொழிவழித் தேசிய இன அடிப் படையில் அமைந்த நாடல்ல. இதன் வரலாறு தனித்தன்மையானது.

எகிப்திய நைல் நதி நாகரிகத் தோடு தொடர்புடைய தொல்கால மக்களின் வழிவந்த நாடு சூடான். நைல் நதியின் துணை நதிகளான நீல நைலும், வெள்ளை நைலும் சங்கமித்து எகிப்து நோக்கி பெருக்கெடுத்தோடும் வளமான பகுதியைக் கொண்டது.

தொல்கால எல்லாப் பழங்குடி மக்களைப் போலவும் வேட்டை, மீன்பிடி, விவசாயம் எனத் தொழில் புரிந்து பல்வேறு இனக் குழுக்களாகப் பிரிந்திருந்த மக்கள் நீண்ட நெடுங் காலம் எகிப்திய பாரோ மன்னர்களின் ஆளுகைக்கு உட்பட்டவராக வாழ்ந் தார்கள். இதனால் சூடானின் அரசு நிர்வாகத்தில், ராணுவத்தில், வணிகத் தில், கைத்தொழில்களில் அனைத்தி லும் எகிப்தியர் ஆதிக்கம்.

கி.பி. ஆறாம் நூற்றாண்டு வாக்கில் ஐரோப்பியர்கள் வருகையை யட்டி கிறித்துவ மதம் பரவ, பைசாந்திய நொபியா மன்னர்கள் கிறித்துவத்திற்கு மாற்றப்படுகிறார்கள். மதம் அரசுரிமையைக் காப்பதும், அரசு மத உரிமையைக் காப்பதுமான பிணைப்பு தொடங்குகிறது. கூடவே, கிரேக்க, ரோமானிய மொழிகளின் செல்வாக்கும் வளர்கிறது.

இதையடுத்து கி.பி. 7ஆம் நூற்றாண்டு வாக்கில் ஆராபிய நாடுகள் ஊடுருவி, அராபியப் படை யெடுப்பும் நிகழ அராபியர்கள் எகிப்தைக் கைப் பற்றி ஆட்சி செய்தார்கள். இதன்வழி அராபிய மொழிப் பரவலும் நிகழ் கிறது. கிட்டத்தட்ட 14ஆம் நூற் றாண்டு வரை இந்நிலை நீடிக்கிறது.

இவ்வரலாற்று நிகழ்வுகளின் விளைவாக சூடான் அரபு மொழி மயமாக்கப்பட்டு, இசுலாமிய ஆதிக்கத்துடன் திகழ்ந்தது. இந்நிலையில் தெற்கு சூடானிலிருந்து பழங்குடி பலவும் கி.பி. 16ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒன்றி ணைந்து சுயேச்சையான ஓர் அரசமைப்பை ஏற்படுத்திக் கொள் கின்றன.

1820 - 21 வாக்கில் துருக்கிய ஆட்டோமன் அரசு சூடான்மீது படையெடுத்து அதை வெற்றி கொள்ள வடக்கு, தெற்குசூடான் இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ஒரு சூடானாக துருக்கியப் பேரரசின்கீழ் ஒரே நிர்வாகத்தில் கொண்டு வரப்படுகின்றன.

இதற்கு சில ஆண்டுகள் கழித்து வணிகமும் மதப் பிரச்சாரமும் செய்ய வந்த இங்கிலாந்து, கென்யா வழி ஆப்பிரிக்க நாடுகளை ஆக்கிரமிக்க, சூடான் மீதான துருக்கிய ஆதிக்கத்தை தகர்த்து, பிரித்தானியப் பேரரசை நிறுவுகிறது.

இந்த ஆதிக்கத்தை எதிர்த்த கிளர்ச்சிகள் நாடெங்கும் வெடிக்க, இதற்கான அரசியல் கட்சிகள் தோற்றம் பெறுகின்றன. 1885 சனவரி 26இல் ஏற்பட்ட மாபெரும் எழுச்சியில் பிரித் தானிய ராணுவத் தளபதி உள்ளிட்ட 55 ஆயிரம் பேர் படுகொலை செய்யப்படுகின்றனர். விளைவாக, ஆங்கிலேய எகிப்து கூட்டுப்படை, 1899இல் சூடான்மீது இரு நாட்டு அரசுகளின் கூட்டதிகாரத்தை அறிவித்தது.

இந்த அறிவிப்பில் சூடானின் வடக்கு, தெற்கு பாகுபாட்டைக் கருத் தில் கொண்டு, இரண்டிற்கும் தனித்தனி நிர்வாக அமைப்புகள் தோற்றுவிக்கப் படுகின்றன. இதன்படி வடக்குப் பகுதி யில் உள்ளவர்கள் தெற்கு பகுதிக்குப் போக கடவுச் சீட்டு பெறவேண்டும். தெற்கே பயணம் செய்ய, வாணிபம் செய்ய நிர்வாகத்தின் அனுமதி பெற வேண்டும் என்கிற ஏற்பாடு செய்யப் பட்டது,

எனில் 1946இல் பிரித்தானிய அரசு தன் நிலையை மாற்றிக்கொண்டு வடக்கு தெற்கு சூடானை ஒரே நிர்வா கத்தின்கீழ் கொண்டு வந்தது.

வடக்கு சூடான் மக்கள் பெரும ளவும் இசுலாமியர்கள். அராபி, ஆங் கில மொழி பேசுபவர்கள். ஆனால் தெற்கு சூடான் மக்கள் பெருமளவும் கிறித்துவர்கள். டிங்கா, பாரி, நூவர். லடுகோ, ஹில்லுக் என பழங்குடி மொழி பேசுபவர்கள். கிறித்துவ மதப் பரவல் காரணமாக ஓரளவு ஆங்கிலம் கற்றவர்கள்.

இவ்வாறு மொழி ரீதியாகவும், மத ரீதியாகவும், வடக்கு தெற்கு சூடான் மக்கள் வேறுபட்டிருந்ததுடன், சூடான் நிர்வாகத்தில், சட்டமன்றத்தில் தெற்கு சூடான் மக்களுக்கு உரிய பங்கு அளிக்கப்படுவதில்லை என்கிற ஆதங் கமும் தெற்கு சூடான் மக்களுக்கு இருந்தது. காட்டாக 1953இல் பிரித்தானி யர்களால் நியமிக்கப்பட்ட நிர்வாக அதிகாரிகள் 800 பேரில் நால்வர் மட்டுமே தெற்கு சூடானியர்கள் என்கிற நிலை.

விளைவாக அந்நிய ஆக்கிரமிப்பை எதிர்த்து, தொடர்ந்து கிளர்ச் சிகள், போராட்டங்கள் வெடித்தன. 1955இல் தெற்கு சூடான் ராணுவ அதிகாரிகளின் கலவரம் வெடித்தது. விளைவாக 1956 சனவரி 1 முதல் சூடா னிற்கு சுதந்திரம் வழங்கப்பட்டது.

தொடக்கத்தில் வடக்கு சூடான் பகுதிகளுக்குத் தனித்தனி அரசு, நிர்வாக அமைப்புகள் நிறுவ வாக்குறுதி அளிக் கப்பட்டது, எனில் அவ்வாக்குறுதிகள் காற்றிலேயே பறக்கவிடப் பட்டன. விளைவு தெற்கு - வடக்கு மோதல் உள்நாட்டுப் போராக மாறி 1955 முதல் 1972 வரை பதினைந்து ஆண்டுகள் கலவரம் நீண்டது.

இப்படிப்பட்ட கலவரங்களையட்டி சிவில் நிர்வாகம் சீர் குலையவும், ராணுவ அதிகாரிகள் பலம் பெறவுமான வாய்ப்பு ஏற்பட்டு அடிக் கடி ராணுவ அதிகாரிகள் அதிகாரத் தைக் கைப்பற்றியும், அதை எதிர்த்து மக்கள் கிளர்ச்சி செய்து நாடாளுமன்ற ஆட்சியை ஏற்படுத்து வதுமான நட வடிக்கைகள் மாறி மாறி நிகழ்ந்து ஆட்சியில் நிலையற்ற தன்மை நீடிக்க 1983 வாக்கில் இரண்டாவது உள் நாட்டுப் போர் வெடித்தது.

தெற்கே வாழும் பழங்குடி மக்களையும் கிறித்துவர்களையும் இசுலாமியமயமாக்கும் முயற்சியில் சூடான் அரசு இயங்குகிறது என அதற்கு எதிராக வெடித்த இக்கலவரம், இடையிடையே பல பேச்சுவார்த்தைகள், சமாதான முயற்சிகளுடன் 20 ஆண்டுகள் நீடிக்க, கிளர்ச்சிக்காரர் களுக்கும் அரசுக்குமான இரு தரப்பு இறுதி சமாதான உடன்படிக்கை 2005ஆம் ஆண்டு சனவரி 9இல் கையப்பமாகியது.

ஐந்து முக்கியப் பிரிவுகள் அடங் கிய இந்த ஒப்பந்தத்தில், தெற்கு சூடான் 6 ஆண்டுகள் தன்னதிகாரம் கொண்ட அரசாக நீடிக்கும். அதன்பின் தெற்கு சூடான் தனித்திருப்பதா, வடக்கு சூடானுடன் இணைந்து ஒரே சூடா னாக இருப்பதா என்பதை முடிவு செய்து கொள்ளலாம் என்பது முதன்மை யானதாகும். இதன்படியே 6 ஆண்டு கள் கழிய இந்த 2011 சனவரி 9ஆம் நாள் முதல் 15ஆம் நாள் முடிய ஒருவார காலம் இருந்த குடியப்ப வாக்கெ டுப்பு நடந்து முடிந்து பெரு வாரியான மக்கள் தெற்கு சூடான் தனிப்பிரிந்து இயங்க வாக்களித்திருக் கிறார்கள். இதன்படி வரும் ஜூன் மாதம் முதல் சூடான் தனி அரசாக மலரப் போகிறது.

இந்த சந்தர்ப்பத்தில் இதை யட்டி நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்துகள் சில.

நாம் தொடக்கத்திலேயே குறிப்பிட்டபடி ஆதிக்கங்களால் பிளவுபடுத்தப்பட்ட ஒரு மொழி பேசும் தேசிய இனங்கள் பலவும் ஒன்றுபட்டு வரும் இந்நாளில், காட்டாக வியட்நாம் ஒன்றுபட்டது, ஜெர்மனி ஒன்றுபட்டது, கொரியா ஒன்றுபட போராடிக் கொண்டிருக்கிறது, இந்நிலையில் ஒன்றுபட்ட சூடான் இப்படித் தனிப் பிரியலாமா என்கிற கேள்வி சிலருக்கு எழலாம்.

இதில் அடிப்படையாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, ஒரு மொழி பேசும் ஒரே மொழிவழித் தேசிய இனம் அல்லாத பல்வேறு பழங் குடி மக்களை. ஆதிக்க சக்திகளே ஒன் றிணைத்து ஒரு நாடாக்கி அவரவார் ஆதிக்க மொழிகளான அராபி, ஆங்கில மொழித் திணைப்பைச் செய்து, இதில் வடக்கு அராபிவழிப்பட்டு இசுலாமிய மயமாகவும் தெற்கு ஆங்கிலவழிப்பட்டு கிறித்துவ மயமாகவும் ஆக்கப்பட்டி ருக்கிறது. இத்தோடு ஆதிக்கம் முழுக்க வடக்கு சூடானிடமே இருந்து, தெற்கு சூடான் முற்றாகப் புறக்கணிக்கப் பட்டது. இக்காரணங்களை நோக்க இங்கே இந்தியாவில் ஆந்திரத்திற்குள் தனி தெலுங்கானா கோருவதை விடவும் பல மடங்கு அதிகமான நியாயம் தெற்கு சூடானுக்கு இருக்கிறது. அந்த அடிப்படையிலேயே தெற்கு சூடான் தனிப் பிரிந்து செல்வதை ஆதரிக்க வேண்டியிருக்கிறது.

ஆனால் அதேவேளை இது பற்றிய சில எச்சரிக்கைகளையும் மேற் கொள்ள வேண்டியிருக்கிறது. தெற்கு சூடான் தனிப்பிரிந்து செல்வதில் தொடக்கம் முதலே அமெரிக்கா, பிரிட் டன் உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் ஆர்வம் காட்டி துணை நின்று, தெற்கு சூடானுக்கு ஆதரவாக இருந்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தெற்கு சூடானின் எண்ணெய் வளம்.

சூடானில் கிடைக்கும் எண் ணெய் வளத்தின் பெரும்பகுதி தெற்கு சூடானிலிருந்தே கிடைக்கிறது. இந்த எண்ணெய் வளத்தைக் குறி வைத்தே மேற்கத்திய நாடுகள் இயங்கு கின்றன.

இவை ஒருபுறம் இருக்க, இவற் றுக்கு இணையாக சீனாவும் தெற்கு சூடான் தனிப்பிரிவதற்கு ஆதரவாக இருக்கிறது. தெற்கு சூடான் எண் ணெய் வளத்தில் 60 விழுக்காட்டைக் கொள்முதல் செய்யும் நாடாக சீனா இருந்துவருகிறது. இப்போதே 24,000 சீனர்கள் தெற்கு சூடானில் இருந்து வருகிறார்கள் எனப்படுகிறது.

ஆக, தெற்கு சூடான் தனிப் பிரிவிற்கு வல்லரசு நாடுகளின் ஆதரவு என்பது சனநாயக சமத்துவ அடிப் படையைக் கொண்டதாகவோ தேசிய இன உரிமைகள் சார்ந்ததோ அல்ல. மாறாக அது தங்கள் கொள்ளை நோக்குக்கு ஆதரவானது, தனிப்பிரிய முனையும் நாடுகளைத் தங்கள் கட்டுப் பாட்டின்கீழ் கொண்டு வந்து ராணுவத் தளங்களை அமைக்கும் நோக்குடையது என்பது தெளிவு. இதில் இந்தியா வுக்கும் பங்கு உண்டு. இந்தியாவும் சூடானிடமிருந்து எண்ணெய்க் கொள் முதல் செய்யும் நாடுகளுள் முக்கிய மான ஒன்றாக இருந்து வருகிறது என்பதும் முக்கியம்.

இந்த ஆதிக்க நோக்குகள் ஒரு புறம் இருக்க, தெற்கு சூடான் வாக்கெ டுப்பில் வெற்றி பெற்று விட்டதனா லேயே அங்கு அமைதி நிலவிவிடும் என்பதற்கான எந்த உத்திரவாதமும் இல்லை. எண்ணெய் வளம் மிகுதியாக உள்ள தெற்கு சூடான், வடக்கு சூடான் வழியாகப் புதைக்கப்பட்ட குழாய்கள் மூலமே அவற்றை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இத்துடன் வடக்கு, தெற்கு பிரிப்பின்போது அதற் கான எல்லைகள் எவை, எந்தெந்த பகுதி தெற்குக்கு, எவை எவை வடக்குக்கு என்பதும் இதுவரை தீர்மானிக்கப் படாமலேயே இருக்கிறது.

இவ்விரண்டு காரணங்களை யட்டி சிக்கல்கள் எழலாம். இதில் வல்லரசுகள் குளிர் காய, தன்னல ஆதாயம் பெற முயலலாம் எனவும் வல்லுனர்களால் மதிப்பிடுகின்றன.

எனவே, இப்படிப்பட்ட புரித லுடனேயே நாம் தெற்குசூடான் தனிப் பிரிவதை ஆதரிக்க வேண்டும், அம் மக்களுக்கு துணை நிற்கவேண்டும்

தேசிய இனப் போராட்டங்களும் வல்லரசு நாடுகளும்

சூடானிலிருந்து தெற்கு சூடான் தனிப் பிரிய குடியப்ப வாக்களிப்பு நடத்தி வெற்றி பெற்றது, எகிப்திய மக்கள் பேரெழுச்சி அதிபர் முபாரக்கைப் பதவி விலகச் செய்தது ஆகியன மேற்காசிய மற்றும் வட ஆப்பிரிக்க நாட்டு மக்களிடையே பரவலாக உத்வேகமூட்டி, ஆங்காங்கே சர்வாதிகாரத்திற்கும், ராணுவ ஆட்சிக்கும் எதிராக மக்கள் போராட்டங்களை வெடிக்கச் செய்துள்ளன. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் சிலவும் ஆதரவளித்துள்ளன.

மக்கள் ஆதிக்கத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் கிளர்ந்தெழுவது, சனநாயகத்துக்குப் போராடுவது என்பது நியாயமானதுதான். வரவேற்கத் தக்கதுதான். ஆனால் இதில் மேற்கத்திய ஏகாதிபத்திய வல்லரசுகளுக்கு என்ன அவ்வளவு அக்கறை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். இதுபற்றி ஏற்கெனவே மண்மொழியில் குறிப்பிட்டும் உள்ளோம்.

அதாவது உலக அரங்கில் உரிமைகளுக்காகப் போராடும் எந்த நாட்டின் பிரச்சினையையும் வல்லரசு நாடுகள் அப்பிரச்சினையின் தகுதி அடிப்படையில் நோக்குவதில்லை. மாறாக தங்கள் ஆதிக்க நல நிலையிலிருந்தே அவற்றை நோக்குகின்றன.

காட்டாக, கிழக்கு திமோ, கொசாவோ விடுதலையை ருஷ்யா எதிர்த்தது, அமெரிக்கா பிரிட்டன் ஆதரித்தது. திபெத் பிரச்சினையில் சீனா எதிர்க்கிறது, இந்தியா ஆதரிக்கிறது. அமெரிக்கா பிரிட்டன் ஆதரிக்கிறது. அதேபோல தெற்கு சூடான் தனிப் பிரிவதை மேற்கத்திய நாடுகள் ஆதரிக்கின்றன.

ஆனால் இவை அனைத்துமே தமிழீழ விடுதலைப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. எதிர்க்கின்றன. இந்தியாவில் காஷ்மீர் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்கள் ஆகியவற்றின் போராட்டத்தை எதிர்க்கின்றன. இந்திய அரசு நிலையை ஆதரிக்கின்றன. இப்படி இந்திய அரசை ஆதரிக்கும் இதே நாடுகள்தான் மேற்கு ஆசிய, வட ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகளை எதிர்க்கின்றன. போராடும் மக்களின் சனநாயக உணர்வுகளை மதிப்பதாக போலிக் கண்ணீர் வடிக்கின்றன.

காரணம் அந்நாடுகளில் உள்ள எண்ணெய் வளம், கனிம வளம், அவற்றைக் கொள்ளையடிக்கும் நோக்கு, சனநாயகத்தைக் காப்பாற்றுகிறேன் என்பதன் பேரால் ஈராக் போல், ஆப்கானிஸ்தான் போல் அந்நாடுகளில் காலூன்ற, ராணுவ தளம் அமைக்கும் நோக்கு. காட்டாக, கொசாவோவை ஆதரித்த அமெரிக்கா அங்கு தற்போது பால்கனில் ராணுவத் தளம் அமைத்துள்ளது.

இதனால்தான் வல்லரசு நாடுகள் ஒவ்வொரு நாட்டின் பிரச்சினைகளிலும் ஒவ்வொரு நிலை பாடுகளை மேற்கொள்கின்றன. இந்த நோக்கைப் போராடும் மக்களும் அதன் ஆதரவாளர்களும் புரிந்துகொள்ளவேண்டும். இது சார்ந்த எச்சரிக்கையுடனே போராடவேண்டும்.

தவிர, தெற்கு சூடான் தனிப்பிரிய முடிந்தது என்றால் ஒன்றுபட்ட சூடான் அரசும் அதற்கு இசைவாக இருந்தது. எகிப்தில் உயிர்ச்சேதம் அதிகம் இல்லாமல் எழுச்சி வெற்றி பெற்றது என்றால், எகிப்தின் ராணுவ அமைச்சர், தளபதிகள் போராடும் மக்களுக்கு ஆதரவாக இருந்தனர். அதனால் அரசு ஒடுக்குமுறையை மட்டுப்படுத்த முடிந்தது. ஆனால் லிபியாவில் நாற்பது ஆண்டுகளாக பதவியிலிருக்கும் சர்வாதிகாரி கடாஃபி ஆட்சியில் இப்போதே நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதே போலவே ஜோர்டான், ஏமன், அல்ஜீரியா, மவுரிடானியா டூனிசியா ஆகிய நாடுகளிலும் சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டங்கள் வெடித்துள்ளன.

இந்தப் போராட்டங்கள் மக்கள் உரிமை போராட்டங்கள் என்று சனநாயக உணர்வாளர்கள் ஆதரிக்கும் அதேவேளை, நூற்றுக்கணக்கான உயிர்களைப் பலி தந்து பெறப்படும் இந்த வெற்றி நாளை ‘கிளியை வளர்த்து பூனைக்கு இரையாக்கி கதை’ மாதிரி ஆதிக்கங்களுக்கு இரையாகி விடக்கூடாது என்பதிலும் நாம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டும்.

Pin It