ஆந்திர மாநிலம் மக்கள் உரிமைகளுக்குப் போராடும் நக்சல் பாரி இயக்கத் தோழர்களுக்கு ஆதர வாகவும், மனித உரிமைக் காவலராக வும் பல நேரங்களில் அரசுக்கும் நக் சல்களுக்கும் நடுநிலைத் தொடர்பாள ராகவும் திகழ்ந்த முதுபெரும் தோழர்  கே.ஜி.கே. என அன்போது அழைக்கப் படும் கண்டடை கோபால்சாமி கண்ணபிரான், நீண்ட நாள் உடல் நலக் குறைவு காரணமாக,  கடந்த ஆண்டு திசம்பர் 30ஆம் நாள் தனது 81வது வயதில் காலமானார்.

1929 நவம்பர் 9ஆம் நாள் கண்டடை கோபால்சாமி அய்யங்கார் என்னும் மருத்துவரின் மகனாகப் பிறந்த இவர், தந்தையின் இடப்பெயர்ச்சி காரணமாக தொடக்கக் கல்வியை ஆந்திர மாநிலம் நெல்லூரிலும், கல்லூரிப் படிப்பையும் சட்டப் படிப்பையும் சென்னையிலும் முடித்தார்,

ஆங்கிலப் பேராசிரியரான தன் மனைவியின் பணி நிமித்தம் மீண்டும் ஆந்திரத்திற்கே சென்ற இவர் 1961 முதல் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  அப்போது ஏற்பட்ட தொடர்பின் காரணமாக மார்க்சிய சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு கடைநிலை மக்களுக்காகப் போராடத் தொடங்கினார். ‘நீதி என்பது பிச்சை கேட்டு வருவதல்ல.  மாறாகப் போராடியே அதைப் பெறமுடியும்’ என்கிற கோட்பாட்டோடு போராட்டமே வாழ்வாகக் கொண்டு இயங்கிய அவர் சுமார் 25 ஆண்டுகாலம் மக்கள் சிவில் உரிமைக் கழக அமைப்பில் தலைவராகப் பணியாற்றினார்.  பயங்கரவாத நடவடிக்கைகள் எதிர்ப்பு என்பதன் பேரால், போராளிகளை அரசு ஒடுக் கியபோது அதை ‘அரசு பயங்கரவாதம்’ எனக் கண்டித்து, அச்சொல்லாடலை அறிமுகப்படுத்தியவரும் இவராகவே குறிப்பிட்டிருக்கிறார். 

ஆர்ப்பாட்டமற்ற எளிமை, அசாத்தியமான மனஉறுதி, நீதியை நிலை நாட்டுவதில் உள்ள ஆர்வம், அர்ப்பணிப்பு முதலான மகத்தான பண்புகளோடு வாழ்ந்து காட்டியவர் தோழர் கே.ஜி.கண்ணபிரான்.

அனைத்து தேசப் பொது மன்னிப்பு அமைப்பு இவரை “மனித உரிமைகள்பால் மோகம் கொண்ட ஓர் உன்னத வழக்கறிஞர்” என்று பாராட்டியதிலிருந்து இவரது சேவை யைப் புரிந்து கொள்ளமுடியும். 

ஆந்திரத்தில் மனித உரிமைகளுக்காக இவரோடு சேர்ந்து போராடிய தோழர் பாலகோபால் இதற்குச் சிலகாலம் முன்புதான் மறைய அதற்குச் சில மாதங்களிலேயே இவரும் மறைந்தது ஆந்திர மனித உரிமைப் போராட்டக் களத்தில் மாபெரும் இழப்பாகக் கருதப்படுவதுடன், உலகெங்கும் மனித உரிமைகளுக்காகப் போராடுபவர்களுக்கு மாபெரும் இழப்பாகும். 

அன்னாருக்கு மண்மொழி தன் வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

Pin It