தொடர்புடைய படைப்புகள்

பரப்புரைக் கூட்டங்கள் என்றாலே சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுக்கு உற்சாகம் தொற்றிக் கொள்ளும். பம்பரமாக களத்தில் சுழல ஆரம்பித்து விடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நூறு தெருமுனைக் கூட்டங்களை நடத்திய பயிற்சி அவர்களுக்கு உண்டு; அந்த அனுபவங்கள் அவர்களை வழிநடத்திக் கொண்டிருக்கின்றன.

பரப்புரை வாகனம், ஒலிபெருக்கி, பார்வையாளர் இருக்கை, அவர்களிடம் தயார் நிலையில் இருக்கின்றன. வாகன வடிவமைப்பு, வாகன ஓட்டுதல், மின்சாரம் சரிபார்ப்பு, துண்டறிக்கை வடிவமைப்பு என்று அனைத்து பணிகளிலும் தோழர்கள் தங்களை வளர்த்துக் கொண்டு விட்டார்கள். இவை எல்லாவற்றையும் விட சிறந்த பேச்சாளர்களாகவும் தோழர்கள் தயராகி விட்டார்கள். பெண்களும் ஆண்களுமாக இளைஞர்கள் கூட்டம் இந்த பரப்புரை படையில் கம்பீரமாக சுழலும் காட்சி அற்புதமானது.

வலையொலி (யூடியூப்) வழியாக பல இலட்சம் பார்வையாளர்களை ஈர்த்து வைத்துள்ள பெரியாரியத் தோழர்கள் கழக மேடைகளில் பேசும் உரைகளில் செய்திகளும் வரலாறுகளும் நிறைந்திருக்கின்றன. தங்களுக்கான களமாக திராவிடர் விடுதலைக் கழக மேடைகளை அவர்கள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மேடையில் மட்டுமல்ல; கூட்டம் நடக்கும் பகுதிகளில் உள்ள கடைகள் பொதுமக்களிடமும் துண்டறிக்கை வழியாக கருத்துகளை விதைத்துக் கொண்டிருக்கிறார்கள் தோழர்கள்! அதன் வழியாக நிதியும் திரட்டுகிறார்கள். ஒவ்வொரு கூட்டத்திற்கான செலவும் அப்பகுதி மக்கள் தரும் நன்கொடையிலேயே ஈடுகட்டப்படுகிறது. துண்டறிக்கைகள் வழியாக கொள்கைகளும் மக்களை சென்று அடைகிறது. 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்வுகள் இரவு 9 மணி அளவில் நிறைவடைகின்றன. பகுதி தோழமை அமைப்புத் தோழர்கள் ஆங்காங்கே ஆதரவுக் கரங்களை நீட்டுகிறார்கள். இரவு உணவுகளையும் அவர்களே வழங்குகிறார்கள். ஒன்று கூடலில் நிலவும் மகிழ்ச்சியும், உற்சாகமும், கலகலப்பும் இணைந்து நிற்கும் உணர்வுகளை வார்த்தைகளால் விளக்கிட முடியாது.

டிசம்பர்-24 பெரியார் நினைவு நாள் வரை ஜாதி ஒழிப்புப் பரப்பரை என்ற அறிவிப்பு கழகத் தோழர்களை மீண்டும் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. முகநூல் வழியாகவும், வலையொலி (யூடியூப்) வழியாகவும், டிஜிட்டல் ஆடியோ நிகழ்ச்சி (podcast) வழியாகவும் பெரியாரியக் கருத்துக்களையும் கழக செயல்பாடுகளையும் அறிந்த பல இளைஞர்கள் ஒவ்வொரு நிகழ்விலும் கழகத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து நிகழ்ச்சிகளிலும் அவர்கள் பங்கேற்கிறார்கள். அவர்கள் தேர்வு செய்யும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகமாகவே இருக்கிறது. 80-90 களில் பிறந்தவர்கள் நிறைந்த கழகம், இப்போது 2000 ஆண்டில் பிறந்த இளைஞர்களையும் அரவணைத்துக் கொண்டு பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்த சென்னை கழகக் குடும்பத்தில் ஜாதி மறுப்பு மணம் புரிந்த இளைஞர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இவர்களில் பலர் மாநாடுகளிலும், விழாக்களிலும் ஜாதி மறுப்பு திருமணம் செய்தவர்கள். ஜாதி மறுப்பு இணையர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கினார்கள்.

“பரப்பரைப் பயணத்தின் சென்னை பொதுக்கூட்டத்தில் செல்வன் -இளமதி உட்பட 20-க்கும் மேற்பட்ட அந்த ஜாதி மறுப்பு இணையர்கள் மேடையில் தோன்றியக் காட்சி மெய்சிலிர்க்க வைத்தது. அப்போது சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதி இப்படி கூறினார்.

“பார்! இதுதான் திராவிடர் விடுதலைக் கழகம்; ஜாதி வெறியர்களே சாவுங்கடா”.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.