அர்ச்சனை, வழிபாடு, சடங்குகள் மட்டுமே நடத்தப்பட்டு வந்த இந்து கடவுள்களுக்கு, இப்போது சர்வதேச மாநாடுகள் நடக்க தொடங்கி விட்டன.

இதற்கு வழிகாட்டியதே தமிழ்நாடு இந்து அறநிலையத் துறைதான்!

முருகனுக்கு சர்வதேச மாநாடு நடத்தப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வழியாக அதை தொடங்கி வைத்தார். இப்போது திருவாங்கூர் தேவசம் போர்டின் பவள விழாவை முன்னிட்டு, சர்வதேச அய்யப்பன் மாநாடு, பம்பையில் வரும் செப் 20-ம் நடக்க இருக்கிறது. ஏழு மாநில முதல்வர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள், தமிழ்நாடு அரசு சார்பில் இரண்டு அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.

10 வயதில் இருந்து 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் சபரிமலை அய்யப்பன் கோயிலில் அனுமதிக்கப்படுவது இல்லை.உச்ச நீதிமன்றம் இது "மதத் தீண்டாமை "என்று அறிவித்த பிறகும், தீர்ப்பு அங்கே அமலாகவில்லை.

தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் நேற்று அளித்த பேட்டியில், அய்யப்பன் பக்தர்களாக நம்பிக்கை உள்ளவர்கள் மட்டுமே இந்த மாநாட்டில் அனுமதிக்கப் படுவார்கள் என்று கூறியிருக்கிறார். இக்கூற்றின்படி பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்பது தெரியவில்லை.

முதலமைச்சர்களுக்கு மட்டும் தான் அழைப்பு; அரசியல்வாதிகளுக்குக் கிடையாது என்றும் அவர் கூறியிருக்கிறார். அய்யப்பன் கோயிலுக்குள் பெண்களை அனுமதிப்பது குறித்து தேவசம்போர்டு ஏற்கனவே நீதிமன்றத்தில் ஒப்புதல் தந்திருந்தாலும், இப்போது அதை மறு பரிசீலனை செய்வதாக தேவசம் போர்டு தலைவர் நேற்று பேட்டியில் கூறியிருக்கிறார். பெண்களை அனுமதிக்க மறுப்பதில் தேவசம்போர்டு உறுதியாக இருக்கிறது.

மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தான், மாநாட்டை திறந்து வைக்க இருக்கிறார். ஒரு மதத்தின் பெயரால் நடக்கும் மாநாட்டிற்கு கேரள அரசு நிதி ஒதுக்கி செலவிடக் கூடாது என்று எம்.நந்தகுமார் என்பவர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கிற்கு பதில் அளித்த கேரள அரசு, இதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்பதைத்தான் பதிலாக தந்திருக்கிறது.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி பெண்களுக்கு எதிரான பாலின ஒதுக்கலையும், தீண்டாமையையும் நியாயப்படுத்தும் ஒரு கடவுளின் மாநாட்டுக்கு அரசும் முதலமைச்சர்களும் பங்கேற்கலாமா?

கோயில்களில் இருந்து அரசும் அறநிலையத்துறையும் வெளியேற வேண்டும் என்று கூப்பாடு போடுகிறவர்கள் இப்போது எங்கே போனார்கள்? கடல் தாண்டிப் போவது இந்து சாஸ்திரங்களுக்கு எதிரானது என்று அய்தீகம் பேசுகிறவர்கள் சர்வதேச மாநாடுகளை ஏற்கிறார்களா?

இத்தகைய மாநாடுகளை நடத்துவதற்கு ஆகமங்கள் அனுமதிக்கிறதா? அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு மட்டும்தான் ஆகமம் தடை போடுமா!...

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.