நீதிபதிகள் நியமனங்களில் ஒன்றிய ஆட்சி தலையிட்டு முடிவுகளை எடுத்ததாக ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷண் கவுல் வெளிப்படையாக குற்றம் சாட்டியுள்ளார்.  அண்மையில் அவர் எழுதி வெளிவந்துள்ள `Without fear or favour' என்ற சுயசரிதை நூல் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.  ஜாதி,மதத்தின் பார்வையில் நீதிபதிகள் தேர்வு நடப்பதாக கவுல் குற்றம் சாட்டியிருக்கிறார். சுயசரிதையில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள்….

 நீதிபதிகள் நியமனத்திற்கு அரசின் முன் ஒப்புதலைப் பெற முயற்சி   

முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், கொலீஜியம் முறையாகக் கூடி ஒரு வேட்பாளரைப் பற்றி விவாதிப்பதற்கு முன்பே, அந்தப் பெயர் குறித்து மத்திய அரசின் கருத்தை அறிய முயன்றார். உச்சநீதிமன்றத்தில் காலியாக இருந்த ஆறு இடங்களை நிரப்புவது தொடர்பாக விவாதம் நடைபெற்றது. ஐந்து பெயர்கள் குறித்து ஏற்கெனவே ஒருமித்த கருத்து இருந்தது. ஆறாவது பெயரைச் சந்திரசூட் முன்மொழிந்தபோது, அரசின் கருத்தைத் தொலைபேசியில் கேட்டறியலாமா என்று தன்னிடம் கேட்டதாகக் கவுல் கூறுகிறார். அரசின் கருத்தைக் கேட்பதற்கு முன்பு, கொலீஜியம் சுதந்திரமாக விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என்று கவுல் எதிர்த்தார். நீதிபதிகளைத் தேர்வு செய்வதில் அரசின் விருப்பத்தை  ஏன் கேட்க வேண்டும் என்று கவுல் கேட்டார். supreme court 600சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த ஒருவரை நீதிபதியாக நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டபோது, ஏற்கெனவே பிற சிறுபான்மை மதங்களைச் சேர்ந்த நீதிபதிகள் இருக்கும்போது மேலும் ஒருவர் ஏன் தேவை என்ற கேள்வியை அரசு எழுப்பியது. வேட்பாளரின் மத அடையாளம் நியமன விவாதத்தில் முன்வைக்கப்பட்டது.  இதுபோன்ற கேள்விகள் நீதிபதியின் தகுதி, திறமை மற்றும் நேர்மையை அடிப்படையாகக் கொண்ட தேர்வு நடைமுறைக்கு முரணானவை. வேட்பாளரின் பெயர் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. எனவே, அந்த நபர் யார் என்று ஊகிப்பது சரியல்ல.

நீதிபதி வேட்பாளரின் குடும்ப ஜாதி குறித்து அரசு கேள்வி எழுப்பியது

 அதே நியமன விவாதத்தில், வேட்பாளரின் குடும்பம் எந்த ஜாதியைச் சேர்ந்தது என்று அரசு கேட்டது. அந்தக் கேள்வியின் பொருத்தத்தைக் கவுல் எதிர்த்தார். ஒரே மதத்தைப் பல தலைமுறைகளாகப் பின்பற்றிவரும் ஒரு குடும்பத்தின் ஜாதியை இப்படிக் கேட்பதன் அவசியம் என்ன என்று அவர் கேள்வி எழுப்பியதாக நூலில் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தால் அதிருப்தியடைந்த கவுல், கோப்பை மூடிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறியதாகக் கூறுகிறார். பின்னர் அரசு தனது எதிர்ப்பை விலக்கிக்கொண்டு அந்த நியமனத்தை ஏற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

பணமோசடி தடுப்புச் சட்டம்

பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) தொடர்பான ஒரு வழக்கை மறுபரிசீலனை செய்வது குறித்து அவரது அமர்வு பரிசீலித்து வந்தபோது, அந்த வழக்கு வேறு நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு திடீரென மாற்றப்பட்டது. 2022-ஆம் ஆண்டு PMLA சட்டத்தின் சில அம்சங்களை உச்ச நீதிமன்றம் உறுதிசெய்திருந்தது. அந்தத் தீர்ப்பின் சில அம்சங்களை மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பாகக் கவுல் தலைமையிலான அமர்வு விசாரித்தது.  பின்னர் அந்த வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டதாகவும், அதற்கான தெளிவான விளக்கம் தமக்குக் கிடைக்கவில்லை என்றும் கவுல் கூறுகிறார். தனது அமர்வு அந்த வழக்கில் கடுமையான அணுகுமுறையை மேற்கொள்ளக்கூடும் என்று கருதி வழக்கு மாற்றப்பட்டிருக்கலாம் என அவர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

டி.ஒய். சந்திரசூட் அரசுக்கு அளவுக்கு அதிகமாக இணங்கியதாக விமர்சனம்

நீதிபதிகள் நியமனம் தொடர்பாக சந்திரசூட் மத்திய அரசிடம் தேவைக்கு அதிகமாக இணக்கமாக நடந்து கொண்டதாகக் கவுல் குற்றம் சாட்டுகிறார்.

கொலீஜியம் முறையில் அரசியல் அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு

கொலீஜியம் முறை அரசியல் அதிகாரத்திலிருந்து முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்ட அமைப்பு அல்ல; அதில் அரசியல் அழுத்தங்கள் நுழைவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று அவர் கூறுகிறார்.  நீதிபதிகள் நியமனத்தில் அரசு தனது கருத்தைத் தெரிவிக்கிறது. அந்த ஆலோசனை, நீதிபதிகள் சுதந்திரமாக முடிவெடுப்பதற்கு முன்பே அரசின் ஒப்புதலைப் பெறும் நடைமுறையாக மாறக்கூடாது. கொலீஜியத்தின் முடிவெடுக்கும் நடைமுறை வெளிப்படையாகவும், அதன் செயல்பாடுகள் பொறுப்புணர்வுடன் கூடியதாகவும் இருக்க வேண்டும். அதாவது, கவுலின் விமர்சனம் மத்திய அரசை மட்டுமல்ல; கொலீஜியத்தின் செயல்பாட்டையும் உள்ளடக்கியது.

நீதிபதிகள் நியமன முறையைச் சீரமைக்க வேண்டிய அவசியம்

கொலீஜியம் முறை மட்டுமே எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வாகிவிடாது. அதன் செயல்பாட்டில் உள்ள வெளிப்படைத்தன்மைக் குறைபாடுகள் மற்றும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொள்ளும் திறன் ஆகியவை விவாதிக்கப்பட வேண்டும். இது ஒரு குறிப்பிட்ட நபர் செய்த தவறு என்ற குற்றச்சாட்டைத் தாண்டி, நீதிபதிகள் நியமன அமைப்பின் செயல்பாடு குறித்த விமர்சனமாகும்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.