கடைசியில் பொதுமக்களின் கருத்துக்கு தலைமை நீதிபதி பணிந்தார். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், தானும் பிற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் தங்கள் சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளிப்படுத்த முன்வருவதாக 26.08.09 அன்று அறிவித்தார்.

இது தொடர்பான வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் தங்களது சொத்துக் கணக்குகளை மக்கள் அறியும்படி வெளியிட வேண்டும் என அறிவித்தது. கீழமை நீதிமன்றத்திலிருந்து உச்சநீதிமன்றம் வரையிலும் நீதித்துறையில் ஊழல் பெருத்து வருவதை மக்கள் அறிந்து கொண்டிருக்கிறார்கள். உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிகளாக பணியாற்றிய கே.என்.சிங், ஏ.எஸ்.ஆனந்த், எம்.எம்.பூஞ்சி, ஒய்.கே.சபர்வால் ஆகியோர் மீது வருமானத்திற்கு மேல் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இரகுபதி, வினாயகா மிசன் மருத்துவக் கல்லூரி தொடர்பான ஒரு வழக்கில் முன் பிணை வழங்குமாறு தில்லி அமைச்சர் ஒருவர் நிர்பந்தம் செய்வதாக வெளிப்படையாகவே குற்றம் சாட்டினார். நீதிபதிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் நெருக்கமான உறவு இல்லாமல் இது நடக்க முடியாது. ஏதோ காரணத்துக்காக அவர்களுக்குள் விரிசல் வரும் போது அது வெளிப்படுகிறது.

நீதிபதி பி.டி.தினகரன் ஏழை தலித்துகளுக்கு சேர வேண்டிய அரசுப் புறம்போக்கை வளைத்துப் போட்டது அம்பலமாகியுள்ளது. உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள் எவ்வளவு பெரிய குற்றம் செய்திருந்தாலும் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதோ, குற்றவியல் வழக்குத் தொடுப்பதோ மிக மிக அரிதாகவே நடக்க முடியும். இந்திய அரசமைப்புச் சட்டம் வைத்துள்ள தடுப்புச் சுவர் அத்தகையது.

எனவே, தகவல் அறியும் உரிமை சட்டப்படி உயர்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் சொத்துக் கணக்குகளை பொது மக்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பு வேண்டும் என்ற குரல் அண்மைக்காலமாக வலுவாக எழுந்துள்ளது. இதற்கேற்ப நடுவண் தகவல் ஆணையம் உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சொத்துக் கணக்குகளை வெளியிடுமாறு அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், இந்த அறிவிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தின் சார்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது இதுவே முதல்முறை.

அவ்வழக்கில் தான் நாம் தொடக்கத்தில் எடுத்துக்காட்டிய தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்தியத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் உயர்நிலை நீதிபதிகள் தங்கள் சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவிக்க வேண்டாம் என்று தொடர்ந்து கூறி வருகின்றார்.

இந்நிலையில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சைலேந்திரக் குமார் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ இதழில் கடந்த 20, 21.08.09 நாட்களில் விரிவான கட்டுரை எழுதினார். உயர்நிலை நீதிபதிகள் ஐயத்திற்கு அப்பாற்ப்பட்டவர்களாக இருக்க வேண்டும். தங்களது சொத்து விவரங்களை பொதுமக்கள் அறியும் வகையில் இணையத்தளங்களில் வெளியிட வேண்டும் என்ற வாதங்களை எடுத்துரைத்தார்.

இச்சிக்கலில் அனைத்து நீதிபதிகள் சார்பில் கருத்துக் கூற தலைமை நீதிபதிக்கு உரிமை இல்லை என அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்தார். இதற்கடுத்த நாள், பஞ்சாப், அலீஜீயானா உயர்நீதிமன்ற நீதிபதி கண்ணன், தமது குடும்ப சொத்து விவரங்களை “நீதித்துறையின் கடமைப்பாடு மற்றும் சீர்திருத்தம் குறித்த மன்றம்” என்ற அமைப்புக்கு அனுப்பிவிட்டு, அதன் நகலை இணையதளங்களிலும் வெளியிட்டார்.

முதலில் சைலேந்திர குமாரின் கட்டுரையை எரிச்சலோடு விமர்சித்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இது கீழ்த்தரமான விளம்பர உத்தி என்று சாடினார். நீதிபதி கண்ணன் சொத்துக் கணக்குகளை வெளியிட்டதால் தங்களுக்கு தர்ம சங்கடம் ஏதுமில்லை என்று மழுப்பினார். ஆயினும், சைலேந்திரக் குமாரின் கருத்துக்கும் கண்ணனின் செயலுக்கும் மக்களிடையே பெருத்த ஆதரவு எழுந்தது. கே.ஜி.பாலகிருஷ்ணன் நீதித்துறை ஊழலை மறைக்க விரும்புகிறார் என்ற குற்றச்சாட்டு வலுத்தது.

இந்த மக்கள் கருத்துகளின் அழுத்தத்திற்கு அடிபணிந்து, “உச்சநீதிமன்ற நீதிபதிகள் தங்கள் சொத்துக் கணக்குகளை உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியிடுவதென ஒருமித்து முடிவு செய்திருக்கிறோம்” என்று வேறு வழியின்றி கே.ஜி.பாலகிருஷ்ணன் அறிவிக்க வேண்டியதாயிற்று.

ஆயினும், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளின் சொத்து விவரங்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அளிக்கப்படுவதும், இவர்கள் அரசு ஊழியர்கள் என்ற வரையறுப்பின் கீழ் கொணரப்படுவதும் அவசியமானது. அதே போல், நீதிபதிகளின் நியமனம், குற்ற விசாரணை, நீக்கம் ஆகியவற்றில் அதிகாரம் கொண்ட நீதித்துறை ஆணையம் நிறுவப்படுவதும் தேவையானது. இது முன்னாள் நீதிபதிகள் மற்றும் நாடாளுமன்றத்தாலும், மனித உரிமை அமைப்புகளாலும், நியமிக்கப்படும் உறுப்பினர்கள் ஆகியோரைக் கொண்ட நிரந்தர அமைப்பாக அமைய வேண்டும். இது தேர்தல் ஆணையம் போல் அரசமைப்பு சட்டத்தால் நிறுவப்படும் அமைப்பாகத் திகழ வேண்டும். (இச்சிக்கல் குறித்த விரிவான விவாதத்திற்கு காண்க: புதிய தமிழர் கண்ணோட்டம் சனவரி 2009.)

Pin It