திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஜாதிப் பெயர் நீக்க ஆணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை மதுரை உயர்நீதிமன்றக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.

  மனதளவில் ஜாதிப் பெயர்களைத் தக்க வைத்துள்ளோரின் மனதில் தான் குழப்பம் உள்ளது. தெருக்களில் ஜாதிப்பெயர்களை நீக்கும் அரசாணை சமூகநீதி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமானது எனக் கூறியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அரசாணையை எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது. மதுரையைச் சேர்ந்த பரமசிவம், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடந்தாண்டு தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு வைக்கப்பட்டுள்ள ஜாதிப் பெயர்களை நீக்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

   இதன்படி, கிராமங்கள், குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர் நிலைகளுக்கு உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கி அரசாணையும் வெளியிடப்பட்டது. ஆதி திராவிடர் காலனி, வண்ணான்குளம் போன்ற ஜாதிப்பெயர்களை நீக்குதல், புதிய பெயரிடும் பணிகளை 2025 நவம்பர் 19ம் தேதிக்குள் முடிக்க வேண்டுமெனவும் அதில் கூறப்பட்டுள்ளது. சாலைகள், தெருக்கள் பெயர்கள் மாற்றுவது நடைமுறையில் பல பிரச்னைகள் உள்ளது. எனவே இந்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

   இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம் ஜாதிப் பெயர்களை நீக்குவது தொடர்பான அரசாணையை செயல்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘தமிழ்நாட்டில் உள்ள சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளுக்கு ஜாதிப் பெயர்களை நீக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை.

   செங்கல்பட்டில் உள்ள  ‘அரிஜன் காலனி’ தற்போது திருவள்ளுவர் காலனி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவள்ளுவர் ஒரு புகழ்பெற்ற மனிதர் என்பதை நாம் ஒருபோதும் மறுக்க முடியாது. அவருடைய பெயரைச் சேர்ப்பது அந்த குறிப்பிட்ட காலனியில் உள்ள தனிநபர்களின் பெருமையை மட்டுமே அதிகரிக்கும். அவரை எந்த ஒரு அரசியல் கட்சியுடனோ அல்லது இயக்கத்துடனோ நாம் தொடர்புபடுத்த முடியாது. இதேபோல், ‘இருளர் காலனி’ என்பது கபிலர் தெருவாக மாற்றப்பட்டுள்ளது. கபிலர் என்பது புகழ்பெற்ற மனிதரின் பெயர்.

   சலவையாளன் காலனி என்பது ரோஜா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, இது ஒரு மலரின் பெயரைக் குறிக்கிறது. இதேபோல், அருந்ததியர் தெரு காமராஜர் நகர் என்றும், நரிக்குறவர் காலனி பேரறிஞர் அண்ணா தெரு என்றும் பெயர் மாற்றமாகியுள்ளது. காமராஜரும், அறிஞர் அண்ணாவும் இம்மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்கள். இவர்களது பெயர்களை மாற்றுப் பெயர்களாக வைப்பதில் எந்தவிதமான பிரச்னையும் இருக்க முடியாது.

   வேலூரில் உள்ள ஆதிதிராவிடர் காலனி, கம்பர் தெரு என்றும், திருநெல்வேலியில் உள்ள பார்பர் காலனி பாரதிதாசன் தெரு என்றும் பெயர் மாற்றமாகியுள்ளது. இது கவிஞர்களின் பெயர்களே தவிர, தனிநபர்களின் பெயர்கள் அல்ல. காஞ்சிபுரத்தில் அருந்ததியர் குடியிருப்பு அவ்வையார் குடியிருப்பாகியுள்ளது. இந்தப் பெயரின் மீது எந்தவித சர்ச்சை அல்லது தகராறும் எழுப்ப முடியாது. இதேபோல் பல இடங்களில் கக்கன் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

   மறைந்த அமைச்சர் கக்கன் நேர்மை, எளிமை மற்றும் பொது வாழ்வில் ஒழுக்கக் கொள்கைகளை உயர்த்தியதற்காக மிகவும் மதிக்கப்படுபவர் என்பது அனைவரும் அறிந்ததே எனவே, கொடுக்கப்பட்டுள்ள மாற்றுப் பெயர்கள் அனைத்தும், இந்த மாநிலத்தில் உள்ள பொதுமக்களால் மதிக்கப்படும் மற்றும் கவுரவிக்கப்படுவோரின் நடுநிலையான பெயர்கள் தான். செங்கல்பட்டில் உள்ள வண்ணார் ஏரி, கொன்றை ஏரி என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  உண்மையில், தற்போதுள்ள பெயர்களை வெளிப்படையாகப் பேசக்கூட முடியாது. அவை மிகவும் பிறரை அவமதிக்கும் வகையில் உள்ளன, அவை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. இந்த நடவடிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த மாற்றங்களை அறிமுகப்படுத்த அரசு இத்தனை ஆண்டுகள் காத்திருந்திருக்கக் கூடாது. மேலும் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டிய பெயர்களைக் கண்டறிந்து, விடுபட்ட பகுதிகளின் பெயர்களில் மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில் மேலும் ஒரு அரசாணையை வெளியிட வேண்டும்.

  தமிழ்நாடு அரசின் அரசாணையை செயல்படுத்துவதில் நீதிமன்றத்திற்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை. இது அரசால் தொடரப்பட வேண்டும். ஜாதிப் பெயர்களை நீக்குவதால் குழப்பம் ஏற்படும் என்று மனுதாரர் கூறகிறார். ஆனால், மனதளவில் ஜாதிப் பெயர்களைத் தக்க வைத்துக் கொண்டிருப்பவர்களின் மனதில்தான் குழப்பம் இருக்கும். மனதிலிருந்து ஜாதியை நீக்கியவர்களின் மனதில் எந்தக் குழப்பமும் இருக்காது.

  இது பொதுவான பயன்பாட்டிற்கு வரும் என்பதால் காலப்போக்கில் எந்த சிரமமும் இருக்காது. ஒரு குடியிருப்புப் பகுதியை ‘சக்கிலியன் குளம்’ என்று குறிப்பிடுவதில் என்ன பெருமை இருக்கும், இதை நாங்கள் ஏற்கவில்லை. மனப்போக்கில் மாற்றம் இருக்க வேண்டும். இந்த அரசாணை சமூகநீதி மாற்றத்திற்கு மிகவும் பொருத்தமானது. ஏற்கனவே விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டு, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளனர்.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.