(விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன் 'திராவிட மாடல்' ஆட்சியில் பட்டியலின பிரிவினருக்கு கிடைத்த திட்டங்களை விளக்கி வெளியிட்ட முகநூல் பதிவுவின் ஒரு பகுதி.)
எமது கோரிக்கைகளின் நியாயத்தை ஏற்று அவற்றை அரசாணைகளாக மாற்றிய மாண்புமிகு மேனாள் முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களுக்கு எனது இதயம் நிறைந்த நன்றியை இந்த தருணத்திலும் மனப்பூர்வமாக பதிவிடுகிறேன். தேர்தல் தோல்வியின் போதுகூட கலங்காத என் மனம் இதை எழுதும் போது நன்றியால் கரைகிறது. இந்த நன்றியை பதிவு செய்வது என் அரசியல் வாழ்வின் குறைந்த பட்ச அறம் என நம்புகிறேன்.
எமது ஆதிதிராவிடர் பழங்குடியினருக்கு தேசிய ஆணையம் இருப்பதை போல The Tamilnadu State Commission for the Scheduled Castes and Scheduled Tribes Act 2021 எனும் சட்டம் இயற்றப்பட்டு 22.09.2021 அன்று தமிழ்நாடு SC/ST மாநில ஆணையம் நிறுவப்பட்டுள்ளது.
அரசின் அனைத்து திட்டங்களுக்கான மொத்த நிதி ஒதுக்கங்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு உரிய விகிதாச்சார ஒதுக்கீடு கிடைப்பதை சட்டப்பூர்வமாய் உறுதி செய்திட (சிறப்பு உட்கூறு திட்டம்) SC/ST Development Action Plan Act 2024 எனும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் எஸ்.சி எஸ்.டி பிரிவினருக்கு ஒன்றிய அரசு 3% முன்னுரிமை வழங்குவதைப் போல தமிழகத்தில் அரசு ஒப்பந்த பணி மற்றும் கொள்முதல்களில் 5% முன்னுரிமை வழங்கும் வகையில் Tender Transparency Act ல் திருத்தம் (Amendment) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எஸ்.சி எஸ்.டி பிரிவை சார்ந்த தொழில் முனைவோர் வங்கி கடனில் 35 % முன் ஒப்பளிப்பு மானியம் (Front end Subsidy) பெறும் வகையில் (அதிகபட்சம் ரூ.1.5 கோடி )ஆண்டுக்கு ரூ.200 கோடியில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்.
சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டியல் இன மாணவர்கள் பயில ரூ.36 இலட்சம் முதல் ரூ.24 இலட்சம் வரை உதவித்தொகை வழங்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவி திட்டம் சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
பட்டியல் வகுப்பார் குடியிருப்புகளில் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ள அடிப்படை வசதிகளை உருவாக்கிட ஆண்டுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் அயோத்திதாசர் குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டமும், பழங்குடியினருக்கு தொல்குடிகள் குடியிருப்பு மேம்பாட்டு திட்டமும் உருவாக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மூன்றில் ஒரு பங்கு பொதுமக்களின் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் நமக்கு நாமே திட்டத்தில் பட்டியலின, பழங்குடியினருக்கு மக்கள் பங்களிப்பு அய்ந்தில் ஒரு பங்கு என குறைக்கப்பட்டுள்ளது.
திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 30 ஆண்டுகளாய் முடங்கி கிடந்த ஈங்கூர் மற்றும் முதலிப்பாளையம் தாட்கோ தொழிற்பேட்டைகள் ரூ.200 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு பட்டியல் வகுப்பார் மற்றும் பழங்குடி சமூகங்களைச் சார்ந்த தொழில்முனைவோர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.