திராவிடர் விடுதலைக் கழகத்தின் கோவை மாநகரத் தலைவர் தோழர் நிர்மல் குமார் அவர்கள் தன்னுடைய முகநூல் பக்கத்தில் மருதமலை சுப்ரமணியர் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு முதல் நாளில் நான்கு லட்ச ரூபாய் மதிப்புள்ள "வெள்ளி வேல்"அய் காவி உடை அணிந்த ஒருவர் திருடிச் சென்ற செய்தியை தன்னுடைய விமர்சனத்தோடு பதிவு செய்திருந்தார். அதற்காக கோவை மாநகரத்தின் சி5 கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர், அவர்மீது BNS 299 பிரிவின்படி மத மோதலை உருவாக்குகிற முயற்சி என்ற காரணம் சொல்லி அவருக்கு அழைப்பாணை அனுப்பி அழைத்து விசாரித்தும் இருக்கிறார்.
எங்களுடைய கருத்து சட்டத்தைப் பற்றி யாருக்காவது போதிய அறிவு வேண்டுமென்றால் அது காவல்துறை அதிகாரிகளுக்குத் தான் முதல் தேவையாக உள்ளது.
ஏராளமான உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் ஏற்கனவே வந்திருக்கின்றன. மத சுதந்திரம் என்பது மதத்தைப் பரப்புவதற்கு உள்ள சுதந்திரம் மட்டுமல்ல; மதத்தை எதிர்த்துப் பரப்புரை செய்வதற்குமான சுதந்திரத்தையும் உள்ளடக்கியது என்ற பொருளில் ஏராளமான தீர்ப்புகள் வந்துள்ளன. இருந்தபோதும், யாரும் புகார் அளிக்காத நிலையில்கூட ஆய்வாளர் தானாக முன்வந்து இப்படிப்பட்ட மிரட்டும் நடவடிக்கைகளில் - தான் ஏற்றுக்கொண்ட மதவெறி சித்தாந்த கொள்கைப்படி இந்த வழக்கை பதிந்திருக்கிறார் என்றே கருதுகிறோம்.
இதன் அடிப்படையில் இரண்டு வேண்டுகோள்களை தமிழ்நாடு அரசுக்கும், காவல்துறை தலைமைக்கும் முன் வைக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
மத நம்பிக்கைக்கு எதிராக தன்னுடையக் கருத்தை கூறிவிட்டாலே அது ஏதோ இரு மதத்திற்கு இடையிலான மோதலை வளர்ப்பதற்காக செய்யப்பட்ட முயற்சி என்று கருதுகிற சட்ட அறிவு இல்லாத காவல்துறையினருக்கு அவ்வப்போது அரசியல் சட்டம் வழங்கியிருக்கிற அடிப்படை உரிமைகள், அரசியல் சட்டத்தின் 51 A (h) கூறுகிற அடிப்படை கடமைகள், மனித உரிமை குறித்த செய்திகளை அவர்களுக்குப் புரிய வைக்க ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
மத மோதலை உருவாக்கும் முயற்சி என்று தோழர் நிர்மல் குமார் மீது தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து இருக்கிற அந்த ஆய்வாளரும், இப்படிப்பட்ட வழக்குகளை இஸ்லாமிய கிறிஸ்தவர்களுக்கு எதிராக இழிவாகவும், அவதூறாகவும் பேசுகிற இந்து மதவெறி அமைப்பினர், பாரதிய ஜனதா கட்சியினர், - சாத்தானின் பிள்ளைகள் என்று பேசுகிற போலி தமிழ் தேசியர்கள் - இவர்கள் மீதெல்லாம் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்பதையும் நாம் அறிய விரும்புகிறோம். மக்களின் வரிப்பணத்தில் சம்பளம் வாங்குகிற காவல்துறையினர் சட்டத்தின் அடிப்படையில் இயங்க வேண்டுமே தவிர, தான் வரித்துக் கொண்டிருக்கிற கொள்கையின் அடிப்படையில் சட்டத்தை வளைத்து பயன்படுத்தக் கூடாது என்பதையும் தமிழ்நாடு அரசு விழிப்புடன் கவனித்து அப்படிப்பட்ட புரிதல் உள்ளவர்களை - கொள்கை சாய்வு உள்ளவர்களை சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கிற பணிக்குப் பதிலாக வேறு பணிகளில அமர்த்தி தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு கெடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன் வைக்கிறோம்.
கவுண்டம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரின் முன் வரலாறுகளையும் ஆய்ந்தறிந்து அவரது தான்தோன்றித்தனமான இந்தப் போக்கினை கட்டுப்படுத்த வேண்டும் என்பதோடு உரிய துறைசார் நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் அன்போடு முன் வைக்கிறோம்.
அதுவரை கழகத் தோழர்களும் ஆர்ப்பாட்டங்கள், முற்றுகை போன்ற எந்த ஒரு நடவடிக்கையையும் தற்காலிகமாக ஒத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.
- கொளத்தூர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.