திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகள் இப்போது சர்வதேச நாடுகளுடன் ஒப்பிட்டு பேசப்படுகிறது. மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் பங்கேற்று பேசிய பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்பிரமணியம் "தமிழ்நாட்டின் வளர்ச்சி சீனாவின் வளர்ச்சியை போல் வேகமாக வளர்ந்து வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இதற்குச் சான்றாக தனது சக தோழர் எழுதிய பொருளாதார ஆய்வை சுட்டிக்காட்டி உள்ளார்.

பெண்கள் சமத்துவம் மற்றும் சமூகநீதித் துறையில் திராவிட மாடல் ஆட்சியின் தனித்துவமான சாதனைகளை அறிந்த அய்.நா.வின் அமைப்புகள் தமிழ்நாடு அரசுடன் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

திராவிட மாடல் ஆட்சியின் முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான சர்வதேச ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இருக்கிறார். இந்த சாதனைகளின் தாக்கம் குறித்து மாநில திட்ட க் குழு விரிவான கள ஆய்வுகளை நிகழ்த்தி சமர்ப்பித்த அறிக்கைகளின் அடிப்படையில் அய்.நா.வின் நிறுவனங்கள் கைகோர்த்து செயல்பட முன்வந்துள்ளன. மாநிலத் திட்டக் குழுவும் இதில் இணைந்து நிற்கிறது.

அய்.நா.வின் யுனிசெப் அமைப்பு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சர்வதேச நாடுகள் பங்கேற்கும் மாநாடு ஒன்றை ஜனவரி மாதம் நடத்த இருக்கிறது. பல்வேறு நாடுகள் பங்கேற்கும் இந்த மாநாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு மாநிலம் ஒரு நாடாக அங்கீகரிக்கப்பட்டு பங்கேற்க இருக்கிறது. திராவிட மாடல் ஆட்சிக்கு சர்வதேச ஏற்பு கிடைத்திருக்கிறது.

சீனாவைப் போல் இந்தியா ஏன் வளரவில்லை? என்ற கேள்வி எழும்போது இந்தியாவில் தமிழ்நாடு மட்டும் சீனாவுக்கு நிகராக வளர்ந்து வரும் சாதனையை நிகழ்த்தி பெருமையுடன் நிமிர்ந்து நிற்கிறது. இந்த நிலையில் இங்கே சில பேர்வழிகள் தீய சக்தி என்றும் தூக்கி எறிய வேண்டிய ஆட்சி என்றும் உளறிக் கொண்டிருக்கிறார்கள்."

‘பராசக்தி’ படக்குழுவைப் பாராட்டுவோம்!

"இந்தித் திணிப்பு எதிர்ப்பை மக்களிடம் கொண்டு செல்வதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறது பராசக்தி.

கேன்பரே (ஆஸ்திரேலியா) நகரில் படத்தைப் பார்த்தபோது பொதுநிலையில் உள்ளவர்கள் அனைவரும் படத்தைப் பாராட்டினார்கள். இது படத்துக்கு கிடைத்த மிகப்பெரும் வெற்றி.

படத்தின் இறுதியில் இருமொழிக் கொள்கையை அண்ணா அறிவிக்கும் காட்சி உணர்ச்சிமயமானது, படத்தின் திசை வழியை தெளிவாக உணர்த்திவிட்டது.

தெலுங்கை தாய்மொழியாக் கொண்ட கதாநாயகி இந்திக்கு எதிராக தாய்மொழியின் தேவையைப் பேசுவதோடு போராட்டக்களத்திலும் நிற்கிறார். சௌராஷ்ட்ரா மொழி பேசும் இளைஞர் இந்திக்காக உயிர் துறக்கிறார்.

திராவிடர் இயக்கம் தொடங்கி வைத்த இந்தி எதிர்ப்பு ஆந்திராவிலும் கர்நாடகாவிலும் மேற்கு வங்கத்திலும் தீயாகப் பற்றியதை படம் உணர்வோடு பேசுகிறது.

மும்மொழித் திட்டம், நவோதயா பள்ளி என்று தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைக்கும் சங்கிகள் இனி வாய்திறக்க முடியாத சம்மட்டி அடியை கொடுத்திருக்கிறது பராசக்தி.

காலத்திற்குத் தேவையான ஒரு அரசியல் கருத்தை மிகச் சிறந்த திரைமொழியில் உணர்வுகளோடு மக்கள் முன் சமர்ப்பித்த படக்குழுவினரை மனதாரப் பாராட்ட வேண்டும்."

- விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்