தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கோவையில் போராட்டம் 

2023 ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற ‘இது தமிழ்நாடு - இளம் தலைமுறையினரின் எச்சரிக்கை’ மாநாட்டில் ‘வைக்கம் போர் முடியவில்லை’ என்ற தலைப்பில் தீர்மானம் இயற்றப்பட்டு அதனடிப்படையில் தீண்டாமைக் கொடுமைகளைப் பட்டியலெடுத்துப் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை ஆணையத்திலும் மனு அளிக்கப்பட்டது.kolathoor mani agitation against caste2025-இல் கழகத் தலைமைக் குழுவில் செப்-17 முதல் செப்-24 வரை “மனிதம் நமது அடையாளம்; ஜாதி நமக்கு அவமானம்” என்ற தலைப்பில் தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது என்றும் நிறைவாக கோவையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்களைக் கழகம் தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக கழகத்தின் சார்பில், கோவையில் ஜாதிய தீண்டாமைக்கு எதிராக தமிழ்நாடு அரசின் சட்ட நடவடிக்கை கோரி மாநிலம் தழுவிய போராட்டம், டிசம்பர் 29-அன்று காலை 10.30 மணிக்கு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாநில, மாவட்ட பொறுப்பாளர்கள், கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத்தினர் பலரும் கலந்து கொண்டன. ஜாதி தீண்டாமைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து கழக நிர்வாகிகள் மற்றும் தோழமை அமைப்புகளின் பொறுப்பாளர்கள் உரையாற்றினார்கள். ஆதித்தமிழன் (திராவிடர் தமிழர் கட்சி), ரவிகுமார் (ஆதித்தமிழர் பேரவை), மலரவன் (பு.இ.மு.), இனியவன் (சி.பி.அய்.எம்எல். ரெட் ஸ்டார்), இராம. இளங்கோவன் (மாநில வெளீயீட்டுச் செயலாளர்), காசு நாகராசன் (திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), நாகை திருவள்ளுவன் (தலைவர், தமிழ்ப் புலிகள் கட்சி), சந்திரசேகர் (தவாக), பால் பிரபாகரன் (கழகப் பரப்புரைச் செயலாளர்), தமிழ் இன்பன் (விடுதலை வேங்கைகள் கட்சி நிறுவனர்), சர்மிளா (தமிழ்நாடு மாணவர் கழகம்-ஈரோடு) ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

நிறைவாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் பேசுகையில், “வளர்ச்சியும், சமூக வளர்ச்சியும் பெற்ற இந்த நாட்களில், ஜாதிச் சங்கங்கள் மீண்டும் பழைய காலத்திற்கு இழுத்துச் செல்கிறார்கள். அந்தந்த சமுதாய மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு, அவர்கள் வளர்ச்சியடைவதற்கான திட்டங்களை தீட்டிக்கொடுத்த ஜாதிச் சங்கங்கள் ஒரு காலத்தில் இருந்தன. இப்போது இருக்கிற ஜாதிச் சங்கங்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு, தங்களுக்குப் பாதுகாப்பு அரணாகத்தான் ஜாதியத்தைக் கூர்மைப்படுத்தி, சங்கங்களை அமைத்துக் கொண்டு, ஒருவருக்கொருவர் முரண்பாடு ஏற்படுத்துகிற ஜாதி சங்கங்களாக மாறிவிட்டனர். நாடார்கள் நடத்துகிற பள்ளிகளில் அத்தனை ஜாதிகளையும் தடுக்காமல் பள்ளியில் சேர்த்துக் கொள்ள வேண்டும், பள்ளிகளில் ஜாதியப் பாகுபாடு காட்டக் கூடாது என்று ஒருகாலத்தில் தீர்மானம் போட்டார்கள். ஆனால் இப்போது இருக்கிற ஜாதிச் சங்கங்கள், எங்கள் ஜாதிதான் பெரியது என்கின்றன. அதே வேளையில் அரசாங்கத்திடம் நாங்கள் சின்ன ஜாதி என்று இட ஒதுக்கீட்டிற்கு கோரிக்கை வைக்கிறார்கள். ஊருக்குள் மட்டும் நாங்கள்தான் பெரிய ஜாதி என்று பேசுகிறார்கள்.

கலை என்ற பெயரால் வள்ளிகும்மி நடத்துகிறார்கள். அங்கே வைத்து வேறு ஜாதி ஆண்களை திருமணம் செய்யாதீர்கள் என்று இளம்பெண்களிடம் சத்தியம் வாங்குகிறார்கள். தன் துணையைத் தானே தேர்வு செய்வது இயற்கை. கணவனை தேர்ந்தெடுக்க உரிமை உண்டு என்று நாம் சொல்கிறோம். ஆனால் ஜாதி சங்கங்கள் மீண்டும் சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன. மணமகள் தேடுதல் என்ற பெயரால், ஜாதியின் பெயரால் திருமண மையங்கள் (மேட்ரிமோனி) நடத்துகிறார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் இதை விளம்பரம் செய்கிறார்கள். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. கைகளில் கட்டப்படும் கயிறு ஜாதியை ஊக்குவிக்கும்போது, இந்த மேட்ரிமோனியல் விளம்பரங்கள் ஜாதியை ஊக்குவிக்காதா? இதுகுறித்து அரசு உரிய கவனம் செலுத்தவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989-இல் வந்தது. இப்படிப்பட்ட சட்டங்களுக்கெல்லாம் விதி வகுப்பதற்கு 7 ஆண்டுகள் கழித்து, 1996-இல்தான் விதிகளை வகுத்தார்கள். இருக்கிற சட்டத்தை முறையாக செயல்படுத்துகிறார்களா என்றால் அதுவும் இல்லை. பொறுப்பில் இருக்கிற காவல்துறை அதிகாரி, தன்னை அதிகாரி என்று கருதாமல், ஜாதியாக தன்னை சுருக்கிக் கொள்ளக்கூடாது. ஆனால் அப்படித்தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. உதாரணத்திற்கு ஆறுமுக சேர்வை வழக்கு உள்ளது.

ஜல்லிக்கட்டில் மாடு பிடித்தவரை ‘பள்ளப் பயலே மாடு பிடிக்காதே’ என்று திட்டிய வழக்கு. உச்சநீதிமன்றம் தண்டனை கொடுத்துவிட்டது. இந்த வழக்கில் நீதிபதி சொன்னார், "தமிழ்நாடு எங்கும் பரவலாக இரட்டைக்குவளை இருக்கிறது. அதை உடனடியாக நீக்க வேண்டும். தெரிந்திருந்தும் நீக்காத மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் கோட்ட அதிகாரிகள் மீது முதலில் அவர்களை இடைநீக்கம் செய்ய வேண்டும். அவர்கள் மீது வழக்குப் பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும். துறைசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிட்டார். ஆனால் இதுவரை அப்படி ஒருவர் மீது வழக்கு போட்டதாகவோ, நடவடிக்கை எடுத்ததாகவோ நம்மால் அறிய முடியவில்லை.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கிற இரட்டைக் குவளை முறை, முடிவெட்ட மறுக்கும் நிலைமை உள்ளது. இதைப்பற்றியெல்லாம் ஆய்வு செய்து, எங்கள் தோழர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் அறிக்கை கொடுத்திருக்கிறார்கள். கோவை மாவட்ட ஆட்சியரிடம், காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சட்டங்கள் ஏன் அவர்கள் மீது பாயவில்லை என்பதுதான் எங்கள் கேள்வி. “நீங்கள் மற்றவர்களை குற்றவாளிகளாக சொல்வதை விட, நீங்கள் குற்றம் செய்கிறீர்கள். உங்கள் மீதும் நடவடிக்கை தேவை. இந்த அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுங்கள்” என்று தமிழ்நாடு அரசை கேட்கிறோம். ஒருவர் மீது எடுத்தால் சரியாகிவிடும். இந்த அரசு செய்யாமல் வேறு எந்த அரசு இதை செய்யும் என்ற கேள்வியோடு நாங்கள் கேட்கிறோம். நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உங்களுடைய அமைச்சர்கள் ஜாதியவாதிகளாக இருக்கிறார்கள். ஜாதி சங்கங்களில் பேசுகிறார்கள். ஜாதிவாதிகளுக்கு நாங்கள் துணையிருப்போம் என்று பேசினால், மற்றவர்களுக்கு அவர்கள் என்ன செய்வார்கள் என்ற கேள்வி எழுகிறது. இதையெல்லாம் கட்டுப்படுத்த வேண்டியவை, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவை. அதை செய்யுங்கள் என்ற கோரிக்கையோடுதான், உரிய சட்டங்களை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்று கேட்கிறோம்.

முதலில் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்தது. ஆனால் இப்போது கோவிலுக்கு நுழையாமல் தடுக்கிறான். அதற்கு உடனே கோவிலையே பூட்டுறான். இதுதான் நடவடிக்கையா? யார் தடுத்தார்களோ அவர்கள் மீது வழக்கு போட வேண்டும். ஏன் தயங்க வேண்டும் என்பதுதான் எங்கள் கேள்வி. ஒரு இடத்தில் வழக்குபோட்டு சிறைக்கு அனுப்பினால் வேறு எவரும் தடுக்க மாட்டார்கள். ஒரு இடத்தில் நடவடிக்கை எடுக்க ஏன் இந்த தயக்கம் என்பது தான் கேள்வி. இனிமேலாவது அதை செய்யுங்கள் என்று தமிழ்நாடு அரசை நாங்கள் வலியுறுத்திக் கேட்கிறோம். உங்கள் தேர்தல் அறிக்கையில் இதைச் சேர்த்துக்கொள்ளுங்கள். நடவடிக்கை எடுப்போம் என்று உறுதி கொடுங்கள் என்ற கோரிக்கையோடுதான் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறோம். அனைவரும் ஒத்துழைக்க வேண்டும், இந்த கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைக்கிறோம்” என தனது உரையில் குறிப்பிட்டார். இறுதியாக வெங்கட் (மாநகரச் செயலாளர்) நன்றி கூறினார்.

திருப்பூர், ஈரோடு, பொள்ளாச்சி, சென்னை, நாமக்கல், சேலம், ஏற்காடு, மதுரை, தஞ்சாவூர், காரைக்குடி, மயிலாடுதுறை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருச்சி, கடலூர், பெங்களூரு, புதுவை சிந்தனையாளர் இயக்கம் தீனா, என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் மற்றும் தோழமை இயக்கத் தோழர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சூலூர் பன்னீர்செல்வம் (கோவை மாவட்டச் செயலாளர்), நிர்மல் குமார் (மாநகரத் தலைவர்), வெங்கட் (மாநகரச் செயலாளர்), தமிழ்ச்செல்வி (மாவட்ட அமைப்பாளர்), நவீன் (தமிழ்நாடு மாணவர் கழகம்), சத்தியமூர்த்தி, தரணி, சிவராசு, சதீஷ், நிலவழகன், ராமகிருஷ்ணன், அஜய், கதிரவன், சங்கனூர் கார்த்திக், மாதவன் சங்கர், திருப்பூர் தோழர்கள் சங்கிதா, முத்து, சரசுவதி ஆகியோர் மக்களிடம் துண்டறிக்கை விநியோகம் செய்வது, உணவு ஏற்பாடு, சுவரொட்டிகள் ஒட்டுவது, பதாகைகள் தயார் செய்வது உள்ளிட்ட போராட்டம் தொடர்பான பணிகளை கடந்த ஒரு மாதமாக இரவு பகல் பாராமல் மேற்கொண்டனர்.

சுவரெழுத்து மற்றும் ஓவியப் பணிகளை ஆத்தூர் மகேந்திரன், சென்னிமலை செல்வராசு ஆகியோர் சிறப்பாகச் செய்தனர். தன்னுடைய சொந்த செலவில் சுவரெழுத்து தோழர்களுக்கு தேநீர், உணவுச் செலவுகளை தோழர்கள் வெங்கட், ராஜசேகர், நிலவழகன் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.

கழகப் பொருளாளர் துரைசாமி, பரிமளராசன் (சமூக ஊடகப் பொறுப்பாளர்) மற்றும் அய்யப்பன் (திருப்பூர் வடக்கு ஒன்றிய அமைப்பாளர்) ஆகியோர் ஒலிபெருக்கி அமைத்தல் பணிகளை செய்தனர்.

விஷ்ணு, கபிலன் ஸ்டுடியோ விஜி, இளவரசன் ஆகியோர் வடிவமைப்புப் பணிகளை மேற்கொண்டனர்.

சிவராசன் மகன் கவுதமன், மற்றும் ஸ்டாலின் ராசா இருவரும் காணொளி மற்றும் புகைப்படப் பணிகளையும் மேற்கொண்டார்.

போராட்டம் குறித்து சமூகவலைதளங்களில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர் செயலாளர், வெளியீட்டுச் செயலாளர், மாணவர் கழகத் தோழர்கள் என அனைவரது காணொளியைப் பதிவு செய்து தினமும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்திருந்தனர்.

தோழர்கள் தங்குமிடம் மற்றும் உணவு ஏற்பாடுகளை வெள்ளக்கிணறு அசோக் மற்றும் வழக்குரைஞர் சிலமபரசன் ஆகியோர் செய்து தந்தனர்.

சுமார் 4,000 துண்டறிக்கைகளை இலவசமாக அச்சடித்து தந்துள்ளார் சரவணன். போக்குவரத்து உதவிகளை ஆட்டோ சந்திரன், செந்தில் ஆகியோர் செய்திருந்தனர்.

ஆர்பாட்டத்துக்கான பணிகளைச் செய்ய தங்களுடைய அலுவலகத்தை தமிழ்ப் புலிகள் கட்சி அலுவலக பொறுப்பாளர்கள் தந்து உதவினர்.

ஆர்ப்பாட்டத்தில் கழகத் தோழர் பாரி சிவா 50 புரட்சிப் பெரியார் முழக்கத்துக்கான சந்தா தொகை ரூ.15000 மற்றும் முகவரிகளை கழகத் தலைவவரிடம் வழங்கினார்.

- பெ.மு. செய்தியாளர்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.