தொடர்புடைய படைப்புகள்

தென் மாவட்டங்களைச் சார்ந்த `சுயமரியாதைச் சுடரொளி’களின் வரலாறுகள் படங்களுடன் மாநாட்டுத் திடலில் காட்சிப்படுத்தப்பட்டன.

சுயமரியாதை இயக்க வீரர் சிவகங்கை இராமச்சந்திரனார் (16.09.1884-26.02.1933)

  • sivagangai ramachandranதென் மாவட்டங்களில் காரைக்குடிக்கு அருகே உள்ள சிவகங்கையைச் சார்ந்த இராமச்சந்திரனார் சுயஜாதியை எதிர்த்து தீண்டப்படாத மக்களுக்காக போராடிய சுயமரியாதை இயக்கத் தலைவர்களில் ஒருவர். முக்குலத்தோர் சமூகத்தில் முதல் முதலாக சுயமரியாதை இயக்கக் கொள்கைகளுடன் அரசியலுக்கு வந்த தலைவர்.
  • 1929 செங்கல்பட்டு மாநாட்டில் பெரியார் நடத்திய முதல் சுயமரியாதை மாநாட்டில் பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டிருக்கும் ஜாதிப் பெயர்களை நீக்க வேண்டும்; ஜாதி,மத அடையாளங்களை தவிர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை முன்மொழிந்தவர் இவர் தான். அப்போது தனது பெயருக்குப் பின்னால் ஒட்டி இருந்த 'சேர்வை' பெயரை நீக்குவதாக அறிவித்தார். தனது நெற்றிப் பொட்டுக்களையும் அழித்துக் கொண்டார். தேவஸ்தான குழுத் தலைவராக இருந்தபோதுதான் தனது அதிகாரத்தின் கீழே இருந்த இந்து கோயில்களின் கிணறுகள், சாலைகள், குளங்களில் தீண்டாமையைத் தடை செய்து பொதுப் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
  • தாலுக்கா போர்டு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது பதவியேற்பு நிகழ்ச்சியில் ”என் கரங்களில் உள்ள பேனா ஒரு பார்ப்பனருக்குக் கூட உத்தியோகம் வழங்க கையெழுத்திடாது” என்று வெளிப்படையாக சூளுரைத்தார்.
  • இரண்டாவது சுயமரியாதை மாநாட்டில் தலைவராக பெரியார் இவரைத்தான் தேர்வு செய்தார். அதில் அவர் நிகழ்த்திய உரை கருத்தாழமிக்கது. பிறவி ஆதிக்கத்துக்கும் பிராமணியத்திற்கும் பிறப்புரிமை என்பது இயற்கையின் விதி. பிறவி ஆதிக்கம் இயற்கை விதிக்கு எதிரானது. இதற்கான மூலதனம் சுயநலம். ஒரு குறிப்பிட்ட சமூகம் தனக்கான சிறப்பு ஆதிக்கத்தை திணிக்கிறது. இதை எதிர்த்துப் போராட ஒவ்வொரு மனிதருக்கும் பிறப்புரிமை உண்டு. இந்த உரிமைக்கு போராடுவதுதான் சுயமரியாதை இயக்கம் என்று சுயமரியாதை கொள்கைக்கு இலக்கணம் வகுத்தார். 1928-கொட்டாரம்பட்டியில் பெரியார் படத்தைத் திறந்து வைத்து அவர் நிகழ்த்திய உரை தான் இப்போதும் நாம் மேடையில் பேசிக் கொண்டு வருகிறோம்.

கர்ப்ப கிரகத்துக்கு- அய்யர் உத்தரவு

கல்யாணம் செய்வதற்கு - அய்யர் உத்தரவு

புது வீடு போவதற்கு - அய்யர் உத்தரவு

பிள்ளை பிறப்பதற்கு - அய்யர் உத்தரவு

பெயர் சூட்டுவதற்கு - அய்யர் உத்தரவு

இறப்புக்கு - அய்யர் உத்தரவு

மோட்சம் செல்வதற்கு- அய்யர் உத்தரவு

- இப்படி அய்யர்கள் உத்தரவுப்படியே நாம் வாழ்கிறோம் என்று 1928-லேயே அவர் படம் பிடித்துக் காட்டியது வியப்பைத் தருகிறது.

  • இவரது கொள்கைப் பற்று மற்றும் நிர்வாக ஆளுமையைக் கண்ட காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி கட்சி அரசியலுக்கு அழைத்த போது அவர் அளித்த பதில் தான் ஆகச்சிறப்பு. "உங்கள் பூணூலை அகற்றினால் அரசியலுக்கு வருகிறேன்” என்பதுதான் அவரது பதில். நீதிக்கட்சி ஆட்சியில் முனுசாமி முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இணைய அழைப்பு வந்த போது "அரசியலில் நம்பிக்கை இல்லை. சமுதாய இயக்கத்தில் பணியாற்றுவதையே நான் விரும்புகிறேன் என்று மறுத்துவிட்டார்.
  • ஆதிதிராவிடர் உரிமை மாநாடுகளை நடத்தினார். பார்ப்பனர்களை விட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் தான் ஆதி திராவிடர்கள் மீது கொடுமைகளை இழைக்கிறார்கள் என்று தனது சொந்த சமூகத்தையே எதிர்த்தார். ஆதி திராவிடர் பாதுகாப்புக்கு துப்பாக்கி வழங்க வேண்டும் என்றார். தனது 49 வயதில் முடிவெய்தினார். அப்போது ‘குடி அரசு’ பத்திரிக்கையில் பெரியார் தனது கரங்களில் ஒன்று போய்விட்டது என்று எழுதினார். திராவிடர் விடுதலைக் கழகம் மாநாட்டில் நிறைவேற்றிய சுயஜாதி மறுப்பு இயக்கத்துக்கு முன்னோடியாக வழிகாட்டியவர் சிவகங்கை இராமச்சந்திரனார்.

so murugappa copyசீர்திருத்தச் செம்மல் சொ. முருகப்பா (21.08.1893-20.06.1956)

  • காரைக்குடியில் தன வைசிய ஊழியன், குமரன், சண்டமாருதம் இதழ்கள் மூலம் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்பியவர் சொ. முருகப்பா.
  • மத மூடநம்பிக்கைகளை எதிர்த்துத் தலையை மழிக்கும் வழக்கத்திற்கு மாறாகக் கிராப்பு வைத்துக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுத்தார்.
  • கைம்பெண் மறுமணத்தைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்ததுடன், பெரியார் தலைமையில் மரகதவள்ளி அம்மையாரை மறுமணம் செய்து சமூக மாற்றத்திற்கு இருவருமே இணையர்களாக பாடுபட்டார்கள்.

rama subbiah 218சுயமரியாதைச் சுடரொளி- காரைக்குடி இராம.சுப்பையா (14.11.1908-21.05.1997)

  • சுயமரியாதை இயக்கத்தின் தீவிர தொண்டராக விளங்கியவர். பெரியாரின் பகுத்தறிவு, ஜாதி மறுப்பு, சமத்துவக் கொள்கைகளை மக்களிடையே பரப்பியதுடன், சுயமரியாதைத் திருமணங்களையும் முன்னெடுத்தார். இந்தி, வடவர் ஆதிக்க எதிர்ப்பு போராட்டமான கல்லக்குடி இரயில் மறியல் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இவரது புதல்வர்கள் திரைப்பட இயக்குநர் எஸ்.பி. முத்துராமன், திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுயமரியாதை இயக்க வீராங்கனை மஞ்சுளா பாய்

  • தஞ்சை மராட்டிய சரபோஜி மன்னர் குடும்பத்தில் பிறந்து, இளம்வயது கைம்பெண்ணான மஞ்சுளாபாய் அம்மையார், பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தில் இணைந்து தீவிர களப்பணியாற்றினார். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்றார்.
  • வை.சு.சண்முகனாரைச் சீர்திருத்தத் திருமணம் செய்து கொண்ட இவர், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகத்தை கவனித்து வந்தார்.
  • ஜாதி ஒழிப்பு, தேவதாசி ஒழிப்பு மற்றும் பெண் விடுதலைக்காகப் பாடுபட்டதுடன், மூவலூர் ராமாமிர்தம்மாள் போன்ற சமகாலத் தலைவர்களுடனும் இணைந்து தமிழ்நாட்டுச் சமூக சீர்திருத்த வரலாற்றில் முக்கியப் பங்காற்றினார்.

karaikudi parvathiசுயமரியாதை இயக்க வீராங்கனை பார்வதி

  • காரைக்குடியைச் சேர்ந்த சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடி வீராங்கனை பார்வதி அம்மையார், புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி வை.சு.சண்முகனாரின் மகளாவார். சிறுவயது முதலே தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு வளர்ந்த இவர், மாநாடுகளில் கலந்துகொண்டு பெண்களின் கல்வி உரிமை, சொத்துரிமை மற்றும் பகுத்தறிவுக் கொள்கைகள் குறித்துத் தீவிரமாகப் பரப்புரை செய்தவர்.
  • 1935 ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தனது சுயமரியாதைத் திருமணத்தின்போது, "பெண்ணடிமைத்தனத்தின் குறியீடாக உள்ள தாலியைக் கட்டிக்கொள்ள மாட்டேன். ஒருவேளை தாலி கட்டுவதாக இருந்தால், நானும் பதிலுக்கு மாப்பிள்ளைக்குத் தாலி கட்டுவேன்" என்று துணிச்சலாகக் கூறி, தாலி கட்டும் சடங்கை முற்றிலுமாக மறுத்தார்.

வீறுகவியரசர் முடியரசன் (07-10-1920-03.12.1998)

  • mudiarasanகாரைக்குடியில் வாழ்ந்த வீறுகவியரசர் முடியரசனார். தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளையும் சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையும் தன் கவிதைகள் வாயிலாகப் பரப்பிய கவிஞர் ஆவார்.
  • ஜாதி ஒழிப்பு, பகுத்தறிவு, சமத்துவம் மற்றும் பெண்ணுரிமையை முதன்மையாக வைத்துப் பல புரட்சிகரப் படைப்புகளைத் தமிழ்ச் சமூகத்திற்கு வழங்கியவர். தானும் தன் பிள்ளைகளும் சாதி மறுப்புத் திருமணம் செய்து, கொள்கை வாழ்வு வாழ்ந்தவர்.
  • பெரியாரின் சிந்தனைகளைத் தனது கவிதைகளில் ஆழமாக விதைத்து. திராவிட இயக்கக் கவிதையுலகில் அழியாப் புகழ்பெற்றவர்.

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.