amman_321

(சித்திரையையொட்டி கோவை காட்டூரில் உள்ள முத்து மாரியம்மனுக்கு மூன்றரைக் கோடி ரூபாய் நோட்டுகள் மற்றும் 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது)

அங்கீகரிக்கப்படாத ஆடம்பரத்தின்
விரயங்களை
முட்புதரென வளர்த்துக் கொள்கின்றீர்

வெயில் சாட்டையடிக்கும் முதுகுகளில்
பெருகும்
வியர்வை வெள்ளத்தில்
மூழ்கும் வாழ்வின் மீட்பிற்காக
நீளும் கடைசிநேரக் கைகளைக் கூட
புறந்தள்ளிப் போகின்றீர்

அடித்துக் கொல்லும் வறுமையின்
கனத்த தடிகளைத் தகர்த்து
ஒரு துளிர் தளிர்க்க
ஒரு கை நீரள்ளி
ஊற்றத் தயங்குகின்றீர்

கூரைகளற்ற குடிசைகளின்
உணவற்ற பாத்திரங்களில்
நிரம்பியிருக்கும்
பழந்தண்ணீரில் வாழும்
மனித வடிவங்களை
பார்க்கும் கண்ணற்றீர்

பசிப்பாதையில்
நடந்து நடந்து வருத்தமுற்ற
பாதங்களுக்கு
நிழல்தர
கள்ளிச்செடியாகவேணும்
இல்லாமல் போனீர்

துயருரும் மனிதனை விடுத்து
கண்ணில்லா கடவுளுக்கு
எண்ணில்லா காசு தரும் உங்களுக்கு
மனிதர் என்று
பெயருமுண்டோ சொல்லீர்

Comments

1 comment

1
VeeNaSo IPPADIKKU
This is Poem.He is a real Poet.Words are reaches from a kindest heart of a human soul (Manitha manaththilirunthu). I am always an admirer of Yaadhan Athy's Poems.Vaazththukkal.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.