தொடர்புடைய படைப்புகள்

modi with corona maskஅமெரிக்காவின் ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ பத்திரிகை குற்றச்சாட்டு

இந்தியா இன்று சந்திக்கும் அபாயகரமான கொரோனா பேரழிவுக்கு பிரதமர் நரேந்திர மோடியே காரணம் என்று அமெரிக்காவின் புகழ்பெற்ற பத்திரிகையான ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.

புளூமிங்டனில் உள்ள இந்தியானா பல்கலைக்கழக அரசியல் அறிவியல் பேராசிரியரும், அண்மையில் வெளியான ‘இந்தியாவின் தேசிய பாதுகாப்பு’ (The Oxford Handbook of India’s National Security) என்ற நூலின் ஆசிரியருமான சுமித் கங்குலி இந்த கட்டுரையை எழுதியுள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் தற்போதைய கொரோனா தொற்று நெருக்கடி அதிர்ச்சியைத் தருகிறது. கொரோனா தொற்று விகிதம் நாளொன்றுக்கு 3 லட்சத்திற்கு அதிகமாக உள்ளது. மே மாதத்தின் நடுப்பகுதியில் கொரோனா இறப்பானது,

நாளொன்றுக்கு 5 ஆயிரம் என்ற அளவிற்கு உச்சம் அடையும் என்று தொற்றுநோயியல் நிபுணர்கள் நம்புகின்றனர். உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி மையமாக இந்தியா இருக்கிறது. ஆனாலும் இந்தியா தனது1.3 பில்லியன் மக்களில் 2 சதவிகிதத்திற்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது.

ஆன்டிவைரல் மருந்தான ரெம்டெசிவிருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் அந்த மருந்தை இரவல் கேட்கும் நிலைக்கு கொண்டுபோய் மக்களை தள்ளிவிட்டுள்ளது.

மருத்துவமனைகளில் படுக்கை கூட கிடைக்காமல் மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் சுகாதாரப் பாதுகாப்பு உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை குறைபாடுகள் நன்கு அறியப் பட்டவையே. என்றாலும் கடுமையான பொதுமுடக்க நடவடிக்கைகள் மூலம், 2021 ஜனவரி மாதத்திற்குள் கொரோனா முதல் அலைகளை நாடு கட்டுப்படுத்தியது. 2020-இல் அமல் படுத்தப்பட்ட 21 நாள் பொதுமுடக்கம் குறைந்த காலத்திற்கு வைரஸ் பரவுவதைத் தடுத்தது.

ஆனால், இந்த கால அவகாசத்தை, முற்றிலுமாக கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான திட்டமிடல்களுக்கு பிரதமர் மோடி பயன்படுத்தவில்லை. தனிப்பட்ட பாதுகாப்புக் கருவிகளை உருவாக்குவதற்கும், தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கும் அல்லது சோதனைகளை அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, வழக்கம்போல தனது வேலையை ஆரம்பித்தார்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை கேலி செய்வது, அரசியல் எதிர்ப்பாளர்களை துன்புறுத்துவது மற்றும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் இந்தியா வைரஸை ஒழித்து விட்டதாக தம்பட்டம் அடித்து, தனது பராக்கிரமத்தை வெளிப்படுத்த முயன்றார்.

அதுமட்டுமல்ல, 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில், மோடி தன்னை முழுமையாக பிரச்சாரத்தில் ஈடுபடுத்திக் கொண்டார். கொரோனா அபாயம் குறித்த தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

கங்கையில் உள்ள ஹரித்துவார் நகரில் இந்து மத விழாவை (கும்பமேளா) நடத்த மோடி அனுமதித்தார். கும்பமேளா வழக்கமாக மூன்று மாதங்களுக்கு நீடிக்கும் - சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான யாத்ரீகர்களை ஈர்க்கும் திருவிழா இது என்ற நிலையில், கொரோனா அபாயத்தையும் தாண்டி, அந்த கும்பமேளாவை மோடி அனுமதிக்கிறார் என்றால், அதற்கான அரசியல் காரணம் வெளிப்படையானது.

இது இந்து நம்பிக்கையாளர்களின் வாக்குகளை பிரதமர் மோடிக்கும் அவரது கட்சிக்கும் கிடைப்பதை உத்தரவாதம் செய்யும் என்பதுதான். மோடியைப் பொறுத்தவரை, நாட்டு மக்களின் நல்வாழ்வை விட, அவரது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல், அரசியல் நாடகம் மற்றும் தேர்தல் வெற்றிகள்தான் முக்கியமானவை.

மோடியும் அவரது அரசாங்கமும் இந்தியாவின் குடிமக்கள் மீது அக்கறை கொண்டிருந்திருந்தால், அவர்கள் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களையும் திருவிழாவையும் மக்களுக்கு தடுப்பூசி போடுவதற்கான சந்தர்ப்பங்களாகப் பயன்படுத்தி இருக்கலாம். ஆனால், அவர்களின் மகிழ்ச்சியற்ற தேசிய தடுப்பூசி இயக்கம், இன்று மக்களைப் பயமுறுத்துகிறது.

சில உள்ளூர் கட்சித் தலைவர்கள் யோகா பயிற்சி மற்றும் பசுமாட்டின் சிறுநீரை கிருமிநாசினியாகப் பயன்படுத்துவது வைரஸைத் தடுக்கும் என்று பரிந்துரைத்தனர்.

பாஜகவின் வெளியுறவுத் துறையின் தலைவர் விஜய் சவுதைவாலே, பசுவின் சிறுநீர் மற்றும் மஞ்சளை உட்கொள்வதை ஊக்குவித்தார். தொழில்துறை நகரமான துர்காபூரில் ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பாஜக மேற்கு வங்கத் தலைவர் திலீப் கோஷூம் பசுவின் சிறுநீரைப் பரிந்துரைத்தார்.

தொற்றுநோயை கையாளும் விவகாரத்தைப் போலவே, இதற்கு முன்பு போதிய முன்னெச்சரிக்கை இல்லாமல் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்க முடிவுகளை மோடி மேற்கொண்டார். இது தொடர்பாக சம்பந்தப் பட்ட வல்லுநர்கள் யாருடனும் அவர் ஆலோசிக்கவில்லை. இதன் விளைவாக நாட்டில் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது.

- விடுதலை இராசேந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.