கனத்துக் கொண்டேயிருக்கிறது
கழுத்தில் கட்டிய தாலியும்
காலில் பூட்டிய மிஞ்சும்

சாதி மத வருண வேர்களைத்தேடி
சாதகப் பொருத்தம் பல பார்த்து
நல்ல பெண் சான்றிதழ் பெற்று
நகைநட்டு சீர்வரிசை பேசி தன்னை
ஒழுக்கசீலனாய் முகம்காட்டி
மணம் முடித்துப் போனான்- அன்று

பற்றிக்கொள்ளும் தீயின் நாவும்
சீழ்பிடித்த வக்கிரப் பேச்சுமாய்
சந்தேகச்சூடு உடல் முழுக்க இழுத்தபடி
அவளின் தேகம் இரணத்தின் குறியீடுகளாய்
அச்சத்தின் வெளியில் அசைவாடியது இன்று

கட்டாயத்தின் பேரில்
படுத்துறங்கிய எத்தனையோ இரவுகளில்
செத்து செத்து பிழைத்திருப்பாள்
விசம்தடவிய அவனின் நாக்கு
தசைவெறியோடு தீண்டிய போதெல்லாம்
தலைவிதியேயென மரணித்துப் போயிருப்பாள்

எத்தனை நாள் காத்திருந்து
சம்மதம் பெற்றார்களோ தெரியவில்லை

அம்பள ஆயிரம் குட்டியசுவரு தாண்டுவான்
ஆயிரம் காலத்து ஆணாதிக்கக் குரல்களில்
அமைதியின்றி தவிக்கிறது
அவளின் ஒழுக்கமும் தன்னம்பிக்கையும்

வீதியெல்லாம் காமகளியாட்டமாடும்
விலைமகனுக்கு மனைவியாய் வாழ
இருபதாண்டுகள் அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறாள்
இலக்கண வரையறையின் கோரப்பிடிக்குள்

ஆண்மைய உறைக்குள்
பதப்படுத்தி வைக்கப்பட்ட அவளின் பெண்மை
தகனம் செய்யப்படலாம் எப்பொழுதேனும்
ஓவ்வொரு ஆண்மைய வெளிக்குள்ளும்
வளைந்து கொடுத்து
வலிந்து சுமந்த வலிகள் அத்துணையும்
பெண்ணுக்குப் புதிதல்ல
பழக்கப்படுத்தப்பட்டவைதான்

- நீதிமலர், வழக்கறிஞர் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Comments

5 comments

5
kamalini
இது வலிகலின் வரி. மவுனத்தின் கன்னீர்
pandian
இருபதாண்டுகள் கன்னியம் தவறாமல் பாதுகாத்து வளர்க்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணையும் திருமணம் என்கிற பந்தத்தில் கேள்விக்குறியாககி விடுகின்றனர். குடும்ப வாழ்க்கையில் பெரும்பாலான பெண்கள் பாலியல் தொழிலாளி போல் வாழ்கின்ற துயரங்களின் கோபங்களும் வேதனைகளும் வலியின் உச்சத்திலிருந்து கவிதையாக வெளிப்பட்டுள்ளது.பெண்ணின் துயரம் பெண்ணுக்குத் தான் தெரியும் போலும்.
எம்ஸியே.பரீத்
அழகான கவிதை நீண்ட நாட்களின் பின் ஒரு கவிதை படிக்கக் கிடைத்த திருப்தி
elangovan
கவிதை என்றாலே பெரும்பாலும் காதலைத்தான் சொல்லிவிட்டுப் போகிறது பெரும்பாலான கவிஞர்களின் படைப்புகள். ஆனால் பாதிக்கப்பட்டவர்களின் அலுகுரலை பதிவு செய்வத ஒரு சிலரின் படைப்புகள். அந்த வரிசையில் நீதிமலரின் கவிதை பதிவு செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வலியின் அழகியல் கொண்ட கவிதை. தோடர்ந்து பதிவு செய்யுங்கள் உங்களது படைப்புகளை.
bala
அதனால் தான் இவ்வாறு கேள்வி எழுப்புகிறேன். உங்களது கவிதையின் உள்ளடக்கம் என் தங்கையின் வாழ்விலே நடந்திருக்கிறது. சமகாலச்சூழலில் அனுபவத்திலிருந்து தான் பெரும்பாலான கவிஞர்கள் கவிதை எழுதுகின்றனர். தோழரே நீங்கள் திருமணமானவரா? இல்லையென்றால் கண்டிப்பாக உங்களை நான் வாழ்த்தியாக வேண்டும். கண்டிப்பாக எனக்கான பதிலை பதிவு செய்யுங்கள்.

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.