கருநாடக பா.ஜ.க. - குடுமி பிடிச் சண்டையில் முதலமைச்சர்களை மாற்றிக் கொண்டே இருக்கிறது. இப்போது முதல்வராக வந்திருப்பவர் ஜெகதீஷ் ஷட்டர். இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகர் என்று ஒரு ஆங்கில நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. அந்த ‘இந்துத்துவ நாத்திகர்’ ஆட்சி, தமது மாநிலத்தில் நிலவும் வறட்சியைப் போக்க மாநிலம் முழுதும் உள்ள 34,000 கோயில்களிலும் ‘வருண ஜெபம்’ நடத்த உத்தரவு போட்டுள்ளது. பார்ப்பனர்களைக் கொண்டு பூஜைகளையும், ஹோமங்களையும் நடத்தப் போகிறதாம். இதற்காக அரசு ஒதுக்கியுள்ள தொகை ரூ.17 கோடி. வறட்சி நிவாரணத்துக்காக நிதி கேட்டு மத்திய அரசு கதவுகளைத் தட்டிக் கொண்டே 17 கோடியை வீண்விரயமாக்குகிறது பா.ஜ.க. ஆட்சி. அரசின் இந்த நடவடிக்கையை சட்டமன்றத்தில் ஜனதா தளம் (எஸ்) கட்சியைச் சார்ந்த சி.எஸ்.புட்டே கவுடா, மகாதேவ பிரசாத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆனால், துறை அமைச்சராக உள்ள கோட்டா சீனிவாஸ் பூசாரி என்பவர், “நான கடவுளை நம்புகிறேன். வருண பகவானை வேண்டினால் மழை வரும். இந்த முடிவை அரசு திரும்பப் பெறாது” என்று கூறியுள்ளார். ‘மனுதர்ம’ம்தான் பா.ஜ.க வழியாக ஆட்சி நடத்துகிறது!
வருண ஜபத்துக்கு சக்தி இருக்குமென்றால் ராஜஸ்தான் பாலைவங்களில் மழையைத் தருவித்து சோலைவனங்களாக மாற்ற வேண்டியது தானே. இந்தியாவில் மட்டுமே வருண ஜபம் நடத்தும் இவர்கள் அமெரிக்க ஆப்பிரிக்க இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் வருண ஜபம் நடத்த வேண்டியது தானே. அந்நியச் செலவாணி நம் நாட்டுக்கு கிடைக்குமே.மென் பொருள் இஞ்சினீர்கள் ஈட்டும் டாலர்களை விட நம் நாட்டுக்கு இவர்கள் சம்பாதிக்கலாமே. அந்த நாட்டிலே கேள்வி கேட்பான்.மழை தருவிக்காவிட்டால் விரட்டி அடிப்பான். துண்டைக் காணோம் துணியை காணோம் என்று ஓட வேண்டியது தான்.நம் நாட்டிலே தான் இளிச்ச வாயர்கள் அதிகம். பணத்தை தண்டமாக அழுவார்கள். இவர்கள் மந்திரத்துக்கு சக்தி இருக்குமென்றால் உலகிலுள்ள ஏதேனும் ஒரு பாலைவனத்தில் உட்கார்ந்து ஒரு முப்பது நாள் ஜபம் செய்யட்டும். காஞ்சு கருவாடு ஆக வேண்டியது தான்.