தொடர்புடைய படைப்புகள்

 

கொளத்தூர் மணி தலைமையில் அன்னூரில் ஆயிரம் குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம்

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன்பாளையம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம்பாளையம் ஆகிய கிராமங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள கிராமங்களிலும் பல நூற்றாண்டுகளாக வெவ்வேறு வடிவங்களில் தீண்டாமை வன்கொடுமைகள் தொடர்ந்து நிலவிவருகின்றன.

அண்மைக்காலங்களில் பொதுக்குழாயில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்கத்தடை, செல்போன் பேசத் தடை, இரட்டைக்குவளைமுறை, சலூன்களில் தாழ்த்தப்பட்டோருக்கு முடிவெட்டத்தடை, அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட பொதுச்சுடுகாட்டில் தாழ்த்தப்பட்டோரைப் புதைக்கத்தடை, மோட்டார்பைக் ஓட்டத்தடை என பல்வேறு தீண்டாமை வன்கொடுமைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. பெரியார் திராவிடர் கழகமும் தொடர்ந்து இவற்றுக்கு எதிராகப் போராடிவருகிறது.

கடந்த 12.06.11 அன்று மாலை 6.00 மணியளவில் அன்னூர் அருகேயுள்ள குருக்கிளையாம்பாளையம் என்ற கிராமத்தில் பொதுக்குழாயில் குடிநீர் பிடிக்கச்சென்ற வசந்தகுமார் என்ற மாணவனை ஆதிக்கஜாதியைச் சேர்ந்த மூன்று பெண்களும் தாமோதரன் என்பவரும் “சக்கிலியர்கள் இங்கு தண்ணீர் பிடிக்க வரக்கூடாது” என மிரட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர். செய்தியைக் கேள்விப்பட்ட உடனேயே மாலை 7.00 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த அன்னூர் ஈஸ்வரன், ஜோதிராம் உட்பட நூற்றுக்கணக்கான தோழர்களும் பொதுமக்களும் வன்கொடுமை நடந்த குருக்கிளையாம்பாளையத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் பெரியார் திராவிடர் கழகத்தின் மாவட்டப்பொறுப்பாளர்கள் வெள்ளமடை நாகராசு, மேட்டுப்பாளையம் சந்திரசேகர், தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் வழக்கறிஞர் பன்னீர்செல்வம் மற்றும் தோழமை இயக்கங்களைச் சேர்ந்த தோழர்கள் அன்னூர் காவல்நிலையத்தில் உரிய அதிகாரிகளைச் சந்தித்து தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின்படி வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தினர். அதன்பிறகு இரவு 1.00 மணிக்கு மேல்தான் எஃப்.ஐ.ஆ ரே போடப்பட்டது.

13.06.11 காலை கோவை மாவட்ட ஆட்சியரிடம் பெரியார் திராவிடர் கழகம் சார்பில் குறுக்கிளை யாம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகள் குறித்து புகார் விண்ணப்பமும் கொடுக்கப்பட்டுள்ளது.

தலித் மாணவனைத் தாக்கிய ஆதிக்கஜாதியினர் இன்றுவரை கைது செய்யப்படவில்லை. தண்ணீர் தடையும் நீக்கப்படவில்லை. இதுபற்றி நாளிதழ்களில் வெளியான செய்திகளை அறிந்து அதனடிப்படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இச்சிக்கலைக் கையில் எடுத்திருக்கிறது. தமிழக அரசுக்கு இதுகுறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலித் சிறுவன் அவமானப்படுத்தப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன? இச்சம்பவம் குறித்து குற்ற வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதா? பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நிவாரணம் வழங்கப்பட்டதா? இதுபோன்ற தீண்டாமை வன்கொடுமைகளுக்கு எதிராக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

என்பவை உள்ளிட்ட பல கேள்விகளை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வினவியுள்ளது.

கடந்த 21.05.11 அன்று அன்னூரில் பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமக்கிருட்டிணன் தலைமையில் அன்னூர் ஒன்றியத்தில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளைக் கண்டித்து ஒரு கண்டன ஆர்ப்பாட்டடம் நடைபெற்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் அன்னூர் ஒன்றியம் முழுவதிலும் உள்ள கிராமங்களில் என்னென்ன வகையான வன்கொடுமைகள் நடைமுறையில் உள்ளன என்பவை குறித்து விளக்கமான புள்ளிவிபரங்களுடன் கூடிய துண்டறிக்கையையும் தோழர்கள் விநியோகித் தனர். அதில் குருக்கிளையாம்பாளையத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடிநீர் பிடிக்க தடை உள்ளது என்ற செய்தியையும் குறிப்பிட்டுள்ளனர். இப்படிப்பட்ட வன்கொடுமைகளைக் கண்டுபிடித்துக் களைய வேண்டியது காவல்துறையின் கடமையாகும். ஆனால் பெரியார் திராவிடர் கழகம் கண்டறிந்து பட்டியல் போட்டு அதைத் துண்டறிக்கையாக விநியோகித்து ஆர்ப்பாட்டமே நடத்தியிருந்தும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. 21.05.11 ஆர்ப்பாட்டத்திற்குப் பிறகு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் குருக்கிளையாம்பாளையத்தில் தலித் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் நடந்தே இருக்காது.

இச்சூழலில் பெரியார் திராவிடர் கழகம் இதை முக்கியப் பிரச்சனையாக எடுத்துக்கொண்டுள்ளது. வரும் 27.06.11 திங்களன்று காலை 10 மணியளவில் குருக்கிளையாம்பாளையத்தில் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 1000 குடங்களுடன் தாழ்த்தப்பட்டோர் தண்ணீர் பிடிக்கும் போராட்டம் நடைபெற உள்ளது. பொதுச்செயலாளர்கள் கோவை கு.இராமக்கிருட்டிணன், விடுதலை இராசேந்திரன், வழக்கறிஞர் ப.பா.மோகன், நாடுகடந்த தமிழீழ அரசு தோழமை மய்யத்தின் பேராசிரியர் சரசுவதி ஆகியோர் உட்பட பல்வேறு தோழமை இயக்கங்களும் இந்த மனிதஉரிமைப் போராட்டத்தில் பங்கேற்க உள்ளன. அனைத்து முற்போக்குஇயக்கங்களும், தோழர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் அவசியம் இப்போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.

“மனிதனுக்கு மனிதன் தொடக்கூடாது; கண்ணில் படக்கூடாது; தெருவில் நடக்கக் கூடாது; கோயிலுக்குள் போகக்கூடாது; குளத்தில் தண்ணீர் எடுக்கக் கூடாது என்கின்றவை போன்ற கொள்கைகள் தாண்டவமாடும் ஒரு நாட்டை பூகம்பத்தால் அழிக்காமலோ, எரிமலையின் நெருப்புக் குழம்பால் எரிக்காமலோ; சமுத்திரத்தால் மூழ்கச் செய்யாமலோ, பூமிப்பிளவில் அமிழச் செய்யாமலோ விட்டிருப்பதைப் பார்த்த பிறகுங் கூட கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும், அவர் சர்வ தயாபரர் என்றும் யாராவது சொல்ல வந்தால் அவர்களை என்னவென்று நினைப்பது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இம்மாதிரி கொடுமைப்படுத்தி தாழ்த்தப்பட்ட ஒரு பெரிய மக்கள் சமூகம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொறுமையோடும், சாந்தத்தோடும், அகிம்சாத் தர்மத்தோடும் இருக்கவேண்டுமென்று விரும்புகின்றீர்கள் என்பதும் இம் மாதிரியான மக்கள் இன்னமும் ஒரு நாட்டில் இருந்து கொண்டு உயிர் வாழ்வதைவிட அவர்கள் இம்முயற்சியில் உயிர் துறப்பதை உண்மையிலேயே தப்பு என்று யாராவது நினைக்கின்றீர்களா என்பதும் எனக்கு விளங்கவில்லை. “

பெரியார் - குடி அரசு - 02.12.1928

Comments

2 comments

2
நண்பர்கள்
சகோதரர்களே, ஒட்டர் பாளையம் பஞ்சாயத்து குக்கிராமமான குருக்களையம் பாளையம் கிராமத்தில் உள்ள எங்களுக்கும் கரேகவுண்டம் பஞ்சாயத்து குக்கிராமான நல்லி செட்டி பாளையம் கிராம தலித் மக்களுக்கும் காலம் காலமாக நல்லுறவு இருந்து வருகிறது இதை யாரும் மறுக்க முடியாது...... நீங்கள் எழுதியது போல் அங்கு எந்த தீண்டாமையும் நடக்கவில்லை..... கரே கவுண்டம் பாளையம் பஞ்சாயத்து நல்லி செட்டி பாளையம் கிராமத்தில் 10 மேற்பட்ட பொது குழாயில் தினமும் தண்ணீர் வருகிறது..... மேலும் அங்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அல்லது அவர்கள் எப்போது வேண்டுமானாலும் தாராளமாக எங்கள் கிராமத்தில் தண்ணீர் எடுக்கலாம்... இதில் எங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..... உங்களை வருக வருக என வரவேற்க எங்களுக்கு உரிமை உண்டு..... ஏனென்றால் நாங்கள் சிறுவயதில் அந்த நண்பர்களுடன் விளையாடிய நாட்கள் மற்றும் பழகிய நாட்களை மறக்க முடியுமா...... நாங்களும் அதே ஊரில் பிறந்தவர்கள் தான்..... நாங்கள் அவர்களை புறக்கணிக்க மாட்டோம்....... இணைந்து இருப்போம்.....
Kurukkalayam palayam
மதிபிற்குரிய நீதியரசர், அன்னூர் காவல் துறை அதிகாரி, கோவை மாவட்ட கலக்டர், மற்றும் தமிழக அரசு அவர்களுக்கு, கோவை மாவட்டம், அன்னூர் ஒன்றியம், ஒட்டர் பாளையம் பஞ்சாயத்து குக்கிராம குருக்களையம் பாளையம் ஊர் பொது மக்கள் சார்பாக எங்களது விளக்கத்தை தங்கள் முன் சமர்ப்பிக்கிறோம். 12 .06 . 2011 ஞாயிற்று கிழமை இரவு 7 மணி அளவில் காரேகவுண்டம் பாளையம் பஞ்சாயத்தில் உள்ள நல்லிசெட்டி பாளையம் குக்கிராமத்தை சேர்ந்த தலித் சமுதாயத்தினர் சிலர் எங்கள் குருக்களையம் பாளையம் கிராமத்தில் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துள்ளனர் இதை கிராமத்தில் உள்ள பெண்கள் அவர்களை பார்த்து உங்கள் கிராமத்திலும் தடையின்றி 4 மேற்பட்ட பொது குழாய்களில் தண்ணீர் வருகிறதே இப்படி நீங்கள் தண்ணீர் பிடித்தால், எங்கள் ஊரில் உள்ள ஒரே குழாயில் தான் தண்ணீர் வருகிறது இதனால் எங்களுக்கு கால தாமதம் மற்றும் தண்ணீர் தட்டுபாடு ஏற்படும் அதனால் நீங்கள் தயவு செய்து உங்கள் பஞ்சாயத்து மூலமாக வரும் தண்ணீரை எடுத்துகொள்ளுங்கள் என்று குருக்களையம் பாளையம் கிராமத்தை சேர்ந்த பெண்கள் மட்டும் தாழ்மையுடன் தலித் சமூகத்தை சேர்ந்த அந்த நபர்களிடம் வேண்டி கொண்டனர்.... மேலும் தலித் சமுதாய மக்கள் தங்கள் பஞ்சாயத்தில் தினமும் 4 மேற்பட்ட குடிநீர் குழாய்களில் தடையின்றி மேலும் வறட்சியே இல்லாமல் தண்ணீர் பிடிக்கின்றனர் இதை காரேகவுண்டம் பாளையம் பஞ்சாயத்து தலைவர் மற்றும் அந்த ஊர் பொதுமக்களும் உறுதி செய்திருக்கிறனர். அப்படியிருந்தபோதும் அந்த குறிப்பிட்ட மூன்று நபர்களும் தங்கள் சமூகத்தை சேர்ந்த ஆண் பெண் 100 மேற்பட்டவர்களை அழைத்து வந்து எங்கள் சமூகத்தை சேர்ந்த தாமோதிரன் என்பவரை (விபத்தில் தன் மகனை இழந்து வாடும், மேலும் கறிக்கடைக்கு கூலி வேலைசெய்யும் ஏழை) அவர் குடி போதையில் அருகில் இருந்த சைக்கிளை தள்ளிவிட்டார் என்ற காரணத்திற்க்காக தலித் சமூகத்தை சேர்ந்த மூன்று பெண்கள் தாமோதிரன் என்பவரை செருப்பால் அடித்து விரட்டி மேலும் போலீசார் கண் எதிரிலேயே அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, அடித்து உதைத்து அவர் மேல் காவல் துறையில் புகார் கொடுத்து நள்ளிரவு 2 மணிக்கு அவரை கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளார்கள்... பாவம் மகனை இழந்து வாடும் ஒரு அப்பாவி குடிபோதையில் சைக்கிளை தள்ளிவிட்ட காரணத்திற்க்காக இப்போது சிறையில் உள்ளார்... குருக்களையம் பாளையம் கிராம மக்களும் மைனாரிட்டி இனத்தை சேர்ந்த சமூகத்தினர்.... நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம், எங்கள் கிராமத்திலும் தலித், நாவிதர், வலையர், பள்ளர் போன்ற இன மக்களும் எந்த பிரச்சினையும் இல்லாமல் சமமாக வாழ்கிறோம்... ஒருவருக்கொருவர் அன்போடு இனைந்து வாழ்கிறோம், ஏன் கடந்த ஏப்ரல் மாதம் குருக்களையம் பாளையம் கோவில் திருவிழா நடந்த போது 25000 மேற்பட்ட கிராம மக்கள் திரண்டனர் அப்போது நல்லிசெட்டி பாளையம் தலித் மக்கள் அந்த திருவிழாவை சிறப்பாக நடத்த உதவி செய்தனர்... நல்லிசெட்டி பாளையம் தலித் மக்கள் பெரும்பாலும் எங்களுடன் நல்லுறவு வைத்துள்ளனர்... ஒரு சில இளைஞர்கள் தங்களை முன்னிலை படுத்தி கொள்ள வேண்டுமென்றே இதை அரசியல் ஆக்கி பெரிது படுத்தியுள்ளனர்..... இதனால் காவல் துரையின் நேரம் மற்றும் அரசின் நேரத்தை வீணடிதுள்ளனர்.... நாங்கள் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள் படித்து கலக்டர், டாக்டர், காவல்துறை அதிகாரிகளாக வந்து நமது தமிழகத்தை முன்னேற்ற எப்போதும் உறுதுணையாக இருப்போம்.... அவர்கள் படிப்பிற்கும் உதவுவோம்... அவர்களுடன் எப்போதும் நல்லுறவாக இருப்போம்..... ஜாதி சண்டை வராமல் நாங்கள் நடந்துகொள்வோம்... ஆனால் ஒரு சிலர் அரசியியல் ஆதாயம் தேட எங்களை பலியாக்க வேண்டாம் என்று தாழ்மையுடன் வேண்டிகொள்கிறோம்.... கணம், தேசிய மனித உரிமை ஆணைய நீதியரசர் இந்த விளக்கத்தை ஏற்று கொள்ளவார்கள் என்று நம்ம்புகிறோம்... மேலும் திறமையாக வழிநடத்தும் தமிழக அரசுக்கு சிரமம் கொடுக்காமல், தமிழ் நாடு மக்களுக்கு நல்லது செய்ய நாங்கள் இந்த விளக்கத்தை கொடுக்கிறோம்.... (குறிப்பு.... தலித் மக்கள் முடி வெட்டி கொள்ள, அல்லது செல் போன் கிராமத்தினர் தடை விதிக்க வில்லை.... ஏனென்றால் ஒருவர் தனிமனித உரிமையில் தலையிட எங்கள் கிராம மக்கள் விரும்ப மாட்டார்கள்.... நாங்கள் சட்டத்தை மதிக்கிறோம்..... ) தவறு செய்து விட்டு அதை அரசியல் ஆதாயம் தேடுவர்களுக்கு சமூக உதவி கிடைக்கிறது.... பத்திரிக்கைகளும் இதை விசாரித்து எழுதவில்லை..... இந்த பிரச்சனையில் இதுதான் உண்மை.....

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.