‘காஷ்மீரை எந்த நாட்டுடன் சேர்ப்பது என்ற இறுதி முடிவை மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தி பின்னர் பார்த்துக் கொள்வோம்’ என்று அன்றைய இந்திய கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் கூறிய யோசனையை வாக்குறுதியாகவே அள்ளிக்கொடுத்த இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு தான் உதிர்த்த வார்த்தைகள் எல்லாம் வெறும் ஜாலங்கள் தான் என்பதை அந்த மக்களுக்கு உணர்த்திய தருணம் இந்திய ‘சனநாயகம்’ அதன் அர்த்தத்தை இழந்து போனது. இந்திய அரசிடமிருந்து நீதியை எதிர்நோக்கி ஒரு -தங்களின் சுயநிர்ணய உரிமைக்காக இன்றளவும் போராடிக் கொண்டிருக்கிற காஷ்மீரத்தில் மனித உரிமைகள் உச்சபட்சமாய் அத்துமீறப்படுவது தொடர்கதையாகவே இருக்கிறது. இந்த மீறல்களை எல்லாம் ஊடகங்கள் வழி ‘பத்திச்செய்திகளாக’ அறிகிறபோது எளிதாகவே அதைக் கடந்து விடுகிற நம் உணர்வுகள் அதே மீறல்களை ‘காஷ்மீர்: என்ன நடக்குது அங்கே’ நூல்வழி அறிகையில் அரண்டு போகிறது. காஷ்மீரத்து மக்களின் குரலாகவே நம்முன் ஒலிக்கின்ற வகையில் இந்த உணர்வெழுப்பலை இந்நூல் சாத்தியமாக்குகிறது.

கரிசனமுள்ள குடிமக்கள் குழுவின் சார்பாக சென்ற காஷ்மீர் பயணத்தில் தான் கண்ட உண்மைகளை எடுத்துக் கூறியிருக்கிற பேரா. அ. மார்க்ஸ் காஷ்மீர் மக்களின் உணர்வுகளை- உரிமைகளை பாதிக்கிற மூன்று விஷயங்கள் குறித்து நூலில் விரிவாகப் பேசியிருக்கிறார். 1. இந்திய அரச படைகளின் அராஜகம் 2. இந்துத்துவத்தின் பாசிசம் 3. தீவிரவாதத்தின் ஆயுதகலாசாரம்.

இவைகளின் கண்மூடித்தனமான அட்டூழியங்களால் காஷ்மீர் மக்களின் வாழ்வில் வந்திருக்கிற அவலங்களைச் சொல்லியிருப்பதோடு, அரச வன்முறை, - இந்துத்துவம், - தீவிரவாதம் அனைத்தும் ஒன்றோடொன்று பின்னிக் கிடப்பதையும் வரலாற்றுப் பூர்வமாய் விளக்கியிருக்கிறார்.

பயங்கரவாதிகளிடமிருந்து காஷ்மீரைக் காப் பதற்குத்தான் எங்கள் படைகளை நிறுத்தியுள்ளோம் என்று கூசாமல் சொல்லித்திரியும் இந்திய அரசை தோலுரித்துக் காட்டியிருக்கிற பேராசிரியரின் இந்த வரிகளுக்கு சாட்சியாய் நமது முன்பாக வீழ்ந்து கிடக்கிறது ஷோபியானில் காவல் படையினரால் பாலியல் வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட இரண்டு இளம் பெண்களின் உடல்கள்.

இந்திய அரசபடைகளால் மட்டுமின்றி, மக்களின் எண்ணங்களை கணக்கிலெடுக்காமல் கொள்கைக்காக ஆயுதம் ஏந்திய தீவிரவாத அமைப்புகளாலும், இத்தகைய இயக்கங்களிலிருந்து பிரிந்து சென்று இராணுவப்படைகளோடு கைகோர்த்த ‘இக்வானி ஓடுகாலிகளாலும்’ மக்கள் அடைகிற பெருந்துன்பங்களை எடுத்துச் சொல்கிற அதே வேளையில் இந்தத் தீவிரவாதத்தின் தொடக்கம் குறித்து விளக்கப்பட்டிருப்பதும் நாம் கவனிக்¢க வேண்டிய ஒன்று. ‘சனநாயக நாடு’ என்று பெருமையடித்துக் கொள்ளும் இந்திய அரசு தனது கொடுங்கரங்களால் காஷ்மீர் மக்களின் வாழ்வை இப்படி பல வழிகளிலும் இன்று வரை புரட்டிப் போடுவதை எதிர்த்து ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசும்’ தனக்கேயுரிய துணிவோடு இந்நூலிலும் குரலை உயர்த்தியிருக்கிறார் பேரா. அ. மார்க்ஸ்.

‘ஒரு மாலிக்தான் 150 ஆண்டுகட்கு முன்பு அமர்நாத் பனி லிங்கத்தைக் கண்டுபிடித்தவர். அனந்த்நாக்கைத் தாண்டியுள்ள ‘கிளேசியர்’ பகுதியில் ஒரு குகைக்குள் இருந்த அந்தப் பனி வடிவம் ‘லிங்க’த்தைப் போலிருந்ததால், உருவ வழிபாட்டில் நம்பிக்கை இல்லாதவராயினும் அந்த மாலிக் அந்தச் செய்தியை தூரத்தில் இருந்த இந்துச் சகோதரர்களிடம் பகிர்ந்து கொண்டார். அந்தப் பகுதியிலிருந்து சுமார் 50 க¤.மீ தொலைவு வரை யாரும் இந்துக்கள் குடி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது’’

அமர்நாத் பிரச்சனையில் இந்துத்துவ வாதிகளால் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்ட போதும், ‘அவர்கள் எம் விருந்தாளிகள் அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க மாட்டோம் ’’ என்று கூறி யாத்திரைக்கு வந்த இந்துக்களுக்கு பல்வேறு உதவி களையும் செய்த அந்தச் சகோதரர்களின் அன்புள்ளத்தையும் எடுத்துக்காட்டி நம்மை நெகிழச் செய்திருக்கிறார் பேராசிரியர்.

ஆகச் சிறந்த களஆய்வு என்பது இனவரைவியல் கூறுகளை தவிர்க்க இயலாமல் வெளிக்காட்டும்¢ அந்த வகையில் காஷ்மீர் மக்களின் இனவரையியல் கூறுகள் நூலில் வெளிப்பட்டிருப்பதும் குறிப்பிட வேண்டிய ஒன்று.

‘மீண்டும் என் கோப்பையை பிலால் நிரப்ப முன்வந்தபோது வேண்டாம் எனத் தடுத்தேன். கீலானி சொன்னார்: கோப்பை காலியாக காலியாக அதை நிரப்புவது எங்கள் பண்பாடு. பன்னிரண்டு முறை அவ்வாறு ஊற்றிய பின்புதான் நீங்கள் வேண்டாமென்று சொல்லலாம்.’’

மக்களின் சுதந்திர வேட்கையை எல்லைக் கோடுகளின் ஒற்றை வரியாய் சுருக்கிப் பார்க்கிற அரசு அதிகாரத்தை எதிர்த்து, தமது நீதிகளுக் காய் வன்முறைகளற்றுப் போராடுகிற காஷ்மீர் மக்களின் பக்கம் நாமும் நிற்க வேண்டியதன் நியாயப்பாட்டை நூலின் வழி உணர்த்தியிருப்பதற்காக மட்டு மல்லாமல் இன்னுமொரு முக்கிய வ¤ஷயத்திற்காகவும் பேராசிரியருக்கு நன்றி சொல்ல வேண்டி இருக்கிறது. அது:நூலில் நேர்ந்திருக்கிற தகவல் பிழையையும் சொல்லியாக வேண்டும். நேருவுக்கும் ஷேக் அப்துல்லாவிற்கும் இடையிலான டெல்லி ஒப்பந்தம் 1952 ஜூலை 24_இல் கையெழுத்தானது. அதன்பிறகு 1953, ஆகஸ்ட் 8_இல் ஷேக் அப்துல்லா கைது செய்யப்பட்டு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இரண்டு நிகழ்விற்கும் உள்ள கால இடைவெளி ஒரு வருடம், சில நாட்கள். ஆனால் நூலில் டெல்லி ஒப்பந்தம் கையெழுத்தான சரியாக ஒரு மாதத்தில் அப்துல்லா வீட்டுக்காவலில் வைக்கப்பட்டதாக காலம் தவறாக குறிக்கப்பட்டுள்ளது.

மேலும், 1953 ஆகஸ்ட் 28 அன்று ஷேக் அப்துல்லாவிற்கு மதச்சாயம் பூசி நேரு கடுமையான கடிதம் ஒன்றை எழுதியதாகவும், இதற்கு அடுத்த நாள் (ஜுன் 29, 1953) மே.வ. முதல்வர் பி.சி.ராய்க்கு எழுதிய ஒரு கடிதம் குறிப்பிடத்தக்கது என்றும் கூறப்பட்டுள்ளது. மாதங்களை ஒப்பிட்டால் பி.சி.ராய்க்கு எழுதியது தான் முதலாவது கடிதமாகத் தெரிகிறது. இங்கும் காலக்குழப்பம் ஏற்படுகிறது. அடுத்த பதிப்பின்போது பேராசிரியர் இந்தப் பிழைகளின் மீது கவனம் கொள்ள வேண்டும்.

Pin It