‘பசுமைப்புரட்சி....வெண்மைப்புரட்சி என கோடி கோடியாக செலவு செய்த அரசு... ஒரு வாசிப்பு புரட்சிக்கு வித்திட்டிருந்தால் இந்தியா வளர்ந்த நாடாகி இருக்காதா? - அமெர்த்தியா சென்

பள்ளிதோறும் வாரம் ஒரு வகுப்பு நூலக பாடமாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு குழந்தைகளிடம் புத்தக வாசிப்பை எடுத்துச் செல்வோம் என்று அரசு அறிவித்திருக்கிறது. வரவேற்க வேண்டிய விஷயம். ஆனால் பல அரசு பள்ளிகளில் பெயருக்குக்கூட நூலகம் என்ற ஒன்று கிடையாது எனும் நிலை இருக்கும்போது அந்த பாடவேளையை பல்வேறு வெட்டிப்பொழுதுகளோடு ஒன்றாய் குழந்தைகள் கழித்துவிட வாய்ப்பு உள்ளது. தனியார் - மெட்ரிக் பள்ளிகளில் அரசு மறு அங்கீகாரம் வழங்கும்போது பெயரளவிலாவது நூலகம் உள்ளதா எவ்வளவு புத்தகங்கள் உள்ளன என பார்க்கப்படுகிறது. ஆனால் அரசு பள்ளிகளில் இத்தகைய நேரடி ஆய்வுகள் குறைந்து கிட்டத்தட்ட காணாமல் போய்விட்டது. அனைத்து சிறு பெரு நகரங்கள்......ஏன் ஓரளவு வளர்ச்சி கண்ட பேரூராட்சி கிராமப்புரங்களில்கூட புத்தகக் கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. புத்தகக் கண்காட்சிகளுக்கு மாணவர்களை சுற்றுலாபோல அழைத்துச் செல்ல அரசு கட்டாய அறிவிப்பு ஒன்றை வெளியிட வேண்டும். புத்தகக் கண்காட்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்ல வேண்டும். புத்தகக் கண்காட்சிகளின்போது பள்ளிகள் தங்களது நூலகத்திற்கு புத்தகங்கள் வாங்க அரசு வழிசெய்ய வேண்டும்.

ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் புத்தகக் கண்காட்சி காலத்தில் புத்தகங்கள் வாங்க மேற்குவங்க அரசு செய்வதைபோல ஒரு முன்பணம் வழங்கலாம். அரசு கவனிக்குமா?

Pin It