(1930-1959)

1995

pattukottai_kalyanasundaram_220பாட்டுக்கு ஒரு பட்டுக்கோட்டை என்று புகழ்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் பிறப்பிடம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள சங்கம் படைத்தான் காடு என்னும் சிற்றூர். எளிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த அருணாசலம், சிவாலாட்சி தம்பதியரின் இளைய மகன். 19 வயதில் கவி புனைவதில் அதிகம் ஆர்வம் காட்டியவர். தம்முடைய இளம் வயதில் கம்யூனிஸ்ட்கட்சி சார்ந்த விவசாயச் சங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தார். தஞ்சையைச் சேர்ந்த வீரத் தியாகிகள் சிவராமன், இரணியன் ஆகியோருடன் சேர்ந்து விவசாய இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் தீவிரமாகப் பங்கெடுத்தார். தமது வாழ்வில் விவசாயியாக, மாடு மேய்ப்பவராக, மாட்டு வியாபாரியாக, மாம்பழ வியாபாரியாக, இட்லி வியாபாரியாக, முறுக்கு வியாபாரியாக, தேங்காய் வியாபாரியாக, கீற்று வியாபாரியாக, மீன் நண்டு பிடிக்கும் தொழிலாளியாக, உப்பளத் தொழிலாளியாக மிஷின் டிரைவராக, தண்ணீர் வண்டிக்காரராக, பாடகராக, நடிகராக, நடனக்காரராக, கவிஞராக என்று பல வேலைகளைச் செய்தவர், இவருடைய பல பாடல்களை ஜனசக்தி இதழ் வெளியிட்டு வந்தது.

1955ம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரையைப் பதித்தார். இவருடைய பாடல்கள் மண் சார்ந்தவை. மேலும் பாடல்களில் உருவகங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருபத்தி ஐந்து வயதில் திரைப்படத்துறையில் பாடல் எழுத ஆரம்பித்த இவர் இருபத்தி ஒன்பதாம் வயதில் காலமானார். இவர் காலமான வருடத்தில்தான் மகன் குமரவேல் பிறந்தார். தமிழ், பண்பாட்டு வரலாற்றை எழுதும்போது பட்டுக்கோட்டையைத் தவிர்க்க முடியாது. இவருடைய பாடல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

Pin It