நூல்கள் வாசிப்பது என்பதில் நூலகத்தின் பங்கை மறுக்க முடியாது. அது போலவே நூலகத்தில் ஏற்படும் மாற்றங்களையும், அதன் புதிய தேவைகளையும் நாம் உணர்ந்துகொள்ளவேண்டியவர்களாக இருக்கிறோம். இதற்காகவும், சென்னை புத்தகக் காட்சி இதழுக்காகச் சமீபத்தில் தமிழக அரசின் நூலகத்துறை இயக்குனராக பொறுப்பேற்றிருக்கும் திரு. க. அறிவொளி அவர்களைச் சந்தித்தோம். அந்த உரையாடலின் சில பகுதிகள்...

சந்திப்பு: முத்தையா வெள்ளையன்

சிறுவயதில் உங்களுக்கும், நூலகத்திற்குமான தொடர்புகள் பற்றிக் கூறுங்கள்?

கிராமத்தில் அரசு பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கே நூலகம் இருந்தது. அந்த நூலகத்திற்கு நூலகர் கிடையாது. அங்கிருந்த வெள்ளைச்சாமி என்கிற ஆசிரியர்தான் பொறுப்பாக இருந்தார். எனக்குப் படிக்கிற ஆர்வத்தை அவர்தான் ஏற்படுத்தினார். ஒவ்வொரு பசங்களிடமும் கட்டாயம் நூலகத்திற்குப் போகவேண்டும். மாதத்திற்குக் கண்டிப்பாக ஒரு புத்தகம் படிக்க வேண்டும் என்ற கட்டாயத்தை உருவாக்கினார். இதுதான் என்னைப் புத்தகங்களை வாசிக்கத் தூண்டியது. அப்போது என்னைக் கவர்ந்த புத்தகம் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன். இந்த நூலின் முதல் பாகத்தில் எங்கள் பகுதியில் உள்ள வீராணம் ஏரி பற்றியும் மற்ற விபரங்களும் இருந்தன. நம்ம ஊர் என்ற பெருமையும் இதனால் இருந்தது. பத்தாம் வகுப்பு முடிப்பதற்குள் பொன்னியின் செல்வனை ஏழுமுறை படித்து முடித்தேன். இளங்கலைப் பட்டப்படிப்பு நாட்களில் நூலகங்களை அதிகம் பயன்படுத்தவில்லை. முதுகலைப் படிப்பு சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்தேன். அங்கே இருக்கும் நூலகம் மிக முக்கியமானது. மேலும் அங்குள்ள பேராசிரியர்களும் நூலகத்திற்கு போனால்தான் சில விஷயங்களை செய்யமுடியும் என்ற கட்டாயத்தை வைத்திருந்தார்கள். அங்கு உள்ள நூல்கள் துறை சார்ந்தவைகளாக இருந்தன. அங்கு பொதுநூல்கள் இல்லை. படித்து முடித்த பிறகு கன்னிமாரா நூல்நிலையம்தான் எனக்கு அடைக்கலம் கொடுத்தது. என்னைச் சமூகத்தில் இந்த அளவுக்கு உயர்த்தியதில் முக்கியப்பங்கு கன்னிமாரா நூல் நிலையத்திற்கு உண்டு.

பொது நூலகத்துறை என்பதற்கான விளக்கம் என்ன?

சென்னைப் பல்கலைக்கழகம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் உள்ள நூலகங்கள் அங்குள்ள மாணவர்களும், அனுமதி பெற்ற ஆய்வு மாணவர்கள்தான் பயன்படுத்த முடியும். அங்கே இருக்கிற தேவைகளும் குறிப்பிட்ட சாரார்களுக்குதான் இருக்கும். புத்தகங்களும் அப்படித்தான் இருக்கும். மக்களுக்குக் கருத்துகளைச் சொல்கிற, சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, மொழியின் மீது பற்றுதலை ஏற்படுத்தக் கூடியது பொது நூலகம். ஒரு காலத்தில் ஆங்கிலேயர்களின் மனமகிழ் மன்றமாக இருந்த படிப்பகங்கள் பிற்காலத்தில் பொது நூலகங்களாக மாறின. பொது நூலகத்திற்கு யார் வேண்டுமானாலும் வரலாம். வருகின்றவர்களின் குறைந்த பட்சத் தேவைகளை பூர்த்தி செய்வதுதான் பொது நூலகம்.

மாநில மைய நூலகத்திற்கும், மாவட்ட நூலகத்திற்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன?

மாநில மைய நூலகம் என்பது கன்னிமாரா நூலகம்தான். இன்னும் கொஞ்ச நாட்களில் அண்ணா நூற்றாண்டு விழா நூலகம் வந்துவிடும். அடுத்ததாக ஒவ்வொரு மாவட்ட தலை நகரங்களிலும் மாவட்ட மைய நூலகம் உள்ளது. பொதுவாக நூலகங்களின் பரப்பளவு, வைக்கப்பட்டிருக்கும் நூல்களின் எண்ணிக்கை, பயன்படுத்தும் வாசகர்களின் எண்ணிக்கை ஆகியவை மாநில மைய நூலகத்தில் அதிகமாக இருக்கும். மாவட்ட மைய நூலகத்தில் குறைவாக இருக்கும். சென்னையில் மாவட்ட மைய நூலகம் தேவநேயப் பாவாணர் நூலகம் இருக்கிறது. உதாரணமாக கன்னிமாராவில் சுமார் நான்கரை லட்சம் புத்தகங்கள் இருக்கிறது என்றால் தேவநேயப் பாவாணர் நூலகத்தில் சுமார் ஒன்றறை லட்சம் முதல் இரண்டு லட்சம் புத்தகங்கள்தான் இருக்கும்.

மேலும் Delivery of Book Act' என்று ஒன்று இருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஒவ்வொரு பதிப்பாளரும், தாங்கள் வெளியிடுகின்ற நூல்களைச் சென்னையிலிருக்கும் கன்னிமாரா நூலகம், தலைமைச் செயலக நூலகம், கல்கத்தாவில் இருக்கும் ராஜாராம் மோகன்ராய் நூலகம், தேசிய நூலகம், மும்பை மத்திய நூலகம் மற்றும் டில்லி பாராளுமன்ற நூலகம் ஆகியவற்றுக்கு ஒவ்வொரு நூல்கள் அனுப்ப வேண்டும். இதனால் இயல்பாகவே கன்னிமாரா நூலகத்தில் நூல்கள் அதிகமாக இருக்கும். இந்த நூலகங்களை Deposit Library என்று அழைப்பர்.மாநில மைய நூலகத்திற்கு மத்திய, மாநில அரசுகளின் நிதி அதிகமாகக் கிடைக்கும். மாநில மைய நூலகத்தில் பாடப்புத்தகங்கள், குறிப்புதவி நூல்கள் குறிப்பாக ஐ.ஏ.எஸ் போன்ற தேர்வுகளுக்கு தயாராகின்ற மாணவர்களுக்கு மிக உதவியாக இருக்கும்.

மாநில மைய நூலகத்திற்கும், மாவட்ட நூலகத்திற்கும் வருகை தரும் வாசகர்களின் தரம் மாறுபடுகிறதா?

வாசகர்களின் தரம் என்பது நாம் தரமான புத்தகங்களையும், தரமான கருத்துகளையும் எந்த அளவிற்குத் தருகிறோம் என்பதைப் பொறுத்தது. ஒரு சில வாசகர்கள் பொழுது போக்கிற்காகவும், மற்ற சிலர் போட்டித் தேர்வுக்கும், இன்னும் சில பேர் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு சில விஷயங்களைத் தெரிந்து கொள்ளவும் வருகிறார்கள். பலதரப்பட்ட மனிதர்களின் எதிர்பார்ப்புக்கேற்ற மாதிரி நூலகம் உள்ளது. தரமான புத்தகங்களை வாசிப்பதற்கு இன்றும் தரமான வாசகர்கள் உள்ளனர்.

எட்டாம் வகுப்புகூட முடிக்காத ஒருவரை மதுரை நூலகத்தில் சந்தித்தேன். அவருடைய மேஜையில் பத்து புத்தகங்களைப் பரப்பி வைத்திருந்தார். அந்தப் புத்தகங்களில் நவீன இலக்கியப் புனைவுகள், தலித் இலக்கியம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை வெளிப்படுத்தும் கவிதைப் புத்தகங்கள் இருந்தன. அவருடைய ஆர்வமும், அக்கறையும் மிக முக்கியமானவை என்று கருதுகிறேன்.

நூலகத்திற்கு உள்ளாட்சிகளின் பங்கு என்ன?

எங்களுடைய நூலக இயக்கமே உள்ளாட்சிகளின் மொத்த சொத்து வரிவசூலில் பத்து சதவிகித வரியில்தான் நடைபெறுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகளோடு நெருங்கிய தொடர்பை மாவட்ட நூலகர் தொடர்பு கொண்டு இந்த வரிகளை பெற்றுக்கொண்டு நூலக மேம்பாட்டுப் பணிகளை செய்வார்.

உள்ளாட்சி அமைப்புகளைப் பொறுத்தவரைக்கும் வாடகை இல்லாத கட்டடம் அல்லது கட்டடம் கட்டுவதற்கான இடங்கள் கொடுப்பார்கள். ஒரு சில இடங்களில், கட்டடம் கட்டுவதற்கான இடங்கள் அதிக விலையாக இருந்தால், வரிவசூலில் எங்களுக்கு வரவேண்டிய பணத்தில் பிடித்துக் கொண்டு எங்களுக்கு நிலத்தைக் கிரயம் செய்து கொடுக்கிறார்கள். சமீபத்தில் திண்டுக்கல்லில் நாற்பது லட்ச ரூபாயில் இடம் வாங்கி இருக்கிறோம். உள்ளாட்சி அமைப்புகளின் ஒத்துழைப்பு இல்லை என்றால் நூலக இயக்கத்தை நடத்துவது என்பதே சிரமம்தான்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படிக்கின்ற மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்கள் மாநில மைய நூலகத்தில் மட்டும்தான் உள்ளதா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்காக படிக்கின்ற மாணவர்கள் தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும் சென்னைக்குதான் வரவேண்டும் என்ற நிலைமை முன்பு இருந்தது. 2006-ல் குடிமைப் பணிகளுக்காகப் படிக்கின்ற மாணவர்களுக்கு மாவட்ட, வட்டார அளவில் உள்ள நூலகங்களிலும் புத்தகங்கள் வைக்கப்பட வேண்டும் என்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் முப்பத்தியரு மாவட்ட மைய நூலகங்களில் குடிமைப் பணி மையங்கள் என்று ஆரம்பித்தோம். இதற்குப் பிறகு வட்டார நூலகங்களிலும் ஏற்படுத்தப்பட்டன. இப்போது சென்னையைத் தவிர கிட்டத்தட்ட இருநூற்றி முப்பது குடிமைப் பணி மையங்கள் உள்ளன. சென்னையில் கன்னிமாரா நூலகத்தில் உள்ளது. கன்னிமாராவில் என்ன புத்தகம் இருக்கிறதோ அதே புத்தகம் வட்டார நூலகத்திலும் இருப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்தில் கரூர் நூலகத்தில் குடிமைப் பணி மையத்தின் நூல்களைப் படித்த மாணவிகள் இரண்டுபேர் குரூப் இரண்டில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அவர்கள் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கும் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு மாவட்ட நூலகத்தின் சார்பில் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் எத்தனை நூலகங்கள் உள்ளன? என்ன மாதிரியான நூலகங்கள் உள்ளன?

தமிழ்நாட்டில் மொத்தம் 4002 நூலகங்கள் உள்ளன. இதில் மாநில மைய நூலகம் கன்னிமாரா. மாவட்ட மைய நூலகங்கள் முப்பத்தியரு மாவட்டங்களிலும் உள்ளன. திருப்பூரில் மாவட்ட மைய நூலகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கு அடுத்ததாக 1666 கிளை நூலகங்கள் உள்ளன. இதற்கு அடுத்தபடியாக ஊர்புற நூலகங்களும், பகுதிநேர நூலகங்களும் , நடமாடும் நூலகங்களும் உள்ளன.

நடமாடும் நூலகம் என்பது தற்போது ஏழு மாவட்டங்களில் பனிரெண்டு பேருந்துகளில் நடைபெறுகிறது. ஒரு சில மாவட்டங்களில் பேருந்துகள் இயங்காத நிலைமையும் இருக்கிறது. அதை மீண்டும் இயக்குவதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எங்களுடைய நோக்கம் வருகிற இரண்டு ஆண்டுகளில் எல்லா மாவட்டத்திலும் நடமாடும் நூலகம் இயங்க வேண்டும் என்பதுதான். இது நூலகங்கள் இல்லாத கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டும் என்பதுதான்.

பகுதிநேர நூலகம் என்பது காலை அல்லது மாலையில் அதாவது ஒரு நாளைக்கு ஏதோ ஒரு நேரத்தில் மட்டும் இயங்கும். உதாரணமாக ஒரு சிற்றூரில் படிக்க வருவதற்கான சாத்தியக்கூறுகள் நிறைய இருந்தால் அங்கு பகுதிநேர நூலகம் உருவாகும். இது மக்கள் தொகையின் அடிப்படையிலும், எதிர்பார்ப்பின் அடிப்படையிலும் அமைகிறது. பகுதிநேர நூலகமாக ஆரம்பித்த பிறகு வாசகர்களின் எண்ணிக்கை, புரவலர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து ஊர்புற நூலகமாக மாற்றுவோம். ஊர்புற நூலகங்கள் ஒரு கட்டத்தில் கிளை நூலகமாக மாறும் வாய்ப்புகளும் இருக்கிறது.

சமீபத்தில் அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவின் போது காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவால் திறந்து வைக்கப்பட்ட ஒரு நூலகம் பகுதிநேர நூலகமாக இருந்தது. அதைக் கிளை நூலகமாக மாற்றினோம்.

பகுதிநேர நூலகங்களில் என்ன மாதிரியான புத்தகங்கள் இருக்கும்?

பகுதிநேர நூலகங்களுக்கு இப்போது நாங்கள் கொடுப்பது இலக்கியம், கதை, சிறு சிறு பாடப் புத்தகங்கள், குழந்தைகளுக்கான புத்தகங்கள். பகுதிநேர நூலகம் ஒரு நாளைக்கு மூன்றரை மணி நேரம் செயல்படும். இந்த நூலகத்தில் முதலில் இருநூற்றி ஐம்பது புத்தகங்கள், நான்கு ஐந்து வார இதழ்கள், சில நாளிதழ்கள் இருக்கும். இந்த இருநூற்றி ஐம்பது புத்தகங்கள் ஒரு சுற்று முடித்துவிட்டு புதிய நூல்களை அங்கு வைப்பார்கள். ஒரு சுற்று என்பது நாற்பது நாட்கள். இங்கு வாசகர் வட்டம் அமைப்பதற்கு வற்புறுத்துகிறோம். அந்த வாசகர் வட்டம் வாசகர்களின் எண்ணிக்கையையும், நூலகத்திற்கு வேண்டிய வசதிகளையும் அதிகப்படுத்த வேண்டும். இப்படி மேம்படுத்தப்பட்ட பகுதிநேர நூலகங்கள் ஊர்புற நூலகமாக மாற்ற கோரிக்கைகளும் வருகின்றன. எங்களுடைய நிதி ஆதாரத்தின் அடிப்படையிலும், மற்ற வசதி அடிப்படைகளைப் பொறுத்து மாற்றுகிறோம்.

பல்வேறு ஊடகங்களின் தாக்கத்தால் வாசிப்புப் பழக்கம் எப்படி இருப்பதாக உணருகிறீர்கள்?

ஊடகத்தின் தாக்கத்தால் வாசிப்பது குறைவது என்பதை என்னால் ஏற்றுக் கொள்ளமுடியாது. ஊடகங்களின் தாக்கம் இருக்கிறதா என்றால் இருக்கிறது. ஆனால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது.

ஒரு சின்ன புள்ளிவிவரத்தை இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். பத்தாண்டுகளுக்கு முன்பு புத்தகப் பதிப்பாளர்களின் எண்ணிக்கை ஐநூறைத் தாண்டாது. ஆண்டொன்றுக்கு நூல்களின் எண்ணிக்கை 1500ஐ தாண்டுவதற்குச் சாத்தியமில்லை. ஆனால் இன்றைக்கு இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட பதிப்பாளர்களும், விற்பனையாளர்களும் இருக்கிறார்கள். ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக எட்டாயிரம் முதல் பத்தாயிரம் நூல்கள் வருகின்றன. இதையெல்லாம் வைத்துப் பார்க்கிறபோது, வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறது. ஆகவே வாசிப்பவர்களின் எண்ணிக்கை கூடாமல் இது சாத்தியமில்லை.

பள்ளிக்கூடங்களில் நூலகச் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

பள்ளிக்கூடங்களில் நூலகத்தைப் பார்த்துக்கொள்ள ஓர் ஆசிரியரை நியமித்து இருக்கிறோம். அதற்காக ஒரு தொகையையும் அரசு நிர்ணயித்து இருக்கிறது. இதனுடைய பயன்பாட்டில் திருப்தி இல்லாததால் அரசு ஓர் ஆணை பிறப்பித்தது. அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் அடிப்படையில் 'புத்தகப் பூங்கொத்து' என்ற திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டது. 'பள்ளிக்கூடத்தில் திறக்காத அறை எது என்றால் அது நூலகம்தான்' என்று சொல்வார்கள். அதை போக்கும் விதமாக நூலகத்தில் இருக்கும் சில புத்தகங்களை ஒவ்வொரு வகுப்பிலும் கயிறு கட்டி தொங்க விடுவார்கள். அதை அங்கு இருக்கிற மாணவர்கள் படிப்பார்கள். உதாரணமாக ஒரு வகுப்பில் இருபது புத்தகங்களைக் கட்டி விடுகிறார்கள். அந்த வகுப்பில் உள்ள ஐம்பது மாணவர்கள் படித்த பிறகு வேறு இருபது புத்தகங்களைக் கட்டிவிடுவார்கள். இந்தத் திட்டம் மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது. பூங்கொத்துத் திட்டத்தை ஆய்வு செய்கிற போது ஒரு மாணவன் 'சார் மதிய உணவு சாப்பிட்டு விளையாடுவோம். விளையாட்டின் போது சண்டை வரும். அடித்துக் கொள்வோம். இப்போது சாப்பிட்ட பிறகு புத்தகங்களைப் படிக்கிறோம்' என்றான். இது எங்களுக்காக அந்த மாணவர்கள் சொல்லவில்லை. அந்த மாணவன் பேசுகிற தொனி, முகத்தில் தெரிந்த சிரிப்பு ஆகியவற்றை கூர்ந்து கவனித்தபோது நூறு சதவிகிதம் உண்மை என்று உணர வைத்தது.

நூலகத்திற்கென்று பத்திரிகை வருகிறதா?

நூலகச் செய்தி மடல் என்ற பத்திரிகை மூன்று மாதத்திற்கு ஒருமுறை வருகிறது. இதில் நூலகம் சார்ந்த செயல்பாடுகள், நூலகத்திற்காக உழைத்தவர்களின் வரலாறுகள், தமிழக அரசு நூலகத்துறைக்கு என்ன செய்து கொண்டிருக்கிறது? நூலகத்தின் தேவைகள் என்ன? அதை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம் என்பது பற்றியெல்லாம் வந்து கொண்டிருக்கிறது. இந்த இதழ் எல்லா நூலகத்திற்கும் செல்கிறது. வாசகர்களும் அதிகம் இருக்கிறார்கள்.

‘நமது உலகம் நூலகம்’ என்கிற திட்டத்தை மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் சென்ற அக்டோபரில் துவங்கி வைத்தார்கள். அதில் ஒன்று மாதம் ஒரு செய்திமடல் வெளியிடுவது. அந்த இதழுக்குப் பெயர் The New Dawn. இதை வரும் பொங்கல் அன்று வெளியிட உள்ளோம்.தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளும் கலந்த இதழ். தமிழகத்தில் உள்ள நூலகத்துறை எப்படிச் செயல்படுகிறது என்பதை நாம் மட்டும் தெரிந்து கொண்டால் போதாது. இந்தியா முழுவதும் தெரிந்து கொள்ளவேண்டும் என்பதற்காக இந்தச் செய்திமடல் இரு மொழிகளில் வெளியிடுகின்றோம்.

‘நமது உலகம் நூலகம்’ திட்டம் பற்றிக் கூறுங்கள்?

மாண்புமிகு கல்வித்துறை அமைச்சர் நூலக இயக்கம் என்பது ஒரு துறையாக செயல்படாமல், இயக்கமாக செயல்பட வேண்டும் என்ற கருத்தைச் சொன்னார். அக்டோபர் 16, 2009 முதல் அக்டோபர் 15, 2010 வரை நூலக எழுச்சி ஆண்டாக அறிவித்து நமது உலகம் நூலகம் என்ற திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இந்தத் திட்டத்தில் நூலகங்களைத் தூய்மை செய்தல், நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை அறிவியல் ரீதியான முறையில் அடுக்கி வைத்தல், வெளிப்புறத்தைத் தூய்மை செய்தல் மேலும் அதிகமாக வாசகர்கள், மாணவர்கள், புரவலர்கள் ஆகியோரைச் சேர்த்தல் போன்றவைகளை வாசகர் வட்டத்தின் துணையோடு செய்யவேண்டும் என்று கூறிவருகிறோம்.

மாணவர்களை அதிகமாக நூலகத்திற்கு வரவழைப்பதற்கு என்ன செய்யவேண்டும் என்று யோசித்தபோது, மாணவர்களைச் சிங்கப்பூருக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும் திட்டம் உதயமானது. இதற்கு ஜனவரி மாதத்தில் போட்டிகள் நடைபெற இருக்கின்றன. இதில் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, வாசகங்கள் எழுதும் போட்டி நடைபெறும். முதல் பரிசு பெறுபவர்கள் சிங்கப்பூரைச் சுற்றிப்பார்க்கவும், அங்குள்ள நூலகம் எப்படி இருக்கிறது என்பதையும் தெரிந்து கொள்வார்கள். இரண்டாம் பரிசு பெறுவர்கள் இந்தியாவைச் சுற்றிப்பார்க்கவும், மூன்றாவது பரிசு பெறுபவர்கள் தமிழகத்தைச் சுற்றிப்பார்க்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் போட்டி அறிவித்த இரண்டு வாரத்தில் புதியதாக 4.2 லட்சம் மாணவர்கள் நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளார்கள். இதற்கு அடுத்ததாக நாற்பத்தி இரண்டாவது நூலக வார விழாவையட்டி உறுப்பினர்கள் சேர்ப்பு இலவசமாக அறிவித்தோம். இதன் பிறகு உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்து லட்சமாக உயர்ந்துள்ளது. எங்களுடைய இலக்கு ஐம்பது லட்சம் மாணவர்களைச் சேர்ப்பதுதான். 2011-ல் நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் ஐரோப்பியப் பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். உலகத்தின் தலைசிறந்த நூலகமான அலெக்சாண்ட்ரியா நூலகத்தில் மாணவர்கள் காலடி எடுத்து வைப்பார்கள். இரண்டாம் பரிசு சிங்கப்பூர் சுற்றுலாவும், மூன்றாவது பரிசு இந்திய சுற்றுலாவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் போட்டிகளில் பங்கு பெறுபவதற்கான நிபந்தனை என்பது, குறைந்தபட்சம் ஓர் ஆண்டாவது பொது நூலகத்துறையில் உறுப்பினராக இருக்க வேண்டும். மாதம் நான்கு முறை நூல்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும். வருடத்திற்குக் குறைந்தது ஐம்பது முறை நூல்கள் எடுத்துப் படித்திருக்க வேண்டும். நூலகத்திலிருந்து எடுத்த நூல்களை ஒழுங்காகத் திருப்பிக் கொடுத்திருக்க வேண்டும்.

இந்தத் திட்டத்திற்கு எல்லா தரப்பிலிருந்தும் வரவேற்பு இருந்தது. உதாரணத்திற்கு நிறைய பேர் நூலகம் எங்கே இருக்கிறது என்று தொலைபேசியில் விசாரிக்கிறார்கள். இதனால் அனைத்து நூலகங்களின் முகவரிகளையும் எங்கள் இணையதளத்தில் வெளியிட உள்ளோம். அடுத்ததாகக் காவல்துறை அலுவலகத்திற்கு ஒரே மாதிரி வண்ணம் இருப்பதுபோல், நூலகத்திற்கும் ஒரே மாதிரி வண்ணத்தைப் பயன்படுத்தலாம் என்ற யோசனையும் உள்ளது.

இதை முன்பு அறிவிக்கும் போதுகூட இவ்வளவு தூரம் மிகப் பெரிய வெற்றியாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. இதைப் பற்றி கிராம நூலகங்களில் ஆய்வு செய்யும் போது இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கு முன்பு ஒரு நாளைக்கு இரண்டு, மூன்று பேர்தான் புத்தகம் எடுத்துக் கொண்டு போவார்கள். இப்போது ஐம்பது முதல் எழுபது பேர் புத்தகங்களை எடுத்துச் செல்கிறார்கள் என்று தெரியவந்தது. இது மிகச் சரியான முக்கியமான மாற்றம் என்று கருதுகிறோம். இந்த மாற்றம் சமூகத்தை சரியான வழியிலே நடத்தி செல்லக்கூடிய மாற்றம். தமிழக அரசு நன்றாக யோசித்து மிக நல்ல முடிவை எடுத்திருக்கிறது.

நூலகத்தை டிஜிட்டல் முறைக்கு மாற்றக்கூடியத் திட்டம் இருக்கிறதா?

கன்னிமாரா நூலகத்தில் இதைச் செய்யக்கூடிய வாய்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறோம். அதாவது மிகப் பழமையான நூல்கள், ஓலைச்சுவடிகள், அரிய நூல்கள், பல்வேறு காலக்கட்டத்தில் வந்து மறுபதிப்பு செய்யப்படாத நூல்கள் இதில் அடங்கும். ஈரோட்டில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிஜிட்டில் நூலகம் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது. புதியதாக வருகின்ற அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இதற்கென்று ஒரு பிரிவையும் ஏற்படுத்துகிறோம். தமிழகம் முழுவதும் உள்ள நூலகங்களை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆன்லைன் மூலமாக இணைக்கும் யோசனையும் உள்ளது. இது நிச்சயமாக வெற்றிபெறும் என்று நம்புகிறோம்.

பதிப்பாளர்கள் உங்கள் இணைய தளத்தில் பதிவு செய்யவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதா?

எங்களுக்கான இணையதளம் www.pallikalvi.in இந்த இணைய தளத்தைப் பள்ளிக் கல்வித்துறையில் உள்ள பத்துத் துறைகளும் பயன்படுத்துகின்றன. இந்த இணையதளத்தில் உள்ள நூலகப் பகுதியில் 2500 பதிப்பாளர்கள் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவு கட்டாயம் இல்லை என்றாலும் தமிழக நூலகத்துறை நூல்கள் வாங்குகிற போது எத்தனைப் பதிப்பாளர்கள் இருக்கிறார்கள் என்ற விபரம் எங்களுக்கு வேண்டும். 1960-க்கு முற்பட்ட பதிப்பாளர் யார் என்றால் அதற்கான விபரம் இல்லை. நிர்வாக வசதிக்காகத்தான் இந்த ஏற்பாடு. மேலும் நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள், நாட்டுடமை ஆக்கப்பட்டவர்களின் நூல் பட்டியல் என்று நூலகம் சார்ந்து அனைத்துத் தகவல்களும் இருக்கும் இணையமாக அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

நூல்களுக்கு ஐ.எஸ்.பி.என். எண் இருப்பது போல நூலகத்திற்காக எண் கொடுக்கும் திட்டம் உள்ளதா?

நீங்க சொல்கிற யோசனை ஏற்கக் கூடியதுதான். இங்கு நூலகத்திற்கு நூல்கள் வாங்குவதற்கு ISBN நெம்பர் இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இப்போது பதிப்பாளர்களையும், விற்பனையாளர்களையும் ஒழுங்கு படுத்துவதற்காகத் தொகுத்துக் கொண்டிருக்கிறோம். அவர்கள் எங்கள் இணையதளத்தில் பதிவு செய்தபிறகு ஒரு குறியீட்டு எண்ணையும் தருகிறோம். இந்த எண்கள் வழங்குவதால் சிக்கல் இல்லாமல் இருக்கும். ஏனெனில் ஒரே பெயரில் பல பதிப்பகங்கள் இருக்கிறது. உரிமையாளர்களின் பெயரும் ஒன்றாக இருக்கிறது. இதனால் நிர்வாகச் சிக்கல் ஏற்படுகிறது. அதனால்தான் இதைக் கொண்டு வந்தோம். அடுத்ததாக மாண்புமிகு தமிழர் முதல்வர் பதிப்பாளர் நல வாரியத் திட்டம் கொண்டு வந்தபோது, அந்தத் திட்டத்தில் உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும். அப்படி உறுப்பினர் சேர்ப்புக்கும் இந்த இணையதளப் பதிவு உதவும்.

பதிப்பாளர் நல வாரியம் பற்றிச் சொல்லுங்கள்?

தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை தொழிலாளர்களுக்காகச் செய்து வருகிறது. அதில் ஒன்றுதான் பதிப்பாளர் நல வாரியம். இது பதிப்பாளர் மற்றும் விற்பனையாளரின் நீண்டநாள் கோரிக்கையாக இருந்தது. அச்சுத் தொழில் இருக்கிறவர்களுக்குத் தனியாக நல வாரியம் இருக்கிறது. பதிப்பாளர்களுக்கென்று தனிவாரியம் அமைக்கப்பட்டு அரசாணை வந்துள்ளது. இந்த வாரியத்திற்காக நிரந்தர வைப்பு நிதியாக ஐம்பது லட்ச ரூபாயை அரசு வழங்கியிருக்கிறது. இதில் பதிப்பாளர்களுக்கும், பதிப்பகத்தார்களுக்கும், பதிப்பகங்களில் வேலை செய்பவர்களுக்கும் திருமண உதவித்தொகை, குழந்தைகளுக்கு கல்வித்தொகை, மூக்குக் கண்ணாடி போன்ற பல நலத் திட்டங்கள் உள்ளன. இந்த வாரியத்தின் தலைவராக மாண்புமிகு கல்வி அமைச்சர் இருக்கிறார். சமீபத்தில் இந்த வாரியத்தின் முதல் கூட்டம் நடந்தது. அதில் பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. இந்த வாரியத்திற்கான செயல்பாடுகளுக்கு, நிறைய நிதி ஆதாரங்கள் தேவைப்படும். அதற்காகப் புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர்கள், நூலக விற்பனையிலிருந்து 2% சதவிகிதம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். இந்த ஜனவரி மாதம் உறுப்பினர் சேர்ப்பு ஆரம்பம். இதற்காக பயனாளிகளைக் கண்டு அடைவதற்காக மாவட்டம் தோறும் முகாம்களை நடத்த உள்ளோம். இதில் உறுப்பினராகச் சேரும் நபரின் வயதின் அளவு 60. அதை 70 வயதாக மாற்ற அரசுக்குக் தந்து வைத்திருக்கிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு நல வாரிய அடையாள அட்டையும் வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான ஆய்வு நூலகங்கள் தனியாரிடம்தான் உள்ளது. அரசு சார்பில் கொண்டு வரும் திட்டம் உள்ளதா?

நீங்கள் சொல்லுகிற நூலகங்களுக்குச் சென்று பார்த்து இருக்கிறேன். இந்த நூலகங்கள் நல்ல நோக்கத்திற்காக செயல்பட்டிருந்தாலும் குறைந்த லாப நோக்கத்தோடு செயல்படுகிற திட்டம். அண்ணா நூற்றாண்டு நூலகம் என்பதைப் பொது நூலகமாக மட்டுமில்லாமல் ஒரு சிறந்த ஆராய்ச்சி நூலகமாக அமைப்பதற்கு முயற்சி செய்து முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு ஆராய்ச்சி மாணவர்கள், அறிஞர்களிடம் நல்ல நூல் நிலையம் எப்படி இருக்க வேண்டும் என்ற கருத்துகளைக் கேட்டோம். அது சிறந்த ஆராய்ச்சி நூலகமாக இருக்க வேண்டும் என்றார்கள். இதற்குப் பத்துபேர் கொண்ட குழுவினர் நிறைய ஆய்வு செய்து கருத்துகளைக் கொடுத்து உள்ளார்கள். இந்த நூலகத்தில் முதலில் நாங்கள் பனிரெண்டு லட்சம் நூல்கள்தான் வைக்க வேண்டும் என்று நினைத்தோம் ஆனால் இந்தியா முழுவதும் திரட்டிய நூல்கள் பற்றிய தகவல் எண்ணிக்கை முப்பது லட்சம் ஆகும். இந்தப் பட்டியலில் டூப்ளிகேஷன் குறைவாகத்தான் இருக்கும்.

இன்றைக்கு உலகம் முழுவதிலும் இரண்டு விஷயங்களில் ஆர்வமும், எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அவை மெட்டிரியல் சயின்சும், நானோ டெக்னாலஜியும் ஆகும். இவைகளில் மட்டும் அறுபதாயிரத்திற்கு மேற்பட்ட நூல்களின் பட்டியலைத் தொகுத்திருக்கிறோம். அறுபதாயிரம் நூல்களையும் முதற்கட்டமாக வாங்க முடியாது. இதில் உள்ள சிறந்த புத்தகங்கள் எது என்று அந்த துறைசார்ந்த வல்லுனர்களிடம் கேட்கிறபோது இருபத்தி இரண்டாயிரம் புத்தகங்களை பரிந்துரைத்திருக்கிறார்கள். அதை முதலில் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வைக்க உள்ளோம். இதே மாதிரி ஒவ்வொரு துறை சார்ந்தும் வைக்கப்போகிறோம். இது மட்டுமில்லாமல் ஆய்வு சார்ந்து வரும் இதழ்களும் வைக்கப்படும். இது பொதுமக்களுக்குச் சேவை செய்வதற்காகக் குறைந்தபட்சம் கட்டணம் இருக்கலாம். அதைப்பற்றி இன்றும் முடிவு செய்யவில்லை.

ஐ.ஐ.டி. நூலகம், சீனாவில் உள்ள சில நூலகங்களும் இரவு நேரங்களிலும் பணியாற்றுகின்றன. இதைப் போல் தமிழக அரசின் நூலகமும் இயங்கும் வாய்ப்பு இருக்கிறதா?

இன்றைக்கு இருக்கும் வாழ்க்கைச் சூழல் மாறி இருக்கிறது. காலையில் எழுந்திருப்பவர்களின் எண்ணிக்கை இன்றைக்கு மிகக்குறைவு. அப்படி எழுந்தாலும் தினசரி வாழ்க்கை பரபரப்பில் அலுவலகத்திற்குச் செல்வதற்கும், பள்ளிக்கூடத்திற்கு குழந்தைகளைக் கொண்டு விடுவதற்குமே நேரம் சரியாக இருக்கிறது. காலையில் ஒன்பது மணிக்கு முன்னால் நூலகத்திற்கு ஒருத்தர் வரவேண்டும் என்பது முடியாத சூழலாக இருக்கிறது. ஆராய்ச்சி மாணவர்கள், குடிமைப் பணிக்கு படிப்பவர்கள் இரவில்தான் அதிகம் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதற்காக அண்ணா நூற்றாண்டு ஆய்வு நூலகத்தைக் காலை ஒன்பது மணியிலிருந்து இரவு பனிரெண்டு மணி வரைக்கும் நடத்துவது என்று முடிவு எடுத்திருக்கிறோம். இதை அரசுக்கும் அனுப்பி இருக்கிறோம். இதற்கு பணியாளர்களும் வேண்டும். அதற்கான வாய்ப்புகளையும் ஆராய்ந்து உருவாக்கி வருகிறோம்.

நூலகங்களில் மிகப் பழைய நூல்களை அல்லது சேதமடைந்த நூல்களைத் தூக்கி எறிந்துவிடுவதாகச் சொல்கிறார்களே?

பழைய புத்தகங்களை எடுத்து வெளியே எறிவதில்லை. பயன்படுத்த முடியாத புத்தகங்களை, அதே சமயம் மறுபதிப்பாக வருகின்ற வாய்ப்பில்லாத புத்தகங்களை எடுத்து நூலகங்களிலிருந்து, அதை ஸ்கேன் செய்து சி.டி. யாக மாற்றி, Rare books collection-ல் சேர்த்து வருகின்றோம்.

தமிழில் நூற்றொகையைத் திரும்ப வெளியிடும் திட்டம் உள்ளதா?

தமிழ் நூற்றொகை என்பது தமிழில் வெளிவந்த நூல்களின் பட்டியல்தான். இதை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள். கணினி என்று வந்த பிறகு, அனைத்து நூல்களின் பட்டியலையும் கணினி மையம் ஆக்கியிருக்கிறோம்.

பொது நூலகத்துறையைக் கணினி மயமாக்குகிறீர்கள். அதன் விவரங்களைக் கூறுங்கள்?

தமிழகத்தில் உள்ள நடமாடும் நூல் நிலையங்களைத் தவிர, மற்ற அனைத்து நூலகங்களிலும் என்ன என்ன புத்தகங்கள், எத்தனைப் பிரதிகள் எங்கு உள்ளன, உறுப்பினர்கள் பட்டியல் ஆகியவற்றைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அவை கணினி மயமாக்கப்படும். கணினிமயமாக்குவதால் நூலகம் சரியான நேரத்திற்குத் திறக்கப்படுகிறதா என்பதைக் கண்காணிக்க முடியும். நூல்கள் கொடுப்பதும், வாங்குவதும் கணினி மயமாக்கப்படும்.

பொதுவாக புவியியல், பொருளாதாரம், சுற்றுச்சூழல் \ போன்ற துறை சார்ந்த புத்தகங்கள் தமிழில் குறைவாக உள்ளதே?

எனக்கும் இதில் வருத்தம் உண்டு. வட இந்திய பதிப்பாளர்கள் பல்வேறு பாடநூல்களை ஆங்கிலம் மற்றும் இந்தியில் கொண்டு வருகிற ஆர்வம் போன்று தமிழ் பதிப்பாளர்களிடையே குறைவு. இங்கு பல பதிப்பாளர்கள் இதை வெளியிடப் பயப்படுகிற நிலையே இருக்கிறது. எந்த ஒரு புத்தகமும் கல்வி வளர்ச்சியை சார்ந்து தரமான நூல்களை வெளியிட்டால் நூலகத்துறை கண்டிப்பாக வாங்கும். அவர்களை நூலகத்துறை ஊக்குவிக்கும். உதாரணமாக நீரிழிவு நோய்க்கு மருந்துகள், மூலிகை வைத்தியம் போன்ற தலைப்பில் நூற்றுக்கணக்கான நூல்கள் வருகின்றன. இது தேவைதான். ஆனால் அளவிற்கு அதிகமாக வெளியிடுகின்ற நிலமை இங்கு இருக்கிறது.

சிறுவர்களுக்கான கதைப் புத்தகங்களைப் பொறுத்த வரைக்கும் பல வித்தியாசமான, ஆக்கப்பூர்வமான, சிந்தனைத் திறன்களைத் தூண்டக்கூடிய, மொழியை இலகுவாகப் பயன்படுத்துகிற, சமூகத்தின் மீது பற்றுள்ள கதைகளை உருவாக்க முடியும். ஆனால் முல்லாக் கதைகளும், விக்கிரமாதித்தன் கதைகளும்தான் அதிகம் வருகின்றன. இந்தக் கதைகளில் பாத்திரங்கள் மாறுமே தவிர, காட்சிகள் மாறாது. இவைகளை மாற்றி சமூக நோக்கோடு, உலக அரசியல், உலகப் பொருளாதாரம், வாழ்வியல் சிக்கல்கள், நம்முடைய சித்தாந்தம் என்ன மாதிரி உருமாறி உருப்பெற்றிருக்கிறது போன்றவைகளை மாணவர்கள் மத்தியில் விதைத்தால்தான் சிறந்த சமூகத்தை உருவாக்க முடியும்.

சமீபத்தில் ஒரு நூலகத்தில் போய் இந்திய நதிகள் பற்றிய புத்தகத்தைத் தேடினால் இல்லை. இது சின்ன விஷயமாக இருக்கலாம். ஆனால் முக்கியமானது. இந்தியாவில் எத்தனை நதிகள் உள்ளன? எங்கு ஆரம்பித்து எங்கு முடிகிறது? என்று பல செய்திகளை அறிந்து கொள்கின்ற வாய்ப்பு உருவாக்கப்பட வேண்டும். இது போன்ற நூல்கள் தமிழில் இல்லை. இது மாற வேண்டும். நூலகத்துறையும் முயற்சி செய்கிறது. பதிப்பாளர்களும் முன்வர வேண்டும்.

இந்த ஆண்டு வெளிவந்த புத்தகங்களை அதே ஆண்டில் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா?

அந்தந்த ஆண்டுகளில் பதிப்பிக்கப்பட்ட புத்தகங்கள் அதே ஆண்டில் நூலகங்களுக்குச் சென்றால்தான் மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் புதிய புத்தகங்கள் கிடைக்கும். இதில் மாறுபட்ட கருத்து கிடையாது. ஒரு சில நிர்வாகச் சிக்கல்களால் 2007-2008 ஆண்டில் நூல் வாங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது. அதன் சிக்கல்களை ஆராய்ந்து, அமைச்சரின் அறிவுரையோடு நூல்கள் வாங்க ஏற்பாடு செய்தோம்.

2008-ஆம் ஆண்டின் ஆணையை ஜனவரி மாதத்தில் வெளியிட வேண்டும் என்று மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். அநேகமாகப் பொங்கல் பரிசாகப் பதிப்பாளர்களுக்கு கிடைக்கும். 2009-ஆம் ஆண்டு நூல்கள் 2010-ல் பதிவு பெறும்போது, 2010-ல் ஜுன் மாதத்திற்குள் ஆணையை வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம். இனி காலதாமதம் இருக்காது.

குழந்தைகள் புத்தகம் வண்ணத்தில் இருப்பதும், நல்ல தாளில் இருப்பதும் முக்கியம். ஆனால் எல்லா நூல்களுக்கும் ஒரே மாதிரி விலை நிர்ணயிக்கப்படுகிறதே?

பொதுவாகப் புத்தகங்கள் பாரம், புத்தகத்தின் அட்டை மற்றும் நூலின் அளவு ஆகியவற்றை வைத்து விலை நிர்ணயிக்கப்படுகிறது. இதில் எங்களுக்குப் பிரச்சனை இல்லை. ஆனால் குழந்தைகள் நூல்கள் குழந்தைகளைக் கவரணும். கவருவதற்கு வண்ணத்தில் இருக்க வேண்டும். குழந்தைகள் கிழித்து விடாமல் இருக்க லேமினேட் செய்ய வேண்டும். இதற்குப் பாரம் கணக்கில் காசு கொடுத்தால் பத்தாது. அதற்காக ஆலோசனைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆலோசனை முடிந்த பிறகு அரசுக்கு அனுப்பி வைப்போம். முன்பை விட நூல்களுக்கு இப்போதுதான் விலையை அரசு உயர்த்தி ஆவண பிறப்பித்துள்ளது. 2009-2010 ஆண்டில் புதிய விலையில் வாங்கப்படும்.

நூலக ஆணைக்குச் சிறு பதிப்பாளர்கள் பத்து புத்தகங்கள் கொடுத்தால் ஒரு புத்தகத்திற்குத்தான் ஆணை கிடைக்கிறதே?

புத்தகங்கள் வாங்குவதில் பாரபட்சமற்ற தன்மையைத்தான் கடைபிடிக்கிறோம். உண்மையிலேயே சில பதிப்பாளர்களுக்கு ஒரு நூல் கூட கிடைக்காமல் இருக்கலாம். எங்களிடம் முறையிட்டால் உண்மையில் தரமான நூலாக இருந்தால் உதவி செய்ய முயற்சிப்போம். ஆனால் ஒரு புத்தகத்தைப் பொது நூலகத்துறைக்கு வாங்குவது ஏற்றது அல்ல என்று தெரிவுக்குழு முடிவு செய்தால் அதை வாங்க முடியாது. நல்லப் புத்தகங்களைச் சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய புத்தகங்களைக் கண்டிப்பாக வாங்குவோம். இந்த ஆண்டு ஆணை கிடைத்த பதிப்பாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கு மேல். முன்பு இருந்த ஆண்டுகளை விட அதிகம். சில விஷயங்கள் எங்கேயாவது விடுபட்டுப் போயிருக்கலாம். எங்கள் கவனத்திற்குக் கொண்டு வந்தால் அதைத் தீர்க்க முயற்சி செய்யப்படும்.

பதிப்பாளர்களுடைய பிரச்சனைகளைக் கலந்து பேசுவதற்குத் திட்டம் உள்ளதா?

மாண்புமிகு கல்வி அமைச்சர் கொண்டு வந்த 'நமது உலகம்' நூலகத் திட்டத்தில் பல முக்கியமான கூறுகளில் ஒன்று மூன்று மாதத்திற்கு ஒரு முறை, பதிப்பாளர் மற்றும் புத்தக விற்பனையாளர்களுக்குக் குறைதீர்ப்பு கூட்டம் நடத்துவது. முதல் கூட்டத்திற்கு மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கலந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. அடுத்த மாதத்தில் கூட்ட இருக்கிறோம். அப்போது ஆக்கப்பூர்வமாக ஆலோசனைகள் பெறப்பட்டு அரசுக்கு அனுப்பி, ஒப்புதல் பெறப்பட்டு, எந்த அளவுக்கு உதவ முடியுமோ அந்த அளவுக்கு இந்தத் துறை உதவி செய்யும்.

நூலகப் பணியாளர்கள் பற்றிக் கூறுங்கள்?

கிட்டத்தட்ட நாலாயிரம் நூலகங்களில் ஆறாயிரம் பணியிடங்கள் உள்ளன. 1982-லிருந்து நீதிமன்ற வழக்கு ஒன்று இருந்தது. அது தற்போது அரசு தனிக்கவனம் செலுத்தி நல்ல முடிவுக்கு கொண்டு வர உள்ளது. இது சீனியாரிட்டி லிஸ்ட் பிரச்சனைதான். அதைச் சீக்கிரம் வெளியிட உள்ளோம். சுமார் 1200 காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. இந்த வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தவுடன், சீனியாரிட்டிபடி பதவிகள் கொடுக்கப்பட்ட பிறகு மீதமுள்ள காலி இடங்கள் வருகின்ற மார்ச் மாதத்திற்குள் நிரப்ப அரசு முயற்சி எடுத்து வருகின்றது.

ஊர்ப்புற நூலகர்கள் தொகுப்பு ஊதியமாக 1500 ரூபாய் பெற்றுக் கொண்டு இருந்தார்கள். இனிமேல் இவர்கள் சிறப்பு காலமுனை ஊதியமாக ஐயாயிரத்து ஐநூறு ரூபாய் பெறுவார்கள். நீண்ட காலமாகப் பணியாற்றி நிரந்தரமாகாத ஊழியர்கள் விரைவில் நிரந்தரமாக்குவதற்கு அரசு ஆணை பிறப்பிக்கப்படும். எங்கள் ஊழியர்களின் மகிழ்ச்சிக்குக் காரணம் இந்த அரசுதான். இந்த ஊதிய உயர்வினால் பணியாளர்களிடையே உள்ள வேலைச் சுணக்கம் குறைந்து உற்சாகமாகப் பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

நூலகங்களில் வாசகர் வட்டச் செயல்பாடுகள் எப்படி உள்ளது?

வாசகர் வட்டம் நன்றாகச் செயல்படுகிறது. ஒவ்வொரு வாசகர் வட்டத்திலும் 12 அல்லது 13 பேர் கொண்ட குழு அமைக்கப்படுகின்றது. அதில் நூலகர் செயலாளராகவும், வாசகர் ஒருவர் தலைவராகவும் இருப்பார். ஆசிரியர்களும், மாணவர்களும், பொதுமக்களும் உறுப்பினர்களாக இருப்பர், மாதம் ஒருமுறை கட்டாயமாகக் கூட்டம் நடத்த வேண்டும். நூலகத்தை மேம்படுத்த, தேவைகளைப் பூர்த்தி செய்ய என்ன செய்ய வேண்டும் என்பதையும், அந்த மாதத்தில் படித்த இரண்டு நூல்களை விமர்சனம் செய்வதும், புதிய நூல்களை அறிமுகப்படுத்துவதும் நடக்கிறது. கரூர் மாவட்டத்தில் ஒரு நூலகத்தில் வாசகர் வட்டத்தைத் தாண்டி சிந்தனை முற்றம் என்ற இதே நிகழ்ச்சியை வாரம் ஒரு முறை நடத்துகிறார்கள். இது போன்று பல மாவட்டங்களில் நடைபெறுகிறது.

இன்றைக்கு இருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப நூல்களின் உற்பத்தி, நூலகங்களின் செயல்பாடு இருக்கிறது என்று நம்புகிறீர்களா?

மக்கள் தொகைக்கு ஏற்ப இன்னும் நிறைய நூலகங்கள் திறக்கப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இருநூற்றி ஐம்பது நூலகங்களாவது புதியதாக திறக்க வேண்டும் என்று பொதுமக்களிடமிருந்தும், மக்கள் பிரதிநிதிகளிடமிருந்தும் கோரிக்கைகள் வருகின்றன. தேவையின் அடிப்படையிலும், நிதி ஆதாரத்தின் அடிப்படையிலும் ஆண்டொன்றுக்கு நூறு முதல் நூற்றி ஐம்பது நூலகங்கள் திறப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது.

- க.அறிவொளி

நேர்காணல்: முத்தையா வெள்ளையன் 

Pin It