உச்சநீதி மன்றம் தீர்ப்பு

சமூக வலைத்தளங்களில் ஆட்சியாளர்களுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் எதிராகக் கருத்துத் தெரிவித்தாலே, அதை கொடுங்குற்றம் எனக் கருதி சிறைத் தண்டனை விதிக்கும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66(A) பிரிவை நீக்கம் செய்து, 2015 மார்ச் 24 - அன்று, உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிபதிகள் செல மேஸ்வர் மற்றும் ரோஹிண்டன் நாரிமன் ஆகியோர் இத்தீர்ப்பை வழங்கினர்.

மக்களோடு நின்று - மக்களைப் பாதுகாக்க வேண்டிய ஊடகங்கள், முதலாளிய ஒட்டுண்ணி வலைப் பின்னலில் இணைந்து மக்களுக்குத் துரோகமிழைக்கின்றன. எனவே தான், மக்களே கருத்துக் கூறும் _ திறனாய்வு செய்யும் சமூக வலைத் தளங்கள் _ கருத்துருவாக்கம் செய்யும் ஊடகமாக வளர்ந்து வருகின்றது. இது, அரசுக்கும் அதிகார வர்க்கத்திற்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவேதான், அதை ‘முறைப்படுத்துகிறோம்’என்ற பெயரில், மத்திய _- மாநில அரசுகள் முடக்கி வைக்க முயலுகின்றன.

அரசுக்கு எதிரான மக்கள் கருத்துகளை மட்டுப் படுத்த வேண்டுமென நினைக்கும் அதிகார வர்க்கம், அதற்கான கருவியாகப் பல ஒடுக்குமுறைச் சட்டங் களைக் கொண்டு வருகின்றன. அதுவும், ‘அராபிய வசந்தம்’எழுச்சிக்குப் பிறகு உலகெங்கிலும் உள்ள சர்வாதிகார நாடுகளும், ஏகாதிபத்தியங்களும் சமூக ஊடகங்கள் மீதான தங்கள் தாக்குதலைத் தீவிரப்படுத் தியப் பிறகு, நிலைமை மோசமானது.

2000ஆம் ஆண்டு வாஜ்பாயி தலைமையிலான பா.ச.க. அரசால், தகவல் தொழில்நுட்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. பின்னர், 2008ஆம் ஆண்டு காங்கிரசு - மன்மோகன் சிங் அரசு, அதிலொரு திருத்தம் மேற்கொண்டு 66(A) என்ற பிரிவை இணைத்தது. அப்பிரிவின்படி, “பிறர் மீது அருவருப்பான, அச்சுறுத் தக்கூடிய, தொந்தரவு தரக்கூடிய, ஆபத்து விளைவிக்கக் கூடிய, இழிவுபடுத்தக்கூடிய, மனதைக் காயப்படுத் தக்கூடிய, பகைமையைப் பரப்பக்கூடிய, வெறுப்பைப் பரப்பக்கூடிய தகவல்களை மின்னணுக் கருவிகள் மூலமாக பரப்புவது தண்டனைக் குரிய குற்றம்” என்று வரையறுக் கப்பட்டது.

இது மக்களின் கருத்துரிமைக்கு நேர் எதிரானக் கொடூரமான ஒடுக்குமுறை என அப்போதே, சமூக ஆர்வலர்கள் கூறினர்.

இந்நிலையில், இது போதா தென்று, 2011ஆம் ஆண்டு இச் சட்டத்தில் மேலும் சில கொடும் பிரிவுகள் சேர்க்கப்பட்டன. அத்திருத்தங்களின்படி, “இனவாதத் தன்மையுடைய, பல்வேறு மொழியினங்களுக்கிடையில் பகைமை யைத் தூண்டக்கூடிய அல்லது அச்சுறுத்தக்கூடிய அல்லது தீமை பயக்கக்கூடிய அல்லது சட்ட விரோதத் தன்மையுடைய அல்லது வேறு வகையில் எதிர்க்கப்பட வேண்டிய தகவல் பரிமாற்றங்கள்”தண்டனைக்குரியக் குற்றங்கள் என வரையறுக்கப் பட்டன. மேலும், இந்தியாவின் நட்பு நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண் மைக்கு எதிராகக் கருத்துப் பரப்புவதும் தண்டனைக் குரிய குற்றமாக இச்சட்டம் கூறியது.

இத்திருத்தங்களின்படி, முகநூல் _ சுட்டுரை (ட்விட்டர்) _- வலைப் பதிவு போன்ற சமூக வலைத்தளங் களில் கருத்துத் தெரிவிப்பவர்களின் கருத்துகளை, ஒருவர் தனது மனம் புண்படுகிறது என புகார் அளித் தாலே போதும், அதை எழுதிய வரை சிறையில் அடைக்க வழிவகை செய்யப்பட்டது.

அதாவது, "எரிச்சலூட்டுவது', "தர்மசங்கடம் ஏற்படுத்துவது', "ஆட்சேபகரமானது', "பாதிப்பை ஏற்படுத்துவது”போன்ற தெளிவில் லாத வார்த்தைகளைக் கொண்டு, இனப் படுகொலை _ ஊழல் _- அரசின் எதேச்சதிகாரம் என எந்த வொரு அரசு நடவடிக்கை குறித் தும் இணையத்தில் எழுத முடியாத நிலை, இப்பிரிவின் மூலம் நுணுக்க மாக உருவாக்கப்பட்டது.

இச்சட்டத் திருத்தத்தின் மூலம், ஆட்சியாளர்களும், அரசியல் வாதிகளும் சமூக வலைத்தளங் களில் தமக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த பலரை தொடர்ச்சியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர்.

2011ஆம் ஆண்டு ஏப்ரலில், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கண்ணியமான முறையில் திறனாய்வு செய்து கருத்துப் படம் வெளியிட்ட ஜாதவ்பூர் பல் கலைக் கழக வேதியியல் பேரா சிரியர் அம்பிகேஷ் மகாபாத்ரா, 66(A) பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப் பட்டார்.

2012ஆம் ஆண்டு செப்டம்பர் 10 அன்று, இந்திய ஆட்சியாளர் களின் அவலங்களை கருத்துப் படமாகத் தீட்டிய ஓவியர் அசிம் திரிவேதி, அவருடைய முகநூல் படங்களுக்காகவே கைது செய்யப் பட்டு, சிறையிலடைக்கப் பட்டார்.

2012ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று, சிவசேனைத் தலைவர் பால் தாக்கரே குறித்து முகநூலில் எழுதியதற்காக, ஷஹீன் தாதா,- ரெணு ஆகிய இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

அதே மாதத்தில், இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தை திறனாய்வு செய்து எழுதியதற்காக புதுச் சேரியைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோர் இரவி சிறீதர் என்ப வர் தகவல் தொழில்நுட்பச் சட்டத் தின்கீழ், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக் கப்பட்டார். இதுபோன்ற பல கைது கள் நாடெங்கும் இச் சட்டத்தின் மூலமாகவே அரங்கேறின.

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்தே, 2012 நவம்பர் 29 அன்று, தில்லி சட்டக் கல்லூரி மாணவி சிரேயா சிங்கல் என்பவர், கருத்துரிமைக்கு எதிரான 66(கி) பிரிவை நீக்கம் செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார்.

2012ஆம் ஆண்டு திசம்பரில், 66(A) பிரிவுகளின் கீழ் காவல்துறை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மக்களவையில் எதிர்க் கட்சிகள் புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, அப்பிரிவைப் பயன் படுத்த சில கட்டுப்பாடுகள் விதிக் கப்பட்டன. எனினும், கைது நடவ டிக்கைகள் நிறுத்தப்படவில்லை.

இதனையடுத்து, 2013 பிப்ரவரி யில், மும்பை உயர் நீதிமன்றத்தில் 66 (A) பிரிவை நீக்க வேண்டுமென பொதுநல வழக்கொன்று தொடுக் கப்பட்டது.

அதன்பிறகு, 2013 மே மாதம், மேலதிகாரியின் அறிவுறுத்தலோடு தான் இதுபோன்ற கைது நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டு மென பொத்தாம் பொதுவில் ஒரு அறிவிப்பை உச்ச நீதிமன்றம் வழங்கியது. ஆனாலும், கைதுகள் நிற்கவில்லை.

இந்நிலையில், 2014 மார்ச் மாதம், உத்திரப்பிரதேசத்தில் சமாஜ் வாதிக் கட்சித் தலைவர் ஒருவரை விமர்சனம் செய்த பதினோறாம் வகுப்பு பள்ளி மாணவர், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இது உச்ச நீதிமன்ற அறிவுரையை மீறியச் செயல் என நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட பிறகே, சிரேயா சிங்கல் தாக்கல் செய்த வழக்கு முழுமையாக விசாரிக் கப்பட்டு, தற்போது அதில் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அரசியலமைப்பு விதி 19 வழங்கியுள்ள கருத்துரிமையைப் பாதுகாக்கும் வகையிலான இத் தீர்ப்பு, வரவேற்கத்தக்கதே. எனினும், அரசுக்கு எதிரான கருத்துரிமையை முடக்க நினைக்கும், இந்திய அரசுக்கு அதற்கென வேறு சில சட்டக் கருவிகளும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

இத்தீர்ப்பில்கூட, வலைத்தள கருத்துப் பதிவுகளுக்குக் கைது நடவடிக்கை என்றுள்ள பிரிவை நீக்கியுள்ள நீதிபதிகள், ஆட்சேபகர மான, சமூக அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பதிவு களை முடக்கி வைக்கும் 69கி பிரிவையும், அத்தவறான நடவடிக் கைக்கு எதிராக இழப்பீடு கோரு வதிலிருந்து விலக்கு அளிக்கும் 79-ஆவது பிரிவையும், சில நிபந்தனை களுடன் தொடர அனுமதி அளித் துள்ளனர்.

அதாவது, ஒர் அரசுக்கு எதி ரான எந்தவொரு பதிவையும் நீக்க அரசுக்கு அதிகாரம் வழங்குகின்ற பிரிவுகள் இன்னும் இச்சட்டத்தின் படி நீடிக்கின்றன. கைது நடவடிக் கைகளுக்கு மட்டுமே தடை வழங்கப் பட்டுள்ளது கவனிக்கத்தக்க தாகும்.

கடந்த, 2014 பிற்பாதியில் மட்டும் இந்திய அரசின் வேண்டு கோளுக்கு இணங்க இதுவரை 5,832 முகநூல் பதிவுகள் அரசுக்கு எதிரானவை என முடக்கப்பட்டி ருக்கின்றன. இனியும், அவை தொடரும். ஆனால், கைது நட வடிக்கைகள் தொடராது என்ப தற்கு உத்திரவாதம் இல்லை.

அரசுக்கு எதிரான நமது கருத்துகளை ‘அவதூறு’என்றும், சமூகங்களுக்கிடையே பிளவு ஏற்படுத்துவது என்றும் கூறி, இந்தியத் தண்டனைச் சட்டத்தின் வேறு சில பிரிவுகளைக் கொண்டு காவல் துறையினர் கைது செய்ய முற்பட லாம். எனவே, கருத்துரிமைக்கு எதிரான இந்தப் பிரிவுகளை நீக்கவும் நாம் போராட வேண்டி யுள்ளது.

கருத்துரிமைக்கான போராட்டக்களத்தில், மேற்கண்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு திசைகாட்டும் தீர்ப்பு என்பதில் ஐயமில்லை!

Pin It