நினைக்கும் தோறும், நினைக்கும் தோறும் நெஞ்சைக் கனக்க வைக்கும் இனப்படுகொலையையும், தமிழீழ விடுதலைக்கு வித்தான மாவீரர்களையும் நினைவு கூரும் மாவீரர் நாள் 26-11-2012 அன்றும் அதைத் தொடர்ந்து ஒருவாரகாலமும் உலகெங்கிலும் உள்ள புலம்பெயர் தமிழர்களாலும், தமிழ் நாட்டுத் தமிழர்களாலும் கடைபிடிக்கப்படவிருக்கிறது. தமிழீழத்தில் தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் உரை நிகழ்த்த முடியாத சூழல் இந்த ஆண்டும் நீடிக்கிறது.
 
தமிழீழ விடுதலைக்கு உயிரீகம் செய்த விடுதலைப்புலி மாவீரர்களுக்கும், இனப்படுகொலைப் போரில் உயிரிழந்த பல்லாயிரம் ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கம்.

இந்த 21-ஆம் நூற்றாண்டின் முதல் பத்தாண்டு முடிவதற்குள்ளாகவே உலகம் இதுவரைக் கண்டிராத மிகக் கொடுமையான இனப்படுகொலையை முள்ளிவாய்க்காலில் சந்தித்தது. தனித்து விடப்பட்ட ஒரு தேசிய இனம் உலகின் முக்கிய வல்லரசுகளின் துணையோடு, இட்லரைவிடவும் கொடுமையான சிங்கள சிறீலங்கா இனவாத அரசால் இன அழிப்புக்கு உள்ளானது.

2008-2009 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்த மனிதப் பேரவலம் ஊடகங்கள் அனுமதிக்கப்படாத வன்னிப் பெருநிலத்தில் நடந்தேறியது என்றாலும் இது சாட்சிகளற்ற போரல்ல. உலக நாடுகளின் தூதரகஙகளும், அவை சார்ந்த உளவு நிறுவனங்களும் நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்க, ஐ.நா வின் செயற்கைக்கோள் படமெடுத்து அனுப்பிக் கொண்டிருக்க, தமிழராகப் பிறந்த ஒரே காரணத்திற்காக பல்லாயிரம் மக்கள் நாள் தவறாமல் கொன்றழிக்கப்பட்டார்கள். அவர்களது தாயகம் தரைமட்டமாக்கப்பட்டது. தமிழீழத் தாயகம் போலவே தமிழீழப் பெண்களின் உடலும் ஆக்கிரமித்து அழிக்கப்பட்டது. தமிழீழத்திலும், தமிழ் நாட்டிலும், புலம்பெயர் தேசங்களிலும் " உலக சமுதாயமே, இந்தப் போரை நிறுத்து " என்று தமிழர்கள் எழுப்பிய மரண ஓலத்தை நாகரிக நாடுகள் செவிமடுக்க முன்வரவில்லை.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர் ' என்று நியாயப்படுத்தப்பட்ட இந்தப் போர் முடிந்து மூன்று ஆண்டுகள் கடந்தப் பின்னும் ஈழத்தமிழர்களின் கொடுந்துயரம் ஓயவில்லை. முள்ளிவாய்க்காலி லேயே மரணித்திருக்கலாம் என்று எஞ்சியுள்ள மக்கள் அரற்றும் அளவுக்கு அன்றாடம் தமிழீழ மண்ணில் கொடுமைகள் அரங்கேறுகின்றன. முள்ளிவாய்க்காலைவிட முள்வேலி முகாம் வாழ்க்கை கொடுமையானது, முகாமைவிட்டு வெளியேற்றப்பட்ட வாழ்க்கை அதைவிட அவலமானது என்ற வகையில் ஈழத்தமிழர்கள் சித்திரவதையில் சிக்கிக்கொண்டுள்ளனர்.

காணிகள் பறிக்கப்பட்டு, வாழ்வாதாரம் அழிக்கப்பட்டு, இல்லங்களும் வழிபாட்டு இடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு, தமிழர் தாயகம் சிங்கள - புத்த மயமாக்கப்பட்டு அங்கு அடுத்தக்கட்ட இனவதை - கட்டமைப்பு இனப்படுகொலை (Structural Genocide )- தொடர்கிறது. வடக்கு, கிழக்கை கூறுபோட்டு கலப்பின மாகாணங்களை உருவாக்கி, தமிழீழ தாயகத்தையே இல்லாது ஒழிக்கும் இன அழிப்பு முயற்சியில் இராசபட்சேயின் சிங்களப் பேரினவாத அரசு முனைப்புக் காட்டி வருகிறது.

ஆனால் எல்லாம் முடிந்தபிறகு, இப்போதுதான் வன்னிப் பெருநிலத்தில் 2009-ல் குற்றம் நடந்திருப்பதாக அதுவும் போர்க்குற்றம் நடந்திருப்பதாக பன்னாட்டுச் சமூகம் முணுமுணுக்கத் தொடங்கியிருக்கிறது. இதுவும் கூட புலம்பெயர் ஈழத்தமிழர்களின் இடைவிடாத அரசியல் அழுத்தத்தால் நடந்தது என்பதே உண்மை. சுயேட்சையான டப்ளின் தீர்பாயத்தின் அறிக்கையும், சேனல் 4 வெளிப்படுத்திய இனப்படுகொலைக் காட்சிகளும் மேற்குலக நாடுகளின் மனச்சான்றை உலுக்கின. இவற்றிற்குப் பிறகே உலகம் விழித்துப்பார்க்கத் தொடங்கியது. இந்தத் திசையில் ஐ.நா பொதுச்செயலாளரின் வல்லுனர் குழு அளித்த அறிக்கை முக்கியமான முன்னேற்றத்தைக் குறித்தது.

ஆயினும் இந்த அறிக்கை கூட வன்னிப்பெருநிலத்தில் நடந்தது போர்க்குற்றம் என்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்றும் மட்டுமே வரையறுத்தது. இந்த அறிக்கை இன அழிப்பு (Persecution) நடந்ததை ஏற்றுக்கொண்டாலும் நடந்திருப்பது கொடுமையான இனப்படுகொலை (Genocide) என வலியுறுத்தவில்லை. 2008-2009ல் இறுதிக்கட்ட போர் நடந்தபோது நிகழ்ந்த குற்றங்களை மட்டுமே விசாரிக்குமாறு இக்குழு பணிக்கப்பட்டிருந்தது. அதற்கு ஏற்பவே இதன் அறிக்கையும் அமைய முடிந்தது.

மிகவும் வரம்புக்குட்பட்ட இந்த அறிக்கைக்கு கூட ஐ.நா மனித உரிமை மன்றத்தில் என்ன நிகழ்ந்தது என்பதை உலகமே பார்த்தது. இராசபட்சே அரசு தான் செய்த குற்றங்களை தானே விசாரித்து முடிவு கூறுமாறு ஐ.நா மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கா தீர்மானத்தை முன் வைத்தது. ஐ.நா மனித உரிமை மன்றத்தின் எந்த வகைத்தலையீடும் இல்லாதவாறு இந்தியா அத்தீர்மானத்தை மேலும் நீர்த்துப் போகச் செய்தது.

இதன் மீது 2012 நவம்பர் 5-ல் ஐ.நா மனித உரிமை மன்றம் நடத்திய பதினெட்டாவது கூட்டத்தின் மீளாய்வானது, இத்தீர்மானத்தால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை என்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டியது.

பேரழிவுப் போர் முடிந்த கையோடு 2009ல் நடந்த வாக்கெடுப்பில் மட்டுமின்றி, கடந்த ஆண்டும், இப்போதும் ஐ.நா மனித உரிமை மன்றத்தில் கியூபா, வெனிசுவேலா உள்ளிட்ட 'முற்போக்கு' நாடுகள் இராசபட்சேயின் பக்கம் மீண்டும் மீண்டும் நின்றதை அனைவரும் அறிவர்.

இதற்கு முன்னர் உணராதிருந்தாலும் இப்போதாவது உலக அரசியலின் உண்மை நிலையை தமிழர்கள் உணரவேண்டும். பன்னாட்டு அரசியலில் மிகப் பெரும்பாலான நேரங்களில் மனித நேயம், மானுட ஞாயம் என்பதற்கெல்லாம் இடமே இல்லை என்பதே அந்த உண்மை. எல்லா நாட்டு அரசுகளும் தங்கள் தங்கள் தேச நலனை அல்லது தேச ஆதிக்க நலனை முன் வைத்தே இயங்குகின்றன. இந்த உலக சதுரங்கக் காய் நகர்த்தல்களுக்கிடையில் நம்முடைய ஞாயத்தை, தேச உரிமையை எப்படி முன்னெடுப்பது என்பதை உணர்ந்து, செயல்படுவதே தேவையாகும்.

நாம் ஏற்கெனவே எடுத்துக் கூறியது போல், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை சாட்சிகளற்று நடந்த குற்றமல்ல. வல்லரசுகளின் துணையோடும், பெரும்பாலான நாட்டு அரசுகளின் மவுன சம்மதத்தோடும் நடந்தேறிய பேரழிவு ஆகும். போர் முடிந்து, இப்போது தொடரும் இனவதைகளும், தாயக அழிப்பும் உலக நாட்டு அரசுகள் அறியாமல் நடப்பதல்ல.

போர்க்குற்றம், மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்ற அளவிலாவது சிங்கள ஆட்சியாளர்கள் தண்டிக்கப் படவேண்டும் என்பது தேவைதான். என்றாலும், நடந்து முடிந்தது இனப் படுகொலைப் போர் என்ற உண்மையையும், சிங்கள சிறீலங்கா இனவாத அரசக் கட்டமைப்புக்குள் ஈழத்தமிழ்ர்கள் சம உரிமையோடு வாழ்வதற்கு வாய்ப்பே இல்லை என்பதையும் உலக சமூகம் ஏற்கச் செய்வதே அடுத்தக் கட்ட நகர்விற்கான வழியாகும். தனித்த வரலாறும் பண்பாடும் கொண்டு விளங்கும் தனித்தன்மையுள்ள தேசம்தான் தமிழீழம் என்பது உணர்த்தப்பட வேண்டும்.

வெளிப்படையான இந்த உண்மையை பெரும்பாலான நாட்டு அரசுகள் தெரிந்தே வைத்திருக்கிறன. ஏனெனில், தனித்த தேச அரசோடு விளங்கிய தமிழீழம் சிங்களத்தோடு ஒற்றை ஆட்சியில் கட்டிப்போடப்பட்டது பிரித்தானிய காலனி ஆட்சிக்குப் பிறகு நடைபெற்ற அண்மைக் கால வரலாறாகும்.

ஈழத்தமிழர்கள் ஒற்றை சிறீலங்காவில் வாழும் சிறுபான்மை சமூகம் அல்லர். அவர்கள் வரலாற்று ஓட்டத்தில் சிறீலங்காவால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தேசத்தவர் ஆவர். இழந்த இறையாண்மையை மீட்டுக்கொள்ள தகுதியுள்ள தேசிய இனத்தவர் ஆவர்.

மலைபோன்ற இந்த உண்மையை உலக நாட்டு அரசுகள் தாமாக ஏற்க மாட்டா. முள்ளிவாய்க்கால் குறித்த ஐ.நா தீர்மானம் படும் பாட்டை வைத்தே இதனை தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும். பன்னாட்டு அரசுகளுக்கு மக்கள் சமூகத்தின் அழுத்தத்தை ஏற்படுத்தி ஏற்கச்செய்ய வேண்டும்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்?

உலகெங்கிலும் உள்ள ஒடுக்கப்பட்ட தேசங்கள், ஒதுக்கப்பட்ட இனங்கள் ஆகியவற்றோடும், எல்லா நாடுகளிலும் உள்ள மக்கள் சமூகங்களோடும் (civil society) இயக்க வழிப்பட்ட உறவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒருசமூகத்திற்கு இன்னொரு சமூகம் உரிமைப் போராட்டங்களில் ஆதரவு தெரிவிக்கும் "மக்கள் உலகை" கட்டி எழுப்ப வேண்டும்.

மேற்குலக நாடுகளைக் கொண்ட முதல் உலகம், சீனா, ரசியா போன்ற நாடுகளைக் கொண்ட இரண்டாம் உலகம், இந்தியா, பிரேசில், வெனிசுவேலா போன்ற நாடுகளைக் கொண்ட மூன்றாம் உலகம் ஆகிய அனைத்தையும் சேர்ந்த மக்கள் உலகம் ஆகும் இது. நடைமுறையில் இது நான்காம் உலகமாக செயல்பட வேண்டும்.

தமிழர்களைப் பொறுத்தவரையில் இதன் தொடக்கப் புள்ளி எது?.

அது தமிழ்ச் சர்வதேசியமே (Thamizh Internationalism) ஆகும். பல்வேறு நாடுகளில் சிறுபான்மை சமூகமாக வாழும் தமிழர்களின் வாழ்வுரிமையைப் பாதுகாப்பதற்கும் இதுவே அரணாக அமையும். தமிழ்ச் சர்வதேசியத்தை அச்சாகக் கொண்டே மேற்சொன்ன நான்காம் உலகைக் கட்டியெழுப்ப முடியும். 

சிங்கள சிறீலங்கா போலவே ஆரிய இந்தியாவும் தமிழினத்தின் மாற்றமுடியாத பகை நாடு என்ற அரசியல் தெளிவே தமிழ்ச் சர்வதேசியத்தின் அடித்தளமாகும். தமிழீழம் போலவே தமிழ் நாடும் ஆக்கிரமிக்கப்பட்ட அடிமைத்தேசம் என்ற பேருண்மையை ஏற்பது இதன் முன் நிபந்தனையாகும். தமிழீழமும், தமிழ் நாடும் வெவ்வேறு வரலாற்றுப் போக்கில் உருவான தமிழர்களின் வரலாற்று தாயகங்கள் ஆகும். இந்த இரண்டு தாயகங்களும் தத்தமது வழியில் தமக்கான இறையாண்மையுள்ள தேச அரசுகளை படைத்துக்கொள்ள வேண்டியது அடிப்படைத் தேவையாகும்.

தமிழீழம் வரலாற்று வழிப்பட்ட தனித்த தேசம் என்ற உண்மையை உலக நாடுகள் ஏற்காமல் இருப்பதற்கு முதன்மையான காரணம் சிங்கள சிறீலங்கா அல்ல. மாறாக, ஆரிய இந்தியாதான் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கி வருகிறோம். தமிழ் நாட்டுத் தமிழர்களும், உலகம் முழுவதும் பரவி வாழும் ஈழத்தமிழர்களும் இதனை எவ்வளவு விரைவில் ஏற்கிறோமோ அந்த அளவுக்கே நமது விடுதலை பயணத்தின் அடுத்தக்கட்ட நகர்வு அமையும்.

சிங்கள சிறீலங்காவின் பிடியிலிருந்து தமிழீழத் தேசம் விடுதலை பெறுவதும், ஆரிய இந்தியாவின் அடிமைத்தளையிலிருந்து தமிழ் நாடு விடுதலை பெறுவதும் இவ்விரண்டு தேசிய இனங்களுக்கும் முதல் தேவையாகும்.

இந்தப் போராட்டத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்துகொள்வதிலிருந்தே தமிழ்ச் சர்வதேசியம் என்ற அச்சு நிறுவப்படும். இந்த அச்சின் சுழற்சிதான் நான்காவது உலக ஒற்றுமையை தமிழர்களுக்கு ஆதரவாக ஈட்டித்தரும். இந்த தமிழ்ச் சர்வதேசியம் தான் உலகத் தமிழர்களுக்கும் பாதுகாப்பு அளிக்கும்.

புவிசார் அரசியல் காய் நகர்த்தலில் இந்தியாவுக்கு எதிரான அணிவகுப்பு நமது தேசங்களின் விடுதலைப் போராட்டத்திற்கு எவ்வளவு பெரிய வாய்ப்பை திறந்துவிடும் என்பதை உலக அரசியலை உற்று நோக்கினால் புரிந்துகொள்ளலாம்.

தமிழ்ச் சர்வதேசியத்தை படைப்போம். நான்காவது உலகம் நிறுவுவதை நோக்கி நகர்வோம்.

Pin It