தமிழ்நாடு மின்வாரியம் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விட்ட்தோ என்று ஐயுற வேண்டியுள்ளது. 2012-13 ஆம் ஆண்டின்போது ரூ.14,457 கோடிக்கு மின் கட்டணத்தை உயர்த்திக் கொள்வதற்கான அனுமதியை வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையைத் தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் முன்வைத்திருந்தது. இந்த கோரிக்கையை ஆய்வு செய்த ஒழுங்குமுறை ஆணையம் அதன் 30-3-2012 தேதியிட்ட மின்கட்டண உயர்வுக்கான உத்தரவில் ரூ.7,874 கோடிக்குக் கட்டண உயர்வையே விதித்தது. 

2012-13 ஆம் ஆண்டின்போது 8787.4 கோடி யூனிட் மின்சாரம் தேவைப்படுவதால்தான் ரூ.14,457 கோடிக்கான கட்டண உயர்வு தேவை என்ற தமிழ்நாடு மின்வாரியத்தின் வாதம் தவறானது என்றும், இந்த ஆண்டில் 7078.4 கோடி யூனிட் மின்சாரமே தேவைப்படும் என்று ஒழுங்குமுறை ஆணையம் அந்த உத்தரவில் தெரிவித் திருந்தது.மேலும் கூடுதலான விலை வைத்து மின்சாரத்தை மின்வாரியத்திற்கு விற்றுக்கொண்டிருக்கும் தனியார் மின் உற்பத்தியாளர்களான ஜி.எம்.ஆர், பி.பி.என், மதுரை பவர், சாமல்பட்டி பவர் ஆகிய நான்கு நிறுனங்களிடமிருந்தும் இந்த ஆண்டின்போது மின்சாரம் வாங்கக் கூடாது என்றும் கூறியிருந்தது.கூடுதலாக, மின்சார சந்தையிலிருந்தும் இந்த ஆண்டின்போது மின்சாரத்தினைக் கொள்முதல் செய்யவேண்டியதில்லை என்றும் அது கண்டறிந்திருந்தது. அவசரத் தேவை ஏற்படும்போது வேண்டுமென்றால் 200 கோடி யூனிட்டுகளை மட்டும் ரூ.41யூனிட் என்ற அடிப்படையில் ரூ.800 கோடிக்கு மின்சாரத்தை வாங்கிக் கொள்ளலாம் என்று அது தன் ஆணையில் கூறியிருந்தது. 

ஒழுங்குமுறை ஆணையத்தின் இந்த உத்தரவு 1-4-2012 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்தது. ஆனாலும் அந்த உத்தரவுக்கு மாறாக இன்றுவரை தமிழ்நாடு மின்வாரியம் ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை விற்கும் நான்கு தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து அதிகக் கட்டணத்திற்கு மின்சாரம் வாங்கிக் கொண்டுதான் இருக்கிறது. 

இது போதாதென்று வெளி மாநிலத்திலிருந்து 1,079.8 கோடி யூனிட்டும், தமிழ்நாட்டின் பிற தனியார் மின் உற்பத்தியாளர்களிடம் இருந்து 683.3 கோடி யூனிட்டும், மேற்கூறிய நான்கு ஒப்பந்தத் தனியார் மின் உற்பத்தியாளர் களிடமிருந்து சுமார் 420 கோடி யூனிட்டையும் – ஆக 2,183.1 கோடி யூனிட் மின்சாரத்தினை – ரூ.13,175 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும் என்பதற்கான அனுமதியை ஒழுங்குமுறை ஆணையத்திடம் கோரியது. 

ஆணையத்தால் அனுமதி மறுக்கப்பட்ட 1709 கோடி யூனிட்டுக்குப் பதிலாக, அதன் உத்தரவு வெளியான இரண்டு மாதத்திற்குள்ளகவே 2183.1 கோடி யூனிட் மின்சாரத்தினை வாங்க தமிழ்நாடு மின்வாரியம் அனுமதி கோரியுள்ளது விநோதமாயுள்ளது. அதாவது, மார்ச் மாதத்தில் 2012-13 ஆம் ஆண்டிற்கான மின் தேவை என்று அது முன் வைத்திருந்த 8787.4 கோடி யூனிட்டுக்குப் பதிலாக, இந்தத் தேவை 9261.5 கோடி யூனிட் என்று புதிதாக அது அறிவித்துள்ளது.இந்தக் கூடுதலான 2183.1 கோடி யூனிட்டை வாங்குவதற்கான அனுமதியையே ஒழுங்குமுறை ஆணையத்திடம் அது தற்சமயம் கோரியுள்ளது. 

ஒப்பந்தம் செய்யப்பட்ட தனியார் மின்சாரத்தின் விலை நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களால் உண்டானது.இதில் மாற்றுவதற்கு ஏதுமில்லை. 

ஆனால், மாநிலத்தில் உள்ள 17 பிற தனியார் மின் உற்பத்தியாளர்கள் ஒரே குரலில் அவர்கள் உற்பத்தி செய்யும் மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.6.28 இல் இருந்து ரூ.6.40 வரை விலை கோரியுள்ளார்கள். இதில் ஒரு உற்பத்தியாளரைத் தவிர மற்ற அனைத்து 16 மின் உற்பத்தியாளர்களும் “இந்துபாரத்” என்ற மின்உற்பத்தி நிறுவனத்தின் தலைமையில் ஒரே அணியில் செயல்படத் தொடங்கியுள்ளனர். 

இந்த 16 பிற தனியார் மின் உற்பத்தி நிலையங்களில் 9 நிலையங்கள் இயற்கை எரிவாயுவினையும், எஞ்சிய 8 நிலையங்கள் நிலக்கரியையும் எரிபொருளாகக் கொண்டவை. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, ஒப்பந்த அடிப்படையில் மின்சாரத்தை அளிக்கும் (இயற்கை எரிவாயுவை எரிபொருளாகக் கொண்ட) பென்னா (52.5 மெகாவாட்) மற்றும் அபான் (113 மெகாவாட்) ஆகிய மின் நிலையங்கள் தங்களுக்கான லாபத்துடனேயே ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.3.40-ற்குத்தான் விற்று வருகின்றன. அதேபோல, வெளிமாநில நிலக்கரி உபத்தியாளர்கள் தமிழகத்தின் எல்லையிலேயே தங்களின் மின்சாரத்தை யூனிட் ஒன்றுக்கு ரூ.4.26-க்கு அளிக்க முன்வந்துள்ளனர். இந்த நிலையில் இதே இயற்கை எரிவாயுவையும், நிலக்கரியையும் பயன்படுத்துகின்ற 16 பிற தனியார் மின் நிலையங்கள் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான விலையை ரூ.6.30 – ரூ.6.40 என்று முன்வைத்திருப்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும். 

2012 மார்ச் 30 ஆம் தேதியன்று அளித்த ஆணையில் 2012-13 ஆம் ஆண்டிற்கு 7078.4 கோடி யூனிட் மின்சாரமே தேவைப்படும் என்றும் தமிழ்நாடு மின்வாரியம் கோரியிருந்த அளவான 8787.4 கோடி மின்சாரத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக் குள்ளாகவே தமிழ்நாடு மின்வாரியம் 2012-13க்கான மின்தேவையை 9261.5 கோடி யூனிட் என்று புதிதாக அறிவித்துள்ளது.இந்த அளவு மின்சாரத்தை வாங்குவதற்கு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அது அனுமதியைக் கோரியபோது இரண்டு மாதங்களுக்கு முன்பு கறாராக மறுப்பு தெரிவித்திருந்த ஒழுங்குமுறை ஆணையம் என்ன காரணத்தாலோ இதற்கு தற்போது கறாரான பதிலை அளிக்கவில்லை. 

எனவேதான் “இந்துபாரத்” நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் இந்த 16 தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கும், ஒழுங்கு முறை ஆணையம் உட்பட பிற அரசு நிர்வாக எந்திரங்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வேண்டி உள்ளது. 

தமிழ்நாடு அரசு “மாநிலத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தை வெளிமாநிலத்தில் விற்கக்கூடாது” என்ற ஒரு உத்திரவை (GO 10 – dated 27-2-2009) வெளியிட்டது. 

இந்த ஆணைக்குப்பிறகு தனியார் மின் நிறுவனங்கள் தமிழ்நாடு மின்வாரியத்திடமே மின்சாரத்தை விற்க ம்டியும் என்ற நிலை எழுந்தது. இதனைச் சாதகமாகப் பயன்படுத்தி தனியாரிடம் அழுத்தமாக பேரம் பேசி குறைந்த விலைக்கு கொள்முதல் செய்திருக்க வேண்டும். ஆனால் நடந்ததோ நேர்மாறானது “வெளிமாநிலத்தில் நாங்கள் கூடுதல் இலாபத்திற்கு மின்சாரத்தை விற்றிருக்க முடியும் தமிழக அரசின் ஆணை இதை தடுத்துவிட்டது. எனவே நாங்கள் கேட்கும் விலை கொடுத்து மின்வாரியம் எங்கள் மின்சாரத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்” என இந்நிறுவனங்கள் அழுத்தம் கொடுத்தன.

தமிழக அரசு நினைத்திருந்தால் இதனைப் புறந்தள்ளியிருக்க முடியும். பொதுமக்கள் நலன் கருதி இவ்வாறு ஆணையிட அரசுக்கு அதிகாரம் உண்டு. ஆனால் இவர்கள் சொல்லும் விலையில் மின்சாரத்தை வாங்குவதும் இன்றுவரை தொடர் கதையாக இருக்கிறது. 

2009 இல் இவர்களின் மின்சாரத்தின் விலை யூனிட்டுக்கு ரூ.6.70. 

2010-11 இலும் இது யூனிட்டுக்கு ரூ.6.70 ஆகவே இருந்தது. 

2011 மே மாதத்தில் ஆட்சி மாற்றம் வந்தது.31.5.2011 இல் இவர்களிடம் இருந்து தமிழ்நாடு மின் வாரியம் மின்சாரம் வாங்குவதற்கான ஒராண்டுகால ஒப்பந்தம் முடிந்து போனது. ஒப்பந்தத்தைப் புதிய அரசு புதுப்பிக்குமா அல்லது ரத்து செய்யுமா என்ற நிலையிலும் அரசுடன் புதிய ஒப்பந்தம் செய்துகொள்ளாமலேயே இந்தத் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின் வலையத்திற்குள் தம் மின்சாரத்தை 1-6-2011 ஆம் நாளில் இருந்து ஏற்றுமதி செய்து வந்தன. இதுபோன்று அனுமதியின்றி, ஒப்பந்தங்களின்றி மின்வலையத்திற்குள் செலுத்தப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் செலுத்தத் தேவையில்லை என மத்திய மின் தீர்ப்பாயம் கூறியுள்ளது. ஆனாலும், மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இவர்கள் ஒப்பந்தமின்றி மின் வலையத்திற்குள் செலுத்திய மின்சாரத்திற்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.5.05 ஐ வழங்கிட வேண்டுமென மின் வாரியத்திற்கு உத்திரவிட்டது.இந்த செயல்பாடானது, தமிழகத்தின் ஒட்டுமொத்த மின் கட்டமைப்பே இவர்களது கையில் உள்ளதோ என்ற சந்தேகத்தை இது உருவாக்குகிறது. 

5=1-2012 இல் மின் கொள்முதலுக்கான ஒப்பந்தப்புள்ளியை தமிழ்நாடு மின் வாரியம் கோரியது.அப்போது பிற மாநிலத்தவரின் மின்சாரம் யூனிட் ஒன்றுக்கு ரு.4.26 என்றிருந்தது.ஆனால் தமிழகத்தின் 16 தனியார் மின்சார உற்பத்தியாளர்களோ யூனிட் ஒன்றுக்கு ரூ.6.30 வேண்டும் என்றனர்.இந்த விலையைக் குறைக்க அவர்கள் சம்மதிக்கவில்லை.அதோடு அவர்கள் நிற்கவில்லை. குறைந்த விலையில் கிடைக்கும் வெளி மாநில மின்சாரத்தைத் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்கு வதைத் தடுக்கும் முகமாக, மின்வாரியம் தன் ஒப்பந்தப்புள்ளியின் மீது எவ்வித நடவடிக்கையையும் எடுக்கக்கூடாது என உயர்நீதி மன்றத்தில் “இந்துபாரத்” நிறுவனம் தடை உத்திரவைப் பெற்றது. இதில் வேதனை என்னவென்றால், தமிழ்நாடு மின்சார வாரியம் இந்த உயர்நீதிமன்றத் தடை உத்திரவை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பதுதான். 

அதோடு நிற்காமல், தமிழக மின் உற்பத்தியாளர்களுக்கு மட்டும் வேறு ஒரு புதிய ஒப்பந்தப்புள்ளியை அது 22-3-2012 இல் கோரியது. இதற்குப் பின்னணியில் கமுக்க பேரங்கள் நடந்திருக்கும் என ஐயத்தை பின்னால் நடைபெற்ற நிகழ்வுகள் உறுதி செய்தன. 27-3-2012 தேதியன்று “இந்துபாரத்” நிறுவனம் அது தொடுத்திருந்த வழக்கினைத் திரும்பப் பெற்றுக் கொண்டது.அடுத்த நாளான 28-3-2012 இல் இரண்டாவது ஒப்பந்தப்புள்ளி – அது கோரப்பட்ட ஆறு நாட்களுக்குள் – திறக்கப்பட்டு, இந்த நிறுவனங்களால் முன்வைக்கப்பட்ட விலைகள் ஏற்கப்பட்டு விட்டன. 

21-5-2012 இல் வெளி மாநிலங்க்ளில் இருந்தும், தமிழகத்தின் தனியார் உற்பத்தி யாளர்களிடமிருந்தும் மின்சாரம் பெற தமிழ்நாடு மின்சார வாரியம் அனுமதிக்கு மனு செய்தது. இந்தக் கொள்முதலானது மக்களை நேரடியாகப் பாதிக்கும் செயலாதலால் மக்கள் முன்னிலையில் பொதுக் கருத்துக் கேட்புக்கு வைக்குமாறு ஒழுங்குமுறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர் அமைப்பு (த.நா.மி.பொ.அ) கோரிக்கை வைத்தது. 

கொள்முதல் விலையை தமிழ்நாடு மின்வாரியத்தின் ஒட்டுமொத்த இயக்குநர்கள் ஒப்புதலுடன் மின்வாரியம் முன்வைக்க வேண்டும் என்று ஒழுங்குமுறை ஆணையம் உத்திரவிட்டது. பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்திற்காக தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு (POWER ENGINEERS SOCIETY OF TAMILNADU- PESOT) முன்வைத்திருந்த வேண்டுகோளையும் ஒழுங்குமுறை ஆணையம் தன் உத்தரவில் பதிவு செய்தது. 

மேற்கூறிய தனியார் மின் உற்பத்தியாளர்கள் முழு வீச்சில் வெளியில் காத்திருக்க, 29-5-2012 அன்று மின் வாரிய இயக்குநர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் கடந்த ஆண்டின் விலையான ரூ.5.05-க்கு வாங்கலாம் என்று முடிவெடுக்கப்பட்ட்து. 

 உயர் நீதிமன்ற ஆணைப்படி 29.06.2012 அன்று மாலை 5.00 மணிக்கு மின்சார ஒழுங்குமுறை தனது விசாரணையை நடத்தியது இது மின்சாரம் கொள்முதல் தொடர்பானது. ஆனாலும் ஆணையம் இந்த விசாரணைப்பற்றி மாலை 4.00 மணி வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. 4.15 மணிக்கு மின்துறைப் பொறியாளர் அமைப்பைச் சேர்ந்த நாங்கள் ஆணையச் செயலாளரைத் தொடர்புகொண்டு விசாரித்த போதும், செயலாளர், ’வெப்சைட்’ டை பாருங்கள் என்று சொன்னாரே தவிர நேரிடையான பதிலைத் தரவில்லை. 4.17 மணிக்கு “வெப்சைட்’’ டை பார்த்த போதும் இது பற்றிய தகவல் இல்லை. எனினும் எங்களுக்குக் கிடைத்த தகவலை உறுதிப்படுத்திக்கொள்ள நேரிடையாக ஆணையத்திற்கு 4.50க்கு சென்றடைந்த போது விசாரணை நடக்க விருப்பது உறுதியாயிற்று. இதை எதிர்பார்த்து நாங்கள் பலருக்கு அவசரத் தகவல் கொடுத்த்தன் அடிப்படையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து திரு. பாலா, திரு. கோபிநாத் ஆகியோரும் ஒன்றிரண்டு பொதுமக்களும் வந்திருந்தனர். நமக்கு முன்பாகவே ஒப்பந்த புள்ளியில் பங்கேற்றுள்ள பல்வேறு மின் உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகளும் “இந்துபாரத்’ ம் வழக்கறிஞரும் வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மாலை ஐந்து மணிக்கு விசாரணை தொடங்கியது. ஆணையத்தின் பல கேள்வி களுக்கும், மின்வாரியம் எந்த பதிலையும் தரமுடியவில்லை. இதில் ஒரு பரிதாபம் என்னவெனில் மின்வாரியத்தின் வழக்கறிஞர்(?) திரு. வினோத்பாண்டியன் வழக்கைப் பற்றி பேசவே இல்லை. அவருக்கு இந்த வழக்குப்பற்றி ஒன்றுமே தெரியவிலை. எனவே வாரிய அதிகாரியே எல்லா நேரங்களிலும் ஆணையத்திடம் மனுபற்றி விவரித்தார். திரு.வினோத் பாண்டியன் எழுந்து நிற்பது மட்டுமே செய்வார் (ஸ்டேண்டிங்க் கவுன்சில்) இவர் முன்னாள் சபாநாயகர் திரு. பி.எச் பாண்டியன் அவர்களின் மகனாவார். 

ஜூன் மாதத்திற்கு மட்டும் கொள்முதல் செய்து கொள்ள அனுமதியை 02.06.2012 வாரியம் பெற்றிருந்தது. இது 30.6.2012வுடன் முடிந்து போகும். ஆணையம் யூனிட் ரூ 5.05 என விலையும் நிர்ணயித்திருந்தது. ஆணையத்தின் குறுகியக் கொள் முதலுக்கான அனுமதி தள்ளிப்போகும் நிலையில் ஜூலை மாதத்திற்கும் அனுமதியை நீடிக்க மின்வாரியம் 29.06.2012ல் கோரவில்லை. இதற்கும் மின் வாரியத்திற்கும் ஓர் உள்நோக்கம் இருந்திருக்கும் போல் தோன்றுகிறது ஆணையத்தின் அனுமதி கோரினால் ஜூலை மாதத்திற்கான விலையை குறிப்பிட வேண்டியிருக்கும். ஆகவே அதனை மின்வாரியம் தவிர்த்துவிட்டது.

ஜூலையிலும் இந்த தனியார் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆணையத்தின் அனுமதியின்றி, அதுவும் இந்தக் கொள்முதலை ஜூன் மாதத்தில் நிர்ணயக்கப்பட்டது போல, யூனிட் 5.05க்கு பதிலாக ஜூலை மாதத்தில் யூனிட் ரூ.5.50க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ரூ.5.50க்கு நிச்சயமாக ஆணையம் அனுமதியளிக்காது என்பது தெரிந்தே 29.06.2012ல் ஆணையத்தின் அனுமதியை பெறுவதை மின்வாரியம் தவிர்த்துவிட்டது. தமிழக மக்களைவிட ‘இந்து பாரத்’ம் அதனுடன் கூட்டுச் சேர்ந்துள்ள மின் உற்பத்தியாளர்களுமே மின்வாரியத்திற்கு முக்கியமாகவுள்ளது. 

யூனிட் ஒன்றுக்கு ரூ.0.50 என்ற அளவில் இந்தத் தனியார் உற்பத்தியாளர்களிடமிருந்து அரசியல்வாதிகளுக்கு கையூட்டு கைமாறுகின்றது என்று கசிந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 

683.3 கோடி யூனிட் மின்சாரம் தனியாரிடம் வாங்க உள்ளது வாரியம். ஆக, 683.3 கோடி யூனிட் கொள்முதல் மூலம் பெறப்படும்Speed Money” ரூ.341.65 கோடி ரூபாயாக இருக்கும். அதாவது, ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு கோடி ரூபாய் கையூட்டாகக் கைமாறும். 

இதே போல் ஒப்பந்தத் தனியார்களிடமிருந்து 420 கோடி யூனிட் ரூ.4086.21 கோடிக்கு வாங்கப்படும். (ஜி.எம்.ஆர் – ரூ.11.04, மதுரை – ரூ.13.08, சாமல்பட்டி – ரூ.13.99, பி.பி.என் – ரூ.6.52). இதனால் மின் வாரியத்திற்கு ஏற்படப்போகும் மொத்த இழப்பு = 5641.96 கோடி ரூபாய். 

வெளி மாநிலத்தவரின் மின்சாரம்

1,079.8 கோடி யூனிட் ரூ.4784.34 கோடிக்கு வாங்கப்படும்.இதன்மூலம் வந்து சேரப்போகும் இழப்பு ரூ.4321.75 கோடி ரூபாய்.

இந்த ஆண்டு காற்றாலை உற்பத்தி என்பது 3800 மெகாவாட்டைத் தொட்டிருக் கிறது.தொடங்க இருக்கும் மின் உற்பத்தி நிலையங்கள் 2707 மெகாவாட் ஆகும். மின்சாரத்தின் அதிகபட்சத் தேவையே 11,000 மெகாவாட்தான்.

ஆகவே, இந்த மின்சாரக் கொள்முதல் என்பது தமிழகத்திற்கு மே மாதத்திற்குப் பிறகு தேவையே இல்லை. பருவக்காற்று வீசத் தொடங்கும்போது காற்றாலை உற்பத்தி யானது இன்னும் கூடும்.

எனவே, இந்தத் தனியார் மின்சாரம் தமிழ்நாட்டுக்குத் தேவையே இல்லை. இதில் கிடைக்கும் 341.65 கோடி ரூபாய் கமிஷனுக்காகவே இது கொள்முதல் ஆகப்போகிறது!

பாவம் மக்கள்!!

Pin It