சனநாயகம் தனது இடதுகையில் சாட்டையை வைத்திருக்கிறது; வலது கையில் மகுடியை வைத்திருக்கிறது. கொடிய நஞ்சு கொண்ட பாம்பு கூட மகுடி வாசிப்புக்கு மயங்குகிறது என்கிறார்கள். மக்களோ மகுடி வாசிப்புக்கு நாட்டிய மாடுகிறார்கள்.

அரசும் மகுடி வாசிக்கிறது; அரசியலாரும் மகுடி வாசிக்கிறார்கள். ஆளுங் கட்சியும் மகுடி வாசிக்கிறது; எதிர்க்கட்சிகளும் மகுடி வாசிக் கின்றன. மக்கள் மனநிலையைத் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வதே இவர் களின் நோக்கம்.

அரசுகளின் மகுடி வாசிப்பு அரசர் காலத் திலும் உண்டு என்றாலும், அது மிகவும் குறைவான அளவில் இருந்தது; அப்போது சாட்டையின் ஆதிக்கம் மேலோங்கியிருந்தது. ஆனால் சனநாயகக் காலத்தில் மகுடி வாசிப்பிற்குக் கூடுதல் முகாமை தருகின்றன அரசுகள். அரசியல் கட்சிகளோ மகுடி வாசிப்பில் ஒன்றையொன்று விஞ்ச போட்டி போடு கின்றன. மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கும் மக் களைச் சுரண்டுவதற்கும் சனநாயகத்தில் சாட் டையைவிட மகுடியே சிறந்த வழி. கட்டளை இடுவதை விட கவர்ச்சியாகப் பேசிக் கவிழ்ப்பது சிறந்தது. பணிய வைப்பதை விட பின்பற்றச் செய்வது மேலானது.
“மக்களுக்காக, மக்களைக் கொண்டு மக்களே உருவாக்கிக்கொள்வது சனநாயகம்” என்றார் ஆபிரகாம் லிங்கன். ஆனால், அது மெய்நடப்பில், அரசியல் தலைவர்களும் முதலாளிகளும் தங்களுக்காக மக்களைக் கொண்டு, தாங்களே உருவாக்கிக் கொள்வதாக இருக்கிறது.

முதலாளிய அரசியல் தலைவர்களும் முதலாளி களும் மக்களின் மனதைக் கட்டுப்படுத்தும் கலையில் வல்லவர்களாக இருக்கிறார்கள். கட்டுப் படுத்தப்பட்ட மனநிலையை (Conditioned Mind) மக்கள் திரளிடம் உருவாக்குவதே அவர்களின் முதல் திட்டம். அதன் பிறகு அம்மக்கள், தாங்கள் சொல்வதற்கெல்லாம் தலையாட்டுவார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். தொலைக் காட்சியில், வானொலியில் ஒரு குறிப்பிட்ட எண்ணில் அந்தந்த நிறுவனத்திற்குத் தனித்தனியே அலைவரிசை ஒதுக்குகிறார்கள். அந்த எண்ணில் அந்த நிறுவனத்தின் ஒளி-ஒலி பரப்புதான் வரும். அது போல் கட்சிகளால் கட்டுப் படுத்தப்பட்ட மனதில் அந்தக் கட்சிக்கு ஆதரவான கருத்துகள் மட்டும்தான் உருவாகும்.

கட்டுப்பட்ட மனநிலைகொண்ட ஒரு மக்கள் கூட்டத்தை உருவாக்கிக் கொள்ள அவர்கள் பல்வேறு உத்திகளைக் கையாள்கிறார்கள்.

பழைய காலங்களில், மிகப்பெரிய இலட்சியங் களையும் திட்டங்களையும் மக்களிடம் சொல்லி அவர்களை ஈர்த்தார்கள். காங்கிரசுக் கட்சியை எடுத்துக் கொண்டால், இந்தியாவின் விடுத லையை வெள்ளையரிடமிருந்து வாங்கித் தந்த கட்சி, அவ்விடுதலையை நிலைநாட்டவும் நிகரமைச் சமூகம் படைக்கவும் காங்கிரசை ஆதரியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்கள்.

தி.மு.க.வோ திராவிட நாட்டு விடுதலைக் கோரியது, விடுதலைக்குப்பின் திராவிடநாட்டில் நிகரமைச் சமூக அமைப்பை உருவாக்குவோம் என்றது.

இம்முழக்கங்களையெல்லாம் காங்கிரசும் தி.மு.க.வும் போலியாகவே வைக்கின்றன. என் பதைக் காலம் அம்பலப்படுத்தியபின் இப் பொழுது இக்கட்சிகள் பெரிய இலட்சியங்களை முன்வைப்பதில்லை. இன்னொரு கட்சி ஆபத்தானது. அக்கட்சியின் அபாயத்திலிருந்து மக்களைக் காக்க எங்கள் கட்சியே சரியானது என்று மிக மிகச் சிறிய முழக்கம் வைக்கிறார்கள். நடை முறையில் காங்கிரசுக்கும் பா.ச.க.வுக்கும், தி.மு.க. வுக்கும் அ.இ.அதி.முக. வுக்கும் இடையே இலட்சிய வேறுபாடு என்று சொல்லத்தக்க எந்தப் பெரிய வேறுபாடும் இல்லை.

நேரு குடும்பத்தால் தலைமை தாங்கப்படுகிறது என்ற பழம் பெருமையைக் காங்கிரசும், திராவிட இயக்கத்தின் அசல் வாரிசு என்ற பழம்பெருமையை தி.மு.க.வும் பேசிக்கொண்டு ஒரு மக்கள் கூட்டத்தைத் தம்பக்கம் தக்கவைக் கின்றன. மக்களிடம் உள்ள பழம் பெருமை போற்றும் மனப்பான்மை, பழைய கதாநாயகர்களின் வாரிசுகளை ஆதரிக்கும் உளவியல் ஆகியவற்றை இவ்விரு கட்சிகளும் பயன்படுத்திக் கொள்கின்றன. மன்னர் மகன் மன்னர் என்று ஏற்றுக் கொண்ட பழைய உளவியலின் மிச்ச சொச்சம் இந்தப் பழம்பெருமை பாராட்டும் போக்காகும்.

மன்னர் மகன் குருடனாக இருந்தாலும், கோழையாக இருந்தாலும் கொடுங்கோலனாக இருந்தாலும் ஏற்றுக்கொண்ட பழங்கால மனநிலையின் மிச்ச மீதங்கள் உலகில் பல நாடுகளில் இன்றும் இருக்கின்றன. பிரித் தானியாவில், இன்னும் மன்னராட்சியை ஏன் மக்கள் ஏற்றுக் கொண்டுள் ளார்கள்? தங்கள் நாட்டின் பழம் பெருமைக்கான அடையாளச் சின்னம் என்று மன்னராட்சியை ஏற்றுக் கொண் டுள்ளார்கள். இந்தியாவில், தமிழ்நாட்டில் வெள் ளையராட்சி யால் மன்னராட்சி இல்லாமற் போயிற்று. ஆனாலும் மன்ன ராட்சிப் பரம்பரையை ஏற்கும் மனநிலையின் தொடர்ச்சியாகவே தான், காங்கிரசையும் ராகுல் காந்தி யையும் ஒரு சார் மக்கள் ஏற் கிறார்கள். தி.மு.க. வையும் மு.க. ஸ்டாலினையும் மற்றொரு சார் மக்கள் ஏற்கிறார்கள்.

எம்.ஜி.ஆரின் வாரிசாக செயலலிதாவை இன்னொரு சார் மக்கள் ஏற்றுக் கொண்டதும் இதே மனநிலைதான். எம்.ஜி.ஆர் தி.மு.க. வின் ஊழல் ஆட்சியை ஒழித்து, அண்ணாவின் திராவிடப் பரம்பரை ஆட்சியை நிலைநாட்டு வதாகக் கூறி கட்சி அமைத்தார். ஆட்சியைப் பிடித்தார்.

இம்மூன்று கட்சிகளும் கொண்டாடிக் கொள்ளும் பழம்பெருமைகட்கும், இக்கட்சிகளின் இன்றையத் தலை மையின் செயல்பாட்டிற்கும் ஏதேனும் தொடர்ச்சி உண்டா? இல்லை. வெள்ளையரை வெளி யேற்றி, “இந்தியர்கள் தங்களைத் தாங்களே” ஆளும் மாற்றத்தை உருவாக்கியதாகக் கூறிக் கொள் கிறது காங்கிரசு. ஆனால் இதே காங்கிரசுதான், வெள்ளையர் உள்ளிட்ட மேற்கத்திய மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் இந் தியாவில் தொழில் நிறு வனங்கள் தொடங்கி இந்தியப் பொருளிய லையும், இந்திய இயற்கை வளங்களையும் சூறையாட வழிவகுக்கிறது.

வருந்தி வருந்தி அந்நிறுவ னங்களை வரவழைக்கிறது, இந்தியாவின் இறையாண் மையை வெளிநாட்டினரிடம் அடமானம் வைக்கிறது.
தி.மு.க. கூறிக்கொள்ளும் திராவிடப் பாரம்பரியம் எங்கே இருக்கிறது? ஆரிய இந்தியா வின் அடிவருடியாகி, ஆரியப் பார்ப் பனியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து பதவி களைப் பெற்று வருகிறது தி.மு.க. ஊழலை ஒழிப்ப தற்காகத் தொடங்கப்பட்ட அ.இ. அ.தி.மு.க. ஊழல் புரிவதில் தி.மு.க.வோடு போட்டி போடும் கட்சியாக மாறிப்போனது. ஆனால் இன்றும், அன்றைய இலட்சியங் களுக்காகத் திரண்ட அல்லது திரட்டப் பட்ட ஒரு சார் மக்கள் கூட்டம் இக்கட்சிகளில் இருக்கின்றது.

“கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருசன்” என்ற பழங்காலப் பெண்ணடிமை மனநிலை, கல்லானாலும் கட்சி புல்லானாலும் தலைவர் என்று அரசியல் அடிமைத்தனமாக நீள்கிறது. மன்னராட்சி வழி பாடு, மக்களாட்சியிலும் தொடர்கிறது.

இப்பொழுது இக்கட்சிகள் தங்கள் வசம் ஒரு மக்கள் கூட் டத்தைக் தக்க வைத்துக் கொள்ள பெரிய இலட்சியங்கள் தேவை இல்லை என்று கருது கின்றன. எதிர்க் கட்சி ஆட்சிக்கு வந்தால் வரப்போகும் தீங்குகளை வர்ணிப் பதே போதும், தங்கள் மக்கள் திரளைத் தங்கள் முகாமில் தக்க வைத்துக் கொள்ளமுடியும் என்று மதிப்பீடு செய்கின்றன.

பாரதீய சனதாக் கட்சி, இந்துத் துவப்பழம் பெருமைகளைக்கூறி, தன் முகாமில் ஒரு மக்கள் கூட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. அக்கட்சி கூறிக் கொள்ளும் இந்துத்துவ ஆன்மிக ஒழுக்கத்திற்கும் அக்கட்சித் தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் நடை முறைக்கும் ஒரு தொடர்பு மில்லை. அத்தனை ஒழுக்கக் கேடுகளும் மலிந்துள்ள கட்சி அது. ஆனாலும் அக்கட்சி முகாமில் உள்ள மக்களுக்கு அந்த ஒழுக்கக் கேடுகள் கருதத்தக்க முரண்பாடுகள் அல்ல;

இந்துத்துவா பற்றிய உரை யாடல் களே அவர்களுக்குப் போதும்!
பொதுவுடைமை, நிகரமை, புரட்சி என்று பேசி போராட்டங்கள் நடத்தி, ரசிய, சீனப் பெருமிதங்களின் கீழ், தங்கள் அமைப்பைக் கட்டமைத்த கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளுக்கு அந்தத் தத்துவம் இன்று வழி காட்டியில்லை. ரசிய சீனப் பெருமிதங்களும் இன்றில்லை. சில தொகுதிகளின் வெற்றிக்காக தேர்தலுக்குத் தேர்தல் மாறி மாறி பெரியக் கட்சிகளுடன் கூட்டணி சேர்கின்றன. வலுவுள்ள ஒரு சில மாநிலங்களில் ஆட்சி அதிகாரக் கவர்ச்சி காட்டுகின்றன. இருந்த போதிலும் பழைய தத்துவ விசுவாசத்தையும் பெருமிதங்களையும் நினைத்துப் பெருமைபடும் ஒரு சார் மக்கள் கூட்டம் கம்யூனிஸ்ட்டுக் கட்சிகளை ஆதரிக் கின்றன.

இலட்சிய வலிமையோ, கொள்கை வலிமையோ ஒழுக்க வலிமையோ இல்லாத பெரிய கட்சிகள், முழுக்க முழுக்க பழம் பெருமையை மட்டும் சார்ந்து நீண்ட காலம் நிற்க முடியாது. தங்கள் தலைவர்களுக்கு எல்லாதிறமைகளும் இருப்பதாகவும், எதிரிகளை வெல்லும் ஆற்றல் இருப்பதாகவும் சித்தரித்து தலைவர்க்கு புதிய படிமங்களை உருவாக்குகின்றனர்.

சராசரிப் பெண்களைப் போல் காதல் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் குடும்பம் நடத்த வந்த இத்தாலியப் பெண்ணான சோனியாவை, இந்தியாவைக் காக்க வந்த அன்னையாக, பராசக்தியாகக் காங்கிரசார் புனைந்து கொண்டார்கள். அவருடைய மகனை நேரு குடும்பத்து இளவரசராகக் கற்பிதம் செய்து கொள்ளுமாறு மக்களைத் தூண்டுகிறார்கள்.

1970களில் ஆட்சியில் இருந்த கருணாநிதியை சோழப் பேரரசர்களின் குறிப்பாக இராச இராசச் சோழனின் இருபதாம் நூற்றாண்டு வாரிசாக கற்பிதம் செய்து கொள்ளுமாறு மக்களைத் தி.மு.க. தூண்டியது. அதிகார நிழலில் வசதிகளோடு தங்கியிருந்த அறிவாளிகள், தமிழறிஞர்கள், பாவலர்கள் பலர் கருணாநிதியை சோழப் பேரரசனாகவே உருவகித்துப் பட்டிமன்றங்கள், பாவரங்கங்கள், கருத்தரங்கங்கள் நடத்தினர்; கட்டுரைகள் தீட்டினர்.

கருணாநிதிக்கு அகவை அதிகமாக அதிகமாக அவரது புகழ்ச்சிப் படிமத்தை பேரரசர் என்ற வடிவத்திலிருந்து பேரரறிஞர் என்ற வடிவத்திற்கு உருமாற்றினார்கள்; “முத்தமிழ் அறிஞராக”, “வாழும் வள்ளுவராக“ வர்ணித்தனர். வர்தரித்திருந்த மன்னர் மகுடத்தை அவர் மகன் ஸ்டாலினுக்கு வழங்கினர். அவர் தளபதி ஸ்டாலின் ஆனார்.

ஏற்கெனவே, காங்கிரசிடம், தி.மு.க.விடம் கட்டுப்படுத் தப்பட்ட மனநிலை கொண்ட ஒரு மக்கள் கூட்டம் இருக்கிறது. அது, முறையே சோனியாவை பாரதமாதாவாகவும் ராகுலை இளவரசராகவும், கருணாநிதியை வாழும் வள்ளுவராகவும், ஸ்டாலினைப் புதிய இளவரசராகவும் எளிதில் ஏற்றுக் கொள்கிறது. ஒரு பெருங்கூட்டம் இவ்வாறு இவர்களை ஏற்றுக்கொள் வதைப் பார்த்து, அம்முகாமிற்குள் புதிதாகச் சிறு கூட்டங்கள் சேர்ந்து கொள்கின்றன. பெருங்கூட்டத்தில் சேர்ந்து கொள்வதும், மந்தையைப் பின்பற்றிச் செல்வதும் பாதுகாப் புணர்ச்சியின் வெளிப்பாடுகள்.

கடவுளை மறுக்கும் கருணாநிதி இராசராசச்சோழனாகவும் திருவள்ளுவராகவும் மறுபடியும் மறுபடியும் புதுப்புது அவதாரங்கள் எடுப்பதைப் பார்த்த அ.இ.அ.தி.மு.க. முகாம் தெய்வ பக்தியுள்ள செயலலிதாவை இதய தெய்வம் என்ற நிலையிலிருந்து “மனித தெய்வம்”, “தெய்வத்தின் தெய்வம்”, என்ற நிலைகளுக்கு “ உயர்த்தியது”.

தமிழக அரசியல் விளையாட்டுகளை ஆர்வத்துடன் வேடிக்கைப் பார்ப்பதில் ஈடுபட்டு, பின்னர் தாமே ஓர் அரசியல் விளையாட்டைத் தொடங்கினார் விசயகாந்த். அக்கட்சியினர், தங்கள் தலைவரை “வாழும் வள்ளலாரே” என்று அழைக்கின்றனர். வாழும் வள்ளுவருக்குப் போட்டியாக வாழும் வள்ளலார்! அசல் வள்ளுவரை அசல் வள்ளலார் குருவாக ஏற்றுக் கொண்டார். இங்கோ “அரசியல் வள்ளுவரை” வீழ்த்த “அரசியல் வள்ளலார்” புறப்பட்டார்.

வள்ளுவரும் வள்ளலாரும் தமிழினத்தின் அறிவுச் சிகரங்கள்! சமூக நீதியின் தலைவர்கள் அறவொழுக்கத்தின் திசைகாட்டிகள்!. அவர்களை எவ்வளவு கொச்சைப்படுத்தி விட்டனர். தி.மு.க.வினரும் தே.மு.தி.க. வினரும்! ஆசை வெட்கமறியாது.

தி.மு.க., அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.மு.க கட்சிகளில் உள்ள ஒரு சார் மக்கள் கூட்டம் கருணாநிதியை வள்ளுவராக, செயலலிதாவைத் தெய்வமாக, விசயகாந்தை வள்ளலாராக உருவகப் படுத்துவதைக்கண்டு முகம் சுழிக்கவில்லை. முகமலர்ச்சி யோடு வரவேற்கிறார்கள்.

அக்கட்சிகளிடம் இருப்பதும் மக்கள் சக்திதான்! அவர்களில் உழவர்கள் தொழிலாளர்கள், தொழில்முனைவோர், படித்தவர்கள், ஆராய்ச்சியாளர்கள், பெண்கள் எனப் பலவகையினரும் இருக்கின்றனர் இவர்களெல்லாம் மக்கள் சக்திதான்!

இவர்கள் அனைவரும் ஏற்கெனவே கட்டுப்படுத்தப்பட்ட மனநிலையில் உள்ளவர்கள். கருணாநிதி வள்ளுவரல்ல, செயலலிதா தெய்வமன்று, விசயகாந்து வள்ளலார் அல்லர் என்ற உண்மைகள் இவர்களின் அறிவுக்கு ஏற்கெனவே தெரியும். ஆனாலும் அவர்களோடு ஒப்பிட்டுத் தங்கள் தலைவர்களைப் புகழ்வது பொருத்தம்தான் என்று, கட்டுப் படுத்தப்பட்ட இவர்களின் மனம் ஏற்றுக்கொள்கிறது.

மேலே பட்டியலிடப்பட்ட மக்கள் பிரிவுகளில் பலர் தன்னலம் கருதி, தங்களின் தேவைகளை நிறை வேற்றிக் கொள்வதற்காக மேற்படி கட்சிகளில் இருக்கிறார்கள்.

மனநோய் வந்த பெண்கள் மந்திரவாதிகளின் முன் தங்களுக்குப் பேய் பிடித்திருப்பது போல் ஆடுவதில்லையா, அப்படித்தான் கட்சித் தலைவர்களின் விருப்பத்திற்கேற்ப இந்த மக்கள் சக்தி பேயாட்டம் போடுகிறது. கட்டுப் படுத்தப்பட்ட மனநிலை ஒருவகை மன நோய்தான்!

ஒருவரைத் தலைவராக மக்கள் ஏற்றுக் கொள்வது தவறன்று. அத்தலைவர் எந்தத் தவறு செய்தாலும் எத்தனை எத்தனை தில்லுமுல்லு செய்தாலும் அவற்றையெல்லாம் பொறுத்துக் கொண்டு, அத்தலைவருக்குப் போற்றி பாடுவதுதான் கட்டுப்படுத்தப் பட்ட மனநிலையின் செயல்பாடு!

மக்களின் இறையாண்மை எப்போதும் மக்களிடம் இருக்க வேண்டும். மக்கள் தங்கள் இறையாண்மையை, ஒரு தலைவரிடம் நிரந்தரமாக ஒப்படைத்து விடக்கூடாது. சரியான திசையில் செல்லும்வரைத் தலைவரைப் போற்றலாம, தவறான திசையில் தலைவர் சென்றால் அவரைத் திருத்தும் விழிப்புணர்ச்சியும் ஆற்றலும் அவருடன் உள்ள மக்களுக்கு இருக்க வேண்டும். அவர் திருந்தவில்லையெனில், அவரைத் தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கவோ, அல்லது அவரை விட்டு விலகவோ மக்களுக்குத் தெளிவும் துணிவும் இருக்க வேண்டும். இதைத் தான் “இறையாண்மை எப்போதும் மக்களிடம் இருக்க வேண்டும்“ என்று கூறுகிறோம்.

மந்திரவாதிகளால் வசியப் படுத்தப்பட்ட மனநோய்ப் பெண்கள் அம்மந்திரவாதிகளின் சொல்படி பேயாட்டம் போடு வதுபோல், கட்சித் தலைமையால் வசியப்படுத்தப்பட்ட மக்கள், கட்சித் தலைமை சொல்கிற படியெல்லாம் ஆடுகிறார்கள். எடுத்துக் காட்டாக ஒன்றிரண்டைக் கூறலாம்.

இந்தியாவில் சிறுவணிகத்தில் 51 விழுக்காடு அளவுக்கு வெளிநாட்டினர் முதலீடு செய்து சில்லரை வணிக நிறுவனங்களை வெளிநாட்டினரே நடத்தலாம் என்று இந்திய அரசு ஆணை இயற்றியது,

இது உள்நாட்டுச் சில்லரை வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் மண்ணின் மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துவிடும்; அவர்களை அழித்துவிடும் என்று இந்தியா வெங்கும் எதிர்ப்புக் குரல் எழுந்தது. தி.மு.க. தலைவர் கருணாநிதியும் சில்லரை வணிகத்தில் வெளிநாட்டினர் வருவதை எதிர்த்தார். அவரைப் பின்பற்றி தி.மு.க வினரும் ஆனால் நடுவண் அமைச்சர் ஒருவர் கருணாநிதியைச் சந்தித்துக் கமுக்கம் பேசிய பின் வெளிநாட்டினர் சில்லரை வணிகத்தில் வருவதை கருணாநிதி ஆதரித்தார். உடனே திமுக வினரும் அதை ஆதரித்தனர். நாடாளுமன்றத்தில் இச்சிக்கலில் வாக்கெடுப்பு நடக்கும் போது தோல்வி ஏற்பட்டால் காங்கிரசுக் கூட்டணி அரசு கவிழ்ந்து, மதவாத பா.ச.க. தலைமையில் கூட்டணி அரசு உருவாகிவிடுமென்பதால் சில்லரை வணிகத்தில் வெளி நாட்டினர் நுழைவதை ஆதரித்ததாக கருணாநிதி காரணம் கூறிக்கொண்டார். கருணாநிதியின் குட்டிக் காரணத்தை திமுகவிலுள்ள சிறு வணிகர்கள் கூட எதிர்க்கவில்லை. இதுதான் கட்டுப்படுத்தப்பட்ட மன நிலையின் செயல்பாடு.

மதவாதக் கட்சி ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கக் கூடாது என்று இப்பொழுது சொல்லும் கருணாநிதி 1998 லிருந்து 2004 வரை பா.ச.க. ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தவர்தான் பா.ச.க. அமைச்சரவையில் திமுகவினரும் பங்கேற்றவர்கள்தாம். ”பா.ச.க. தீண்டத்தகாத கட்சியன்று” என்று முரசொலிமாறன் 1998 வாக்கில் கூறினார் முரசொலிமாறன். அப்போது பாசக மதவாதக் கட்சி இல்லையா? இவ்வளவும் தி.மு.க.வை ஆதரிக்கும் மக்கள் கூட்டத்திற்குத் தெரியாதா? தெரியும்; கட்டுப்படுத்தப்பட்ட மனநிலையில் உள்ள அவர்கள் கருணாநிதி சாட்டையை சொடுக் குவதற்கேற்ப ஆடுகிறார்கள்.

“நினைத்ததை முடிக்கும் புரட்சித்தலைவி” என்றும் ”கேட்டதை எல்லாம் கொடுக்கும் மனிதத்தெய்வம்” என்றும் செயலலிதாவை ஆராதிக்கிறது அ.இ.அ.தி.மு.க. மக்கள் கூட்டம். நடப்பு சாகுபடி பருவத்திற்குக் கர்நாடகத்திடமிருந்து தமிழ் நாட்டிற்குரிய காவிரி நீரை செயலலிதாவால் பெற முடிய வில்லை. ஐந்து லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியில் பெரும் பகுதி பாழானது. 16 இலட்சம் சம்பா சாகுபடியில் பெரும்பகுதி அழிந்தது. உச்ச நீதிமன்றத்தில் அடுத் தடுத்து வழக்குப் போட்டதைத் தவிர அதற்குமேல் செயலலிதா “அலட்டிக் கொள்ளவில்லை”. எந்த அரசியல் உத்தியும் வகுத்து நடுவண் அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் நெருக்கடி கொடுக்க வில்லை. காவிரி நீர் மறுக்கப் பட்டதால் காய்ந்து கருகிப்போன நெற் பயிர்களைப் பார்த்துப் பத்து உழவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
“அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரைப் பெற முடிவெடுத்து பிரதமரைச் சந்தித்து நெருக்குதல் செய்ய வேண்டும்; சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி, காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை அனுப்பாமல் அதைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விடவேண்டும் என்று இந்திய அரசைக் கோரித் தீர்மானம் போடவேண்டும்; காவிரி நீர் உரிமையை நிலை நாட்டித் தராத நடுவண் அரசு காவிரிப் படுகையில் கிடைக்கும் தமிழகப் பெட்ரோலியத்தை எடுக்கக்கூடாது என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்” இவ் வாறான கோரிக்கைகளைத் தமிழக அரசிடம் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், பல்வேறு அமைப்புகளின் கூட்டமைப்பான காவிரி உரிமை மீட்புக்குழுவும் வைத்தன. செயலலிதா ஏற்கவில்லை. இவற்றை ஏற்காவிட்டாலும் காவிரி நீரைப் பெறுவதற்கான மாற்று உத்திகளை வகுக்கவும் இல்லை. காவிரி உரிமையை மீட்க மக்கள் எழுச்சியை உருவா0க்கவும் இல்லை.

செயலலிதாவைத் தெய்வ மாகக் கொண்டாடும் இலட்சக் கணக்கான உழவர்கள் காவிரிப் பாசன மாவட்டங்களில் வாழ்கிறார்கள் ஆனால் அவர்கள் செயலலிதாவிடம் காவிரி தொடர்பாக் கோரிக்கை எதையும் வைக்கவில்லை. அதுமட்டு மன்று, குதிரை கீழே தள்ளியது மட்டு மன்றி, குழியும் பறித்தது என்பது போல், அ.இ.அ.தி.மு.க அமைச்சர்களும், பிரமுகர்களும் “காவிரி நீர் பெற்று பயிரையும் உயிரையும் காப் பாற்றிய புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்” என்று ஏடுகளில் விளம்பரம் கொடுத்தார்கள். இந்தப் பொய் விளம்பரங்களை அ.இ.அதி.மு.க. உழவர்களும் மக்களும் எதிர்க்க வில்லை ஏன்?

அ.இ.அதி.மு.க. தலைமையால் வசியம் செய்யப்பட்ட மக்கள் அவர்கள். அவர்களின் மனநிலை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது. அவர்களால் செயலலிதாவின் மனம் கோணும்படி சிந்திக்கவே முடியாது.

சொந்த வாழ்க்கை பாதிக்கப் படும்போதும் அழியும் போதும் அ.இ.அ.தி.மு.க.வில் உள்ள உழவர்களுக்குச் சீற்றம் வராதா? வரும். அந்தச் சீற்றத்தை கருணாநிதிக்கு எதிராகத் திருப்பிவிடும் தந்திரம், நடுவண் அரசுக்கு எதிராக திருப்பிவிடும் ஆற்றல் செயலலிதாவுக்கு இருக்கிறது.

காவிரி உரிமைச் சிக்கலில் கடந்த காலங்களில் கருணாநிதி செய்த தவறுகளைக் கண்டிக்கவும் நடுநிலை தவறிய நடுவண் அரசின் வஞ்சகத்தை எதிர்க்கவும் வேண்டும். ஆனால் செயல்படாத செயலலிதாவைச் செயல்படவைக்க அ.இ.அ.தி.மு.க.வினர் எதையும் செய்யவில்லை. மாறாகக் காவிரி நீரைப் பெற்றுத் தந்ததாக அவர்கள் தங்கள் அம்மாவுக்குப் போற்றி பாடுகிறார்கள்.

தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட மறுத்த பிரதமரும், உச்ச நீதிமன்றமும் ஞாயம் வழங்கியது போல் காட்டிக் கொள்ள மிகக் குறைவான நீரைத் திறந்தவிடும்படி கூறிய போது, ஓரிரு நாட்களுக்கு சிறு அளவுத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட்டது. உடனே, “வெற்றி, வெற்றி, அம்மா காவிரி நீர் பெற்று விட்டார்“ என்று காவிரிப் பாசன மாவட்டங்களில் அ.இ.அ.தி.மு.க.வினர் வீதிகளில் இனிப்பு வழங்கிக் கும்மாளம் போட்டனர். அதற்கு மட்டும் “விழிப்புணர்ச்சி” எங்கிருந்து வந்தது? அப்போது தண்ணீர் திறந்துவிடச் சொன்ன பிரதமரையோ, உச்சநீதி மன்றத் தையோ பாராட்டாமல் அம்மாவின் சாதனையாக மட்டும் கூறிக் கொண்டது எவ்வளவு பெரிய தந்திரம்!

இக்கட்சிகளின் கட்ட மைப்பிற்கு எடுத்துக்காட்டாக அ.தி.மு.க. கட்டமைப்புச் சொன்னால் உண் மை எளிதில் விளங்கும்: அடித் தளத்தில் வசியம் செய்யப்பட்ட மக்கள் கூட்டம், அதற்கும் மேலே அம்மக்களை அப்படியே பரா மரிக்கும் களத்தரர்களான இடைநிலைப் பிரமுகர்கள் கூட்டம், அவர்களுக்கு மேலே, அற்புதங் களை விளைவிக்கும் அம்மா! இது பக்திப் பரவசக் கட்டமைப்பு அம்மாவுக்காக மண் சோறு தின்பார்கள், கோயில் திருச்சுற்று களில் புரண்டு புரண்டு அங்கப் பிரதட்சணம் செய்வார்கள்.

இது அடிமைகளின் கட்ட மைப்பு அன்று. அவரவர்குரிய பயனை எதிர்ப்பார்த்துச் சேர்ந்துள்ள பயனாளிகளின் கட்டமைப்பு. அற்புதங்களை விளைவிக்கும் அம்மாவுக்குக் கீழே, அவரைத் தாங்கி நிற்கும் இடைத்தரகர் களுக்கு எவ்வளவோ வருமா னங்கள், குட்டிகுட்டிக் அதிகா ரங்கள் குவிந்து கிடக்கின்றன. இடைத் தரகர்களுக்குக் கீழே உள்ள மக்களுக்கும் இலவசங்கள் காத்திருக்கின்றன. வேறுசில “பிரசாதங்களும்” அவ்வபோது கிடைக்கும்.

இந்தப் பக்தி பரவச அடுக்கு முறை தி.மு.க.விலும் உண்டு, காங்கிரசிலும் உண்டு, மற்ற பல கட்சிகளிலும் உண்டு. சடங்கு முறைகள் வெவ்வேறாக இருக்கும். ஆத்திகச் சடங்குகளில் பல பிரிவுகள் இருப்பது போல், நாத்திகச் சடங்குகளில் பல பிரிவுகள் இருப்பது போல் ஆதாய அரசியல் கட்சிகளில் உள்ளோர் தங்கள் பக்தியைக் காட்ட பல வடிவங்கள் உள்ளன. ஆனால் இக்கட்சிகள் அனைத்தும் பயனா ளிகளின் பக்திப் பரவசக் கட்டமைப்பே!

Pin It