Budha

...புத்தர் அறிவுச் சுதந்திரத்திற்காகவும், சமூக சுதந்திரத்திற்காகவும், பொருளாதாரச் சுதந்திரத்திற்காகவும், அரசியல்  சுதந்திரத்திற்காகவும் பாடுபட்டார். புத்தர் ஆண்களுக்கிடையில் மட்டும் சமத்துவம் வேண்டுமென்று கூறவில்லை. ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையில் சமத்துவம் வேண்டுமென்று கூறினார். புத்தருடைய போதனைகள், மக்களுடைய சமூக வாழ்வில் ஒவ்வோர் அம்சத்தையும் உள்ளடக்கியதாயிற்று. அவருடைய கோட்பாடுகள் நவீனமானவை. புத்தருடைய முக்கிய நோக்கமானது, மனிதர்கள் இறந்த பிறகு ‘முக்தி' தருவது குறித்தல்ல; பூமியில் வாழும்போது  மனிதர்களுக்கு விடுதலை என்பதாகும். சமத்துவம் என்பதுதான் பவுத்தத்தின் அடிப்படைக் கோட்பாடாகும். புத்தர் என்னுடைய பேராசான் ஆவார். - புரட்சியாளர் அம்பேத்கர்


கடவுளையும், மதத்தையும் மனிதர்கள்தான் கற்பித்தார்கள். மானுடத் தார்மீகத்தை விரட்டியடித்த ஒரு சின்னக் கும்பல் தங்களின் ஆதிக்கத்திற்காக அவ்வாறு கற்பித்தது. ஒரு குறிப்பிட்ட சமூக நிலைமையில் அவர்களின் தேவையையும், ஆக்கிரமிப்பையும் நிறைவு செய்வதற்காகவே கடவுளும் மதம் திணிக்கப்பட்டன. ஆனால் மதம், கடவுளும் புகுத்தப்படாத காலம் சாக்கியர்களின் காலமாக இருந்தது. சாக்கியர்கள் தங்கள் மானுட மதிப்பீட்டை நேர்மையில் இணைத்துக் கொள்ளும் முதிர்ந்த, தேர்ந்த அறபடைப்பாளிகளாகவே விளங்கினர். சாக்கியர்கள், நிச்சயமான உயர்ந்த ஓர் அமைப்பினை நோக்கித் தங்கள் இனக்குழு செல்கிறது என்பதை உறுதி செய்தனர். சாக்கியர்களின் வரலாறு நெடுக, பொருள் முதல்வாதத்தின் பதாகையில் முன்னேற்றம் என்பது பொறிக்கப்பட்டிருந்தது.

சாக்கியர்கள் நாகரிகத்தை வளர்த்தனர். அது கலை இலக்கியத்தையும், மருத்துவத்தையும், கணிதத்தையும் வளர்த்தது. அறிவு என்பது சாக்கியர்களைப் பொறுத்தவரை, இயற்கையைப் புரிந்து கொள்வதுதான். ஆனால், கருத்து முதல்வாதிகளைப் பொறுத்தவரை அறிவு என்பது பரம்பொருளைப் புரிந்து கொள்வதே. இது இயற்கை உண்மைக்கு மாறானது; மாயையானது. உண்மையானதும் நிரந்தரமானதும் இதை உணர்தல் மட்டும்தான். சாக்கியர்களின் காலம், தத்துவத் தளிர் நடையின் அற்புதமான ஆகர்சிக்கும் தன்மை கொண்ட காலமாக இருந்தது. தத்துவம் கோட்பாடு ரீதியில் விசயங்களை ஆழமாக ஆராய்ந்து அறிவியல் கண்ணோட்டத்தில் தங்களுடைய சொந்த அறிவு நிலையை உயர்த்திக் கொண்டார்கள். சமகால வரலாற்று உணர்வு, கருத்தியல் வரலாற்றை நிர்ணயிக்கும் சக்திகளின் திசை வழி ஆகியவை பற்றிய தெளிவுடன் இயங்கக் கடமைப்பட்டிருந்தார்கள்.

மானுடத்திற்கு அறம் உன்னதமானது. அதன் உயரத்திற்குமேல், உயரம்கூடிய உன்னதம் மிக்க வேறெதுவுமில்லை. அறம் முன்னிலைப்படுத்தப்படுவதும், அதை தொழிற்படுத்துவதும் மனிதமாண்புகளுக்காகத்தான். சாக்கியர்களுக்கு கடந்த கால சுவாசத்திற்கும் நிகழ்கால சுவாசத்திற்கும் நிகழ்ச்சி நிரலாக அறமே இருந்தது. அவர்களின் மானுட அர்த்தம் நோக்கிய முன்னெடுப்பில் லோகாயதம், சாங்கியம் போன்றவைகளே அணிவகுத்திருந்தன. சாக்கியர்கள் தேர்வுக்குரிய தத்துவத் தகுதிகளைக் கொண்டவர்கள் என்பதால், தங்களுக்குள் மனிதாம்சத்தையே வரவேற்கும் திறன் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் மூலாம்பரத் தத்துவ மொழியின் சாயலும் தனித்தன்மையும் மேலும் வளர்ச்சி நிலைக்கு வந்து சேரும் விதத்தில் பவுத்தம் தத்துவமயமாக்கம் ஆனது.

தத்துவங்களில் முன் வரிசையில் நிற்பது பவுத்தம்தான். கிரேக்கத்தின் மிக மூத்த எபிகுரஸ் தத்துவம் தொடங்கி, உலக அளவிலான தத்துவ இயலைச் சற்று ஆழ்ந்து பார்த்தோமானால், பவுத்த தத்துவ இயல் மிகவும் ஆழமான, அகலமான, அற்புதமான தத்துவ நெறியைக் கொண்டிருப்பதை அறிய முடியும். லோகாயதம், சாங்கியம் அது சார்ந்த தத்துவ இயல்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அனேகமாக பொருள் முதல்வாதம் பேசும் தத்துவங்களில்கூட, கருத்து முதல்வாதம் இலைமறைக்காயாக இருப்பது தெரியவரும். பொதுவுடைமையின் ஆசான்களான காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் ஆகியோரின் மார்க்சியம் இதில் விதி விலக்கு. சாக்கியர்கள், ஒரு தலைமுறையிடமிருந்து இன்னொரு தலைமுறைக்கு தங்கள் தத்துவ அனுபவங்களைத் தொடருதல் என்பது நிகழ்ந்தே வந்திருக்கிறது. அனுபவங்களைத் தங்கள் உடல் வெளியிலும், மன வெளியிலும் தேக்கி வைத்ததின் வீரியமே பவுத்தத்தில் தங்களைக் கரைத்துக் கொண்டதற்கு ஏதுவாகப் போனது. அவர்களது நிலவெளிக்கான மானுடவியலான பவுத்தம், அவர்களின் பாரம்பரியம் சார்ந்துதான் உதயமானது.

சாக்கிய இனக்குழு கட்டுமானத்தின் வெட்டவெளிச்சமான பவுத்தத்தின் தாயும் தந்தையுமானவர் புத்தர். மானுட வரலாற்றின் புகழ்மிக்க பக்கங்களைப் புரட்டுகின்றபோது, மகத்துவமிக்க கம்பீரத்தோடு நம்முன் புத்தர் வருகிறார். கி.மு. 6 - 5 நூற்றாண்டுகளில் கால் வைத்து வாழ்ந்தவர்தான் புத்தர். இத்துணைக்கண்டம் முழுவதும் ஆசியாவிலும் ஏன் இந்த மானுட உலகம் முழுவதும் பரவிய ஓர் இயக்கத்தின் தத்துவத்தின் தலைசிறந்த ஞானியாக விளங்கியவர் புத்தர்.

வரலாற்றில் இம்மாதியான ஓர் இயக்கம், மானுடவியலின் அடிப்படையில் வேறு எங்கும் என்றும் காணப்பட்டதில்லை. புத்தத் தத்துவம் அல்லது பவுத்தம், தொடக்க காலத்தில் உலகத்தை அணுகிய முறை சாக்கிய இனக்குழு மக்கள் அத்தத்துவ இயக்கத்திற்கு அளித்த மதிப்பு; அதன் அடிப்படைக் கொள்கைகள் அனைத்தையும் இன்றைக்கு பவுத்தக் கோட்பாடுகள் என்று சொல்லப்படும் கருத்துகளை காயங்களை வைத்து மதிப்பிடவே கூடாது. பவுத்தம் என்று அர்த்தப்படு வதற்கும் ஆரம்ப காலத்தில் இருந்ததற்கும், ஒட்டும் உறவும் இல்லை என்று கூறினாலும் அது மிகையாகாது. பவுத்தத்தை பார்ப்பனியத்திற்கு வழங்குவதான நிலை, பார்ப்பன பார்ப்பனிய ஊடுருவலால் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பவுத்தத் தெறிப்பு இன்னும் சாக்கிய இனக் குழுக்களின் வாரிசுகளாக வீறு பெற்றிருக்கும் தலித் மக்களிடம் தங்கியுள்ளது. தலித் மக்களின் மனங்களில் இருக்கும் படிமம் பவுத்தமே ஆகும். பவுத்தத்தை அபூர்வமான மானுட சக்தியாகவும், புதிய உயிராகவும் நிரப்பிக் கொள்ள வேண்டிய கடமையே தலித் மக்களுக்கு காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தர், இம்மண்ணின் பூர்வ குடியான சாக்கிய இனக்குழுவைச் சேர்ந்தவர். சாக்கியக் குடியில் தனியுரிமை தனியுடைமை இல்லை. புத்தருடைய உள்ளத்தில் நிறைந்திருக்கும் கொள்கையும் அதுவே. புத்தர், தன் இனக்குழு சமுதாயத்தின் வழிநின்று மானிடர் அனைவரும் சமம் என்பதைக் கொண்டார். அவருடைய காலகட்டத்தில் இருந்தவர்களுக்கும் (சாக்கியர்களுக்கும்) வந்தேறியவர்களுக்குமான (பார்ப்பனர்களுக்கும்) தோன்றிய முரண்பாடுகளும் மோதல்களும் அவருடைய உள்ளத்தில் பிரதிபலித்ததின் எதிரொலிதான் பவுத்தம்.

அன்றைய சாக்கியப் பழங்குடியரசுகள் பல்வேறு கணங்களின் (குலங்களின்) தொகுப்புகளாக விளங்கின. ஒவ்வொரு கணத்திற்கும் ஒரு தலைவர் இருந்த போதிலும், குடியரசின் பொதுத் தலைவர் சுழற்சி முறையில் குறிப்பிட்ட கால இடைவெளியில் தேர்ந்தெடுக்கப்படுவார். கணத் தலைவர்களில் ஒருவர் இவ்வாறு தேர்வு செய்யப்படுவார். தவிர்க்க முடியாமல் போர் என்றால் அனைவரும் ஆயுதம் தக்கக்கூடிய நிலை இருந்ததேயொழிய, போருக்கென தனியான ராணுவ அமைப்போ, இனக்குழு நிர்வாகத்திற்கென பிரபுத்துவ தலைமையோ இல்லை. நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணைகள் முதலியன ‘சந்தாகாரம்' எனப்படும் பொது அவையில் விவாதித்தே முடிவெடுக்கப்பட்டது. சாக்கியப் பழங்குடியினன் இத்தகைய பொது அவை ஒன்றிற்கு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் புத்தரின் தந்தை சுத்தோதனர்.

சாக்கிய இனக்குழுச் சமுதாயம் சமத்துவம் மிக்கவையாகவும், தனியுரிமை தனியுடைமை வேட்கை அறியாததாகவும், இனக்குழு மக்களின் கருத்து ஒருமிப்பு அடிப்படையில் செயலாற்றக்கூடிய புராதனச் சமூக ஜனநாயகம் கொண்டதாகவும் விளங்கியது. சுரண்டலின் மூலமான சொத்துகளையும், அவமதிப்பின் மூலமான ஏற்றத் தாழ்வுகளையும் நிலைநிறுத்தக் கூடிய கருத்துகளும் மதிப்பீடுகளும் எதுவும் இல்லாதவையாகவும் விளங்கின. சாக்கியர்களின் இனக்குழு சமூக அமைப்பு, புராதனப் பொதுவுமை பொதுவுடைமைச் சமூகங்களாகவே விளங்கியது.

மக்களுக்கான தலைமையும், வழிமுறைகளும், வெளிப்பாட்டு முறையும் பார்ப்பனர்களுக்கும் சாக்கியர்களுக்கும் முற்றிலும் வேறுவேறானவை. பார்ப்பன மரபு தலைவர்களையும், சாக்கிய மரபு தலைவர்களையும் ஒருபோதும் பொதுமைப்படுத்திவிட முடியாது. பார்ப்பன மரபில் போரைத் தலைமையேற்று வழி நடத்திச் செல்வது அரசனின் தற்கடமையாகும். அரசன் இல்லாதவர்கள் போல் வெற்றி பெற இயலாது; எதிரிகளை (சாக்கியர்களை) வெல்ல முடியாது. பார்ப்பனிய அய்தீகத்தின்படி, ஒருவன் அரசனாக அங்கீகாரம் பெறுவதற்கு கடவுளின் இசைவு வேண்டும். எல்லாம் வல்ல கடவுளே அரசனுக்கு மூலமானவன். அரசன் மக்களுக்குச் சமமானவன் அல்ல. மக்களுக்கான கருத்தியல் அடிப்படையில் செயல்பட வேண்டிய எவ்வித நிர்பந்தம் இல்லாதவன். அரசன் என்பவன் பார்ப்பன வேத மதத்தை நிலை நிறுத்தக்கூடியவன். பார்ப்பனிய மநுதர்ம சாத்திரங்களின்படி ஆட்சி நடத்தக் கடமைப்பட்டவன்.

சமத்துவம், புராதனச் சமூக ஜனநாயகம் கூடிய பொதுவுரிமை பொதுவுடைமை இனக்குழு குடியரசே சாக்கியர்களின் குடியரசு ஆகும். மக்களின் தலைவர் என்பவர் கண விரும்பி / குல விரும்பி இனக்குழுத் தோழர் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட இனக்குழுவின் தலைவர் ‘ராஜா' ‘மன்னர்' என அழைக்கப்பட்டாலும், பார்ப்பனிய மரபு முடியரசுக்குரிய அதிகாரங்கள், ஆடம்பரங்கள், பரம்பரை வாரிசுரிமைகள் எதுவும் சாக்கிய மன்னருக்குக் கிடையாது. இத்தகைய மக்கள் அரசியல் மாண்பில் கரைந்த சாக்கிய இனக்குழுவிற்கு, சுழல்முறையில் தலைவர் பதவிக்கு வந்த சுத்தோதனர், மாயாதேவியைத் தன் துணைவியாக்கிக் கொண்டார். பார்ப்பனர்களின் வரையறைபோல சாக்கிய இனக்குழுக்களின் அரசு என்பது கட்டமைக்கப்படவில்லை. அரசின் தலைவர் என்பவர் கடவுளுடன் முடிச்சிப் போடக்கூடியவர் அல்லர். அவர் இனக் குழுவின் ஏகோபித்த ஒத்திசைவுடன் மக்கட்பணிக்கு அமர்த்தப்படுபவர். அவருக்கு வழிகாட்ட சாக்கிய நெறிமுறைகள் இருந்தன. இனக்குழுவின் கருத்தொருமிப்பின் அடிப்படையிலேயே செயல் முறைமைகள் மிளிர்ந்தன. தலைவனுக்கென்று தனிமரியாதையும் தனித்ததொரு வாழ்வும் வளம் சாக்கிய அரசியலில் கிடையாது. சாக்கிய இனக்குழு இயல்பு வாழ்வின் சமத்துவ அறமாண்புகளை வளர்த்தெடுப்பதே தலைவன் முதலும் கடைசியுமானப் பணியாகும்.

இத்துணைக் கண்டத்தின் வடகிழக்கு மூலையில் இருந்த தேசம் சாக்கியர் இனக்குழு தேசமாகும். விவசாய இனக்குழுக்களைக் கொண்ட இத்தேசத்தின் தலைநகரமாக விளங்கியது கபிலவஸ்து ஆகும். சாக்கிய இனக்குழுவின் முன்னோடியான கபிலரை நினைவு கூர்ந்த கபில வஸ்துவின் தலைவரும் தலைவியும் ஆன சுத்தோதனர் மாயா தேவி இணையருக்குகோதமபுத்தர், கி.. 563 ஆம் ஆண்டு வைசாக பவுர்ணமி நாளில் பிறந்தார். சித்தார்த்தன் பிறந்த நாள், அனைத்துச் சாக்கிய இனமக்களாலும் கொண்டாடப்பட்டது. சாக்கியப் பழங்குடியின் தலைநகரமான கபிலவஸ்து, ரோகிணி ஆற்றங்கரையிலிருந்த நகர மாகும். சாக்கியர்களின் கருத்துப் பரிமாற்ற கபிலபுரமாக அது விளங்கிய தால், அந்நகரில் கோதமர் பிறந்த செய்தி வட புலத்தில் சாக்கிய உலகம் முழுவதும் ஆனந்தமாய் எதிரொலித்தது.


.

-ஏ.பி.வள்ளிநாயகம்