“வரகரசிச் சோறும் வழுதுணங்காய் வாட்டும்” என்று அவ்வைப் பிராட்டி குறிப்பிடுகிற வழுதுணங்காய் என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தும் கத்தரிக்காய் ஆகும். இது பல்லாயிரம் ஆண்டுகளாக நமது மண்ணில் சுவைக்கப்படுகின்ற உணவுப் பொருள்களில் ஒன்றாகும். இந்த பாரம்பரியம் மிக்க கத்தரிக்காய்க்கு இப்போது ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதாவது மரபீனி மாற்றம் என்ற பெயரில் கத்தரிக்காயின் மரபியல் கூறுகளில் மாற்றம் செய்து அதை வணிகச்சிறையில் பூட்ட முனைந்துள்ளன பன்னாட்டு வணிக நிறுவனங்கள்.

இன்று கணினித்துறையைவிட எதிர்காலம் மிகுந்த துறையாக இந்த உயிரிநுட்பவியல் துறை மாறி வருகிறது. இதில் பன்னாட்டுக் கும்பணிகள் பலகோடி டாலர்களை தொடர்ந்து முதலீடு செய்து வருகின்றன. குறிப்பாக வேளாண்மைத்துறையிலும், மருத்துவத்துறையிலும் இவர்களது ஆதிக்கம் பெருகி வருகிறது. மீண்டும் முளைக்க இயலாத முடிவிப்பு விதைகளையும் (Terminator Seeds), விதைத்த விதை நன்கு வளர குறிப்பிட்ட வளர்ச்சி ஊக்கியை தெளித்தால்தான் வளர முடியும் என்ற அளவில் உள்ளுக்குள் குறிப்பிட்ட நஞ்சைப் பொதிந்து வைக்கும் மடிவிப்பு விதைகளையும் (Verminator Seeds) இன்று சந்தையில் புழக்கத்திற்கு விடுவதில் மும்முரமாக உள்ளனர்.

இந்த அடிப்படையில் வந்த மான்சாண்டாவின் பாசில்லஸ் துரிஞ்சியன்சஸ் பருத்தி விதைகளும், சின்ஜெண்டாவின் பொன்னரிசி விதைகளும் உலக அளவில் கடும் எதிர்ப்புக்கு உள்ளாயின. பல்வேறு நாடுகளில் இப்படிப்பட்ட மரபீனி மாற்ற உணவுப் பொருட்களுக்கு தடை உள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இதில் முனைப்பாக உள்ளன. ஆனால் அமெரிக்கா மரபீனி மாற்றப் பயிர்களை அதிகம் விளைவித்து வருகிறது.

அங்குள்ள மக்களுக்கு அடையாளம் தெரிவதற்காக மரபீனி மாற்ற உணவு என்ற முத்திரை பதித்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அங்கு பல்வேறு அமைப்பினர் இதை எதிர்த்துக் குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் இந்த வகையான எந்தக் கட்டுப்பாடும் இன்றி மரபீனி மாற்ற மலட்டு விதைகளை விற்க வழிவகை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசுப் பல்கலைக்கழக அறிவியல் அறிஞர்களும் துணை போவது தான் வேதனை மிகுந்த வேடிக்கை.

இந்தியா போன்ற உயிரியல் பன்மயம் (Biological Diversity) மிக்க நாடுகளில் வேளாண்மை மட்டுமல்லாது உணவுப் பழக்கங்களும் பன்மயம் மிக்கது. இதை அழிப்பதில் முதன்மைப் பங்கு வகித்தது பசுமைப் புரட்சி முறையாகும். எண்ணற்ற நெல் வகைகளும் பிற புஞ்சைத் தவசங்களும் நமது மண்ணில் நிறைந்து காணப்பட்டது. 60 நாட்களில் விளையும் ‘அறுபதாம் குறுவை’, ‘அவசரக் கார்’ முதல் வெள்ளத்திலும் வளரும் ‘மடுமுழுங்கி’ வரை ஆயிரக்கணக்கான வகைகள் அதுவும் பகுதிக்கேற்ற வகையில், இராமநாத புரத்தில் பயன்படுத்திய நெல் தஞ்சாவூரில் பயன்படுத்தப் படவில்லை.

இந்த வேளாண் பருவநிலைத் தன்மை (Agro climatic condition) அன்று பின்பற்றப்பட்டு வந்தது. ஆனால் பசுமைப் புரட்சி இன்று ஐந்தாறு வகை நெல்வகைகளை மட்டுமே தமிழகம் முழுவதும் பயன்படுத்த வேண்டிய சூழலுக்கு ஆளாக்கி இருக்கிறது. இப்போது அதைவிடத் தீமை பயக்கும் புதிய நுட்பத்திற்கு ஆட்சியாளர்கள் அழைத்துச் செல்கிறார்கள். மரபீனிப் பொறியியல் (Genetic Engineering) நுட்பத்தின் வழி புதிய விதைகள் உருவாக்கப் படுகின்றன. இவ்வாறு பருத்தியில் பா-து (ஙிt) விதைகளை அறிமுகம் செய்த மாண்சாண்டா வகையறாக்கள் இந்தியாவில் பெரும் தோல்வியைச் சந்தித்தனர். அதன் பின்னர் இப்போது கத்தரியில் தங்களது கைங்கரியத்தைக் காட்டியுள்ளனர்.

கத்தரிச் செடியைத் தாக்கும் தண்டுத்துளைப்பான் புழுவைக் கொல்லும் புரதத்தைக் கொடுக்கக் கூடியது புதிய பா-து பருத்தி. அதாவது பா-து குச்சிலத்தின் உள்ள புரதம் அந்த தண்டுத்துளைப்பானுக்கு ஒவ்வாத நஞ்சாக மாறுகிறது. ஆனால் அது மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நஞ்சாக இருக்குமா? இருக்காதா என்ற நீண்டதொரு ஆய்வு நடக்கவே இல்லை.

மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகளை பன்னாட்டுக் கும்பணிகள் அறிவுச் சொத்துரிமை (Intellectual Property Rights) என்ற பெயரில் கைப்பற்றி வைத்துக் கொள்கின்றனர். இதன் மூலம் இவர்கள் வைத்ததுதான் விலை. எடுத்துக்காட்டாக 2006-07ஆம் ஆண்டளவில் ஒரு கிலோ சாதாரண பருத்தி விதையின் விலை ரூ.70 என்று இருந்தது. ஆனால் 450 கிராம் பா.து விதை ரூ.1050-க்கு விற்றது. அதுவும் அவை இரண்டாம் தலைமுறை விதைகள். எனவே பன்மடங்கு உயர்த்தப்பட்ட விலை உழவர்களின் தலையில் விடிகிறது.

இது ஒருபுறம் இருக்க இதுவரை உணவுப் பயிர்களில் எந்த வகையிலும் மரபீனி மாற்றப் பயிர்களை அனுமதிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு இப்போது மரபீனி மாற்றக் கத்தரிப் பயிரை உலகிலேயே முதன் முறையாக இந்தியா அனுமதித்துள்ளது. இதை மிகக் கடுமையாக சூழலியளார்கள் மட்டுமல்லாது உழவர்கள், அறிவியல் அறிஞர்களும் எதிர்க்கின்றனர். ‘இது அறிவியலே அல்ல’ என்கிறார் சில்லஸ் எரிக் செராணி என்ற அறிஞர். மரபீனி மாற்றப் பயிர்களில் 99.9 விழுக்காடு நச்சுத்தன்மையுள்ள கொல்லிகள் உள்ளன. இவற்றைக் கும்பணிகள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. மூடி மறைக்கின்றன. இதன் தகுதிப்பாட்டை ஆய்வு செய்யாமல் அரசாங்கள் அனுமதி வழங்குகின்றன.

மரபீனி மாற்ற கத்தரிப் பயிருக்கு ஒப்புதலுக்காக வழங்கிய அறிக்கை 105 பக்கங்கள் கொண்டது. இதை மூன்று அமைப்புகள் தயாரித்து அளித்துள்ளன. இதில் முதல் அமைப்பு மகைகோ கும்பணி (Maharashtra Hybrid Seeds Company Ltd.(Mahyco), Mumbai) அடுத்தவை தார்வாட் வேளாண்மைப் பல்கலைக் கழகம், நமது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம். பருத்திக்குப் பயன்படுத்திய அதே முறையைத்தான் இதிலும் பின்பற்றியுள்ளனர். அதாவது மரபீனி மாற்றம் செயல்பாட்டில் மூன்று முகாமையான கூறுகள் பயன்படுத்தப் படுகின்றன. அவை குறிப்பிகள் (Markers) சுமப்பிகள் (Carriers) ஊக்கிகள் (Promoter) போன்றவையாகும்.

இவை உயிரினங்களில் நோயை உருவாக்கும் நச்சுயிரிகள், நுண்ணுயிரிமீளில் இருந்தே பெறப்படுகின்றன. குறிப்பாக 35 எஸ் காலிபிளவர் மொசைக் நச்சுயிரி (35 Sca Mv) என்ற நச்சுயிரி, ஏறத்தாழ எச்.ஐ.வியையும் (மஞ்சள் காமாலை) ஹெப்பாட்டிட்டஸ்-பி-ஐயும் போன் றது ஊக்கியாகப் பயன்பட்டுள்ளது. அரதப் பழசான பயனற்ற இந்த நுட்பத்தை மகைகோ தனது தாய் நிறுவனமான மாண்சாண்டாவிடம் இருந்து வாங்கியுள்ளது என்கிறார் செராலினி.

குறிப்பாக தண்டு மற்றும் காய்த்துளைப்பானாக உள்ள ஒரு புழுவைக் கொல்வதற்குத்தான் இத்தனை ஏற்பாடு. பூச்சி இனத்தைச் சேர்ந்த Leucinodes orbonalis என்ற உயிரினம் பெருமளவு கத்தரியில் தாக்குதலைச் செய்கிறது. இதற்கு இயற்கைமுறையில் நிறைய கட்டுப்பாட்டு முறைகள் உள்ளன. குறிப்பாக முட்டையிடும்போதே அவற்றை அழிக்கக் கூடிய முட்டை ஒட்டுண்ணிகள் உள்ளன. புழுப் பருவத்தின் அவற்றைத் தாக்கக் கூடிய புழு ஒட்டுண்ணிகள் உள்ளன. அத்துடன் இயற்கைப் பூச்சிவிரட்டிகளும் உள்ளன.
 
இவற்றை எல்லாம் கவனிக்காது மரபீனி மாற்ற விதைகளுக்கு முன்னுரிமை தருவது நமது வேளாண்மையை பன்னாட்டுக் கும்பணிகளுக்கு அடகு வைப்பதாகும். விதைகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் கும்பணிகள் தமது வணிக விருப்பங்களுக்கு ஏற்ப சந்தையில் விளையாட முடியும். ஏனெனில் இந்த விதைகளை மறுபடி விதைக்க முடியாத அளவிற்கு மலட்டு தன்மையுள்ளதாக முடிவிப்பு (Terminator) மரபீனிகளைக் கொண்டு ஆக்கியுள்ளனர். மரபீனி மாற்றம் செய்யப் பட்ட விதைகளை விதைக்கும்போது அதிலிருந்து வரும் மகரந்தத்தூள் சாதாரண கத்தரிச் செடியில் இணையும்போது அதுவும் மலடாகும் வாய்ப்புகள் உள்ளன.

மலட்டுத்தன்மையுள்ள காய்களைத் தொடர்ந்து உண்பதால் மலட்டுத் தன்மை வருமா என்பது பற்றிய ஆய்வுகள் இல்லை. அரசு இப்படிப்பட்ட பரிசோதனைகளுக்கு வெறும் 90 நாட்கள் மட்டும் எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர். மேலும் ஒரு கும்பணியே தனக்கான ஆராய்ச்சியை தானே செய்து அதற்கு ஒப்புதலை அதுவே பெற்றுக் கொள்வது என்பது அறிவியலுக்கும் நீதிக்கும் முரணானது. மேலும் இந்த ஆய்வறிக்கையில் ஆய்வில் ஈடுபட்ட அறிவியல் அறிஞர்கள் யாரும் கையொப்பம் இடவில்லை என்றும் இதில் மிக மோசமான கொல்லிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றும் செராலினி கூறுகிறார். அதுமட்டுமல்லாது இந்தக் கத்தரியானது எதிர்உயிர்மிகளை (Antibiotics) எதிர்கொள்ளும் எதிர்ப்பாற்றல் திறன் பெற்றுள்ளதாக இருக்கும். அதாவது நோய்க்குக் கொடுக்கும் எதிர்உயிர்மிகள் செயல்பட முடியாதவாறு செய்துவிடும். இந்தக் காயை உண்μம் மக்களுக்கும் கால்நடைகளுக்கும் எதிர்உயிர்மிகளை எதிர்க்கும் ஆற்றல் வந்துவிட்டால் பிறகு சாதாரண எதிர்உயிர்மி மாத்திரை மருந்துகளை எடுத்துக்கொள்ள முடியாது போகலாம். எலிகளுக்கு இதைக் கொடுத்துப் பார்த்ததில் அவற்றுக்கு வயிற்றுப் போக்கு எடைக்குறைவு போன்ற துன்பங்கள் ஏற்பட்டதாக தெளிவாகிறது.

அதுமட்டுமல்லாது இந்தியா முழுமைக்கும் 2000க்கும் மேற்பட்ட கத்தரி வகையினங்கள் உள்ளன. இந்தப் உயிரிப்பன்மயத்திற்கு (Biodiversity) ஆபத்து ஏற்பட்டு விடும். அதாவது மலட்டுக் கத்தரிக்காயின் மகரந்தம் இணைந்து மரபீனிய மாசுபாடு ஏற்பட்டால் இந்த வளமான மரபீனிய வளம் பாதிக்கும். இதனால் இப்போது ஏற்பட்டுவரும் பருவநிலை மாறுபாடுகளுக்கு ஏற்ற பயிரினங்கள் அழிந்துபோக வாய்ப்பு ஏற்படும். ஏனெனில் அமெரிக்காவில் பன்றிகளுக்குக் கொடுக்கும் மக்காச் சோளத்தில் தடுப்புமருந்து கொடுப்பதற்கான மரபீனியை இணைத்துவிட்டனர். இதன் விளைவாக ஐந்து லட்சம் டன் சோயா மொச்சை மாசுபட்டது.

மரபீனி மாற்றப் பயிர்களால் ஏற்படும் மற்றொரு ஆபத்து அதனால் உருவாக்கும் மீமிகைக் களைகள் (Super Weeds) இவை எந்தவிதமான பூச்சிகளுக்கும் கட்டுப்படாமல் வளரலாம். இதனால் பிற பயிரினங்களைச் சாகுபடி செய்ய முடியாமல் போகும் நிலை ஏற்படும். ஏற்கெனவே ஆந்திரா போன்ற மாநிலங்களில் BT பருத்திச் சாகுபடியாளர்கள் கடுமையான பொருளியல் நெருக்கடியால் தற்கொலைக்கு ஆளாயினர். இப்போது கத்தரிச் சாகுபடியாளர்களைக் குறிவைத்து காய்களை நகர்த்துகின்றனர். பா-து பருத்தியின் தோல்வி பற்றிய எவ்வித வெள்ளை அறிக்கையும் கொடுக்காமல் கத்தரிக்குத் தாவியுள்ள ஒப்பேற்புக் குழுவின் நடவடிக்கைகளை என்னவென்று சொல்வது?
 
சுற்றுச்சூழல் அமைச்சர் மரபீனிப் பொறியியல் ஒப்பேற்புக் குழுமத்தின் ஏற்புக்கு பின்பு அறிவியலாளர்கள், தன்னார்வ அமைப்புகள் உழவர் அமைப்புகள் போன்ற அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டறிந்து பின்னர் முடிவெடுப்பதாக அறிவித்துள்ளார். மக்கள் மீதும் மண்ணின் மீதும் அக்கறை கொண்டோர் அனைவரும் இந்த அறிவியல் அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்க வேண்டும்.

- பாமயன்

Pin It