தமிழர்:

தமிழர் என்பதற்கு சாதியைத் தவிர தனித்த அடையாளம் எதுவுமில்லை என்று தமிழ்உணர்வாளர்களில் சிலர் கூறுகின்றனர். தமிழகத்தில் வாழும் பிற மொழியினரும் தமிழ் பேசுகின்றனர். மலையாளிகள் தமிழர்களைப் போல் உடை உடுத்துகின்றனர். தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் மலையாளிகள் ஆகியோர்க்கு உணவுப் பழக்கம் கிட்டத்தட்ட ஒரே தன்மையில் உள்ளது. சாதியை வைத்துதான் “அசல் தமிழர்” யார் என்பதை அடையாளம் காணமுடியும் என்பது அவர்கள் கருத்து. அதுமட்டுமின்றி சாதிதான் தமிழினத் தனித் தன்மையைக் காக்கிறது என்பதும் அவர்களின் வாதம்.

இந்து மதத்தைக் காக்க சாதி அடையாளம் இன்றியமையாத் தேவை என்று இந்துத்துவாவினர் கூறுவதைப்போல் தமிழர் அடையாளத்தைக் காக்க சாதிகள் தேவை என்று இவர்கள் கூறுகின்றனர்.

மரபு வழிப்பட்டுக் காலம் காலமாகத் தமிழைத் தாய் மொழியாகவும் தமிழகத்தைத் தாயகமாகவும் கொண்டு வாழ்பவர்கள்தாம் மரபு வழிப்பட்ட தமிழர்கள். தமிழர்களை அடையாளம் காண சாதியைவிட இவ்விரு காரணங்களே அழுத்தமானவை. உலகெங்கும் வாழும் தேசிய இனங்கள் இவ்விரு காரணிகளைக் கொண்டே பெரிதும் அடையாளம் காணப்படுகின்றன. ஈழத்தமிழர் ஈழத்தைத் தாயகமாகக் கொண்டு வாழ்வோராவர்.

ஐரோப்பியர்களின் உணவுப் பழக்கவழக்கமும் உடையும் ஒன்றே போல் நமக்குத் தெரிகின்றன. நிறமும் ஒன்றே போல் உள்ளது. அவரவர் தாயகம், தாய்மொழி ஆகிய இரண்டையும் வைத்தே தேசிய இனங்களின் அடையாளம் பெரும்பாலும் அங்கு அறியப்படுகின்றது. நிறத்திலும், உடல் அமைப்பிலும் மிகமெல்லிய வேறுபாடுகளே அங்கு உள்ளன. அதே போல் மங்கோலிய மரபினத்திலிருந்து உருவான கிழக்காசியத் தேசிய இனங்களும் அதனதன் தாய்மொழி, தாயகம் ஆகியவற்றை முதன்மையாகக் கொண்டே அடையாளம் காணப்படுகின்றன.
 
தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் ரெட்டியார், நாயுடு, நாயக்கர், கவுடர், அருந்ததியர் போன்ற சாதிப் பெயர்கள் கொண்டவர்களை பிற இனத்தினர் என்று அடையாளம் காண சாதிப்பெயர்கள் பயன்படும் என்பது அவர்களின் வாதம்.

அசல் தமிழ்சாதிகளின் சாதிப்பெயர்கள் சிலவற்றை ஆந்திர, கர்நாடக, கேரள தேசங்களைச் சேர்ந்தவர்களும் வைத்துக்கொண்டுள்ளார்கள். அங்குள்ள சில சாதிப் பெயர்கள், இங்குள்ள தமிழர்களுக்கும் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக நாயக்கர் என்ற சாதிப்பெயர் தமிழ் இனத்தில் வன்னியரில் ஒரு பிரிவினருக்கு இருக்கிறது. அதே வேளை தெலுங்கு பேசுவோர்க்கும் இருக்கிறது. தமிழில் நாயக்கர் என்பது தலைமையானவர் என்ற பொருள் கொண்டது. நாயகம், நாயகர், நாயகி, என்பதிலிருந்து நாயக்கர் என்ற சிறப்புப்பட்டம் சிலசாதிப் பிரிவு களுக்கு வந்திருக்க வேண்டும். சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் தந்தை பெயர் மாநாயக்கன். எனவே “நாயக்கர்” என்பதைப் பொத்தாம் பொதுவாகப் பார்த்து, இனத்தை அடையாளம் காணமுடியாது.

செட்டி, செட்டியார் என்பது தமிழினச் சாதி ஒன்றின் பெயர். செட்டு செய்தல், வணிகம் செய்தல் என்ற தொழிலைக் குறிக்கிறது. தமிழில் உள்ள செட்டியிலிருந்துதான் வடநாட்டு வணிகப்பிரிவு “சேட்டு” என்று பெயர் பெற்றது என்று தமிழறிஞர்கள் கூறுகின்றனர். தமிழகச் செட்டியார்க்கும் வடநாட்டுச் சேட்டுக்கும் எந்தத் தொடர்புமில்லை.

நீதிக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் தியாகராயச் செட்டியார். இவர் தெலுங்கு பேசுபவர். தமிழ்ச் செட்டியார் பிரிவைச் சேர்ந்தவரல்லர். தமிழ் இனத்தைச் சேர்ந்த கள்ளர் வகுப்பில் “பாப்பு ரெட்டி” என்று பட்டப்பெயர் கொண்ட ஒரு பிரிவு உள்ளது. இவர்களுக்கும் தெலுங்கு மொழிக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

தமிழரில் உள்ள உடையார் சாதி கர்நாடகத்தில் ஒரு பிரிவார்க்குப் பட்டப் பெயராக உள்ளது. மைசூர் மகாராசாக்கள் “உடையார்” என்று அழைக்கப்படுகின்றனர். தமிழ்ச் சாதியான நாடார் என்ற பெயரில் கேரளத்திலும் ஒரு பிரிவினர் உள்ளனர். தமிழக உடையார், நாடார்க்கும் முறையே கன்னட, மலையாள உடையார் நாடார்க்கும் தொடர்பில்லை.

ஆரியமயப்படுத்தப்பட்ட சாதிப் பெயர்களை ஏற்பதே மதிப்பு என்று கருதிய தமிழினச் சாதிகள் சில தங்கள் சாதியை சத்திரியர், யாதவர், என்று அழைத்துக் கொள்கின்றன. கவுனிய கோதிரம், காசியப கோத்திரம் என்று தங்களை ஆரிய இனத்துடன் அடையாளப்படுத்திக்கொள்ளும் பார்ப்பனர்கள் தங்களை “ஐயர்” என்று தனித் தமிழில் அழைத்துக்கொள்கின்றனர். ஐயர் என்றால் சான்றோர், முதன்மையானவர், தலைமை யானவர் என்று பொருள் “பார்ப்பானை ஐயர் என்ற காலமும் போச்சே” என்று பாரதியார் பாடினார்.

தமிழரில் அறிவுத் துறையினராய் விளங்கியவரைத் தாம் “பார்ப்பார்” என்று அழைத்துள்ளார்கள். வெளியிலிருந்து வந்த ஆரிய பிராமணர் தங்களையும் “பார்ப்பார்” என்று அழைத்துக் கொண்டனர். பெயரைப் பிறரிடமிருந்து பெற்றவர்கள் என்ற பொருளில் “பேர் கொண்ட பார்ப்பார்” என அழைக்கப்பட்டனர். (கா.சு. பிள்ளை, சேக்கிழார் சுவாமிகள் சரித்திரமும் பெரிய புராண ஆராய்ச்சியும்)

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள், துளுவர் முதலியோர் தமிழினத்த்லிருந்து பிரிந்தவர்கள். அவர்களின் தாய்மொழி தமிழிலிருந்து பிரிந்தது. எனவே சில சாதிப்பெயர்கள் பொதுவாக இருப்பது இயல்பே.

ஒருவர் தமிழர் என்று அறிய அவரது சாதிப்பெயரை வெளிப்படுத்திக் கொள்வதே சரியான வழி என்று கூறுவது நூற்றுக்கு நூறு பிழையற்றதாய் அமையாது. வீணான குழப்பங்களுக்கும்,மனக்காயங்களுக்குமே அது இடம் கொடுக்கும். மரபுவழிபட்ட தாய் மொழியும், தாயகமும், தமிழாகவும் தமிழகமாகவும் இருந்தால் அவர்கள் தமிழர்கள் என்று எளிதில் அடையாளம் காணலாம்.

முந்நூறு, நானூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்று ஓட்டத்தில், தமிழகத்தில் குடியேறி, அநாளிலிருந்து தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு, தமிழைத் தங்கள் கல்விமொழியாகவும் ஆட்சி மொழியாகவும், சமூக மொழியாகவும், ஏற்றுப் பயன்படுத்தி வாழும் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகள் பேசுவோர் தமிழ்த் தேசக்குடி மக்கள் தாமே! அவர்களுக்கு ஆந்திரப்பிரதேத்துடனோ, கர்நாடகத்துடனோ, எவ்வகைத் தாயக உறவும் கிடையாது, திருமண உறவும் கிடையாது. இப்பிரிவினர் தங்களை “ஒரு சாதி” என்ற அளவில்தான் பெரிதும் கருதிக் கொள்கின்றனர்; கட்டமைத்துக் கொள்கின்றனர். எனவே இவர்களை அயலாராக ஒதுக்க வேண்டிய தில்லை.

1956 நவம்பர் 1-இல் தமிழகம் தமிழர்களின் மொழி வழித்தாயகமாக சட்டப்படி அமைக்கப்பட்டது. அதற்கு முன் தமிழ்நாட்டில் குடியேறி வாழ்ந்து வரும் பிற மொழியாளர் அனைவரையும் தமிழகக் குடிமக்களாக ஏற்பதே சரி. அவர்கள் தமிழர்களாகத் தங்களை அடையாளப் படுத்திக் கொள்பவர்கள் அல்லது தமிழகத்தில் வாழும் சிறுபான்மை இனத்தவர் என்ற பிரிவுகளில் ஒன்றில் அடங்குவர். அவர்கள் அனைவரும் தமிழர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் கொண்ட தமிழக மக்களே.

1956 நவம்பர் 1-க்குப் பிறகு, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், கேரளம், குசராத், இராசஸ்தான் மற்றுமுள்ள பிறமொழி மாநிலங்கள் ஆகியவறிலிருந்து வந்து தமிழ் நாட்டில் குடியேறியுள்ள அனைத்துப் பிற மொழியாளரையும் (பிற இனத்த வரையும்) தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். அவர்களுக்கு வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை போன்றவற்றைத் தமிழகத்தில் வழங்கக் கூடாது என்கிறோம். ஏன்?

இப்பிற இனத்தவர் மிகை எண்ணிக்கையில் தமிழகத்தில் குடியேறி, தமிழர்களின் மக்கள் தொகையை சிறுபான்மையாக்கும் ஆபத்து நெருங்கிக் கொண்டுள்ளது. அதன் பிறகு தமிழர்களுக்கான தாயகம் தமிழகம் என்ற நிலை மாறி தமிழகம் கலப்பினங்களின் தாயகம் என்று மாறும். அளவு மாறுபாடு பண்பு மாறுபாட்டை உருவாக்கும் என்ற மார்க்சிய இயங்கியலை இங்குப் பொருத்திப் பார்க்க வேண்டும். மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தங்கள் தாயகத்தை இழந்து, தங்கள் சொந்த மண்ணிலேயே அயல் இனத்தாரின் அரசியல், பொருளியல் பண்பியல் ஆதிக்கங்களுக்குக் கீழ்ப்பட்டு வாழும் அடிமை நிலை உருவாகும். எனவே தான் தற்காப்புணர்ச்சி அடிப்படையில் 1956க்குப்பின் வந்த வெளியாரை வெளியேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அசாமில் “வெளியாரை வெளியேற்றும் போராட்டம்” நடத்திய மாணவர்கள், 1951 மக்கள் தொகைக் கணக்கிற்குப் பிறகு அசாமில் குடியேறிய வங்களா தேசத்தவர், மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களிலிருந்து வந்தோர் அனைவரையும் வெளியேற்ற வேண்டும் என்று கோரிக்கைவைத்தனர். அப்போதையப் பிரதமர் இராசீவ்காந்தி அம்மாணவர்களோடு உடன்பாடு போட்ட போது, 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்குப் பின் அசாமில் குடியேறிய வெளியாரை வெளியேற்ற ஒப்புக் கொண்டார். அவ்வாறு வெளியாரைக் கண்டறியத் தீர்ப்பாயங்கள் அமைக்கப்பட்டன. அத்தீர்ப்பாயங்கள் வங்காள தேசத்திலிருந்து வந்த வெளியாரை மட்டும் அடையாளம் கண்டது. ஓரளவு அவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டது.

எனவே, நாம் கூறும், வெளியாரை வெளியேற்றும் திட்டத்துக்கு ஒரு வகை முன் எடுத்துக்காட்டு உள்ளது. முந்நூறு நானூறு ஆண்டுகளுகளாகத் தமிழகத்தைத் தாயகமாகக் கொண்டு வாழும் பிற மொழி பேசும் மக்களை நாம் வெளியார் என்று வரையறுக்க முடியாது.வெளியேற்ற முடியாது. அது அறமன்று என்பது மட்டுமின்றி, நடக்கக் கூடிய செயலும் அன்று. உலகில் இனங்கள் தங்கள் தேசங்களை அமைத்துக் கொண்ட போது, பிற இனக்கலப்பில்லாமல் எந்தத் தேசமும் அமையவில்லை. எனவே தமிழ்த் தேசத்தில், முந்நூறு நானூறு ஆண்டுகளுக்கு முன் குடியேறி நிலைத்துவிட்ட பிற மொழி பேசும் மக்களைத் தமிழ்த் தேச குடிமக்களாக ஏற்பது, உலக நீதியாகும். அவர்கள் தமிழைக் கல்வி மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் ஏற்க வேண்டும் என்பதே நிபந்தனை. அண்மைக் காலமாகக் குடியேறும் அயல் இனத்தாரை வெளியேற்ற வேண்டும் என்ற போராட்டம் அசாமில் மட்டுமின்றி, உலகெங்கும் நடக்கின்றது. பிரித்தானியாவில் நடக்கிறது. ரசியாவில் நடக்கிறது. அவ்வழியில் நாமும் 1956க்குப் பின் குடியேறிய பிற இனத்தவர்களை வெளியேற்றும் போராட்டம் நடத்துவோம்.

மேற்கண்ட காரணங்களால்,அசல் தமிழரா என்று அறிய சாதியைத் தேட வேண்டிய தேவை இல்லை. தமிழகம் இந்தியாவின் காலனியாக அடிமைப்படுத்தப்பட்டிருக்கிறது, தமிழக விடுதலையே முதல் தேவை என்ற உண்மையை உணர்ந்து கொண்டால் அதற்கு முன்னுரிமை தரும் மனநிலை வந்து விடும். அது பற்றி உரியவாறு சிந்திக்காமல் சாதி அடையாளங்களில் கவனம் செலுத்துவது, இருதய நோய்க்கு மருத்துவம் பார்க்காமல் தலை முடி கருப்பாய் இருக்கத் தைலம் தடவிக் கொள்வது போன்றதாகும். சாதியைத் தேடுவது மனுதர்மத் தூக்குக் கயிற்றில் நாமே முன் வந்து தலையைக் கொடுப்பதற்குச் சமம்.

அசல் தமிழரா என்று அறிவதற்காக, சாதி அடையாளத்தைத் தேடத் தொடங்கினால், அது பல மன மாசுகளுக்கு இட்டுச் செல்லும். கடந்த காலத்தில் சாதியானது தொழில் அடிப்படையில் ஏற்பட்டுப் பின்னர் பிறப்பு வழியில் நிலை பெற்றது. இந்தக் காலத்தில் சாதி என்பது மன அழுக்கு. சாதி என்பது இக்காலத்தில் பிறப்பின் வழி “மேல் கீழ்” என்பதைத் தாண்டி வேறெதுவாகவும் இல்லை.

சாதியின் பெயரால் கீழ் நிலைக்குத் தள்ளப்பட்ட சாதிகளைச் சேர்ந்த தமிழர்கள் மேல் சாதித் தமிழர்களால் படும் தொல்லைகள் கொஞ்ச நஞ்ச மன்று. இன்றும் தமிழ் நாட்டில் தேநீர்க்கடைகளில் பல ஊர்களில் இரட்டைக் குவளை முறை உள்ளது. ஊராட்சிமன்றத் தலைவர் பதவி ஒடுக்கப்பட்ட வகுப்புத் தமிழர்க்கு ஒதுக்கப் பட்டதற்காக மேல் சாதியினர் தேர்தல் நடக்காமல் தடுத்த ஊர்களை நாம் அறிவோம்.

ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்காக ஒடுக்கப்பட்ட தமிழரான முருகேசன் உட்பட ஆறுபேர் மேலவளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதி வெறியர்களால் படுகொலை செய்யப்பட்டனர். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் பல ஊர்களில், மேல் சாதி ஊராட்சி உறுப்பினர்களுடன் ஊராட்சி மன்றக் கூட்டத்தில் சமமாக உட்கார முடியவில்லை.

ஒடுக்கப்பட்ட வகுப்பு ஆண் அல்லது பெண்ணுடன் மேல் சாதித் தமிழர் வீட்டுப்பெண் அல்லது ஆண் காதல் கொண்டால், திருமணம் செய்துகொண்டால் உயிரோடு எரித்துக் கொல்கின்றனர் சில ஊர்களில். கலப்புத் திருமணத்தை அனுமதிக்கக் கூடாது என்று வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குரு பேசியதை இதற்கு முன் உள்ள கட்டுரையில் பார்த்தோம். அதே போல் கொங்கு வேளாளர் சங்கப் பிரிவொன்றின் தலைவர் கூறியதையும் பார்த்தோம். இவர்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசி விட்டார்கள். வெளிப்படையாக பேசாமல் மனதில் சாதி வெறியைச் சுமப்போர் பலர் உள்ளனர். கலப்புத் திருமணம் செய்து கொண்டோரைக் காவுகொடுத்தோர் பலர். தீண்டாமைச் சுவர்கள் எழுப்புவோரும் உள்ளனர்.

சாதியானது எனென்ன வகையில் தன்னைத் தக்க வைத்து கொள்கிறது என்பதை ஏற்கெனவே விரிவாகப் பார்த்தோம். தன்னைக் கொல்லவரும் நஞ்சையே உணவாக உட்கொண்டு செழிக்கிறது சாதி என்பதைப் பார்த்தோம். அனைவருக்கும் வாகுரிமை என்ற சனநாயகத்தைப் பயன் படுத்திக் கொண்டும், இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியைப் பயன் படுத்திக்கொண்டும் சாதி வளர்வதைப் பார்த்தோம். இப்பொழுது தமிழ்த் தேசியத்தையும் பயன்படுத்திக் கொண்டு வளர்ந்திட சாதி முயல்கிறது. வேதனையாக உள்ளது.

“ சாதி என்ற தாழ்ந்த படி
 நமக்கெல்லாம் தள்ளுபடி
 சேதி அப்படி தெரிந்து படி
 தீமை வந்திடுமே மறுபடி” என்றார் புரட்சிப்பாவலர் பாரதிதாசன்.

வர்ண-சாதி அமைப்பினால் ஏற்பட்ட ஊனங்களைக் களைய, அநீதிகளைப் போக்க, இட ஒதுக்கீடு வந்தது. அந்த இட ஒதுக்கீட்டிற்குத் தவிர பிற வற்றுக்கு சாதியைப் பயன் படுத்துவது சாதிவாதமே! அதேவேளை மக்கள் அனைவரும் நூற்றுக்கு நூறு வீதம் சாதியைக் கைவிட்டு விடும் சூழல் இன்றில்லை என்பதையும் உணர வேண்டும். தமிழ்த் தேசியத்தின் பயணம் சாதியற்ற தமிழ்ச் சமூகத்தை நோக்கியதாக இருக்க வேண்டும். மாறாக சாதி உணர்வுகளைப் புதுப்பிப்பதாக சாதிவாதத்திற்குப் புத்துயிர் கொடுப்பதாக் அமையக்கூடாது.

தமிழின உணர்வு, தமிழக விடுதலை, தமிழீழ விடுதலை ஆகியவை பற்றிப் பேசுவோர் அனைவரும் சாதியை மறுப்போர் என்று கருத முடியாது. அவர்களுள் சாதியை மறுப்போர் உள்ளனர்; சாதியைப் பெரிதாகப் பொருட்படுத்தாதோர் இருக்கின்றனர்; சாதியை ஏற்போர் இருக்கின்றனர். தன்சாதிப் பெருமிதம் கொண்டோர் இருக்கின்றனர். சாதி சங்கங்களில் உறுப்பு வகிப்போர் இருக்கின்றனர். தமிழினப் பெருமிதம் பற்றிப் பேசும் போதல்லாம் தம் சாதிப் பெருமிதம் பற்றியே எண்ணிக் கொள்வோர் உள்ளனர்.

இத்தனை வகையினரையும் தமிழ்ச் சமூக சமத்துவம் நோக்கி ஒருங்கிணைத்து அழைத்துச் செல்லும் பொறுப்பு தமிழ்த் தேசியத்திற்கு இருக்கிறது. இப்பொறுப்பு இருக்கிறது என்பதற்காக தீண்டாமைக் குற்றத்தையோ, பிற சாதிகளை இழிவாகக் கருதும் பண்புக் கேட்டையோ பொறுத்துக் கொள்ளக் கூடாது. இக்குணக் கேடுகளைக் கண்டிக்க வேண்டும். தீண்டாமை போன்ற குற்றம் புரிவோர்க்கு எதிராகப் போராட வேண்டும்.

சாதி ஒழிப்பிற்குப் பல படி நிலைக் கட்டங்கள் இருக்கின்றன என்ற நடைமுறை உண்மையையும் புரிந்து கொள்ள வேண்டும்.

தீண்டாமைக் குற்றம், மற்ற சாதிகளை இழிவாகக் கருதும் மனப்பான்மை போன்றவற்றை ஒழிக்கும் போராட்டம் உடனடித் தேவை. இதன் அடுத்தக் கட்டமாக சாதிகள் மரபு வழிப்பட்ட அடையாளங்களாக மட்டும் நீடிக்கும் காலம் வரும். இக்கட்டத்தில் சாதிகளுக்கிடையிலான கலப்புத் திருமணங்கள் இயல்பாக நடக்கும். அடுத்து, நடைமுறைத் தேவை எதுவுமின்றி, சாதி உணர்வு தேய்ந்து தேய்ந்து மங்கி மறைந்து போகும் காலகட்டம் வரும். சாதி ஒழிப்பில் இம்மூன்று கட்டங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழிப்பு என்பது ஒரு தொலைநோக்குத் திட்டம். அதை அடைவதற்கான முதலிரண்டு படிக்கட்டுகள் இருக்கின்றன என்ற உண்மையை உணரவேண்டும்.

ஆலைகளை அரசுடைமையாக்கி முதலாளியத்தை ஒழிப்பது போல சாதியைச் சட்டம் போட்டு ஒழிக்க முடியாது. சாதி இறுதிக்கும் இறுதியாக மனித மனதில் இருக்கிறது. அது ஓர் உளவியல். சாதியானது புறச்சூழ்நிலைகளிலிருந்து உருவானதுதான். அது உருவானபோது இருந்த புறச்சூழ்நிலை இன்றில்லை. ஆனாலும் அது மனித மனநிலையில் வாழ்கிறது. அப்படிப்பட்ட மனித மனநிலையானது, சாதி வாழ்வதற்கான புறச்சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டே இருக்கிறது.

இன்று மனநிலையைத் தனது அடித்தளமாகக் கொண்டு செயல்படும் சாதியை அதே மனநிலையைக் கொண்டுதான் நீக்க முடியும் சாதி தங்கியிருப்பதற்கான காரணங் களுள் ஒன்றாகக் கூட்டுத் தற்காப்புணர்ச்சி, கூட்டுத் தற்காப்பு நிலை என்பவற்றை ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளோம். “நம்ம சாதியினர், நம்ம ஆட்கள்” என்ற உணர்வு ஒரு கூட்டுத் தற்காப்பு மனநிலையாகவும், கூட்டுத் தற்காப்புப் புறநிலையாகவும் உள்ளது. மனதின் அந்த இடத்தில் “நாம் அனைவரும் தமிழர்கள் “தமிழர்கள் அனைவரும் நம்மவர்கள்- நம்ம ஆட்கள்” என்ற உணர்வை வளர்க்க வேண்டும். அவ்வுணர்வு தமிழ்மக்களின் மனதில் ஏற்கெனவே இருக்கிறது. அதனை மேலும் வளர்க்க வேண்டும்.

இன அடிப்படையில் தமிழ்சாதிகள் அனைத்தின் உரிமைகளும் பறிக்கப்பட்டிருக் கின்றன. எல்லோருடைய மனதிலும் இது பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான மன உணர்வுகளைத் தமிழின ஒருமைப்பாட்டை வளர்ப்பதற்கும் அதன் வழி உரிமைகளை மீட்பதற்கும் பயன்படுத்த வேண்டும். “தமிழ்த் தேசியம்” என எழுந்து வரும் தமிழர் சித்தாந்தம்தான் இன வழிபட்ட கூட்டுத் தற்காப்புணர்ச்சியையும், கூட்டுத் தற்காப்பு ஆற்றலையும் வளர்க்கும். இட்டுக்கட்டிக் கொண்ட “ இந்தியர்” என்ற இல்லாத இனப்பெயரோ “திராவிடர்” என்ற இல்லாத இனப்பெயரோ, தமிழர்கள் மனதில் மெய்யான இன உணர்ச்சியை உண்டாக்காது. கூட்டுத் தற்காப்புணர்ச்சியையும் உருவாக்காது.

கழகத் தலைமைகள் “திராவிடன்”, “திராவிடன்” என்று அலறிய போது “தமிழன் தமிழன்” என்று தங்கள் மனதில் உணர்ந்ததால்தான், தமிழர்கள் இன உணர்வு பெற்றனர். தடங்கல்களும் குழப்பங்களும் கொண்ட வடிவத்தில்தான் அவ்வின உணர்வும் இருந்தது.

தமிழர் என்ற இன உணர்வு எந்தத் தங்கு தடையுமின்றி வெள்ளமாகப் பாய்ந்தால் சாதி அழுக்குகள் அனைத்தையும் அது அடித்துச் சென்று விடும்.

“தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்யடா” என்று பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் பாடியது போல், “ துடைப்பம் எட்டாத இடத்தில் தூசி தானாக மறையாது” என்று மாவோ சொன்னதுபோல், சாதி ஆதிக்கத்தை, சாதி இழிவைத் துடைத்தெறிய, மனித சமத்துவத்தை நிலை நாட்ட, கருத்துப் போராட்டமும் களப் போராட்டமும் நடத்தியே தீரவேண்டும். அப்போராட்டத்திற்குத் தமிழ்த் தேசியத் கருத்தியல் உந்துவிசை அளிக்கும்!

சாதி ஆதிக்கத்திற்கெதிரான, தீண்டாமைக் கெதிரான, மனித சமத்துவத்திற்கான போராட்டங்களை பாதிக்கப்பட்ட சாதி அமைப்புகளே நடத்திக் கொள்ளட்டும் என்று விட்டுவிடாமல் தமிழ்த் தேசிய அமைப்புகள் முன்கையெடுத்துப் போராட வேண்டும். தமிழ்த் தேசியம் நடத்தும் இப்போராட்டங்கள், சாதிகளைத் தனித்தனி முகாம்களாகப் பிரிந்து வைப்பதற்காக அன்று; குற்றங்களைந்து, குறை நீக்கி கூட்டுப் பொறுப்புள்ள சமூகமாகத் தமிழர்களை இசைவிப்பதற்காக!

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்” என்று குரல் கொடுத்த தமிழர்கள் அடுத்த தெருவில் உள்ள தமிழர்களை அயலாராகக் கருதிய அவலம் ஏன்? சொந்த இனத்தின் ஒரு பகுதியைத் தீண்டத்தகாததாய்த் தொலைவில் நிறுத்தியது ஏன்? “நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்” என்ற தமிழர்களிடையே ஆண்டான்- அடிமை முறை அரங்கேறியது எப்படி? காரணங்களைக் கண்டறியும் ஆராய்ச்சிகள் இருக்கின்றன. அவை போதா! காரணங்களைக் களையும் களப்பணிகள் வேண்டும். வரலாற்றின் கோணல்களை நிமிர்த்தும் நெஞ்சுரம் வேண்டும்.

வாய்ப்பான காலமிது; மாறுதலுக்கான வாயில் திறந்திருக்கிறது. கல்விப் பெருக்கம் வளர்ந்து வருகிறது. தகவல் தொழில் நுட்பப் புரட்சி ஒவ்வொரு நொடியும் உலக நடப்புகளை வீட்டிற்குள் வழங்குகிறது. இவற்றால் காதல் திருமணங்கள் பெருகிவருகின்றன. சாதிகளைக் கடந்து இத்திருமணங்கள் நடக்கின்றன. வேறு சாதியில் திருமணம் செய்தால் “வெட்டுவேன்”, “குத்துவேன்” என்று அலை பவர்களின் வீடுகளிலேயே கலப்புத் திருமணங்கள் நடக்கின்றன. இணையர்கள் வெளியூரில் போய் தங்கி விடுகிறார்கள். கலப்புத் திருமணங்களின் எண்ணிக்கை பெருகி வருகின்றது. கரை உடைக்கும் காதல் வெள்ளம் சாதிச் சுவர்களைத் தகர்த்தெறிகிறது. இதே போக்கில் போனால் விரைவான எதிர் காலத்தில், அனைவரும் கலப்புத் திருமணங்களை அமைதியாக அனுமதித்துவிடும் நிலை தோன்றும்.

காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த சாதிப் பெருமை, குடும்பப் பெருமை குலைகிறதே என்று குமுறும் மன நிலையும் குறைந்து போகும். மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்று மருகும் மனக் கலக்கமும் மாறிவிடும். ஏனெனில் அந்த “மற்றவர்” வீட்டிலும் கலப்புத் திருமணம் நடந்திருக்கும்! உலகமயம் எத்தனையோ தீங்குகளை உருவாக்கியிருக்கிறது. அது ஒன்றிரண்டு நன்மைகளையும் செய்திருக் கிறது. அவற்றுள் ஒன்றுதான் அதிகரித்து வரும் காதல் கலப்புத் திருமணங்கள். வேகமாக நடக்கும் காதல் திருமணங்கள் வேகமாக முறிந்து போகக் காரணமாக இருப்பதும் உலகமயம் தான்! ஆனால் இந்த முறிவுகளுக்குச் சாதி காரணமல்ல. வேறுகாரணங்கள் இருக்கின்றன. அவற்றைத் தங்கள் மன வளத்தால், பக்குவத்தால் இணையர்கள் சரி செய்து கொள்ள வேண்டும்.

சாதி, செயலற்றுப் போக - செத்துப்போக இத்தனை புதிய வாய்ப்புகள் தோன்றி யிருப்பினும் அதற்குப் புத்துயிர் ஊட்டி வருவது வருணாசிரம தருமம் அதாவது பார்ப்பனியம். ஒடுக்கப்பட்ட வகுப்புகளின் உரிமைக்காகப் பாடுபடும் தோழர்கள் சிலர் பார்ப்பனியத்தின் அபாயத்தை உரியவாறு உணர்வதில்லை. “ ஊரிலே நம்மைத் தாக்குவோர் பார்ப்பனர் அல்லவே, பின் தங்கிய வகுப்புகளைச் சேர்ந்தவர்கள் தானே தாக்குகிறார்கள். அவர்கள்தான் தங்களின் முதல் எதிரி, முழு எதிரி” என்று கருதுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கருதுவதற்கு உடனடி காரணங்கள் இருக்கின்றன. ஆனால், அனைத்தையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

சாதிக்கென்று தனித் தத்துவம் கிடையாது. அதன் மூலவேர் தொழில் பிரிவினைதான். ஆனால் சாதியத்தைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவம் வருணா சிரம தருமம். வருணா சிரம தருமம் என்பது பார்ப்பனியம்! அது பார்ப்பனர்களிடமிருந்து ஊற்றெடுத்துப் பார்ப்பனரல்லாதாரிடமும் பரவுகிறது. அது பல வழிகளில் செயல்படுகிறது.

அடர்த்தியாக உள்ள பிறபடுத்தப்பட்ட வகுப்பினரும் மற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரும் தங்களுக் கீழே உள்ள சிறுபான்மைச் சாதிகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளையும் தாக்குவது நடக்கிறது. இந்த சாதி ஒடுக்குமுறையானது வட்டாரத் தன்மை வாய்ந்தது. எந்த ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் அல்லது மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிக்கும் தமிழகம் தழுவிய செல்வாக்குக் கிடையாது. தமிழகத் தைப் பொறுத்தவரை இச்சாதியினர் ஒரு வட்டாரத்திற்குட்பட்டிருப்பர்; தமிழக அரசியல் மற்றும் அரசியன் செல்வாக்கைப் பயன்படுத்திக் கொள்வர். அதற்கு மேல் அனைத்திந்தியத் தன்மையோ, அனைத்திந்திய அரசியல் செல்வாக்கோ இப்பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு இல்லை.

பார்ப்பனர்கள் அனைத்திந்திய வருணமாகவும் அனைத்திந்திய அளவில் ஆளும் சாதியாகவும் உள்ளனர். மொழி வேறுபாடு இருந்த போதிலும் அவர்கள் தங்களின் மூலமொழி சமற்கிருதம் என்ற அடிப்படையில் பொதுவான உளவியல் மற்றும் ஒருமைப்பாடு கொண்டுள்ளனர். இந்திய அரசின் தத்துவம் ஆரியப் பார்ப்பனியமே! எந்த நாட்டு அரசுக்கும். ஓர் இனத் தத்துவம் இருக்கும். இந்திய அரசுக்கு ஆரியத் தத்துவம் இருக்கிறது. அண்மையில் சமற்கிருத விருது வழங்கும் விழா ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “சமற்கிருதம் இந்தியாவின் ஆன்மா” ( sanscrit is the sprit of india) என்றார். எனவே சாதியத்தின் பாதுகாப்புப் பாசறைகள் இந்திய அரசு, உச்ச நீதிமன்றம், போன்றவையே! இட ஒதுக்கீடு குறித்த உச்ச நீதிமன்றத்தின் பிற்போக்கான தீர்ப்புகளே இதற்குச் சான்று. கொலைக் குற்றம் சட்டப்பட்ட காஞ்சி செயேந்திர சரசுவதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் பிணை மறுத்த போது உச்சநீதிமன்றம் உடனடியாகப் பிணை கொடுத்ததும் அந்த அடிப்படையில்தான்!

புரட்சி பேசும் அனைத்திந்திய இடதுசாரித் தலைமைகளும் பெரிதும் பார்ப்பனியத் தலைமையே. செயேந்திர சரசுவதி தளைப்படுத்தப்பட்ட போது சி.பி.எம் தலைவர்களில் ஒருவரான சீத்தாராம் எச்சூரி அதைக் கண்டித்தார். அக்கட்சியைச் சேர்ந்த இந்து என்.ராம் வெளியூரில் இருந்த சின்ன சங்கராச்சாரிக்கு காஞ்சிபுரம் வரை வழிக்காவலராக (escort) வந்து மடத்தில் விட்டுவந்தார்.

இந்திய அரசு, உச்ச நீதிமன்றம் ஆகியவை “தலித்துகள்” மீது அக்கறை கொண்டவைபோல் அவ்வபோது காட்டிக் கொள்ளுகின்றனர். அந்த அக்கறை மெய்யான சாதி ஒழிப்பின் மீது கொண்ட அக்கறை அன்று. அவை, ஒடுக்கப்பட்டுத் துன்புறும் தலித்துகளுக்கு சில உதவிகள் அவர்களை தலித்துகளை நிரந்தரமாக சமூகத்தின் இதரப் பகுதியினரிடமிருந்து பிரித்து வைக்கும் உள் நோக்கம் கொண்டவையாகும். பார்ப்பனரும் பார்ப்பன ஊடகங்களும் தலித்துகள் மீது காட்டும் பரிவும் இந்த உள் நோக்கம் கொண்டதே!

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம் போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையில், ஆசிரியர் அமர்த்தத்தில் தலித்துகளுக்குரிய இட ஒதுக்கீட்டின் முழு அளவும் நிரப்படுவதில்லை. சிறிய அளவே சேர்க்கப்படுகின்றனர். இதில் இந்திய ஆட்சியாளர்களோ உச்சநீதிமன்றமோ பார்ப்பன ஊடகங்களோ அக்கறை காட்டுவதில்லை. கோயில்களில் அர்ச்சகர்களாகத் தலித்துகள் உள்ளிட்ட இதர சாதியினர் அமர்த்தப்பட்டலாம் என்பதற்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் போடுகின்றது உச்ச நீதிமன்றம். பார்ப்பனர்கள், தலித்துகளை அர்ச்சகர்களாக ஏற்றுக் கொள்வதில்லை. தலித்துகளின் தாய்மொழியையும் அர்ச்சனை மொழியாக அவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றங்கள் ஆகியவற்றில் தலித்துகளை உரிய எண்ணிக்கையில் நீதிபதிகளாக அமர்த்து வதில்லை. அரசமைப்புச் சட்டம் அனுமதித்தும் கூட உயர்நீதிமன்றங்களில் ஆங்கிலம், இந்தி தவிர, இதர மாநில மொழிகளில் வழக்கு நடத்த உச்ச நீதிமன்றமு இந்திய அரசும் அனுமதிப்பதில்லை. தாய் மொழியில் வழக்கு நடத்த அனுமதித்தால்தான் முதல் தலைமுறையாக வழக்கறிஞர்கள் ஆன தலித்து மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் தங்களின் வாதத்திறமையை சிறப்பாக வெளிப்படுத்த முடியும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சிலபிரிவினர் வட்டார அளவில் ஒடுக்கப்பட்ட மக்களைத் தாக்குகிறார்கள், அவர்களின் உரிமைகளைப் பறிக்கிறார்கள் என்பது உண்மை. அப்படிப்பட்ட பிற்படுத்தப்பட்டவர்களின் சாதிவெறி அட்டூழியங்களை முறியடிக்க ஒடுக்கப்பட்ட மக்களும், மனித உரிமையில், தமிழின உணர்ச்சியில் அக்கறை கொண்ட அனைத்து சாதிகளைச் சேர்ந்தோரும் போராட வேண்டும். ஆனால் அதற்காகப் பார்ப்பனியத்தின் பக்கம் ஒடுக்கப்பட்ட மக்கள் சாய்ந்து விடக்கூடாது.

தங்களுடைய சமூக ஆதிக்கத்திற்கு உடனடியாக ஒடுக்கப்பட்ட மக்களிடமிருந்து ஆபத்து வந்து விடாது. பிற்படுத்தப்பட்டவர்களிடமிருந்தே ஆபத்து வரும் என்று பார்ப்பனர்கள் கருதுகிறார்கள். எனவே பிற்படுத்தப்பட்ட மக்களின் எழுச்சியைத் தடுக்க ஒடுக்கப்பட்ட மக்களைப் பயன்படுத்த முயல்கின்றனர். தமிழ்த் தேசியத்தைப் பொறுத்தவரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கும் பிறப்டுத்தப்பட்டவர்களை எதிர்த்துப் போராடிக் கொண்டே ஒட்டுமொத்தத் தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமையைக் கட்டமைக்க வேண்டும் என்கிறது

எனவே சாதி ஆதிக்கத்தின் பாதுகாப்புப் பாசறையாக உள்ள தில்லியிலிருந்து, அதாவது இந்தியாவிலிருந்து தமிழ்நாடு தன்னைத் துண்டித்துக் கொள்வதே சாதி ஒழிப்பிற்கு முன் தேவையாக உள்ளது. எல்லா அதிகாரங்களும் பெற்ற இறை யாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசு அமைந்தால் வருண-சாதி ஆதிக்க ஒழிப்பு விரைவுபடும். இந்தியாவுடன் இருக்கும் வரை வருணாசிரம ஊற்றுக்கண் ஊறிக்கொண்டேதான் இருக்கும். அது பார்ப்பனரல்லாதாரிடமும் ஒவ்வொரு அளவில் பாயும். சாதி ஆதிக்கம் பாதுகாக்கப்படும்.

சாதி ஒழிப்பில் தமிழ்த் தேசியத்தின் உடனடி வேலைத் திட்டம்

1. தமிழ்த் தேசியர்கள் தங்கள் மனதளவில் சாதிப் பாகுபாடுகளைக் களைந்தவர்களாக நடந்து கொள்ள வேண்டும்.
2. தங்கள் குடும்பத்தில் சாதி மறுப்புத் திருமணங்களை நடத்த மெய்யாக முயல வேண்டும்.
3. தீண்டாமைக் குற்றத்தைத் துளியும் செய்யாதவராய் இருக்க வேண்டும்.

அரசு செய்ய வேண்டியவை:

4. வழி வழியாய் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் குடும்பத் தினர்களுக்கென்று தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

5. ஒடுக்கப்பட்ட வகுப்பில் பிறசாதியினர் திருமணம் செய்து கொண்டால், அவ்வொடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆணுக்கு அல்லது பெண்ணுக்கு தமிழக அரசு தகுதிக் கேற்ப வேலை வழங்க வேண்டும்.

6. வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளில் 25 விழுக்காடு வீடுகள் ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கு வழங்க வேண்டும்.

7. சாதி அடிப்படையில் தொழில் செய்ய வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெட்டியான் போன்ற வேலைகளைத் தடை செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் ஒவ்வொரு ஊராட்சியின் தேவைகேற்ப சுகாதார ஊழியர்களை அமர்த்த வேண்டும். அவர்கள் சுடுகாடு, இடுகாடு பராமரித்தல், செத்தகால் நடைகளை அப்புறப்படுத்தல் போன்ற பணிகளைச் செய்ய வேண்டும்.

8. அரசு மற்றும் நீதிமன்ற அறிவிப்புகளைத் தண்டோரா (டாம்டாம்) போட்டு அறிவிக்கச் செய்வதைத் தடை செய்ய வேண்டும். இதனை இப்போது குறிப்பிட்ட சாதியினர்தாம் செய்கின்றனர். புதிய சனநாயக வழிகளில் அறிவிப்புகள் செய்ய வேண்டும்.

9. சாதி மறுத்து, காதல் திருமணம் புரிந்து கொள்ள வீட்டை விட்டு வெளியேறிய பெண்ணைக் காதலன் கடத்திக் கொண்டு போய் விட்டதாகப் பெற்றோரால் தரப்படும் புகார்களை உடனே வழக்காகப் பதிவு செய்யாமல், உண்மை நிலை அறிந்து குறிபிட்ட அகவை அடைந்திருந்தால் ஆணும் பெண்ணும் ஒப்புதல் தெரிவித்தால் திருமணம் செய்து வைக்கக் காவல் துறை உதவி செய்ய வேண்டும். சட்டப்படியான அகவை அடையாமல் இருந்தால் அவர்களைப் பிரித்து விட வேண்டும்; பெண் விரும்பினால் காப்பகத்தில் விட வேண்டும். அதற்கு மேல் அச்சிக்கலில் வழக்குப் பதிவு செய்யக் கூடாது.

10. தீண்டாமை, சாதி வழியில் இழிவு படுத்துதல் போன்ற குற்றங்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

11.  மனித மலத்தை அள்ளும் மனித மாண்புக்கு எதிரான மற்றும் சுகாதாரக் கேடான வேலைகளை செய்ய தடை விதித்திருந்த போதும் அவ்வேலைகளை குறிப்பிட்ட வகுப்பு மக்கள் செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள். இக் கொடுமையை அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். அதற்கானப் போராட்டத்தை மனித உரிமை மீது அக்கறையுள்ளோர் அனைவரும் நட்த்த வேண்டும். அதே போல் நச்சுக்காற்றை அடக்கிக் கொண்டுள்ள சாக்கடை குழாய்களுக்குள் மனிதர்கள் இறங்கி சீர் செய்யும் பணிகளை தடை செய்ய வேண்டும். அவ்வேலைகளுக்கு கருவிகளைப் பயன் படுத்த வேண்டும்.

12. வருண-சாதி வேறுபாடுகள் மற்றும் ஆதிக்கங்களுக்கெதிராகவும் மனித சமத்துவத்திற்கு ஆதரவாகவும் இன எழுச்சி மற்றும் மறுமலர்ச்சிப் பரப்புரையைக் கட்டவிழ்த்து விட வேண்டும். கலை இலக்கியப் படைப்பாளிகளின் பங்களிப்பு இத்துறையில் கூடுதலாக இருக்க வேண்டும்.

தமிழ்ப் பெருமக்களே,

நமக்குப் பின்னால் இன்னும் எத்தனையோ இலட்சம் ஆண்டுகள் எத்தனையோ இலட்சம் தலைமுறைகள் வரப் போகின்றன; வாழப்போகின்றன. சமூக மாற்றங்கள் எவ்வளவோ நடைபெறவிருக்கின்றன. நம் காலத்தின் தேவைக்கேற்ப, உலகப் போக்கிற்கேற்ப முற்போக்காக நமது தமிழ்ச் சமூகத்தை மாற்றியமைத்து, அதன் உயிர்த்துடிப்பைப் பாதுகாக்க வேண்டும்.

“பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி யினானே” என்று இலக்கணம் வகுத்த சமூகம் தமிழ்ச்சமூகம்.

உலகின் முதல் நாகரிகத்துக்குச் சொந்தக்காரர்கள் தமிழர்கள். உலகின் முதற் செம்மொழி தமிழ். நம்முடைய இனத்தை இன்றையத் தேவைக்கேற்ப, வளர்ச்சிக் கேற்ப பொருத்தப்படுத்த வேண்டும்.

ஞாயங்கள், ஞாயங்கள் என்பதற்காகத் தானாக வெற்றிபெறுவதுமில்லை. எளிதாக வெற்றி பெறுவதுமில்லை. போராட்டங்கள் தாம் உண்மைகளையும் ஞாயங்களையும் வெற்றி பெறச் செய்கின்றன. தமிழ்த் தேசியப் புரட்சியின் பிரிக்க முடியாத பகுதியாக சமத்துவ சமூக அமைப்புத் திட்டம் உள்ளது.

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?
-திருநாவுக்கரசர் (தேவாரம்)

சாதி ஒழித்தல் ஒன்று- நல்ல
தமிழ் வளர்த்தல் மற்றொன்று
பாதியை நாடு மறந்தால்- மறு
பாதி துலங்கு வதில்லையாம்.
- புரட்சிப் பாவலர் பாரதிதாசன்

(நிறைவு)

Pin It