இரயில் பயணம் சுகமானதாம்
எவரோ எழுதி எங்கோ படித்த ஞாபகம்
திட்டமிட்ட பயணம்
உறுதி செய்யப்பட்ட பயணச்சீட்டு
வழியனுப்பவும்-வரவேற்கவும் ஆட்கள்
இப்படி வாய்க்கப் பெற்ற
எவரோ தான் எழுதியிருக்க வேண்டும்

இருபது ஆட்களின் இடிகளுக்கிடையில்
முண்டியடித்து உள்ளே புகுந்து
நூறுபேர் பயணிக்க வேண்டிய பெட்டியில்
ஐநூறு பேரில் ஒருவராக நாமும்
அதிலும் கழிவறைக்கு அருகில்
பலமணி நேரம் கால் கடுக்க நின்று
கண்விழித்து பயணம் செய்தால் தெரியும்
இரயில் பயணம் மகிழ்ச்சிக்குரியதா-மரண அவஸ்தையா என்று!

உறுதி செய்யப்படாத பயணச்சீட்டுடன்
பயணச்சீட்டு பரிசோதகரின் பின்னால்
நாயைப் போல் சுற்றி வந்து
உடல் முழுவதும் கூனிக்குறுகி
மொத்தப் பல்லும் வெளியே தெரிய
கெஞ்சி கூத்தாடும் போது
வாழ்நாள் முழுவதும் சேர்த்து வைத்திருந்த
பெருமையும் கர்வமும்
கால் வழியாக கரைந்து ஓடுவதை
உணர்ந்திருந்தால் தெரியும்
இரயில் பயணம் மகிழ்ச்சிக்குரியதா-மரண அவஸ்தையா என்று!

எப்போது வாய்க்கும்
எல்லோருக்கும் ரயில் பயணம்
சுகமாகவும், மகிழ்ச்சியாகவும்
ஏங்குது உள்ளம்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.