முந்தைய வருடத்தின்
முத்தங்கள்
காட்சி பிம்பமென
அசைந்தாடிக் கொண்டேயிருக்கின்றன!

கனவுகளின்
அழுத்தம் தாளாது
இதயத் திரைச் சீலையில்
ஆங்காங்கே
கிழிசல்கள்!

தொலைபேசியில்
கசியும் குரல்...
அலைபேசியின்
குறும்புத் தகவல்...
இணையதள
கைகுலுக்கல்...
மடிக்கணினியில்
தத்ரூபமாய் தோன்றும்
உதட்டுச் சுழிப்பு
எல்லாமே
இடைவெளி குறைந்ததான
பாவனை சுமந்து தாவும்
பொய்மான் தோற்றங்கள்!

தொடுதல், தழுவுதல்,
சீறுதல், சிணுங்குதல்,
கரைதல், கலங்குதலாகிய
உணர்வுகளின் துடிப்புகளையும்
உயிரற்ற எழுத்துருக்களின் வழி
இறக்கி வைக்க நேர்கிற அவலம்!

ஒற்றை மாத வசந்தம்
அனுபவிக்க
முந்நூற்று முப்பது நாட்களும்
இலையுதிர்க்க வேண்டிய
கட்டாயம்!

இதோ...
வருகையின் அடையாளமாய்
வீடெங்கும்
இறைந்து கிடக்கிறது
வாசனை திரவியக் குப்பிகள்!

கட்டை விரலில்
பலங்கொண்ட மட்டும்
அழுத்தி
மேனியெங்கும்
அப்பிக் கொள்கிறேன்
மனம் அழுகிய
நாற்றம் மறைப்பதற்காக!

- கோவை மீ.உமாமகேஸ்வரி

More articles by கோவை மீ.உமாமகேஸ்வரி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.