கே.பாண்டுரங்கன், சென்னை
மறுவாசிப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்?

சாதிய-ஆணாதிக்க எதிர்ப்பாக இருக்க வேண்டும். இதிகாச - புராண வாசிப்பில் இதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இதை விடுத்து நவீன மொழி வழி பேசல் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தால் அது கூறியது கூறலாகவே இருக்கும். அது மறுவாசிப்பு அல்ல, மறுபடி சொல்லுதல்.

எஸ்.ராதாகிருஷ்ணன், செய்யாறு
புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் தமிழக அரசிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள்?

ஆரம்பமே அசத்தல் என்றோ, ஆரம்பமே சரியில்லை என்றோ சட்டென்று கூற முடியாதபடி இரண்டும் கலந்து கிடக்கிறது. திருக்குறள் மற்றும் பாரதியார்-பாரதி தாசன் படைப்புகளை உலக மொழிகளில் பெயர்க்க ஏற்பாடு செய்திருப்பதாக ஆளுநர் உரையில் கூறியது அரசு. அதுவேதான் முதலாம் வகுப்பு பாடத்திலிருந்து பாரதிதாசனின் “ஆத்திச்சுவடி”யையும், ஆறாம் வகுப்புப் பாடத்திலிருந்து அப்துல் ரகுமானின் “தாகம்” கவிதையையும் நீக்கச் சொல்லி உத்தரவு போட்டிருப் பதாகச் செய்தி வருகிறது. தை மாதமே தமிழ் ஆண்டுப் பிறப்பு எனும் கவிதையும் நீக்கப்படுகிறதாம்! இத்தகைய பழமைவாதப் பார்வை தமிழ் வளர்ச்சிக்கு உதவாது. முந்திய காலம் போல இல்லாமல் இப்போதாவது மாற்றுக் கருத்தாளர் களிடம் சகிப்புத் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க் கிறோம்.

ஜே.கே.எப். அகமது, தஞ்சாவூர்
“தீராநதி” (ஜூன், 2011) யில் எழுத்தாளர் வாஸந்தி, மம்தாவை ஏற்றிப் போற்றியும் இடதுசாரி ஆட்சியைக் கடுமையாய் விமர்சித்தும் எழுதியிருக்கிறாரே..?

அடேங்கப்பா! மம்தா வெற்றிபற்றி அவருக்கு ஒரே புளகாங்கிதம்! கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியை அவர் உள்ளூரக் கருவிக் கொண்டேயிருந்தார் என்பது இப்போது வெளியே வருகிறது. தனது கம்யூனிச வெறுப்பை மறைக்க இல்லாது பழிகளை எல்லாம் தூக்கி வைக்கிறார். “மம்தா என்கிற பெயரையே மார்க்சிஸ்ட் அரசு வெறுக்க ஆரம்பித்தது. அவரைப் பற்றி அவதூறுகள் பரப்பப் பட்டன. படித்தவர்களின் கட்சியைச் சேர்ந்தவர்கள் நிலப் பிரபுத்துவ காலத் தினர்போல் மோசமான வார்த்தைகளால் திட்டி னார்கள். அவரும் அவ ரது கட்சிக்காரர் களும் தாக்கப்பட்டார்கள்” என்று இஷ்டத் துக்கு எழுதியிருக்கிறார். தமிழ் நாட்டு அரசியலைப் போல மேற்கு வங்க அரசியலைச் சித்தரிக் கிறார். முதல்வராக இருந்த புத்ததேவையும் அவரது தோழர்களை யும் கண்டபடி ஏசிப் பேசியவர் மம்தாவே. ஆளுங்கட்சியாக இருந்தும் கொலை யுண் டவர்கள் பட்டியலில் மிக அதிகமானோர் மார்க் சிஸ்ட்டுகளே. மம்தாவின் வெற்றிக்குப் பிறகு அந்தக் கொடூரம் மேலும் அதிகமாகிப்போனது. மத்திய உள்துறை அமைச்சரே கவலை தெரிவிக்க வேண்டிவந்தது. வாஸந்தியோ இதையெல்லாம் புறந்தள்ளி விட்டுப் பொய்யாய்ப் பேசுகிறார். அதையும் முதல் பக்கம் போட்டுக் கொண்டாடு கிறது “தீராநதி”. கம்யூனிச எதிர்ப்பில் அந்த ஏட்டுக்குத் தீரா ஆசை!

செ. மாதவன் ராஜா, இராமேஸ்வரம்
தொல்லியல் இடங்களைப் பராமரிக்கும் அக்கறை தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு உள்ளது?

அண்மையில், வந்தவாசிப் பகுதியில் உள்ள சமணர் கோவில்கள் சிலவற்றுக்கு அந்த சமயத்தைச் சார்ந்த நண்பர்கள் அழைத்துப் போனார்கள். மேல் சித்தா மூர் மடம், கோவிலைப் பார்த்தேன். அந்தப் பெரிய சமணக் கோவில் நன்கு பராமரிக்கப் படு கிறது. தோற்றத்தில் இந்துக் கோவிலைப் போலவே இருக்கிறது. கருவறையில் தீர்த்தங்கரர். உள்ளே வரை சென்று தரிசிக்கலாம்! மிக அழகாக, சுத்தமாக உள்ளது. ஆனால், வேறு சில சிறிய கோவில்கள் பரிதாபமான நிலையில் உள்ளன. பொதுவாக தீர்த்தங்கரர் உருவங்கள் குன்றின் உச்சிப் பகுதியில் தான் இருக்கும். இங்கு ஒரு ஊரில் தரை யில் உள்ள ஒரு பெரும் கல்லில் அது வடிக்கப்பட்டுள்ளது. தரையில் இருப்பதாலேயே சிதைவுக்கு ஆளாகக் கூடிய ஆபத்து உள்ளது. அதைச் சுற்றி கம்பி வேலி கூட இல்லை. இதையெல்லாம் தமிழக அரசு கவனித்தால் என்ன? கடந்த திமுக ஆட்சி சமணர் மலைகளைப் பாதுகாக்க அக்கறை காட்டவில்லை. தற்போதைய ஆட்சியாவது இதில் கவனம் செலுத்த வேண்டும். இது ஏதோ தமிழ்ச் சமணர்கள் கவனிக்க வேண்டிய பணி என்று ஒதுக்கிவிடக் கூடாது. இது சகல தமிழர்களின் பூர்வீகக் சொத்து.
 
எம்.ஜெபஸ்டியன், திருவள்ளூர்
இன்று அரசியல் காரணங்களுக்காக ரஷ்யாவும் ரஷ்ய இலக்கியங்களும் இருட்டிப்புச் செய்யப்படுகின்றன என்று எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் (புத்தகம் பேசுது, ஜூன் 2011) கூறியுள்ளாரே..?

ரஷ்ய இலக்கியங்கள் மாஸ்கோவில் தமிழில் பெயர்க்கப்பட்டுத் தமிழகத்தில் சர்வசாதாரணமாகக் கிடைத்த அந்தக் காலம் நினைவுக்கு வருகிறது. அது எவ்வளவு எழுத்தாளர்களை உத்வேகப்படுத்தியது! எஸ்.ராம கிருஷ்ணனும் அவர்களில் ஒருவர். அதனால் தான் அவர் நியாய மான ஆதங்கத்தோடு தற்போதைய இருட்டப்பு வேலையைக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், கோணங்கியின் இருண்மைவாத எழுத்துக்களையும் இதே வேகத்தோடு அவர் நியாயப்படுத்துவதுதான் புதிரானது.

“க்யூபிச ஓவியங்களை அதன் சிதறடிக்கப்பட்ட உருவங்களை நிறையப் பார்க்கிறோம். எழுத்தில் அதைச் செய்யும் போது புரியாமை நடக்கத்தான் செய்யும். கோணங்கி என்றைக்குமே புரியாமல் போவதால் தான் நிராகரிக்கப்படுவதாக நினைக்கவேயில்லை” என்று வாதிடுகிறார். தஸ்தாயெவஸ்கியை, டால்ஸ்டாயை, செக்காவ் வை கொண்டாட வேண்டிய காலம் உருவாகி உள்ளது என்றும் கூறு கிறார் எஸ்.ராமகிருஷ்ணன். அவர்களுக்கும் கோணங்கியின் எழுத்துக்கும் என்ன சம்பந்தம்? புரியா எழுத்து வகையானது இலக்கி யத்தின் சமூகப் பயன்பாட்டை நிராகரிக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. வினோதம் என்ன வென்றால் இந்த வகை எழுத்துவகையில் ராம கிருஷ்ணன் போய் மாட்டிக் கொண்டதில் லை. ஆனால், கோணங் கியை மட்டும் இப்படி எழுதத் தூண்டுவது அவ ருக்கும் நன்மை செய் யாது, தமிழ் இலக்கியத் திற்கும் நன்மை செய் யாது.

லெ.ப.கரு.மருதையா, தேவகோட்டை
இலங்கைப் பிரச்சனை தொடர்பாகத் தமிழக அரசு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது நல்லதுதானே..?

தீர்மானம் போட்டது, அதைப் பிரதமரிடமும் கொடுத்தார் முதல்வர். பேச்சுவார்த்தை நடத்த இலங்கைக்குப் போனது இந்தியக்குழு. தமிழர்களுக்கு உரிய அரசியல் அதிகாரம் தரப்பட வேண்டும் எனும் அந்தக் குழுவின் வேண்டு கோளை இலங்கை அரசு நிராகரித்துவிட்டதாக அந்த நாட்டுப் பத்திரிகைகள் சொல்லின. அதை யாரும் மறுக்கவில்லை. போனார்கள்... வந்தார்கள்... வெறுங்கையோடு! இனி என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?

எஸ்.ரத்தினவேலு, மதுரை
சமச்சீர் கல்வி பற்றி ஆராயப் போடப்பட்டுள்ள நிபுணர் குழு எப்படி?

சோசலிசம் பற்றி ஆராய டாட்டா - பிர்லாக்களைக் கொண்டு குழு போட்டது போலிருக்கிறது. இதற்கு நேரடியாகவே சொல்லிவிடலாம் - சமச்சீர் கல்வி யை ஊற்றி மூடப் போகிறோம் என்று!

என்.பாலகிருஷ்ணன், தென்காசி
கே.பாலச்சந்தருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டிருப்பது குறித்து..?

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்று இரு நாயகர் களைச் சுற்றி தமிழ் சினிமா ஓடிக் கொண்டிருந்த காலத்தில் அதை நகர்ப்புற மத்திய தர வர்க்கத்து மாந்தரைச் சுற்றி வர வைத்தவர் பாலச்சந்தர். பாட்டுக்கு முக்கியத்துவம் தந்த காலத்திலிருந்து, வசனத் துக்கு முக்கியத்துவம் தந்த காலத்திலிருந்து கதைக்கு முக்கியத்துவம் தந்த காலத் திற்கு சினிமாவை நகர்த்தியவர்களில் இவரும் ஒருவர். அவரது படங்களில், எனக்கு மிகவும் பிடித்தது பாமா விஜயம். பால்கே விருது தகுதி யானவருக்கே தரப்பட்டுள்ளது.

ஓ.வி.கிருஷ்ணமூர்த்தி, காரைக்குடி
சமீபத்தில் தாங்கள் பார்த்து ரசித்த டி.வி. நிகழ்ச்சி எது?

சீன நடனக் குழுவினரின் நிகழ்ச்சி ஒன்றைப் பார்த்து அசந்து போனேன். அத்தனை பேர் சேர்ந்து ஒற்றை உருவமாக மாறிக் காட்டியதில் எவ்வளவு வேகம், எத்தனை லாவகம்! ஒரு மனிதனுக்கு பல பத்துக் கைகள் இருந்தால் எத்தனை அசைவுகள் இருக்கும் என்று கற்பிதம் செய்தது போலிருந்தது. இவர்களில் மாற்றுத் திறனாளிகள் இருந்தார்கள். பார்வை தெரியாத ஒருவர் “தாய் மண்ணே வணக்கம்” பாடியது -அந்தச் சீன உச்சரிப்பில் பாடியது- முத்தாய்ப்பான பரவசத்தைத் தந்தது. இப்படி நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. வேறு சில அலை வரிசைகளைத் திருப்பினேன். சிலவற்றில் பில்லி-சூனியம்-செய்வினை செய்வது காலங்கால மாக நடக்கிறது, உலகம் முழுக்க நடக்கிறது என்றும், அவற்றைத் தடுக்க ஒரு யந்திரம் இருக் கிறது என்றும், விலை சில ஆயிரம் ரூபாயே என்றும் விளம்பரம் வந்தது. அப்புறம், சனிப் பார்வையை நல்ல பார்வையாக மாற்ற ஒரு யந்திரக் கல் இருக்கிறது என்றும், அதன் விலையும் சில ஆயிரம் ரூபாயே என்றும் வந்தது. தொலைக் காட்சி எனும் ஒரே சாதனம் மூலம் அரிய காட்சியும் தெரிந்தது, மூட நம்பிக்கை வியாபாரமும் தெரிந்தது!

Pin It