பிரேம்சந்த் - பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திய பெரும் புகழ் பெற்ற இந்தி-உருது எழுத்தாளர். இந்திய விடுதலைக்காகவும், விவசாயிகளுக் காகவும் தீரமாய் இலக்கியப் பணியாற்றியவர். 1936-இல் உருவான இந்திய முற்போக்கு எழுத்தாளர் இயக்கத்தின் தலைவர். அவரது பிறந்தநாள் ஜூலை 31.

 

இருபதாம் நூற்றாண்டில் இந்திய இலக்கிய உலகில் மகத்தான மாறுல்கள் பல மலர்ந்தன.அவற்றை இந்தியில் அறிமுகப்படுத்தி இந்தி இலக்கிய வரலாற்றில் புதுயுகம் படைத்தவர் பிரேம்சந்த் ஆவார்.

பிரேம்சந்த்(அன்புநிலவன்) புனைபெயரா கும்.பெற்றோர் சூட்டிய பெயர் தனபத்ராய்.இதற்கு தனராஜன் (குபேரன்) என்று பொருள்.பெயரில் மட்டுமே குபேரன்.வறுமையில் பிறந்து, வறுமை யில் வளர்ந்து வாடி, வறுமையில் காலமானவர் என்னும்படியான சோக வரலாறுதான் பிரேம் சந்தின் வாழ்க்கை.

ஆனால் அவருடைய படைப்புகளில் காணப்படும் தன்னம்பிக்கை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கை, சிக்கல்களை எதிர்க்கும் தீரம், தன் துயர் மறைத்துப் பிறர் துயர் நீங்க  வழிகாட்டும் பெருந்தன்மை, நகைச்சுவை உணர்வு ஆகியவை சோக மேகங்களை விரட்டிவிடுகின்றன, தன்னைப் போலவே கோடி-கோடி இந்தியர் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதைக் கண்ட பிரேம்சந்த் அனைவரையும் நேசிக்கக் கற்றுக் கொண்டார். அந்த சாமானியர்களின் ஊமை உணர்வுகளுக்கு எழுத்து வடிவம் தந்தார். ஆகவேதான் அவரது குரல் ஜனவாணி (மக்கள் குரல்) என்று போற்றப் படுகிறது. பிரேம்சந்தின் இலக்கியம்,மானுடம் பாடும் இலக்கியம்; மானுடத்தை உயர்த்தும் இலக்கியம்; புதியதொரு மானுடத்தை உருவாக்கப் புறப்பட்ட மனிதநேய  இலக்கியம்.

பிரேம்சந்த் கடைசி வரை எழுதிக் கொண் டேயிருந்தார். நோய் காரணமாக எழுதுவதை நிறுத்துமாறு கூறப்பட்டபோது அவர் “நான் எப்படி எழுதாமலிருக்க முடியும்? நான் ஒரு தொழிலாளி-மஜ்தூர்.எனக்குத் தொழில் எழுதுவது. உழைக்காமல் உண்ண எனக்கு உரிமையில்லை” என்று கூறிவிட்டார். அவர் தன்னை “கலம் ஸிபாஹி” (பேனா பிடிக்கும் சிப்பாய்) என்று சொல்லிக்கொள்வது வழக்கம்.

“யாருக்குப் பணமும் பகட்டும் பிரியமோ அவன் இலக்கிய ஆலயத்தில் நுழையத் தகுந்தவன் அல்லன். மக்கள் சேவையே வாழ்க்கையின் அர்த்தம் என்று நம்புகின்றவர்களாகவும்,பிறர் துயரம் கண்டு தாமும் வேதனைப்படுபவர்களாக வும்,பயன் கருதாமல் எல்லோரிடமும் அன்பு கொள்கின்றவர்களாகவும் உள்ள எழுத்தாளர்களே இலக்கிய உலகிற்குத் தேவை” என்று பிரேம்சந்த் வலியுறுத்தினார்.

பிரேம்சந்த் புகழாசையையும் கண்டித்துள்ளார். “எழுத்தாளர்களாகிய நாம் சமூக நலன் கருதி எழுதினால் நிகழ்காலத்திலேயே மரியாதை யும் புகழும் கிடைக்கும். அவை கிடைக்கா விடிலும் நஷ்டம் ஒன்றும். இல்லை. நாம் சமூகத்தின் கொடி பிடித்துச் செல்கிற சிப்பாய்கள். எளிய வாழ்க்கை - ஏற்றமிகு சிந்தனை என்பதே நமது லட்சியம். உண்மையான எழுத்தாளன் வெளிப்பகட்டை வெறுப்பவனாக இருப்பான்” என்றார்.

எழுத்தாளர் தனது பொறுப்பை புனிதமாகக் கருத வேண்டுமென பிரேம்சந்த் வலியுறுத்தி வந்தார். ஜனவரி 1936இல் ஒரு சொற்பொழிவில் அவர் சொன்னார் : “எழுத்தாளர் தன் கையில் பேனாவை எடுத்ததுமே அவர் தலைமீது பெரிய பொறுப்பு ஏறிவிடுகிறது.முதலில் அவர் உலகைச் சீர்திருத்தும் ஆவேசத்துடன் புறப்படுகிறார். பழைமையை ஒழிக்கச் சொல்லம்பு ஏவுகிறார்... பழைய வீட்டை இடித்த பிறகே புதிதாகக் கட்ட முடியும் என்பது உண்மைதான். பழைய நம்பிக்கை களையும் கட்டுப்பாடுகளையும் உடைத்தெறிய விரும்புவது நியாயம்தான். ஆனால் இலக்கியம் என்பது இது மட்டுமேயன்று.

“வீட்டை இடிப்பவர் பொறியாளர் அல்லர்; கட்டுபவர்தான் பொறியாளர். இடிப்பதற்குத் திறமை தேவையில்லை. ஆனால் நிர்மாணிக்கும் கலையில் முழுமை பெறப் பல்லாண்டு அனுபவம் தேவைப்படுகிறது.

“எழுத்தாளர் என்னும் மாபெரும் தகுதியை அடையப் பட்டங்களோ,உயர்ந்த படிப்போ தேவையில்லை. இலட்சியத்தை இலக்காகக் கொண்டுள்ளதே இலக்கியமாகும். எனவே இலக்கியவாதி ஓர் இலட்சியவாதியாகவும் வாழ்ந்துகாட்ட வேண்டும். அப்போதுதான் அவர் படைக்கும் இலக்கியத்தின் மூலமாகச் சமூகத்தில் உன்னதமான சூழ்நிலை உருவாகும்.

“உண்மையான இலக்கியவாதியின் படைப்புகளில் வெளிப்படும் உணர்ச்சி உலகைத் தழுவியதாக அமையும்.அவரது இதயம் உலக  இதயங்களுடன் ஐக்கியப்பட்டிருக்கும். இதனால் அவர் வெளிப்படுத்துகின்ற ஒவ்வோர் உணர்ச்சியும் வாசகருக்குத் தன் உணர்ச்சி போலவே தோன்றும். எழுத்தாளரது உடல் நாட்டு எல்லைக்குள் கட்டுப் பட்டிருப்பதால் நாட்டில் ஏற்படும் அவலங்கள் அவரை அழவைக்கும். ஆனால் அந்த அழுகையில் விசாலத்தன்மை இருக்கும். குறிப்பிட்ட  நாட்டைச் சேர்ந்தவராயினும் எழுத்தாளர் வெளிப்படுத்தும் உணர்ச்சி உலகிற்கே உரியதாகிவிடும்.

“இலக்கியம்தான் ஒரு நாட்டின் உண்மை யான வரலாறாகும்.நிகழ்வுகளின் பட்டியல் வரலாறு அன்று. அரசர்களின் போர்களும் வரலாறல்ல. வரலாறு என்பது வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் பெறப்பட்ட முன்னேற்றத் தின் இன்னொரு பெயராகும். இலக்கியம் தான் வாழ்க்கையைப் பிரதிபலித்து அந்த முன் னேற்றத்தைப் பதிவு செய்கிறது.”

பிரேம்சந்த் ஒரு கட்டுரையில் மேலும் எழுதுகையில்- “இலக்கியத்தின் பணி பொழுது போக்கான அம்சங்களை மட்டும் திரட்டித் தருவதன்று; தாலாட்டுப் பாடி உறங்க வைப்பதன்று; கண்ணீர் உருகவைத்து மனப் பாரத்தைக் குறைப்பது மட்டுமன்று. எங்கெல்லாம் அநீதியும்அநியாயமும் தலைதூக்குகின்றனவோ, அங்கெல்லாம் அவற்றிற்கு எதிராக மனிதநேய உணர்வை வலுப்படுத்திப் போரிடச் செய்வதுதான் இலக்கியத்தின் இலட்சியாமாகும். பணக்காரர்கள் மனமாற்றம் பெற்றுத் தங்களைக் காப்பாற்ற வருவார்களென ஏழைகள் எதிர்பார்க்கக்கூடாது” என்று எச்சரிக்கிறார். “ஏழைகள் தங்களை சுயமாகவே பாதுகாத்துக் கொள்ளப் பயிலாத வரையிலும் கடவுள்கூட அவர்களை அநியாயச் சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற முடியாது” என்கிறார்.

வறுமையில் உழலும் விவசாயிகளின் பிரதிநிதியாகக் குரல் கொடுத்து ஓரிடத்தில் பேசுகையில் பிரேம்சந்த் “நாம் கோழைகளாகவும் அடங்கிப் போகிறவர்களாகவும் வளர்ந்து விட் டோம். அவமரியாதையையும் கஷ்ட நஷ்டங்களை யும் சப்தம் போடாமல் பொறுத்துக் கொள் கிறோம். இப்படிப்பட்ட நமக்கு சுவர்க்கத்திலும் சுகம் கிடைக்காது.நாம் அச்சம் அகன்றவர் களாகவும் துணிச்சல்காரர்களாகவும் உருமாற வேண்டும், சங்கடங்களை எதிர்த்து நிற்க வேண் டும்.  சாவதற்கு அஞ்சாதவனால்தான் உண்மையாக வாழ முடியும்” என்று இடிந்துரைக்கிறார்.

சேவா சதன் என்ற நாவலில் பிரேம்சந்த் எச்சரிக்கிறார்: “நம் மக்கள் ஒவ்வொரு சிறு விஷயத்தையும் - சிறிய பிரச்சனையையும் கூட - இந்து-முஸ்லிம் என்ற வேறுபாட்டின் அடிப்படை யில் பிரித்து மிகைப்படுத்திவிடுகின்றனர். கடைத் தெருவில் வட்டி விகிதம் மாறினால் கூட அவ்வாறு மாற்றியவர் இந்துவா, முஸ்லிமா என்று பார்க்கின்றனர். இதனால் தேசிய ஒற்றுமை எத்துணை சேதப்படுகிறது என்பதை அவர்கள் உணரவில்லை.”

இந்து - முஸ்லிம் கலவரம் ஒன்றில் கல்லடி பட்ட பாத்திரமாகிய சக்ரதர் என்பவர் கூறுகிறார்: “என்னைக் கொலை செய்து ரத்தக்களறி ஓடச் செய்வதால் கலகக்காரர்களின் கோப நெருப்பு அணைந்து போகுமென்றால் அதைப் பேரதிர்ஷ் டமாக நினைப்பேன். நான் ரத்தம் சிந்துவதால் எத்தனையோ மக்கள் காப்பாற்றப்படுவார் களானால் அதைவிட உத்தமமான சாவு எது?” என்று தமது கதாபாத்திரத்தின் குரல் மூலமாக  மத வெறியை எதிர்த்து, இந்து-முஸ்லிம் மக்களிடையே யான ஒற்றுமையை வலியுறுத்தினார் பிரேம் சந்த்.

Pin It