1920ஆம் ஆண்டு வரை, ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் பெண்களுக்குப் பட்டம் அளிக்கப்படவில்லை. ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘விலங்குப் பண்ணை’ (animal farm), ‘1984’ போன்ற புதினங்கள் இன்றும் பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்கின்றன. எழுத்தறிவு இல்லாதவர் களுக்கு ஓட்டுரிமை இல்லை என்ற நிலையைக்கூட வரலாறு பதிவு செய்திருக்கிறது. இவை அனைத்தும், கல்வி என்பது ஒரு மனிதனுக்கு என்னவெல்லாம் பெற்றுத்தரும் என்பதற்கான அடையாளச்சான்றுகள். துப்பாக்கிகளைவிடவும் புத்தகங்களைப் பார்த்து பயப்படும் ஆட்சி யாளர்கள் உண்டு என்பதைத்தான் கல்வி என்னும் கருவி காலந்தோறும் நிரூபித்து வருகிறது. அதனாலேயே அது எந்தவிதத்தில் எடுத்துச் செல்லப்படுகிறது என்பதையும் உற்று நோக்க வைக்கிறது.

‘இந்தியாவில் மையப்படுத்தப்பட்ட கல்வி (India centred education) என்பதே குறிக்கோள்’ எனத் தொடங்கும் தேசியக் கல்விக் கொள்கை, என்னவெல்லாம் பேசி இருக்கிறது என்பதை எவ்வளவு உற்று நோக்குகிறோமோ, அதைப் போலவே அதை எப்படிப் பேசியிருக்கிறது என்பதையும் பார்ப்பது அவசியம். 

கல்வி என்பது, எப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும்? கல்வியாளர் பாவ்லோ ஃப்ரெய்ரே, `ஆதிக்கத்துக்கான பண்பாட்டு நடவடிக்கையாக இருந்தாலும் சரி... விடுதலைப் பண்பாட்டு நடவடிக்கையாக இருந்தாலும் சரி... இந்த நடவடிக்கைகளில் கல்விமுறை முக்கியப் பங்காற்றுகிறது. இருக்கிற சமூக அமைப்புக்குத் தக்கபடி மனிதரை வசப்படுத்துவதற்காக அல்லது இருக்கும் சமூக அமைப்பைக் கவிழ்த்து மனிதரின் விடுதலைக்கு வழிவகுப்பதற் காக மட்டுமே கல்வி இருக்க முடியும். இரண்டுக்கும் இடைப்பட்ட நடுநிலையான கல்வி என்ற ஒன்று கிடையவே கிடையாது. கல்வி என்பது, ஓர் அரசியல் செயல்பாடு. அதிகாரத்தைப் பகுப்பாய்வு செய்யாமல் கல்வியைப் பகுப்பாய்வு செய்ய முடியாது’ என்கிறார். (நன்றி: பேராசிரியர் அ.மார்க்ஸ், ‘மாற்றுக்கல்வி – பாவ்லோ ஃப்ரெய்ரே சொல்வதென்ன?’)

கல்வி என்பது, மனிதனுக்கு விடுதலை அளிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆனால், புதிய கல்விக்கொள்கை வரைவோ, குழந்தைகளின் கல்விக்காகச் செலவு செய்யப்படும் பணம், மிகச் சிறந்த முதலீடாக (ஒரு ரூபாய் முதலீடு செய்தால், பத்து ரூபாயோ அல்லது அதற்கு மேலாகவோ கிடைக்கும்) இருக்கும் எனக் கூறுகிறது. கல்வி என்பது போதனை மட்டுமே அல்ல, மாணவர்களை முழுமையான வளர்ச்சியுடைய மனிதர்களாகவும் மாற்றுவதும்தான் என்று பல இடங்களில் அழுத்திக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்குத் தேவையான முன்னெடுப்பு களையும் இந்தக் கல்விக்கொள்கை எடுக்கிறதா என்று நாம் கேள்வி கேட்பது அவசியமாகிறது.

ஏனெனில், அனைத்து மாநிலங்களிலும் பிள்ளைகளுக்கு சத்துணவில் முட்டை அளிப்பதே பெரும்கனவாக இருக்கும்போது, சத்துணவு என்பது எப்படிப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் என்று விரிவாகக் கூறியிருக்க வேண்டும். அதைப் பற்றி எதுவுமே இதில் கூறப்படவில்லை. அனைவருக்கும் கல்வி என்ற லட்சியத்துடன் எழுதப்பட்ட கல்விக்கொள்கை யெனில், அது மாணவர்களின் கற்றல் குறைபாடு களைப் பற்றி எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால், டிஸ்லெக்சியா (Dyslexia), டிஸ்கிராபியா (dysgraphia) போன்ற சிறப்புக் குழந்தைகளுக்கான வார்த்தைகள்கூட இடம்பெறாத கல்விக் கொள்கை வரைவில், குழந்தைநேய வகுப்பறைகள் எந்தளவுக்குச் சாத்தியம்?

கிட்டத்தட்ட ஐந்நூறு பக்கங்கள்கொண்ட இந்தக் கல்விக் கொள்கையின் வரைவில், `குழந்தைகளின் சிறப்புத் தேவை’ (children with special needs) என்னும் தலைப்புக்கு இரண்டு பக்கங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. அதிலும், உடல் சார்ந்த தேவைகளான சக்கர நாற்காலிகள், பிரெயில் புத்தகங்கள் என்று அடிப்படைத் தேவையாக என்ன வேண்டுமோ, அவற்றை மட்டுமே எழுதியிருக்கிறார்கள். குழந்தைகளுக்கு மனரீதியாக, அறிவுரீதியாக என்ன தேவைப் படுமோ, அவற்றைப் பற்றி எதுவுமே குறிப்பிட வில்லை.

வெற்றி என்பதையும் தோல்வி என்பதையும் ஒரு குழந்தைக்கு ஆரோக்கியமான வகையில் உணர்த்தவேண்டும். அது, அவர்களைச் செழுமை யானவர்களாக மாற்றும். ஆனால், மூன்று, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் நடத்தப்படும் சென்சஸ் தேர்வுகளின் தோல்வி என்பது, ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு வகையில் அல்லவா போய்ச் சேரும்! எட்டாம் வகுப்பில் தோல்வி என்பது ஒரு நகரத்துக் குழந்தைக்கு, ‘கடுமையாக உழை... அடுத்த முறை வெற்றிபெற வாழ்த்துகள்’ என்பதாகவும், கிராமத்துக் குழந்தைக்கு மில் வேலைக்கான துருப்புச் சீட்டாகவும், மலைவாழ் பெண்பிள்ளைக்கு குழந்தைத் திருமணமாகவும் மாறும் அபாயங்கள் இருக்கின்றன. அதனாலேயே இந்தத் தேர்வு முறையை அச்சத்துடன் அணுக வேண்டியிருக்கிறது.

மனப்பாடத்திலிருந்து விலகியிருப்பது அவசியம் என்று உரைக்கப்படும் இதே கல்விக் கொள்கை, நுழைவுத்தேர்வுகள் எல்லாம் தேசிய தேர்வு அமைப்புமூலம் (national testing agency) நடத்தப்படும் என்று தெரிவிக்கிறது. அனைவரையும் அரவணைக்கும் மாற்றுக்கல்வி நோக்கி நடக்க வேண்டிய நிலையில் இருக்கும் நாம், குறுகியகால இடைவெளியில் பயிற்சி மையங்களை நோக்கிச் செல்ல வேண்டும் என்று கசக்கிப்பிழிவது எந்த வகையில் நியாயம்? ஏற்கெனவே ஐ.ஐ.டி., நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் சமூகத்தில் உயர்ந்த படிநிலையில் இருப்பவர்களுக்கு மட்டுமே எட்டும் வாய்ப்பாக இருக்கும்போது, இந்த நுழைவுத்தேர்வு முறையை மேலும் நீட்டிப்பது விளிம்புநிலை மனிதர்களுக்கு மேலும் அநீதி இழைப்பதாக மட்டுமே முடியும்.

வெற்றி என்பதையும் தோல்வி என்பதையும் ஒரு குழந்தைக்கு ஆரோக்கியமான வகையில் உணர்த்தவேண்டும். அது, அவர்களைச் செழுமை யானவர்களாக மாற்றும்.

மும்மொழிக்கொள்கை, ஒன்பதாம் வகுப்பி லிருந்தே தொழிற்கல்வி, வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களை இந்தியாவில் அமைப்பது, பிரதமரின் தலைமையில் ராஷ்டிரிய சிக்ஷா ஆயோக் அமைப்பது என்று இந்த வரைவில் விமர்சனப் பார்வையுடன் விவாதிக்க இன்னும் எவ்வளவோ இருக்கின்றன. இவை அனைத்திலும் நாம் பார்க்க வேண்டிய அளவுகோல், இந்தக் கொள்கைகள் தற்போது இருக்கும் கல்விசார் சூழ்நிலையை மேலும் வலிமையாக்குகின்றனவா அல்லது வலிமையிழக்கச் செய்து விளிம்புநிலை மாணவர்களுக்கு அநீதி இழைக்கின்றனவா என்பதுதான்.

எந்த வகைப் பாகுபாடாக இருந்தாலும், குழந்தைகளுக்கு இழைக்கப்படும்போது அது வன்முறையாகத்தான் இருக்கும். அனைத்துத் தடைகளும் உடைபடும் வரை, ‘மெரிட்’ என்பதும் பொருளற்ற ஒன்றாகவே இருக்கும்.

சிவ. உறுதிமொழி - பத்திரிகையாளர்

Pin It