இர.இளையபெருமாள், கடலூர்

"நேர்மை உறங்கும் நேரம்" (14.7.09 தினமணி தலையங்கம்) பற்றி உங்கள் எதிர்வினை என்ன?

கேரளா பற்றிய அந்தத் தலையங்கத்தில் "374 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்தது" என்று கூறப்பட்டுள்ளது. மூன்று மின் உற்பத்தி நிலையங்களைப் புதிப்பிப்பதற்கான அந்தத் திட்டச் செலவே இவ்வளவுதான். இந்த மொத்தத் தொகையும் எப்படிக் கையாடல் பட்டிருக்க முடியும்? இதிலிருந்தே இந்தக் குற்றச்சாட்டின் பொய்மையையும், தினமணி உள்ளிட்ட ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மையையும் சட்டென்று புரிந்து கொள்ளலாம். மத்திய புலனாய்வுத் துறை மீதும், ஆளுநர்கள் மீதும் தினமணிக்குள்ள அபார நம்பிக்கை நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. முலாயம்சிங் மீது வழக்குப் போடுவது, வாபஸ் வாங்குவது என்று அரசியல் விளையாட்டு ஆடியது இதே புலனாய்வுத்துறைதான். போபர்ஸ் ஊழலில் குத்ரோச்சியை அப்பாவி என்று சொல்லி விடுதலை செய்வதம் இதே புலனாய்வுத்துறைதான். பிற துறைகளைப் போல இதுவும், பிற ஆளுநர்களைப் போல கேரள ஆளுநரும் மத்திய அரசின் கைப்பாவைகளே என்பதைத் தினமணி மறந்து போனது ஆச்சரியத்தைத் தருகிறது. நேர்மை சுத்தமாக உறங்கிப்போன நேரம் தினமணியைப் பொறுத்தவரை இந்தக் கணமே. பிறகு சற்று சுதாரித்துக் கொண்டு இதுபற்றிய உ.ரா.வரதராசனின் கட்டுரையை அது வெளியிட்டதும் (17.7.09) குறிக்கத்தக்கது. தினமணி தலையங்கத்திற்கு பதில் தினமணியிலேயே உள்ளது!

 

எஸ்.பழனிக்குமார், விருதுநகர்

பாட்டு, பாடல் என்று நல்ல தமிழ்ச்சொல் இருக்க, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் "ஸாங்" என்று சொல்கிறார்களே?

தமிழ்ச்சொற்களைத் தமிழ் மக்களிடமிருந்து ஒழித்துக் கட்டியே தீருவது என்று கங்கணம் கட்டிச் செயல்படுகின்றன தொலைக்காட்சிகள். விதிவிலக்கு மக்கள் தொலைக்காட்சி மட்டுமே. தமிழ்ப்படத்திற்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரி விலக்கு, தமிழ்ர் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தால் தங்க மோதிரம் என்று பரிதாபமாக "ஊக்குவிப்புத்" திட்டங்களை அமல்படுத்தும் தமிழக அரசு இதற்கும் ஏதேனுமொரு திட்டத்தை அறிவிக்கலாம்!

 

பொன்விழி, அன்னூர்

அமெரிக்க அதிபர் ஒபாமா பதவி ஏற்ற நாளிலிருந்து இதுவரை என்ன சாதித்துள்ளார்?

அமெரிக்காவில் இன்னும் இனப்பாகுபாடு உள்ளது என்று ஒப்புக் கொண்டிருக்கிறார். கருப்பு இனத்தைச் சார்ந்த இவர் ஜனாதிபதியாவதால் மட்டும் அந்தக் களங்கம் மறைந்துவிடாது என்பது நிச்சயமானது. இப்படித்தான் அந்த நாட்டின் ஏகாதிபத்தியக் கொள்கையும் மாறவில்லை. மன்மோகன்சிங் அரசை மிரட்டி அவர்கள் அண்மையில் போட்டுள்ள ஓர் ஒப்பந்தம் காங்கிரசின் நட்புக் கட்சிகளைக் கூட முகம் சுளிக்க வைத்துள்ளது.

பழைய பாடல்களின் இனிமை புதுப்பாடலில் இல்லை; ஏன்?

புதுப்பாடலில் பாடலே இல்லை, வெறும் இசைதான் இருக்கிறது. "இனிமை" என்பது இசையில் மட்டும் இல்லை, அது தரும் நல்ல கருத்திலும் இருக்கிறது என்பது புரிகிறதா?

க.ரமேஷ், திருநெல்வேலி

அரிதாக ஒன்றிரண்டு படங்களைத் தவிர, காதல் - செக்ஸ் - சண்டை; இதற்கு மேல் தமிழ்த்திரைப்பட உலகம் ஏன் சிந்திப்பதில்லை?

எனக்கென்னவோ தனிமனித வன்முறையைச் சுற்றியே தமிழ்த் திரைப்பட உலகம் சுழல்வதாகப்படுகிறது. காதல்கூட வன்முறை போலத்தான் காட்டப்படுகிறது. கதாநாயகர்கள் பின்னால் போகாமல் கதையின் பின்னால் எப்போது போகிறதோ அப்போதுதான் திரையுலகம் உருப்படும்.

வேம்புமணி, கம்பிக்குடி

தினமணியில் பாவைசந்திரன் எழுதி வரும் "ஈழத் தமிழரின் போராட்ட வரலாறு" தொடரைப் படிக்கிறீர்களா?

இப்போது ஏற்பட்டிருப்பது புதிய சூழல். தனி ஈழத்திற்கான ஆயுதம் தாங்கிய போராட்டம் வெற்றியடையாது என்று முன்கூட்டியே கணித்துச் சொன்னவர்கள் கம்யூனிஸ்ட்டுகளே. திராவிட நாடு கோரிக்கைக்கு ஏற்பட்ட கதியே இதற்கும் ஏற்பட்டதாகக் கலைஞர்கூட ஒப்புக் கொண்டிருக்கிறார். காரிய சாத்தியமில்லாத தனி ஈழத்தை வற்புறுத்தாமல் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்கள் வாழும் பகுதிக்கு உரிய சுயாட்சி எனும் கோரிக்கைக்காகப் போராடியிருந்தால் எவ்வளவோ துன்ப துயரங்களைத் தவிர்த்திருக்க முடியும். இப்போதும் அதைரியப்பட வேண்டியதில்லை. மாநில சுயாட்சிக்கு இணங்கும்படி இலங்கை ஆட்சியாளர்களைச் செய்ய உலகக் கருத்தைத் திரட்ட வேண்டும். அந்த இலக்கை நோக்கி அந்தத் தொடர் செல்லுமா என்று இப்போது சொல்ல முடியாது. அப்புறம், இப்போது உடனடித் தேவை முகாம்களில் வதைப்படும் இலங்கைத் தமிழர்களின் துயர் துடைப்பது, பூர்வீக இடங்களில் அவர்களை மிக விரைவில் குடியமர்த்துவது. மதிய உணவுக்கு வரிசையில் நின்றால் மாலையில்தான் உணவு கிடைக்கிறதாம். எப்போது சொந்த ஊர் திரும்புவோம் என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த அநியாயங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ராஜபக்சே அரசை இந்திய அரசு ராஜீய ரீதியாக நிர்ப்பந்திக்க வேண்டும். நமது எழுத்தும், பேச்சும், செயலும் இதற்காக இந்திய அரசை நிர்ப்பந்திக்க வேண்டும்.

த.சத்தியநாராயணன், அயன்புரம்

சமீபத்தில் தங்களை அதிரவைத்த சமூக அவலம் எது?

மதுரை அருகே நடந்த பட்டாசு தொழிற்சாலை விபத்து. வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருகிய உடல்கள். இது விபத்து அல்ல; படுகொலை. தீவிபத்தை தடுப்பதற்காக அரசுவகுத்துள்ள எந்தவொரு தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்றால் அது கொலைதான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சான்றிதழ் கொடுத்த அந்த அதிகாரியும் கொலைகாரரே. பத்தோடு பதினொன்று என்று சகலரின் மனசாட்சியும் தூர்ந்து போனால் விடிவுகாலமே இல்லை.

ரெ.மருதசாமி, மயிலாடுதுறை

சில தமிழ்ப்படைப்பாளிகளை "வறட்டுத்தனமான கட்சி மார்க்சியராக இல்லாதவர்கள்" என்று குறிப்பிடுகிறார்களே? (தீராநதி ஜூன் 09, கோவை ஞானி நேர்காணல்)

இதர விஷயங்களில் மார்க்சியராகவும், இலக்கியத்தில் மட்டும் வேறு மாதிரியாகவும் இருப்பவர் மெய்யான மார்க்சியர் ஆக மாட்டார். மார்க்சியம் என்பது வாழ்வு பற்றிய முழுமையான கண்ணோட்டம். அங்கே கால் நேராகவும், கை ஒடிந்தும் இருந்தால் விளங்காது. இதன் பொருள் கால் செய்யும் வேலையை கை செய்ய வேண்டும் என்பதில்லை. அந்தந்த உறுப்புகள் அதனதன் வேலையைச் செய்யும். இதைப்புரிந்து கொள்ளாமல் ஓர் அரசியல் தலைவர் போலவே ஒரு எழுத்தாளர் இயங்கினால் அவரை வறட்டுத்தனமான மார்க்சியர் எனலாம். ஆனால், கோவை ஞானி போன்றோர் இந்த அர்த்தத்தில் கூறவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இலக்கியத்தில் பின்னை நவீனத்துவத்தை ஏற்காதவர்கள் எல்லாம் "வறட்டுத்தனமான கட்சி மார்க்சியர்கள்". பின்னை நவீனத்துவம் என்பது அடிப்படையில் மார்க்சிய அழகியலுக்கு நேர் விரோதமானது. கலை - இலக்கியம் யாவும் மக்களுக்கே என்பதை ஏற்காதது. மார்க்சிய அழகியலை முழுமையாக உள்வாங்கிய ஒரு கலை - இலக்கியவாதிக்கு மார்க்சிய அரசியலோடு முரண்பாடு வராது. யதார்த்தவாதம் என்கிற இலக்கியக் கோட்பாட்டை ஒதுக்கித் தள்ளி, வெகுமக்கள் இயக்கத்திலிருந்து கலை - இலக்கியத்தை தனித்து வெட்டியெடுக்க அராஜகவாதிகள் முயலும் போது இந்தக் கோவை ஞானிகள் எதிர்த்துப் போராடுவதில்லை என்பதை நினைவில் வையுங்கள். அதிலிருந்தே இவர்கள் மெய்யான மார்க்சிய ஞானிகள் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

எஸ்.தனசேகரன், சிவகங்கை

தத்துவ விவாதம் என்பது தமிழகத்தில் நடப்பதாகத் தெரியவில்லையே, ஏன்?

அன்றாட அரசியல் விவாதமானது வாழ்வு பற்றிய அடிப்படை விவாதத்தை மூழ்கடிக்கிறது. தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் முழுக்க இதுதான் நிலைமையோ என்று படுகிறது. ஆனால், எப்படியும் அதை நோக்கி மனிதர்கள் திரும்பித்தான் ஆக வேண்டியிருக்கும். முதலாளித்துவம் தரும் நெருக்கடி பொருளாதாரத்தையும் தாண்டியது என்பதையும், அதை வெறும் மதச் சடங்குகளால் வெல்ல முடியாது என்பதையும் மனிதர்கள் உணரவே செய்வார்கள். அந்தக் காலத்தில் நிலப்பிரபுத்துவம் தந்த நெருக்கடியானது பொருளாதாரப் பிரச்சனைகளை மட்டுமல்லாது தத்துவ விசாரணையையும் தோற்றுவித்தது. "ஸ்ரீ மத்வ விஜய மஹா காவ்யம்" எனும் நூலைப் படிக்கிறேன். சமஸ்கிருதத்திலிருந்து வரிக்கு வரி தமிழில் பெயர்க்கப்பட்டது. அவரது வாழ்வில் தத்துவ மோதல்கள் எப்படி வெடித்தன என்பது புரிபடுகிறது. இன்று மட்டும் என்ன வாழ்வு நெருக்கடிகள் இல்லாததா? தேவி பிரசாத்தின் "இந்தியத் தத்துவம்: ஓர் அறிமுகம்" இப்போது தமிழில் வந்துள்ளது. இத்தகைய எளிமையான நூல்கள் ஆழமான விவாதங்களுக்கு வழிவகுக்கும் என நம்புவோம்.

 

Pin It