உணவுப் பாதுகாப்பு மற்றும் உணவிற்கான உரிமை என்பவை இன்று இந்தியாவில் மிக அவசரமானதொரு அரசியல் பிரச்சனைகளாக மாறியுள்ளன என்பதில் வியப்பேதுமில்லை. கடந்த 20ஆண்டு காலத்தில் மிகத் துரிதமாக வளர்ந்து வந்த ஒட்டுமொத்த வருமானமும்கூட மக்களின் உணவுப் பாதுகாப்பு என்ற அடிப்படை பிரச்சனையை தீர்ப்பதாக அமையவில்லை. மாறாக, சத்துணவு குறித்த அளவுகள் தொடர்ந்து எவ்வித முன்னேற்றமுமின்றி அப்படியே நீடிக்கும் அதே நேரத்தில் தனிநபர் உட்கொள்ளும் உணவின் கலோரி அளவு உண்மையில் குறைந்துபோயுள்ளது. பட்டினிப் பிரச்சனையானது சற்றே முன்னேறுவதற்கு பதிலாக மேலும் மோசமாகியுள்ளது என்றே கூறமுடியும்.

2005, 2006ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மிகச் சமீபத்தில் தேசிய குடும்பநல சர்வேயிலிருந்து பெறப்படும் சத்துணவு குறித்த ஆதாரத்தையே எடுத்துக்கொள்வோம். இந்த ஆய்வின்படி, 3 வயதிற்கு கீழேயுள்ள குழந்தைகளில் 46 சத வீதம் பேர் எடைக்குறைவான குழந்தைகளாகவும், பெண்களில் 33 சதவீதம் பேரும், ஆண்களில் 28 சதவீதம் பேரும் சராசரிக்கும் குறைவான உடல் திண்மை அளவு கொண்டவர்களாகவும் இருந்து வருவது தெரிய வந்துள்ளது. பிறந்து 6 மாதம் 35 மாதம் வரையிலான குழந்தைகளில் 79 சதவீதம் குழந்தைகள் சோகை நோய் உள்ளவர்களாகவும், அதேபோன்று 15, 49 வயது வரையிலான திருமணமான பெண்களில் 56 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும், அதேபோல் ஆண்களில் 24 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும், கர்ப்பிணிப் பெண்களில் 58 சதவீதம் பேர் சோகை நோய் உள்ளவர்களாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. தேசிய அளவிலான இந்த சராசரி கணக்கு அந்தந்தப் பகுதிகளில் உள்ள வேறுபாடுகளையும் உள்ளடக்கியவை ஆகும். இந்த அறிகுறிகள் அனைத்துமே கிராமப்புற இந்தியாவைப் பொறுத்தவரையிலும் மேலும் மோசமானதாகத்தான் உள்ளது.

இந்தியாவில் உணவுப் பொருட்களின் விலையில் சமீபத்தில் ஏற்பட்ட உயர்வு என்பது இந்த நிலைமையை மேலும் மோசமாக்கவே செய்யும். வேலை வாய்ப்பில் நிலவும் உலகளாவிய நெருக்கடியானது நாட்டிற்குள் நிலவும் வாழ்க்கை முறையையும் மக்களுக்கான உணவு பெறுவதையும் மேலும் மோசமாக்கிவிடும். எனவே உணவுப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான கொள்கைக்கான பகுதிகளில் ஒன்றாக இன்று விளங்குவதோடு, உரிமைகளின் அடிப்படையிலான பொதுமக்களின் உணவுகுறித்த அணுகுமுறையை லலுப்படுத்தும் கோரிக்கைகள் மேலும் வலுப்பட்டு வருகின்றன. உணவிற்கான உரிமை குறித்த சட்டத்தை ஒட்டி தற்போது நடைபெற்று வரும் விவாதங்கள் இதை அடிப்படையாகக் கொண்டவையே ஆகும். ஐ.மு. கூட்டணி அரசு தனது 100 நாட்களுக்கான வேலைத் திட்டத்தில் இந்த சட்டத்தையும் ஒன்றாக அங்கீகரித்துள்ளது.

மத்திய அரசானது மாநில அரசுகளிடையே சுற்றுக்கு அனுப்பியுள்ள உணவிற்கான உரிமை குறித்த மசோதா என்பது இந்த உத்தரவாதத்திற்கு நேர்மாறானதாக விளங்குகிறது. உண்மையான உணவுப் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்ற உணர்வை மறுதலிப்பதாகவே அமைந்துள்ளது. இந்த மசோதா குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கும்போதே, ஏற்றுக்கொள்ள வியலாத பல ஆலோசனைகள் மாநில அரசுகளுக்கு ஒரு குறிப்பாக அனுப்பபட்டுள்ளது. அதாவது இந்த சட்டத்தின் வரம்புகள் (மாநிலங்களின் சொந்த மதிப்பீடுகளின்படி அடிப்படையில் இல்லாமல் மத்திய அரசின் மதிப்பீடுகளின்படி வெட்டிக் குறைக்கப்பட்டுள்ள) வறுமைக் கோட்டிற்குக் கீழேயுள்ள மக்களுக்கு மட்டுமே பொருந்துமாறு இருக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தற்போதுள்ள மாதத்திற்கு 25 கிலோ என்பதற்கு பதிலாக 35 கிலோ உணவு தானியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிடுகிறது

இரண்டாவதாக நிலவும் பிரச்சனை என்பது தற்போது விளக்கம் தரப்பட்டுள்ள உணவிற்கான  பாதுகாப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றிற்கிடையே உள்ள வேறுபாடு பற்றியதாகும். தேசிய மாதிரி சர்வே, தேசிய குடும்ப நல சர்வே ஆகியவற்றின் புள்ளி விவரங்கள் நமது மக்கள் தொகையில் சத்துக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை ஏழை மக்களின் எண்ணிக்கையைவிட மிக அதிகமாக உள்ளது என்பதையும், பல மாநிலங்களிலும் இந்த இரு பிரிவினரும் வேறுபட்டவர்கள் அல்ல என்பதையும் தெளிவாகத் தெரிவிக்கின்றனர். உணவிற்கான பாதுகாப்பின்மையை மிகச் சிறப்பான வகையில் சமாளிக்க வேண்டுமெனில் உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான இதர மக்களை தவிர்த்துவிட்டு, முன்பு வரையறுக்கப்பட்டிருந்த ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்குவது என்பதை அடிப்படையாகக் கொண்டு உணவுப் பொருட்கள் விநியோகத்திற்கான ஏற்பாட்டை மேற்கொள்வது உண்மையில் அதற்கு நேர் எதிரான விளைவையே ஏற்படுத்தும்.

மூன்றாவது பிரச்சனை இதற்கான காரணங்களில் ஒரு பகுதியாக அமைகிறது. நிலையானதொரு கண்ணோட்டத்தில் ஏழைகள் வறியவர்கள் என்று வரையறுத்த கட்டுப்பெட்டியானதொரு சட்டத்தின் அடிப்படையில் மாற்றத்தின் தன்மை குறித்த கவலையேதுமின்றி செயல்படுவதும், இந்த குழுவினைரை நீண்ட நாட்களுக்கு எந்தவித மாற்றமுமின்றி அப்படியே நீடிக்கச் செய்வதும் மூன்றாவது பிரச்சனையாக அமைகிறது. எப்படித் தான் நாம் விளக்கிவந்தபோதிலும், குடும்பங்கள் அதனுள்ளே உள்ள மனிதர்களுடன் சேர்ந்து தன்னைச் சுற்றியுள்ள மாறிவரும் சூழ்நிலைகளின் விளைவாக வறுமைக்குள் ஆட்படுகிறார்கள் அல்லது வறுமையிலிருந்து விடுபடுகிறார்கள். அதேபோன்று மிகக் குறுகிய காலத்திற்குள்ளேயே உணவு ரீதியான பாதுகாப்பு பெற்றவர் என்ற நிலையிலிருந்து பாதுகாப்பில்லாத நிலைக்கு மாறுவதற்கான வாய்ப்பும் உண்டு. இதற்கு பலவிதமான காரணங்கள் உண்டு. பயிர் நாசம், உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வது, வீட்டிற்கான செலவைக் குறைத்து மருத்துவத்திற்கு செலவு செய்ய வேண்டிய நிலை, கடன் அதிகரிப்பது போன்று பல காரணங்களைச் சொல்லலாம். இத்தகைய குடும்பங்கள் உணவு ரீதியான பாதுகாப்பின்மை என்ற நிலைக்கு மாற இவற்றில் எது காரணமாக இருந்தது என்பதற்காக தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்தையும் கண்காணிப்பது என்பது நிர்வாக ரீதியாக மிகவும் கடினம்.

அனைத்து குடும்பங்களுக்கும் சலுகை விலையில் உணவுப் பொருட்களை வழங்குவது என்ற அனைவரையும் உள்ளடக்கிய திட்டம் என்பது மிகவும் செலவு பிடிக்கும் திட்டம் என்ற கருத்தும் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல. இதுபோன்ற திட்டத்திற்கு எவ்வளவு செலவாகும் என்று ஒரு கணக்கை எடுக்கலாம். நாட்டிலுள்ள அனைத்து குடும்பங்களுக்கும் மாதம் ஒன்றுக்கு 35 கிலோ உணவுதானியம் வழங்கப்பட்டால் அதற்கு 90 மில்லியன் டன் தானியம் தேவைப்படும். தற் போதைய மானிய விலையில் கணக்கெடுத்தால் அதற்கு ரூ. 1.20.000 கோடி தேவைப்படும். பொது வாகப் பார்த்தால் இது ஒரு பெரும் தொகையாகத் தோன்றக்கூடும். எனினும் உணவுப் பொருட் களுக்கான மானியமாக ஏற்கெனவே அரசு இப்போது ரூ. 50.000 கோடி அளவிற்கு செலவிழித்து வரும் நிலையில் கூடுதலாக ரூ. 70.000 கோடியை இதற்காக செலவழிப்பது என்பதொன்றும் கடின மான செயலல்ல. மேலும் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தியில் இது சுமார் 1.5 சதவீதம் மட்டுமே ஆகும்.

நாகரிகம் அடைந்துவிட்டதாகக்கூறப்படும் ஒரு சமூகத்தில் எவரொருவரும் பட்டினி கிடக்கலாகாது என்பதை உறுதிப்படுத்த இந்த அளவிற்குக் கூட பணத்தை ஒதுக்க முன்வராவிட்டால், அந்த சமூகத்தை எப்படி நாகரிகமான சமூகம் என்று கூற முடியும்? கடந்த ஆண்டில் மட்டும் வரிச்சலுகைகள் என்ற பெயரிலும், இதர சலுகைகள் மூலமாகவும் பெரும் நிறுவனங்களுக்கு ஒரு பெரும் தொகை (ரூ. 3 லட்சம் கோடி) வாரி வழங்கியதை ஒப்பிடும்போது மக்களின் பட்டினியை போக்குவதற்காக தேவைப்படும் இந்தத் தொகை மிகவும் சொற்பமான ஒன்றேயாகும். குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு மட்டும் 45 ஆயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவதாக இத்திட்டம் வெற்றிபெற வேண்டுமானால் உணவு தானியங்களுக்கான உள்நாட்டு விலைகளில் நிலையற்ற தன்மையை தவிர்ப்பதும், ஊக வாணிபப் போக்குகளை தடை செய்வதும் அவசியமாகும். பதுக்கல்காரர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது மட்டுமே இதற்கு பொருளல்ல. பொருட்களின் விலை உயரும் நேரத்தில் எல்லாம் அரசின் பிரச்சார உத்தியாக மட்டுமே இது செயல்படுத்தப்படுகிறது. இதற்கு ஊக வாணிபச் சந்தையை தடுப்பதும் அவசியமாகிறது. அதாவது அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் மீதும் ஊக வாணிபத்தை தடை செய்ய வேண்டும் என்பதுதான் இதன் பொருளாகும்.

மேலே கூறப்பட்ட நடவடிக்கைகள் அனைத்துமே அவசியமானவை மட்டுமல்ல, நிச்சயமாக செயல்படுத்தப்படக்கூடிய நடவடிக்கைகளும் ஆகும். ஆனால் நாட்டில் உண்மையான முறையில் உணவுப் பாதுபாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு உண்மையிலேயே விருப்பம் கொண்டிருந்தால் மட்டுமே இவை சாத்தியமாகும். இதுபோன்ற கோரிக்கைகளுக்கு ஆதரவாக மக்களை பெருந்திரளாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே அரசின் உறுதிப்பாட்டை உருவாக்க முடியும்.

Pin It