தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகை, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியான கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடிக்கச் செல்கின்றனர். அவர்களை இலங்கை படை துப்பாக்கியால் சுட்டுத் தள்ளுவதும், பிடித்துச் சென்று சித்தரவதை செய்து சிறையில் அடைப்பதும், மீன்பிடி படகுகள் _ உபகரணங்களை சேதப்படுத்துவதும் மீனவர்கள் மீது வழக்கு நடத்தி அலைக்கழிப்பதும், இலங்கை அரசின் காட்டு மிராண்டித்தனமான நடவடிக்கையாக உள்ளது.

காலம் காலமாக கடலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்களின் வாழ்க்கை இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. குறிப்பாக, கச்சச்தீவை ஒட்டியுள்ள பகுதியில் மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாகி வருவதால் 1974ஆம் ஆண்டு கச்சத்தீவு ஒப்பந்தம் அரசியல் ரீதியான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

1755 முதல் 1763 வரை சென்னை கவர்னராக இருந்த ராபர்ட் என்பவரின் பெயரால் அழைக்கப்படும் பாக்ஜலசந்தி பகுதியானது, தமிழகத்தில் இராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடி மணல் திட்டில் (தீவுகள்) தொடங்கி நாகை மாவட்டம் கோடியக்கரை வரையிலும், இலங்கை பகுதியில் தலைமன்னார் துவங்கி காங்கேசன் துறை வரை உள்ள பகுதியாகும். பாக்ஜலசந்தி பகுதியானது தமிழக எல்லையில் குறைந்த ஆழமும் 40கிலோ மீட்டர் சுற்றளவும் கொண்டதாக உள்ளது. அதே நேரத்தில் இலங்கையட்டி உள்ள பகுதியில் ஆழம் அதிகம் கொண்டதாகவும். மீன் வளம் மிக்கதாகவும் உள்ளது. இந்த பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கச்சத்தீவும், அருகருகே 9 தீவுக் கூட்டங்களும் உள்ளன.

பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நிர்வாகத்தில் இந்தியாவும், இலங்கையும் இருந்தன. அந்த காலத்தில் இலங்கை தோட்டத் தொழில், வணிகம், மீன்பிடி, கலாச்சாரம், கல்வி போன்ற விஷயங்களில் இருநாட்டுக்கிடையே பாரம்பரிய கலாச்சார தொடர்பு போற்றுதலுக்குரிய வகையில் இருந்தன. கடலில் இருநாட்டு மீனவர்கள் ஒன்றிணைந்து மீன்பிடித்தும் வந்தனர். நம் மீனவர்கள் இலங்கையின் கச்சத்தீவு உள்ளிட்ட தீவுப்பகுதியில் தங்கி மீன் பிடிப்பதும், இலங்கை மீனவர்கள் இந்திய கடல் பகுதி வரை வந்து தங்கி மீன்பிடிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன.

அப்போது உலக நாடுகளில் கடல்களை ஒழுங்குபடுத்திட, வரைமுறைபடுத்திட, கடல் சட்டம் இருந்ததா? இல்லையா? என்ற கேள்வி எழுவது நியாயமே!

1763க்கு பிறகு பிங்கர்ஷா என்ற டச்சு சட்ட நிபுணர் ஏற்படுத்தி கொடுத்த நடைமுறை விதியே அப்போதைய கடல் சட்டமாக கருதப்பட்டது. (இது 1982ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளில் ஒன்றான ஜமைக்கா தீவின் தலைநகர் மோன்_டி_கோபே யில் நடைபெற்ற உலக கடல் நாடுகளின் மாநாடு வரை நீடித்தது)

1970களின் தொடக்கத்தில் இருந்தே இந்திய தீபகற்பத்தை சுற்றியுள்ள இந்து மகா சமுத்திரம் யுத்த களமாகவே விளங்கியது. கடலில் யுத்தக் கப்பல்களில் நடமாட்டம், டிக்கோ கார்ச்சியா தீவில் அமெரிக்க ஏவுகணை தளம் அமைத்தல், இலங்கை திரிகோண மலையில் ஒரு ஏவுகணை தளம் அமைக்க அமெரிக்காவின் முயற்சி, அமெரிக்க கப்பற்படை கப்பலான நிமிட்ஸ் கப்பலை இந்து மகாசமுத்திரத்தில் இந்தியாவை நோக்கி நிறுத்தி வைத்து அச்சுறுத்தும் நடவடிக்கை, பாகிஸ்தான் இந்தியா யுத்தம் என சிக்கல் நிறைந்த காலக்கட்டத்தில், இந்தியாவின் கடலோரங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவசர அவசியங்கள் தோன்றின.

இந்தியாவின் கடலோர அண்டை நாடுகளான இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளோடு கடலோர எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டிய அவசிய சூழ்நிலை ஏற்பட்டது. அந்த காலக்கட்டத்தில் முதன் முதலாக குறுகிய கடல் பகுதியான பாக்ஜலசந்தியில் இந்திய இலங்கை இரு நாடுகளது கடல் எல்லைகளை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டன.

1974 கச்சத்தீவு உள்ளிட்ட பாக்ஜலசந்தியில் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையில் கச்சத்தீவு ஒப்பந்தம் ஏற்பட்டது. அச்சமயம் இலங்கை_இந்திய மீனவர்கள் கடலில் இணக்கமாகவே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். இருநாட்டு மீனவர்களுக்கிடையில் மீன் பிடிப்புத் தொழில் குறித்த பிரச்சனைகள் எழவில்லை என்பதும், இலங்கையில் தமிழ் பகுதியில் உள்நாட்டு போராட்டங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருநாட்டு கடல் புவியியலாளர்களைக் கொண்டு கடல் எல்லை சரிசமமாக பிரிக்கப்பட்ட போது கச்சத்தீவு இலங்கையின் பக்கம் சென்று விட்டது. அப்போது இருநாட்டு மீனவர்கள் மீன் பிடிப்பது குறித்து பேசப்பட்டது. அதில், இருநாட்டு மீனவர்களும் அந்தந்த நாட்டு கடல் எல்லை வரை பாரம்பரியமாக மீன் பிடித்துக் கொள்ளவும், கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் கோவிலில் வழிபாடு நடத்திக் கொள்ளவும் எவ்விதமான பிரயாண (பாஸ்போர்ட்) ஆவணங்கள் பெறத் தேவையில்லை எனவும், கச்சத் தீவில் இந்திய மீனவர்கள் வலை உலர்த்தவும், மீன்களை காயவைக்கவும், தங்கிச் செல்லவும், அனுமதிக்கும் வகையில் 1974 ஜூன் 24_26 தேதிகளில் இந்திய இலங்கை பிரதமர்களால் கச்சத்தீவு உள்ளிட்ட பாக் ஜலசந்தி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலத்தை உள்ளடக்கிய ஒரு தொலை நோக்குப்பார்வையுடன் செயல் படுத்தப்பட்டது.

ஆனால், 1983 ஆம் ஆண்டு இலங்கை இனக்கலவரத்திற்குப் பின் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். 1983ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை கடற்படையின் துப்பாக்கி பிரயோகத்தால் 460க்கும் மேற்பட்ட மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பல கோடிக்கணக்கான மதிப்புள்ள மீன்பிடி படகுகள், மீன்பிடி கருவிகள் நாசமாக்கப்பட்டுள்ளன. 1000திற்கும் மேற்பட்ட மீனவர்கள் துப்பாக்கி குண்டிற்கும், கொடுமைகளுக்கும் ஆளாகி ஊனமாகியுள்ளனர். 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் அடையாளம் தெரியாமல் காணாமல் போயினர். ஆனாலும், இதுவரை மத்திய அரசு மௌனம் சாதிப்பது விந்தையிலும், விந்தையாக உள்ளது.

இலங்கை விடுதலைப் புலிகளுக்கு கடல் வழியாக ஆயுதக் கடத்தலை தடுப்பதற்கான ஏற்பாடுகள் என்ற வாதத்தை இந்திய _ இலங்கை அரசுகள் முன் வைக்கிறது. பாக்ஜலசந்தி கடல் பகுதியில் படகுகள் மூலம் ஆயுதம் கடத்தும் குற்றவாளிகள் சிலர் கைது செய்யப்பட்டிருக்கலாம். ஆனால், இதுவரை படகுகள் மூலம் ஆயுதக் கடத்தல் செய்வோர் இலங்கை கடற்படையின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாகி மரண மடைந்ததாக எந்த சான்றும் இல்லை என்பதே உண்மை.

ஏனெனில், கடல் வெளியில் நம் மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு பயந்து ஒடுங்குகின்றனர். கடத்தல் பேர்வழிகள் தப்பிக்க முடியாது என்ற நிலை வரும் பொழுது சரணடைந்து உயிர் பிழைக்கின்றனர் என்ற உண்மை நிலையை இந்திய _ இலங்கை அரசுகளுக்கு நன்கு தெரியும். எனவே, கச்சத்தீவு உள்ளிட்ட பாக்ஜலசந்தி ஒப்பந்தத்தில் நமது மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகளை, இலங்கை அரசு முற்றிலும் மறுத்து வருகின்றது என்பதே உண்மை.

விடுதலைப் புலிகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டதாக கூறும் இலங்கை அரசு, தமிழக மீனவர்களை தொடர்ந்து காட்டுமிராண்டித்தனமாக தாக்கும் நடவடிக்கை மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. இலங்கை அரசும், இலங்கை கடற்படையும் விடுதலைப்புலிகளின் பெயரைச் சொல்லியே கடல் எல்லையை ‘மீறாதே’ என கூறி தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்துள்ளது. இந்திய அரசும் தொடர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்கிறது.

1974 கச்சத்தீவு ஒப்பந்த காலக்கட்டத்தில் இந்துமகா சமுத்திரம் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு உட்பட்டபோது, அதனை நமது மத்திய அரசு சோவியத் நாட்டின் நட்புறவோடு எதிர் கொண்டது. அப்போதிருந்த துணிச்சல் மிக்க நடவடிக்கை, இன்று இல்லை. அமெரிக்க சார்புத்தன்மை கொண்ட நமது மத்திய அரசு, மீனவர்களின் உயிர் இழப்போடு கடலுக்குள்ளும் உலகமயமாக்கலை கொண்டு வந்துவிட்டது. இதனால்தான் மத்திய அரசு மௌனம் சாதிக்கிறது.

சிக்கல் நிறைந்த இப்பிரச்சனையில் இந்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து இருநாட்டு மீனவப் பிரதிநிதிகளையும், அரசியல் தலைவர்களையும் அழைத்து பேசி அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும். இருநாட்டு மீனவர்களும் கடந்தகாலத்தைப் போன்றே பாரம்பரியமான முறையில் மீன் பிடிக்கவும், இலங்கை கடற்படையின் மனித படுகொலைகளை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழக முதல்வர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதை நிறுத்திவிட்டு, மீனவர் பிரச்சனையை அரசியல் ஆக்காமல், மீனவர்களை பாதுகாக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும்.

(கட்டுரையாளர் தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர்)

Pin It